kavi 3

ஆழிப்பேரலை அனர்த்தம்; அபரிமிதமான பணியாற்றிய போராளி மருத்துவர்கள்!

2004 மார்கழி மாதத்தின் 25 ஆம் நாள் இரவு தனது இருட்டைத் தொலைத்து சூரிய ஒளியால் ஒளிரத் தொடங்கிய அதிகாலை நேரம். பல ஆயிரம் ஆசைகள் நெஞ்சில் நிறைந்து கிடக்கிறது. எம் வாழ்வுக்கு ஒளி காட்ட பாலன் பிறந்துவிட்டான் என்று எம் ஊர்கள் மட்டுமல்ல உலகமே மகிழ்வில் திளைத்துக் கொண்டிருந்தது. தேவாலையங்கள் எங்கும் மங்களம் பொங்கும் நிகழ்வுகள், பூஜைகள் நடந்து ஜேசு பாலன் பிறப்பை கொண்டாடி மகிழ்ந்தது.

அந்த நேரம் தான் இந்தனோசியா கடலடியில் ஏற்பட்ட பூமித் தட்டுக்களின் உரசல் பூமிப்பந்தையே உலுக்கி இந்து மகா சமுத்திர நீரையே விழுங்கிக் கொள்கிறது. அதிகாலை 2004.12.26 அன்று இலங்கை நேரம் அதிகாலை 6.28 மணியளவில் விழுங்கிய நீரை பூமித்தகடுகள் துப்பிவிட மேலெழுந்த நீர் பெரும் அலைகளாகி சுனாமி என்ற சொல்லை எம் தேசத்துக்கு அறிமுகப்படுத்துகிறது. கிட்டத்தட்ட அதிகாலை 9.00 -9.15 ( இலங்கை நேரம்) இடைப்பட்ட காலத்தில் நத்தார் கொண்டாட்டத்தில் இருந்த மக்கள் கடற்கரை நீர் உள் இழுக்கப்படுவதை கண்டு என்ன என்று அறிய முன் கடலில் பாரிய அலை ஒன்று கரை நோக்கி வருவதை கண்டு திகைத்து நின்றார்கள்.

இலங்கையின் கீழ்நில கடற்கரைப் பகுதிகள் யாவும் சுனாமி அலைகளால் தாக்கப்பட்டு பாரிய சேதம் ஏற்படுகிறது. கிட்டத்தட்ட 30000 மக்கள் இயற்கையின் சீற்றத்தால் உயிரிழந்து, பல ஆயிரம் மக்கள் காயமடைந்து, பல கோடி உடமைகளை இழந்து போன அந்த நொடி இன்றும் இரத்தவாடையோடு நகர்கிறது. எம்மினத்தை மட்டுமல்லாது பல்லின மக்களையும் ஏதுமற்ற ஏதிலிகளாக்கிய சுனாமி சிறிய இடைவெளியில் மீண்டும் ஒரு முறை தாக்கி விட்டு சென்ற போது மக்கள் செய்வதறியாது திகைத்து நின்றார்கள். கடல் அலையால் தூக்கி எறியப்பட்டவர்கள் கையில் கிடைத்தவற்றை பிடித்து கொண்டு தம்மை காத்து கொண்டார்கள். பனை தென்னை என்றும் மரங்களின் கொப்புகளிலும் பிடித்துக்கொண்டு காத்து கொண்டவர்கள் பயங்கர காயங்களாலும் பாதிக்கப்பட்டார்கள்.

இது உடனடியாக அறியாத தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவ அணி ஒன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஒரு மருத்துவ கற்கைநெறிக்காக தங்கி நின்றது. அவர்களுக்கு செய்தி கிடைத்த போது உடனடியாக அந்த அணியில் இருந்த காந்தன், வளர்பிறை, தமிழ்நேசன், சத்தியா, வாமன், அமுதன், தூயவன், தணிகை ஜோன்சன் ,தமிழினியன் போன்ற இறுதி வருட தமிழீழ மருத்துவக்கல்லூரியின் மாணவர்களான இராணுவ மருத்துவர்கள் வன்னிக்கு செல்கிறார்கள். அங்கே என்ன செய்ய வேண்டும்? எங்கே செய்ய வேண்டும்? என்பன பற்றி விளக்கப்பட்டு அனைத்து மருத்துவப்பிரிவு போராளிகளும் மருத்துவ உதவிகள் அற்று இருக்கும் பிரதேசங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். சுகாதாரப்பிரிவு பணிப்பாளர் மருத்துவக்கலாநிதி சுஜந்தன் இதற்கான உத்தரவுகளை பிறப்பித்திருந்தார். அவரோடு மருத்துவக்கலாநிதி விக்கினேஸ்வரனும் இருந்தார். பணிப்பாளரின் உத்தரவை தொடர்ந்து அவசர உதவி அணியாக வெளிக்கிட்ட மருத்துவ அணி எந்த முன் ஆயுத்தங்களும் (தங்குமிடம், உணவு ) இன்றி சிறியளவு மருந்து பொருட்களோடு உடனடியாக
மட்டக்களப்பை நோக்கி நகர்கிறார்கள்.

அந்த அணி இராணுவமருத்துவர்களை தாங்கிய வாகனம் மட்டக்களப்பின் “தேனகம்” முகாமுக்கு வந்து சேர்கிறது.
அங்கே மட்டு, அம்மாறை சிறப்புத் தளபதியாக இருந்த ராம் மருத்துவ அணியை வரவேற்று மருத்துவர்களுக்கான சில அறிவுறுத்தல்களை வழங்கி ஓர் அணியை அம்பாறை நோக்கி கொண்டு செல்கிறார். அனுப்பப்பட்ட மருத்துவ அணி நேரடியாக அம்பாறைக்கு போவதில் பல சிரமங்களை எதிர் நோக்க வேண்டி வந்தது. வாகனம் அம்பாறை நோக்கி பயணிக்கிறது அப்போது முதல் தடையை அவர்கள் எதிர்கொள்ள வேண்டி வருகிறது. மட்டக்களப்பில் இருந்து அம்பாறை நோக்கி செல்லும் வழியில் அமைந்திருந்த பெரிய பாலமான ஒந்தாச்சிமடப் பாலம் சுனாமி தாக்கத்தால் முழுவதுமாக சிதைந்து போய் கிடக்கிறது. அதைக் கடந்தே செல்ல வேண்டும். ஆனால் அதன்கு எந்த வழியும் இல்லை. இந்த இடத்தில் இராணுவ மருத்துவர் வாமன் தென் தமிழீழத்தை சேர்ந்த போராளி என்பதால் பிரதேச அறிவு அவருக்கும் இருந்தது அதனால் அவர்களின் பயணப்பாதை இலகுவாக இனங்காணக் கூடியதாக இருந்தது.

வேறு பாதையான வெல்லாவெளி, நாவிதன்வெளி, சவளைக்கடை ஊடாக அம்பாறையின் மேற்குப்பகுதி ஊடாக பயணிக்கிறார்கள். ராம் அம்பாறையின் பிரதேச அறிவை கொண்டிருந்ததால் அவர் பாதை மாற்றி பயணிப்பதில் வெற்றி கண்டார். ஆனாலும் அங்கே வேறு ஒரு பிரச்சனை கண்முனே நின்றது. வெல்லாவெளியில் வைத்து விசேட அதிரடிப்படையின் (Special Task Force) ஒரு முகாமைத் தாண்டியே பயணிக்க வேண்டிய தேவை இருந்தது. 2004 ஆம் ஆண்டு காலம் சமாதான காலம் என்பது நியம் என்றாலும் விடுதலைப்புலிகளின் போராளிகளை அவர்கள் அப்போதும் எதிரியாகவே பார்த்தார்கள். அவ்வாறு பயணித்த போதும் விசேட அதிரடிப்படை (STF) அவர்களை உள்ளே அனுமதிக்காது தடுக்கிறார்கள். ஆனாலும் பல மணி நேரங்கள் கழிந்த நிலையில் சில பேச்சுவார்த்தைகளுக்குப் பின் மருத்துவ அணி உள்ளே அனுமதிக்கப் படுகிறது.

உலகமே அதிர்ந்து கிடந்த இயற்கை சீற்றத்தில் கொடுமையாக பாதிக்கப்பட்ட மக்களை காக்க சென்ற மருத்துவ அணிக்கு முதல் தடை சிங்களத்தால் விழுந்தது. ஒரு மாதிரி அவற்றை சரியாக்கி சாகாமம் என்ற கிராமத்தை கடந்த போதும் மறு படியும் தடைகள் எழுந்து அதிரடிப்படையினர் போராளி மருத்துவர்களை மறிக்கிறார்கள். அதிலும் நீண்ட நேரங்கள் விவாதங்களின் பின் அனுமதிக்கப்பட்ட பின் சாகாமம் ஊடாக திருக்கோவில் என்ற இடத்தை அடைகிறார்கள் மருத்துவ அணியினர். அங்கே அவர்கள் தங்குவதற்கோ உண்பதற்கோ உறங்குவதற்கோ எதுவுமே இருக்கவில்லை. அவர்கள் போராளிகளல்லவா அதை பற்றிய எந்த சிந்தனையும் அவர்கள் மனதில் எழவில்லை. மக்களின் நிலையை அறிய முயல்கிறார்கள். அங்கு எதுவுமே இல்லை என்பது புரிகிறது. எந்த ஓசையும் இல்லாமல் மயான அமைதியாக இருக்கிறது. ஒரு உயிரினத்தின் மெல்லிய முனகல் கூட அற்று அந்த பிரதேசம் வெறுமையாய் கிடக்கிறது.

இவ்வாறான நிலையில் அம்பாறை மாவட்ட தளபதி அவர்களை இறக்கி விட்டு மீண்டும் மட்டக்களப்புக்கு திரும்பி விட மருத்துவ அணி அங்கே தனித்துவிடப்படுகிறது. அவர்கள் போய் சென்ற நேரம் இரவு என்பதால் அவர்களால் உடனடியாக எதையும் ஒழுங்கு படுத்த முடியவில்லை. அப்போது தான் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் குணபாலன் இவர்களிடத்துக்கு வருகிறார். வந்தவுடன் தான் இவர்களுக்கான ஒரு வலு கிடைப்பதை மருத்துவ அணி உணர்கிறது. அப்போது விரிவுரையாளன் குணபாலன் இவர்களின் நிலை அறிந்து, சுனாமியால் பாதிக்கப்பட்டு இருந்த தனது வீட்டுக்கு அழைத்து செல்கிறார். அங்கும் எதுவும் இல்லை. அவர்களின் தேவையான உணவை ஒழுங்கு படுத்துவதற்காக தன்னோடு உதவிக்கு வந்த பல்கலைக்கழக மாணவனை அருகில் இருந்த விசேட அதிரடிப்படை முகாமுக்கு அனுப்புகிறார். அங்கே தளபதியாக இருந்த ரட்னாயக்கா என்பவர் ஊடாக இவர்களுக்கான உணவு உதவி கிடைக்கிறது. அதை விரும்பியோ, வெறுத்தோ உண்ண வேண்டிய சூழல் அவர்களுக்கு, ஏனெனில் கிளிநொச்சியில் இருந்து வெளிக்கிட்ட மருத்துவ அணி இங்கு வந்து சேரும் வரை எதையும் உணவாக உண்ணவில்லை. அவர்களுக்கு அந்த உணவு தேவைப்பட்டே இருந்தது. நாளையும் அதை தொடர்ந்து வரும் நாட்களும் உணவு கிடைக்குமா என்பது கேள்விக்குறி. அதனால் கிடைப்பதை உண்டு பசியாற வேண்டிய நிலை. அவர்கள் இராணுவத்தின் வெள்ளை அரிசி சோற்றையும் பருப்பையும் உண்கிறார்கள். ஆனால் எங்கும் தங்கி இருந்து ஓய்வெடுக்க முடியவில்லை.

அதே நேரம் அங்கே வாழ்ந்து வந்த அம்பாறை தேர்தல் தொகுதியின் முந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் சந்திரதேரு அந்த இடத்துக்கு வந்து சேர்கிறார். அதன் பின் தான் மக்கள் எங்கே தங்கி இருக்கிறார்கள்? எங்கெல்லாம் சுனாமிப்பேரலை தாக்கி இருக்கிறது என்ற தகவல்கள் முழுவதும் மருத்துவ அணிக்கு கிடைக்கிறது. எனவே ஓய்வு உறக்கமற்ற அவர்கள் அதிகாலையே மக்கள் வாழ்ந்த இடங்களுக்கு சென்றார்கள். திரும்பும் இடமெல்லாம் உயிரற்ற உடல்கள் நிறைந்து கிடந்தன. அவற்றை மீட்டு அடக்கம் செய்ய வேண்டிய தேவை எழுந்தது. அதற்கான பணிகளை ஆரம்பித்தது மருத்துவ அணி. சந்திரநேரு அவர்களிடம் தமக்கு தேவையான வாகனங்களை ஒழுங்கு படுத்தி தர வேண்டுகிறார்கள்.
அப்போது சந்திரநேரு அவர்களின் ஒருங்கிணைப்பில் உடனடி நடமாடும் மருத்துவ சேவை ஒன்றை ஆரம்பிக்க கூடியதாக தனது வாகனத்தை வழங்குகிறார். அதே நேரம் இந்த மருத்துவ அணியில் இருந்த இராணுவ மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பிரிவின் நிர்வாக போராளிகள் அவர்களுடன் வந்திருந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட விரிவுரையாளர் ஒருவரும் மாணவர்களும் இணைந்த அணி இறந்து போன மக்களின் உடலங்களை மீட்டு ஒரு மேட்டுப் பகுதில் ஒருங்கிணைக்கிறார்கள். பொத்துவில், அக்கரைப்பற்று, மாவடிவேம்பு, கல்முனை, தம்புலுவில், திருக்கோவில், பானமை ஆகிய கிராமங்களை நோக்கி தமது பணிகளை விரைவாக விரிவு படுத்துகிறார்கள். தமிழீழ காவல்துறை அங்கே இல்லாத காரணத்தால் உயிரற்ற உடலங்களை அடக்கம் ஏற்படும் சட்டச் சிக்கல்களை தவிர்ப்பதற்காக இலங்கை காவல்துறையின் உதவியோடு இறந்தவர்கள் புதைக்கப்படுகிறார்கள். இவர்களோடு அக்கரைப்பற்று மருத்துவ நிர்வாக பொறுப்பாளர் பாரதனும் நிற்கிறார்.

விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்று பறைதட்டிக் கொள்ளும் சிங்கள தேசம் மக்கள் மனிதநேயப் பணிக்காக வந்த போராளிகளை தடுத்து உள்ளே விட அனுமதிக்காது பிரச்சனைப்பட்ட போது அதில் இருந்து மீண்டு வந்த அந்த போராளிகள் அணி அம்பாறை மாவட்டத்தில் இன மத பேதமின்றி பணியாற்றிய வரலாறு இங்கு பதிவு செய்யப்பட்டதை அங்கே நின்ற விசேட அதிரடிப்படை உணர்ந்திருக்க கூடும். ஏனெனில் பொத்துவில் மற்றும் சின்ன உல்லை பெரிய உல்லை என்ற பிரதேசங்கள் முற்று முழுதாக முஸ்லீம் மக்களாலும், பாணமை என்ற பிரதேசம் முற்றுமுழுதாக சிங்களமக்களாலும் நிரம்பி இருந்த பிரதேசங்களாகும். அந்த இடத்தில் மருத்துவ அணி தமிழ் சிங்கள முஸ்லீம் என்ற எந்த பாகுபாட்டையும் பார்த்ததில்லை. சிங்கள மக்களையும் காப்பாற்றிட துடித்தார்கள் முஸ்லீம் மற்றும் தமிழ் மக்களையும் காத்தார்கள். ஆனால் சிங்களமோ தொடர் தடைகளை ஏற்படுத்தியே வந்தது. சாதாரணமாக ஒலிபெருக்கியில் எதாவது அறிவித்தல் செய்ய வேண்டி இருந்தால் கூட அங்கே உள்ள இராணுவ அதிகாரிக்கு என்ன விடயம் அறிவிக்கப் போகிறோம் என்பதை எழுத்து வடிவில் கொடுத்து அனுமதி பெற வேண்டிய நிலையில் தான் மருத்துவ அணி இருந்தது.

சுனாமி அடித்து மக்கள் சாவடைந்த பொழுது விசேட அதிரடிப்படையினரும் மக்களைக் காக்கும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்ட போதிலும் மனித நேய பணிகளுக்காக வந்திருந்த போராளிகள் மீது அடக்குமுறைகளை பிரயோகிப்பதை வழமையாக்கி இருந்தார்கள். இந்த நிலையில் தான் அதிகமான மருந்துகள் மருத்துவப் பொருட்கள் என்பவற்றின் தேவையும் அவசர ஊர்திகளின் தேவையும் அந்த காலத்தில் இறுதியாண்டு மருத்துவக் கற்கையை மேற்கொண்டு கொண்டிருந்த இராணுவ மருத்துவர்கள் உணர்கிறார்கள். அதற்கான வேண்டுகைகளை கிளிநொச்சியில் அமைந்திருந்த “தமிழர் புனர்வாழ்வு நிறுவனத்துக்கு “ ஊடாக மன்னார் வவுனியா பிரதேசங்களில் நிலை கொண்டு மனிதநேய பணியாற்றிக்கொண்டிருந்த FSD (Swiss Foundation of Demining ) நிறுவனத்துக்கு அனுப்புகிறார்கள்.

FSD உடனடியாக அம்பாறைக்கு 25 அவசர ஊர்திகளை அனுப்பி வைக்கிறது. அவற்றின் வருகை என்பது உண்மையில் அந்த மக்களுக்கான மருத்துவ தேவைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய பெரிதும் உதவியது என்றே கூற வேண்டும் ஏனெனில் அங்கு அனுப்பப்பட்ட வாகனங்கள் அனைத்தும் ” 4 weal ” என்று அழைக்கப்படுகிற பொறிமுறையைக் கொண்ட வாகனங்களாகும் அவை சேறு, காடு, மழை, மலை என்று எதிலும் பயணிக்கக் கூடியதான வாகனங்கள் என்பது இங்கு முக்கியமானது. இந்த ஊர்திகளில் அதை விட பல மேன்மை படுத்தப்பட்ட வசதிகளும் இருந்தது.

இந்த அவசர ஊர்திகளின் வருகையின் போது ஒரு சுவிஸ் நாட்டை சேர்ந்த தலைமை வைத்தியரும் உள்நாட்டு வெளிநாட்டு மருத்துவர்களால் நன்கு பயிற்றப்பட்ட ParaMedics அணியும் வந்திருந்தது. அவர்களின் பணியும் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. இது ஒருபுறம் இருக்க, அன்பழகன் மாஸ்டர் என்று போராளிகளால் அழைக்கப்படும் நடமாடும் மருத்துவ பிரிவை சேர்ந்த போராளி உதவி மருத்துவர் இராணுவ மருத்துவர்களை வந்து சந்திக்கிறார்.

அங்கே இருந்த நிலமைகள் அவருக்கு விளக்கப்பட்டு, புலம்பெயர் தமிழ் உறவுகளின் மனித நேயப்பணிகள் அம்பாறைக்கும் கிடைக்க வேண்டிய தேவையை உணரவைக்கிறார்கள் மருத்துவர்கள். அப்போது அதற்கான உறுதியை அளித்து சென்ற அன்பழகன் கொழும்பில் உள்ள பம்பலப்பிட்டி பகுதியில் ஒரு அவசர உதவி மைய அலுவலகத்தை நிறுவி புலம்பெயர் தேசங்களில் இருந்து வந்து கொண்டிருக்கும் விசேட நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள், மனிதநேயப் பணியாளர்கள், பொறியியலாளர்கள் தாதிகள் என்ற எந்த பாகுபாடின்றி தேவையானவர்களை தேவையான பிரதேசங்களுக்கு பிரித்து அனுப்பத் தொடங்கினார். இந்த நடவடிக்கையானது. உண்மையில் இனங்காணப்படாமல் இருந்து எந்த உதவிகளும் கிடைக்காமல் இருந்த பல பிரதேசங்களுக்கு உடனடி உதவிகளை செய்ய வழி தந்தது.

இந்த இடத்தில் இன்னும் ஒரு விடயத்தை குறிக்க வேண்டிய தேவை இருக்கிறது. திருக்கோவில் என்ற இடத்தில் அமைந்திருந்த ஆதார மருத்துவமனைக்கு செல்லவேண்டிய தேவை மருத்துவர் தணிகைக்கு வந்த போது அங்கு செல்கிறார். அங்கே முற்று முழுவதுமாக விசேட அதிரடிப்படையின் கட்டுப்பாட்டில் இருந்த மருத்துவமனை இனங்கான முடியாத அளவுக்கு சுற்றிவர இராணுவம் தமது காவலரண்களை அமைத்து மக்களை பயமுறுத்திய நிலையில் இருந்ததையும் அந்த மருத்துவமனையில் இரண்டு சிங்கள மருத்துவர்களை மட்டும் சிங்கள அரசு பணியமர்த்தி இருந்ததும் கொடுமையாக இருந்தது. அவர் கண்ணுற்று வேதனைப்பட்டார்.

இந்த நிலையில் உடனடி தேவையாக இருந்த மருத்துவ உதவிகள் பெரும்பாலும் ஒழுங்கமைக்கபட்ட போதும் மக்களின் பிரச்சனைகள் அங்கே ஏராளமாக இருந்தன. ஒழுங்கான உணவுகள், தங்குமிடங்கள், உடைகள் குடிநீர் என எதுவும் அங்கு கிடைக்கவில்லை. அதனால் அவற்றையும் கருத்தில் எடுக்க வேண்டிய தேவை மருத்துவர்களுக்கு எழுந்தது. அதற்காக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தோடு (TRO)தொடர்பு கொண்ட போது அவர்கள் ஏற்கனவே அதற்கான ஆயுத்தங்களோடு அம்பாறைக்கான பொறுப்பதிகாரியாக ஆதவன் என்பவரை நியமித்து அங்கு அனுப்பி விட்டதாகவும் அவர்கள் அம்பாறைக்கு வந்து நேர்ந்து விட்டதாக தகவல் வந்தது.

ஆனால் இங்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உள்ளே வருவதில் பெரும் சிக்கலை எதிர்நோக்கி விசேட அதிரடிப்படையின் தடைமுகாமில் தடுக்கப்பட்டு இருந்தது. உடனடியாக இராணுவ மருத்துவர் தணிகையும் மாமனிதர் சந்திரநேரு மற்றும் விரிவுரையாளர் குணபால் ஆகியோரும் அங்கு விரைகிறார்கள். அங்கே பணியில் இருந்த அதிரடிப்படையினரோடு கதைக்கிறார்கள். மட்டு அம்பாறை மாவட்டங்களின் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து வந்திருந்த வாகனங்களுக்கு சரியான இலங்கை பதிவுகளும் இலக்கத்தகடுகளும் இல்லை என்றும், வாகன ஓட்டுனர்கள் சரியான அனுமதிப்பத்திரம் இல்லை என்றும் காரணம் கூறப்படுகிறது.

ஒரு நாட்டில் பயங்கரமான ஒரு அனர்த்தம் நிகழ்ந்து முடிந்த நிலையில் மக்கள் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டு மீள் எழும்ப முடியாது எங்கெல்லாமோ ஏதிலிகளாக வாழ்ந்து வர அந்த நாட்டின் இராணுவம் மனித நேயப் பணிகளை தடை செய்கின்றது என்பது பயங்கரவாதமா அல்லது அங்கே பணி செய்த விடுதலைப்புலிகளின் மனிதநேயப்பணி பயங்கரவாதமா என்ற இரு வினாக்கள் இங்கு எழுகிறது. இது இவ்வாறு இருக்க பல மணி நேரங்கள் மீண்டும் மீண்டும் பேசிய பின் அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் அம்பாறைக்குள் வருகின்றன. அதன் பின்பு மக்களுக்கான அவசர தேவைகளை தமிழர் புணர்வாழ்வுக்கழகமும் செய்யத் தொடங்கியது.

இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க அக்கரைப்பற்றுக்கும் திருக்கோவிலுக்கும் இடையில் உள்ள வீதி ஒன்றில் தமிழீழ மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளரான தமிழினி தனது அணியோடு நிற்கிறார். அவரோடு இசைப்பருதி, தாமரை, குவேனி, அர்ச்சனா, உஷா போன்ற போராளிகள் நிற்கிறார்கள். அவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக பிரிந்து போய் கிடந்த உறவுகளை சேர்க்கும் பெரும் பணியை செய்து கொண்டு நின்றார்கள். இசைப்பருதி தனது உந்துருளியில் ஒருவரை மாறி ஒருவரை ஏற்றிக் கொண்டு அவர்களின் உறவுகளோடு இணைத்துக் கொண்டும், அவர்களுக்கு ஆற்றுகை செயற்பாடுகளை செய்து கொண்டும் இருக்க தாமரை அங்கே நேரடியாக தம்மால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், ஒளிப்படங்கள் என்பவற்றை ஊடகங்களுக்கு அனுப்பி எம் மக்களின் நிலைகளை சர்வதேசம் அறியகூடியதாக செயற்ப்பட்டுக் கொண்டிருந்தார். இதை போலவே ஏனைய ஊடக பிரிவுப் பெண் போராளிகள் ஆவணமாக்கல்களையும் மக்களுக்கான உளவுரண் செயற்பாடுகளை சில போராளிகளும், ஏனையவர்கள் ஆண் போராளிகளைப் போலவே இறந்த உடலங்களை அடக்கம் செய்யும் பணிகளையும் காயமடைந்தவர்களை மருத்துவ உதவிக்காக கொண்டு வருதல் போன்ற பணிகளோடும் இரவு பகல் என்று இல்லாது கண் விழித்து ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்.

கைக்குழந்தைகளை வைத்திருந்த தாய்மார் குழந்தை பிறக்க இருந்த நிறை மாத கர்ப்பணிகள் போன்றவர்களை கவனிக்க என்று ஒரு அணியை ஒழுங்கு படுத்தி இருந்தார் தமிழினி. அவர்கள் அந்த மக்களுக்கு தேவையானவற்றை ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து கவனிக்க தொடங்கினார்கள். அங்கே தாய் தந்தையை பிரிந்து தனித்து இருந்த பல குழந்தைகள் தமிழினியின் அணியால் காப்பாற்றப்படுகிறார்கள். அவர்களில் சிலர் உறவுகளும் அற்று தனித்து நின்ற போது அல்லது உறவுகளாலும் பராமரிக்க முடியாத சூழல் எழுந்து நின்ற போது அவர்களை பொறுப்பெடுக்கிறார் தமிழினி அதில் மிகவும் பாதிக்கப்பட்ட பத்து, பதினோரு வயசு நிரம்பிய குழந்தைகள் ஐந்து பேரை தமிழினி தனது வாகனம் ஒன்றில் ஏற்றி உடனடியாக வன்னிக்கு அனுப்பி செஞ்சோலை மற்றும் காந்தரூபன் அறிவுச்சோலை என்பவற்றில் வளர்வதற்கான ஏற்பாடுகளை செய்கிறார்.
ஆனால் அவரதுவாகனம் அம்பாறையில் இருந்து புளியங்குளம் பகுதியில் வந்த போது இடைநிறுத்தப்படுகிறது. அங்கே நின்ற இராணுவம் அந்த குழந்தைகளை இயக்கத்தில் இணைப்பதற்காக கொண்டு போவதாக கூறி சாரதியையும் கைது செய்து வைத்திருந்தார்கள். பின் மனிதநேயப்பணியில் இருந்த அரசசார்பற்ற நிறுவனங்கள் நேரடியாக தலையிட்டதோடு பாதிக்கப்பட்ட உறவுகளின் நேர்காணல்கள், சாட்சியங்கள் போன்றவற்றை குடுத்து அந்த குழந்தைகளையும் சாரதியையும் மீட்டார் தமிழினி. இங்கும் இராணுவம் மக்கள் பணியை தடுத்து போராளிகளின் வேகமான செயற்பாடுகளை முடக்க நினைத்தது பதிவாகியது.

இவ்வாறாக விடுதலைப்புலிகளின் ஒவ்வொரு படைப்பிரிவும் முற்றுமுழுதாக மக்கள் நேயப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். விரைவாகவும் விவேகமாகவும் அவர்களின் செயற்பாடுகள் அமைந்த போது சிங்களமும் சர்வதேசமும் அதிர்ந்து போனது உண்மை. இதை இங்கே நான் குறித்தே ஆகவேண்டும். ஏனெனில் இவ்வாறான வேகமானதும் நேரியதுமான செயற்பாடுகளே அமரிக்காவின் முன்னாள் அரச தலைவர் தமிழர் புனர்வாழ்வுக்கழக பணிப்பாளரை சந்தித்து கைகுலாவி வாழ்த்திய வரலாற்று சம்பவம் நிகழ்கிறது. அதை விட பின்நாட்களில் சிங்கள இராணுவத்தினால் எமது போராளிகளுக்கு ஏற்பட்ட பல இழப்புக்களுக்கு இது காரணமாகியது. (இது தொடர்பாக பின்னொரு பத்தியில் பார்க்கலாம்)
இவ்வாறு அனைத்து படைப்பிரிவை சேர்ந்தவர்களும் பணியில் ஈடுபட்டு இருக்க அவசர தகவல்களை பரிமாற்றம் செய்வதற்காக அம்பாறை அரசியல் துறை போராளி வோக்கி கதைத்த போது மீண்டும் பெரும் சர்ச்சை வெடித்தது. வோக்கி இராணுவ உபகரணம் என்றும் அது அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பயன்படுத்த கூடாது என்று சமாதான உடன்படிக்கையின் சரத்து ஒன்று கூறுவதாகவும் விசேட அதிரடிப்படையினால் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அங்கே நின்ற சிங்களப்படை அங்கே நடந்து கொண்டிருப்பது போராளிகளின் அரசியல் நடவடிக்கை அல்ல மக்களுக்கான அவசர மனிதநேயப்பணி என்பதை ஏனோ நினைக்கவே இல்லை. போராளிகள் மீண்டும் தமது மக்களுக்காக விட்டுகுடுக்கிறார்கள். வோக்கி பாவிப்பதை நிறுத்துகிறார்கள். அவர்களின் நோக்கம் மக்களை நோக்கியே இருந்ததால் அதிரடிப்படையின் எந்த தடைகளையும் தாண்டி பயணிக்க வேண்டி இருந்தது.

அங்காங்கே சிதறிபோய் மேட்டுநிலங்கள் தேடி தனித்து போய் தவித்து கிடந்தவர்களை ஒருங்கிணைக்கும் செயற்பாடு நடந்து கொண்டிருக்க அவர்களுக்கான தங்குமிடங்களை தமிழர் புனர்வாழ்வுக்கழகம் முகாம்களாக ஏற்பாடு செய்திருந்தது. தற்காலிக தங்குமிடங்கலில் மக்கள் தங்க வைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கான அதி முக்கிய அடிப்படைத் தேவைகள் நிவர்த்தி செய்யப்படுகிறது. அவற்றை புனர்வாழ்வுக்கழக ஒழுங்கு படுத்தல்களில் OXFARM நிறுவனம் ஏற்படுத்துகிறது. அப்போது இராணுவ மருத்துவர்கள் மீண்டும் ஒரு வேண்டுகோளினை வைக்கிறார்கள். அதில் அங்கே பயன்படுத்தக்கூடியதான தற்காலிக மலசலகூடங்கள் புதிதாக அமைக்கப்பட வேண்டும் என்பதாகும். அந்த வேண்டுகையை தொடர்ந்து அமைக்கப்பட்ட முகாம்கள் அனைத்திலும் புதிதாக தேவையான அளவு மலசல கூடங்கள் மற்றும் தனித்துவமான சிறுநீர் கழிப்பிடங்கள் அமைக்கப்படுகிறன. புதிதாக குடிநீர் தாங்கிகள் உருவாக்கப்படுகின்றன.

ஒருபுறம் சுனாமி தாக்கி பெரும் இடர்களை சுமந்து கொண்டிருந்த மக்களுக்கு மீண்டும் மாரி மழை வந்து பெரிய அனர்த்தத்தை செய்தது அவசர சிகிச்சைகளுக்காக காயப்பட்டவர்களை அவசர ஊர்திகளின் மூலம் கொண்டு செல்ல முடியவில்லை. உடைந்த பாலங்களால் நீர் முட்டி பாய்ந்தது. அவசர ஊர்திகள் பயணிக்க முடியாது சேற்றினுள் புதைந்தது. அப்போது தான் அங்கே நின்ற மருத்துவர்கள் அங்கு மனிதநேயப் பணியாற்றி கொண்டிருந்த கனேடிய இராணுவ அணியிடம் அங்கு வைக்கப்பட்ட நீர்த்தாங்கிகளுக்கான நீர் வேறு இடத்தில் இருந்து கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளையும் உடைந்து கிடந்த பாலங்களின் மூலமாக பயணிக்க முடியாத பொதுமக்கள் , நோயாளர்களை சிறுவகை டிங்கி படகுகள் மூலமாக போக்குவரத்து ஏற்பாடுகளையும் ஒழுங்கு பண்ணி தருமாறு வேண்டுகை விடப்படுகிறது அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு அந்த பணியை செய்கிறார்கள்.

அனைத்து மக்களுக்கும் அவசர நோய்த் தடுப்பு ஊசி போடப்படுகிறது. சிறு காயங்கள் முதல் பெரிய காயங்கள் வரை அதாவது பேரலையால் அடித்து செல்லப்பட்டு உயிர் தப்பியவர்கள் பெரும்பாலும் சிறு உரசல் மற்றும் கீறல் காயங்கள் எலும்பு முறிவுகள் என பல தரப்பட்ட காய வகைகளை கொண்டிருந்தனர். தம் வசதிகளை பொறுத்து மக்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள் விடுதலைப்புலிகளின் இராணுவ மருத்துவர்கள். ஆனாலும் சில பெரிய காயங்களை அங்கு வைத்து சிகிச்சை அளிக்க முடியாத நிலை இருந்தால் உடனடியாக பல மணி நேரப்பயணத்தில் இருந்த மட்டக்களப்பு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

அப்போது தான் இந்த கிராமங்களைத் தாண்டி இன்னும் ஒரு கிராமம் இருப்பதாகவும் அது நேரடியாக சுனாமியால் பாதிப்படையவில்லை என்றாலும் மருத்துவ தேவைகள் அந்த கிராமத்தில் இருப்பதாகவும் மருத்துவர்களுக்கு வந்த தகவலை அடுத்து விடுதலைப்புலிகளின் இராணுவ மருத்துவ அணி அங்கே செல்கிறது. அந்த கிராமம் அழிக்கம்பை என்று அழைக்கப்பட்டது. அங்கு சென்ற போது புதிய ஒரு பிரச்னையை இந்த மருத்துவ அணி சந்திக்கிறது. அங்கே வாழ்ந்து வந்த மக்கள் இவர்கள் அறியாத புதிய திராவிட மொழி ஒன்றை பேசுபவர்களாக இருந்தார்கள். அம்மொழியை என்ன என்றே மருத்துவர்களால் இனங்காண முடியாத நிலையில் மருத்துவ சிகிச்சை தாமதமாவதையும் உணர்ந்த மருத்துவர்கள் அங்கு வாழ்ந்த இளையவர்களை அழைத்து பேசிய போது அவர்கள் தமிழை பேசக்கூடியவர்களாக இருந்தார்கள். அதனால் அவர்களை வைத்து உடனடி மருத்துவ உதவிகளை செய்ய கூடியதாக ஒழுங்குகளை செய்தார்கள் மருத்துவர்கள்.

இந்த நிலையில் அதையும் தாண்டி ஒரு கிராமம் இருப்பதை அந்த மக்கள் மூலமாக அறிந்தவர்கள் அங்கு மருத்துவமனை ஒன்றும் இருப்பதை அறிந்து கொள்கிறார்கள். அதனால் அங்கே சென்று நிலையை அறிய முயன்ற போது விசேட அதிரடிப்படையினர் தடுக்கிறார்கள். அந்த கிராமம் அவர்களது முற்று முழுதான கட்டுப்பாட்டில் இருந்ததை காணக்கூடியதாக இருக்கிறது. ஆனாலும் அங்கே இருக்கும் மருத்துவமனைக்கு போக வேண்டும் என்று கூறிய போது பலத்த விவாதத்திற்கு பிறகு அனுமதிக்கிறார்கள். உள்ளே சென்ற போது கைவிடப்பட்ட நிலையில் ஒரு பிள்ளையார் கோவில் இருப்பதை காண்கிறார்கள். ஆனால் அந்த கோவில் எந்த பராமரிப்பும் இன்றி இருந்தது. மருத்துவ அணி உண்மையில் திகைத்து போகிறது. “மாந்தோட்டம் “ என்ற தமிழ் கிராமம் முற்றுமுழுவதுமாக சிங்களக் கிராமமாக மாற்றப்பட்டு “தொட்டம ” என்ற பெயரோடு சகல வசதிகளையும் கொண்டு ஒரு சிறு நகரமாக மிளிர்ந்தது. உண்மையில் அருகருகே இருக்கும் இரு கிராமங்களில் சிங்கள கிராமம் அத்தனை வசதிகளையும் பெற்றிருக்க தமிழ் மற்றும் முஸ்லீம் கிராமங்கள் எந்த அடிப்பபை வசதிகளையும் கொண்டிராது இருப்பதன் இனவாதம் அங்கே மீண்டும் பதியப்பட்டிருந்தது.

இவ்வாறாக அந்த கிராமத்தை பார்வையிட்ட பின் திருக்கோவில் திரும்பிய மருத்துவ அணி மீண்டும் நேரடியாக சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பணிகளை தொடர்கிறார்கள். அப்போது அம்பாறை மாவட்டத்துக்கு புலம்பெயர் தேசங்களில் இருந்து வந்திருந்த தமிழ் உறவுகள் தாயக உறவுகள் என்ற எந்த பாகுபாடுமற்று இரவு பகல் என்ற பேதம் இன்றி நித்திரை, உணவு என்று எதுவும் இன்றி மக்கள் பணியை மேற்கொண்டு கொண்டிருக்க, அங்கே மக்கள் மனிதநேய பணிக்காக கனடா நாட்டில் இருந்து வந்த கனேடிய இராணுவம் மற்றும் கனேடிய இராணுவ மருத்துவ அணி என்பன அங்கே நடந்து கொண்டிருந்த அனர்த்த முகாமைத்துவத்தின் விரிவான செயற்பாட்டையும் ஒருங்கினைவான ஒன்றிணைந்த செயற்பாடுகளையும் கண்டு அதிர்ந்து போனார்கள். நேரடியாகவே அதை மருத்துவர்களிடம் கேட்கும் அளவிற்கு அவர்களுக்கு அங்கு நடந்த செயற்பாடுகள் இருந்தன. “ உண்மையில் நீங்கள் உன்னதமானவர்கள் தான். எப்பாடு உங்களால் இரவு பகல் என்றும் உணவு நித்திரை இல்லாமலும் இருபத்து நாலு மணிநேரமும் பணியாற்ற முடிகிறது? என்று அதிர்ச்சியோடு கேட்டார்கள்.

இவ்வாறாக வெளிநாட்டு, இந்தியா மற்றும் சிங்கள தேசம் என பலதரப்புக்கள் அதிசயமாக பார்த்த சுனாமி அனர்த்த முகாமைத்துவ பணியானது எம் மக்களின் உடனடித் தேவைகளை நிவர்த்தி செய்தாலும் மனதளவால் பாதிக்கப்பட்டவர்களை மீள் நிலைக்கு ஆற்றுகைப்படுத்த முடியவில்லை. மருத்துவர்கள் நேரடியாகவே அதையும் செய்தார்கள் உடனிருத்தல், ஆற்றுப்படுத்தல் போன்றவற்றை இராணுவ மருத்துவர்களான ஜோன்சன் லெப்.கேணல் வளர்பிறை லெப் கேணல் தமிழ்நேசன் ஆகியோர் ஈடு பட்டனர். அவர்களுக்கான ஆற்றுகைப்படுத்தல்களை ஆடல் பாடல் என்று அவர்களே செய்ய எத்தனித்த போது மீண்டும் அதிரடிப்படையின் பிரசன்னம். என்ன பாடல் போடப்போகிறோம் என்ன பேசப்போகிறோம் என்ன அறிவிக்கப்போகிறோம் என்பதை பற்றி எல்லாம் அவர்களிடம் எழுத்து மூல அனுமதி பெறவேண்டி இருந்தது. இவ்வாறு எம் போராளிகள் எந்த வேலையை முன்னெடுத்த போதும் அவற்றை தடுப்பதில் முன்னின்றது சிங்களப் படைகள். ஆனாலும் அதையும் தாண்டி சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களை அது தமிழ், முஸ்லீம், சிங்களம் என்ற இனபேதம் இன்றி பாதுகாத்து அவர்களின் இடர் களைந்து அவர்களை ஆற்றுகைப்படுத்தி நின்றார்கள் போராளிகள்.

இந்த இடத்தில் சுனாமி அனர்த்த முகைமைத்துவ செயற்பாடுகளில் ஈடுபட்ட தாயக மற்றும் புலம்பெயர் மக்களை மனதாற நினைவில் கொள்ளுவதோடு Center for Health Care என்ற அமைப்பினூடாக பெரும் பணிகளை செய்த புலம்பெயர் மருத்துவ உறவுகளையும் மனதில் நிறுத்திக் கொள்கிறார்கள் இராணுவ மருத்துவர் தணிகை மற்றும் அவரது அணியினர்.

தமிழ்லீடருக்காக 

கவிமகன்.இ (26.12.2017)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*