புளொட்

புளொட்டின் ‘வீரமக்கள்’ மாதம்தான் இனி மரநடுகை மாதம்?

கார்த்திகை மாதத்தை மரநடுகை மாதமாக நீடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. நான் ஒரு விவசாயியாக இருப்பதால் இதை ஆனி அல்லது ஆடிக்கு மாற்றுவதையே விரும்புவதாக தற்போதைய வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தனது அமைச்சுக் காலத்தில் அவரால் முன்வைக்கப்பட்ட மரநடுகை மாதக்கருப்பொருள் 2014 ஆம் ஆண்டிலிருந்து வடமாகாண சபையின் ஒப்புதலுடன் செயல்வடிவமாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது.

மரநடுகை மாதமாக கார்த்திகை மாதம் தெரிவு செய்யப்பட்டதற்கான பின்னனி பற்றி ஐங்கரநேசன் விளக்கும்போது தெரிவித்ததாவது;

வடக்கில் மரநடுகையை முன்னெடுப்பதற்குச் சாலச்சிறந்ததொரு மாதமாகக் கார்த்திகை மாதமே உள்ளது. எமது மண்ணுக்கு அதிக அளவு மழைவீழ்ச்சியைத் தரும் மாதம் கார்த்திகை. அதனாலேயே, கார் என்ற மழையைச் சுட்டுகின்ற பெயரை இம்மாதத்தின் பெயராகச் சூட்டியுள்ளோம்.

மழை நீரால் மாத்திரம் அல்ல, தமிழ் மக்களின் கண்ணீரால் நனையும் மாதமாகவும் கார்த்திகை உள்ளது. மரங்களே எமது ஆதித் தெய்வங்கள். மரங்களை வணங்குகின்ற தொன்மையான வழிபாட்டு முறையைக்கொண்ட நாம் மரணித்தவர்களின் நினைவாக மரங்களை நட்டுப் போற்றும் மாண்பையும் கொண்டிருக்கிறோம். இவற்றின் அடிப்படையிலேயே கார்த்திகை மாதம் வட மாகாண மரநடுகை மாதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

எனத் தெரிவித்திருந்தார்.

2014இலிருந்து கடந்த மூன்று வருடங்களாக எந்தவித தடங்கலுமில்லாமல் கார்த்திகையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மரநடுகை மாதத்தை ஆனி ஆடிக்கு மாற்றவேண்டும் என்று புளொட் அமைச்சர் சிவநேசன் அவர்களின் உள்நோக்கம் என்ன என்பதுபற்றி கூட்டமைப்பு வட்டாரங்களில் கேட்டபோது அவர்கள் கூறிய பதில் அதிர்ச்சியாக இருந்தது.

ஈபிஆர்எல்எவ், ரெலோ போன்ற இயக்கங்களின் கடந்த காலத்தவறுகளை மன்னித்து ஏற்றுக்கொண்ட விடுதலைப்புலிகள் அமைப்பானது கடைசிவரை புளொட் இயக்கத்தினரை மன்னித்து ஏற்றுக்கொள்ளமறுத்தனர். அத்துடன் புளொட் அமைப்பானது முள்ளிவாய்க்காலில் மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டபோதும் இராணுவ துணைக்குழுவாக இறுதிவரை இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய மாமனிதர் சிவராம் அவர்களின் படுகொலைக்கும் புளொட்டுக்கும் தொடர்பிருப்பதாக நம்பப்படும் சூழ்நிலையிலும் புலிகளின் காலத்திற்குப் பின் புளொட்டைத் கூட்டமைப்பில் இணைத்து பயணித்தவருகிறது தமிழரசுக் கட்சி.

இந்த நிலையில் தங்களின் ஜென்ம விரோதிகளான விடுதலைப்புலிகளின் மாவீரர் மாதத்தில் மரநடுகையா என ஆரம்பத்திலிருந்தே அந்த அமைப்புக்குள் வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. புளொட்டைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர் லிங்கநாதன் அவர்கள் கார்த்திகை மாதத்தில் மரநடுகை செய்வதை ஒரு குற்றமாக ஐங்கரநேசனுக்கு எதிரான விசாரணைக் குழுவில் குறிப்பிட்டிருந்தார்.

இன்று தங்கள் கட்சிக்கு விவசாய அமைச்சுப் பதவி வந்ததும் மாவீரர் மாதமான கார்த்திகையிலிருந்து மாற்றி புளொட் அமைப்பிலிருந்து இறந்தவர்களை நினைவுகூரும் வீரமக்கள் தினத்தை (13-07 தொடக்கம் 16-07) நினைவுகூரும் முகமாக ஆடிமாதத்தை மரநடுகை மாதமாகப் பிரகடனப்படுத்த சித்தாத்தனின் வழிகாட்டுதலுடன் சிவநேசன் காய்களை நகர்த்திக்கொண்டிருக்கிறார் என்பதே அந்த அதிர்ச்சியான பதிலாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*