thalaivar 2

தாயக வானில் ஒரு துருவநட்சத்திரம்!

1954 நவம்பர் 26 –

தாயக வானில் மெல்ல இன ஒடுக்குமுறை என்ற கருமேகங்கள் குவிய ஆரம்பித்த காலம். 24 மணி நேரத்தில் சிங்களம் அரச கரும மொழியாக்கப்படும் என்ற கோஷத்துடன் சிங்கள தேசியம் அப்பட்டமான வகுப்புவாதமாக உருமாற்றிக்கொண்டு தீவிர வளர்ச்சி பெற்ற நாட்கள் அவை.

அன்று வல்வெட்டித்துறை மண்ணில் தமிழ்மக்களின் ஒரு துருவ நட்சத்திரமாகத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பிறந்தார்.

எல்லோரையும் போலவே அவரின் பிறப்பும் சாதாரணமானது தான். ஆனால் அவரின் வளர்ச்சி அவரை ஒரு வீரனாக, எதற்கும் விலைபோகாத இலட்சியவாதியாக நேர்மையும், தியாக உணர்வும், ஆளுமையும் கொண்ட தலைவனாக உருவாக்கியது.

1958ம் ஆண்டு இனக்கலவரத்தின் போது பல்லாயிரம் தமிழ் மக்களைப் பலிகொண்ட, சொத்துக்களை சூறையாடிய, குடியிருப்புக்களை எரியூட்டிய, எமது பெண்களை மானபங்கப்படுத்திய சிங்களப் பேரினவாத ஆயுத வன்முறை அரங்கேறியது.

அந்தக் கொடூர அனுபவங்கள் எமது தலைவனின் சின்னஞ் சிறு வயதிலேயே, அவருள் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அது படிப்படியாகப் பெருகி தமிழரிடையே தமக்கென ஒரு ஆயுதப்படை இல்லையேல் தமிழர்களுக்கு சாவையும், அழிவையும் விட வேறு எதுவுமே இல்லையென்ற உண்மையை வலுப்படுத்தியது.

எனவே 1971ல் தலைவர் சில தமிழ் உணர்வுகொண்ட இளைஞர்களையும் இணைத்து புதிய தமிழ் புலிகள் அமைப்பை உருவாக்கினார். 1976இல் அது தமிழீழ விடுதலைப்புலிகளாகப் பரிணாமம் பெற்றது.

தமிழீழ விடுதலைப்புலிகள் கட்டுப்பாடு, நேர்மையும் அர்ப்பண உணர்வும், சாவுக்கு அஞ்சாத மனோ திடமும் கொண்ட போராளிகளின் அமைப்பாக பிரபாகரன் அவர்கள் தலைமையில் வளர்ச்சி பெற்றது.

எனினும் கழுத்தறுப்புக்கள், காட்டிக்கொடுப்புக்கள், பிளவுகள், மாற்று அமைப்புக்களின் போட்டிகளென விடுதலைப்புலிகள் அமைப்பைச் சீர்குலைக்கப் பல்வேறு சக்திகளும் முயன்ற போதிலும் , அது எதற்கும் அசைந்து கொடுக்காது உறுதியுடன் நேரான திசையில் வளர்ந்தது.

1983ல் திருநெல்வேலியில் இராணுவ ரோந்து அணிமீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் 13 படையினர் கொல்லப்பட்டமை முழு நாட்டையுமே அதிரவைத்தது. அதைச் சாட்டாக வைத்து ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையிலான அரசாங்கம் மூட்டிய இன அழிப்பு வெறியாட்டத்தில் ஏராளமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு சொத்துக்கள் சூறையாடப்பட்டன.

வெலிக்கடைச் சிறையிலும் 54 தமிழ் அரசியல கைதிகள் மீதும் வன்முறை பிரயோகிக்கப்பட்டது.

அந்தக் கொடுமைகள் ஏராளமான இளைஞர்களை ஆயுதப் போராட்டம் நோக்கி இறக்கின. அதன் காரணமாக ஏராளமான இயக்கங்கள் தொடங்கப்பட்டு காலப்போக்கில் அவையெல்லாம் காணாமற் போய் விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் ஏக தலைமையாக, ஆயுதப் போராட்டக் களத்தில் முன் சென்றனர்.

அசைக்கமுடியாத இராணுவத் தளங்களாக கருதப்பட்ட பூநகரி, முல்லைத்தீவு, ஆனையிறவு படைமுகாம்கள் தாக்கப்பட்டு கைப்பற்றப்பட்டன. தமிழர் தாயகத்தின் மூன்றில் இரண்டு பகுதி தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

இப்படியாகத் தமிழீழ விடுதலைப் போராட்டம் வெற்றியை நோக்கி வேகமாக நகர்ந்த நிலையில், விடுதலைப்புலிகள் பலம் பெற்றிருந்த வேளையில் சர்வதேச அழுத்தங்கள் காரணமாக 2002ம் ஆண்டு சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டன.

அதே வேளையில் இலங்கையின் நாடாளுமன்றத்திலும், சர்வதேச அரங்கிலும் எமது நியாயங்களை முன்வைத்துச் செல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டது.

தமிழர் விடுதலைக்கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு ஜனநாயக அரசியல் சக்தியாக உருவாக்கப்பட்டது.

2009ல் முள்ளிவாய்க்காலில் எமது போராட்டம் தோற்கடிக்கப்பட்ட போது தமிழ் மக்கள் எமது உரிமைப் போராட்டத்தை நேர்மையுடன் முன்னெடுக்கும் சக்தியாக எதிர்பார்த்தனர்.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனோ த.தே.கூட்டமைப்பின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு தமிழரசுக்கட்சியை முன்வைத்து அதன் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தி ஒரு சரணாகதிப் பாதையில் அதை இழுத்துச் செல்கிறார். அவ் வகையில் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்கள் திட்டமிட்டு வெளியேற்றப்படுகிறார்கள். 2010 தேர்தல் காலத்தில் கஜேந்திரகுமார் அணியினர் வெளியேற்றப்பட்டனர். அதேவேளையில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்காத மஹிந்தராஜபக்ஷவின் குடும்ப நண்பரான சுமந்திரன் தேசியப்பட்டியல் மூலம் உள்வாங்கப்பட்டார். தற்சமயம் ஈ.பி.ஆர்.எல்.எவ் வெளியேற நிர்ப்பந்தங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தற்சமயம் தமக்கு இடைஞ்சலாக இருப்பவர்கள் எனக் கருதப்பட்டவர்களை வெளியேற்றிவிட்டு, தமிழ் மக்களின் நலன்களை உதாசீனம் செய்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரணாகதி அரசியலை தன்வசப் படுத்தியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் பிரபாகரன் அவர்களால் தமிழ் மக்களின் உரிமைக்குரலாக உருவாக்கப்பட்டது. அது மாவீரர்களின் உயிர் அர்ப்பணிப்பிலும் போராளிகளும், மக்களும் சிந்திய குருதியிலும் கட்டமைக்கப்பட்டது.

அதன் பெயரைப் பாவித்து சரணடைவு அரசியலை மேற்கொண்டு தமிழ் மக்களுக்கு துரோகமிழைப்பதை அனுமதிக்க முடியாது.

எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அதை முன்னெடுத்துச் செல்ல மாற்று அணி ஒன்றின் முக்கியத்துவம் தேவைப்படுகிறது.

மக்களின் அபிலாசைகளையும் மாவீரர்களின் கனவுகளையும் புறந்தள்ளிவிட்டு சுயநல அரசியல் நடத்தும் சம்பந்தன், சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் அரசியலை விட்டு விரட்டப்படவேண்டும். அது நாம் எமது தலைவருக்கு காட்டும் விசுவாசமும் மாவீரர்களுக்குச் செய்யும் வணக்கமும் ஆகும். எமது விடுதலைக்கு வழிகாட்டும் துருவ நட்சத்திரமான எமது தலைவர் பிரபாகரன் பாதையில் தொடர்ந்து நடப்போம்.

தமிழ்லீடர் ஆசிரியர் பீடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*