2017

விடுதலை வேட்கையைப் புடம்போடும் மாவீரர் நாள்!

இன்று மாவீரர் நாள் –

தாய் மண்ணுக்காகத் தம்முயிரை ஈகம் செய்து தரணி உள்ளளவும் நினைவுகளில் நிலைத்திருக்கும் மகத்துவம் பெற்ற புனிதர்களை அஞ்சலிக்கும் ஈகத்திருநாள்!

முருகன் ஆறுநாள் வேலெடுத்துப் போரிட்டு அசுரரை அழித்ததாகச் சொல்கிறது கந்தபுராணம். எமது மக்கள் 6 நாட்கள் விரதமிருந்து 6ஆம் நாள் உபவாசம் அனுஸ்டித்து ஏழாம் நாள் பாறணை செய்வது மரபுவழி வந்த வழமை.

எமது மண்ணை எதிரிகளிடமிருந்து மீட்கப் படைக்கல மேந்திப் போரிட்டு தம்முயிரை ஆகுதியாக்கியவர்கள் மாவீரர்கள். நாம் ஆறு நாட்கள் அந்த ஒப்பற்ற தியாகிகளை மனதிருத்தி மலர் தூவிச் சுடரேற்றி அஞ்சலித்து ஏழாம் நாள் ஈழத் தமிழன் எங்கெல்லாம் வாழ்கிறானோ அங்கெல்லாம் ஒரே நேரத்தில் அகவணக்கம் செலுத்தி மணியோசை எழுப்பி சுடரேற்றி எங்கும் மாவீரர் மகத்துவத்தை விரிக்கிறோம்.

உலகம் வாழ் ஈழத்தமிழரெல்லாம் ஒரே நேரத்தில் தமது அசைவியக்கத்தை அப்படியே நிறுத்தி அகவணக்கம் செலுத்த வைக்கும் பேராற்றல் எங்கள் மாவீரர்களுக்கு மட்டுமேயுண்டு. கந்தசஷ்டியை ஒரு பகுதி இந்து மக்களே கடைப்பிடிப்பர். மாவீரர் வாரம் மதங்களைக் கடந்து நாடுகளின் எல்லைகளைக் கடந்து எங்கும் ஒளிவிட்டுப் பிரகாசித்து உலகம் வாழ் ஈழத்தமிழர்கள் அனைவரையும் ஒரே சிந்தனையில் கட்டி வைக்கும் பெருமை பெற்றது.

எதிரிகள் என்றாலும் கூட போரில் இறந்தவர்களுக்கு மதிப்பளித்து கௌரவிப்பது உலகப் போரியல் மரபு.

ஆனால் இலங்கையின் அரச படையினர் மாவீரர்களின் கல்லறைகளைச் சிதைத்தார்கள். நினைவிடங்களைத் தோண்டி எச்சங்களை எரித்தார்கள். துயிலும் இல்லங்கள் இருந்த அடையாளம் கூட இருக்கக்கூடாதெனச் சகலவற்றையும் துடைத்தழித்தார்கள்.

அவர்களின் கீழ்த்தரமான, அநாகரிகமான இவெறியை முழு உலகுக்கும் காட்டினார்கள்.

ஆனாலும் – மாவீரர் அடையாளங்களை அழிக்க முடிந்ததா?

மாவீரர்களின் அடையாளம் வெறும் நடுகற்கள்தானென்றால் அவர்கள் நோக்கம் வெற்றிபெற்றிருக்கும். மாவீரர்களின் அடையாளங்கள் சதை கரைந்த மண்ணும் எலும்புகளும் தானென்றால் அவர்கள் எண்ணம் ஈடேறியிருக்கும். மாவீரர் உறங்குவது துயிலும் இல்லங்களின் எல்லைகள் தானென்றால் அவர்களின் வெறி வெற்றிபெற்றிருக்கும்.
ஆனால் மாவீரர்கள் நடுகற்கள், எலும்புகள், மண், நில எல்லைகள் எல்லாவற்றையும் கடந்தவர்கள்.

அவர்கள் தாயகத்தில் வீசும் காற்றில், பொழியும் மழையில், கொட்டும் பனியில், எரிக்கும் வெயிலில் எங்கும் கலந்து எம்மை அரவணைப்பவர்கள், எமது சுவாசக் காற்றில் நிறைந்து எங்கள் உயிரியக்கத்துக்குச் சுருதி சேர்ப்பவர்கள்.

அவர்கள் வாழ்ந்த காலத்தில் கடற்கரையில் காற்று வாங்கி குளிர் நிலவை மொட்டை மாடியில் அனுபவித்து, பஞ்சணையில் தூங்கி உல்லாசம் அனுபவித்தவர்களல்ல. கொழுத்தும் வெயிலிலும், பொழியும் மழையிலும், கொட்டும் பனியிலும், உடல் நடுங்கும் குளிர் காற்றிலும் போதிய உறக்கம், வயிறார உணவு கூட இன்றி தாயகம் காத்தவர்கள்.

எனவே தான் அவர்களின் அடையாளங்கள் எங்கும் பதிந்து கிடக்கின்றன. எவராலும் அழிக்க முடியாமல் நிமிர்ந்து நிற்கின்றன.

முள்ளிவாய்க்காலில் எமது விடுதலைப்போராட்டம் பாரிய பின்னடைவைச் சந்தித்து பின் மாவீரர் நாளையும் கொண்டாட அரசும், அரச படைகளும் பல்லாயிரம் தடைகளைக் கட்டவிழ்த்து விட்டன.

மாவீரர் துயிலும் இல்லங்களைச் சுற்றிக் கட்டுக்காவல், ஆலயங்களில் மணியோசை எழுப்பத்தடை, சொக்கப் பானை கொழுத்தினால் விசாரணை.
இப்படி நீட்டிய துப்பாக்கிகளுடன் பல் வேறு தடைகள்,

ஆனால் – எந்தக் கெடுபிடியாலும் வணக்க நிகழ்வுகளைத் தடுக்கமுடியவில்லை!

ஒவ்வொரு ஆண்டும் தடுக்கும் முயற்சிகள் தடுமாறித் தோற்றன. படையினர் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு எங்கும் சுடர்கள் எழுந்தன.

ஏழுமுறை தடை செய்வதில் கண்ட தோல்வி –

எட்டாம் முறை தடை முயற்சிகளை மேற்கொள்ளமுடியாமல் செய்தது.

தடை செய்து தோல்வியடைவதை விட அப்படி ஒன்று நடப்பதாகவே பொருட்படுத்தாமலிருப்பது மேலென்று கருதிவிட்டனர் போலும்!

சம்பந்தனும் சுமந்திரனும் நல்லாட்சி அரசாங்கம் மாவீரர் நாளை அனுஸ்டிக்க அனுமதியளித்துவிட்டது என ஆட்சியாளர்களுக்கு வக்கலாத்து வாங்கக்கூடும்.
அடுத்த தேர்தலில் தாங்களே அதைப் பெற்றுக்கொடுத்ததாக தம்பட்டம் அடிக்கவும் கூடும்.

ஆனால் – இது அனுமதியல்ல!

கடந்த ஏழு வருடங்களாக மாவீரர் நாளை தடைகளை மீறி அனுஸ்டித்த மக்கள் பெற்ற வெற்றி!

இந்த வெற்றியை எவரும் தமதாக்கிக் கொள்ள முடியாது!

இது மக்கள் பெற்ற வெற்றி!

மாவீரர் பேராற்றல் பெற்ற வெற்றி!

மாவீரர் நாளில் –

ஒவ்வொரு சுடர் ஏறும் போதும் மாவீரர் இலட்சியங்கள் ஒளிவிடுகின்றன. எமது மக்களின் இதயங்கள் பூகம்பமாய் பிறப்பெடுக்கின்றன. தாயக விடுதலையின் தாகத்தை எழுப்புகின்றன. எமது இலட்சியப் பயணத்துக்கு ஒளியூட்டி, வழிகாட்டி முன் செல்கின்றன.

எமது அரசியல்வாதிகள் துரோகம் செய்யலாம்!

பாராளுமன்றப் பதவிகளுக்காகச் சோரம் போகலாம்!

சரணாகதி அரசிலில் சங்கமமாகலாம்!

ஆனால் –

எமது மக்கள் முள்வேலிகளாக மாறிவிட்ட இவர்களைத் துவம்சம் செய்துவிட்டு மாவீரர்கள் வகுத்த இலட்சியப் பாதையில் முன் செல்வர்.

மாவீரர் நினைவுகள் – வெறும் நினைவுகளல்ல!

விடுதலை வேட்கை என்ற பெரு நதியின் மூல ஊற்றுக்கள்!

தடைகளைத் தகர்த்து முன் செல்ல என்றும் மாவீரர்களே துணையிருப்பர்.

– தமிழ்லீடர் ஆசிரியர்பீடம் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*