PT

அரசியல் கைதிகள் விவகாரம்; நடப்பது என்ன? – பி.மாணிக்கவாசகம்

இந்த நாட்டை முப்­பது வரு­டங்­க­ளாக ஆட்­டிப்­ப­டைத்த பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற சந்­தே­கத்­தின்­ பேரில் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­பதில் காட்­டப்­ப­டு­கின்ற தாம­தமும், இழுத்­த­டிப்பும் ஆட்­சி­யா­ளர்­களின் அர­சியல் நேர்மை, அர­சியல் நிர்­வாக நேர்மை குறித்து பல கேள்­வி­களை எழுப்­பி­யி­ருக்­கின்­றன.

அர­சியல் கைதி­களின் விவகாரம் மீண்டும் விசு­வ­ரூபம் எடுத்­துள்­ளது. பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள மூன்று தமிழ் அர­சியல் கைதிகள் அனு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் தொடர்ச்­சி­யாக உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருப்­பதே இதற்குக் காரணம்.

தமக்கு எதி­ரான வழக்­குகள் வவு­னியா மேல் நீதி­மன்­றத்தில் விசா­ரணை செய்­யப்­பட வேண்டும் என்ற கோரிக்­கையை முதன்­மைப்­ப­டுத்­தியே அந்த மூன்று அர­சியல் கைதி­களும் இந்தப் போராட்­டத்தில் குதித்­தி­ருக்கின்றார்கள். வழ­மை­யாகக் கூறப்­ப­டு­வ­து­போல, சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ரதம் என கூறாமல் தீர்வு கிடைக்கும் வரையில் எமது போராட்டம் தொடரும் என அவர்கள் கூறி­யி­ருப்­பது கவ­னிக்­கத்­தக்­கது. அத்­துடன் அவர்கள் சிறைச்­சாலை அதி­கா­ரிகள், சிறைச்­சாலை வைத்­திய அதி­காரி மட்­டு­மல்­லாமல் தங்­களை நேர­டி­யாகச் சந்­தித்த வட­மா­கா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளது வேண்­டு­கோள்­களைப் புறந்­தள்ளி தமது போராட்­டத்தை உறு­தி­யாக முன்­னெ­டுத்து வரு­கின்­றார்கள்.

உண்­ணா­வி­ரதம் இருப்­ப­வர்­களின் உடல் நிலை மோச­ம­டை­கின்­றது. இது மோச­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்தும் என்­பதைச் சுட்­டிக்­காட்டி, அவர்­க­ளு­டைய கோரிக்­கைகள் தொடர்பில் அர­சாங்­கத்­துடன் தொடர்­பு­கொண்டு உரிய நட­வ­டிக்­கைகள் எடுப்போம் என்று வட­மா­கா­ண­சபை உறுப்­பி­னர்கள் அவர்­க­ளுக்கு உறு­தி­ய­ளித்த போதிலும், அவர்கள் தமது உண்­ணா­வி­ர­தத்தைக் கைவிட மறுத்­து­விட்­டார்கள்.

அது மட்­டு­மல்­லாமல் நீர்­கூட அருந்த மாட்டோம் எனக்­கூறி, தமது உணவு தவிர்ப்பு போராட்­டத்தை அவர்கள் மேலும் தீவி­ரப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றார்கள். அனு­ரா­த­புரம் சிறைக் கூடு­களில் மரண தண்­டனை பெற்ற கைதி­க­ளோடு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த இந்த அர­சியல் கைதிகள் உடல் நிலை மோச­ம­டைந்­ததன் கார­ண­மாக சிறைச்­சாலை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு, பின்னர் அங்­கி­ருந்து அவர்கள் அனு­ரா­த­புரம் அரச பொது வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். அங்­கேயும் அவர்கள் தமது போராட்­டத்தைக் கைவி­ட­வில்லை. உறு­தி­யாகத் தொடர்­கின்­றார்கள்.

ஜனா­தி­ப­திக்கு அழுத்தம்

அவர்­க­ளு­டைய போராட்­டத்­திற்கு வலுச் சேர்க்கும் வகையில் வட­மா­காணம் முழுவதும் கடை­ய­டைப்­புக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. தேசிய தமிழ்த்­தின விழாவில் கலந்து கொள்­வ­தற்­காக ஜனா­தி­பதி யாழ்ப்­பா­ணத்­திற்கு மேற்­கொள்ளத் திட்டமி­ட்­டி­ருந்த விஜ­யத்­தை­யொட்டி இந்த கடை­ய­டைப்புப் போராட்டம் ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள மூன்று தமிழ் அர­சியல் கைதி­களின் கோரிக்­கைகள் நிறை­வேற்­றப்­பட வேண்டும். அத்­துடன் சிறைச்­சா­லை­களில் நீதி­ வி­சா­ர­ணை­க­ளின்றி தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள ஏனைய கைதி­க­ளையும் விடு­தலை செய்ய வேண்டும். இதற்­கான நட­வ­டிக்­கை­களை உட­ன­டி­யாக எடுக்க வேண்டும் என ஜனா­தி­ப­திக்கு அழுத்தம் கொடுப்­ப­தற்­கா­கவே, இந்தக் கடை­ய­டைப்புப் போராட்டம் ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

அது மட்­டு­மல்­லாமல், யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் செய்­கின்ற ஜனா­தி­பதி தமிழ் அர­சியல் கைதிகள் தொடர்­பான நியா­ய­மான கோரிக்­கை­க­ளுக்கு உரிய உத்­த­ர­வாதம் அளிக்­கா­விட்டால், அவ­ரு­டைய யாழ். விஜ­யத்­திற்குப் பகி­ரங்­க­மாக எதிர்ப்பு தெரி­வித்து போராட்டம் நடத்­தப்­படும் என்றும் கடை­ய­டைப்­புக்­கான ஏற்­பாட்டில் பங்­கெ­டுத்­துள்ள ஈ.பி.­ஆர்­.எல்.எவ். கட்­சி­யி­னரால் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

அர­சியல் கைதி­களின் விடு­தலை என்­பது நீண்­ட­கா­ல­மா­கவே தீர்க்­கப்­ப­டாத ஒரு பிரச்­சி­னை­யாகத் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. நீர்த்துப் போகாமல் எரி­ம­லையை ஒத்­த­தாக, கொதி நிலையில் அது கொதித்துக் கொண்­டி­ருக்­கின்­றது. அவ்­வப்­போது அதனை அணைப்­ப­தற்­காக அல்­லது நீர்த்துப் போகச் செய்­வ­தற்­காக அர­சாங்­கத்­தினால் அளிக்­கப்­ப­டு­கின்ற வாக்­கு­று­தி­களும், போலி­யான நட­வ­டிக்­கை­களும் அதனை உயிர்த்­தி­ருப்­ப­தற்கே வழி­கோ­லி­யி­ருக்­கின்­றது.

உரிமைப் போராட்டமல்ல….அது பயங்­க­ர­வாதம்

தமிழ் மக்­க­ளு­டைய அர­சியல் உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­காக 60 வரு­டங்­க­ளாகப் போராட்­டங்கள் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. முப்­பது வரு­டங்­க­ளாக முன்­னெ­டுக்­கப்­பட்ட சாத்­வீகப் போராட்­டங்கள் உரிய முறையில் அர­சாங்­கங்­க­ளினால் கவ­னத்தில் எடுத்து, தமிழ் மக்­க­ளு­டைய உரிமைப் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­ப­ட­வில்லை. மாறாக அரச அடக்­கு­மு­றை­களே கட்­ட­விழ்த்து விடப்­பட்­டன. இதன் விளை­வாக ஆயுதப் பேராட்டம் தலை தூக்­கி­யது. ஆயுதப் போராட்டம் கார­ண­மா­கவே முப்­பது வரு­டங்­க­ளாக இந்த நாட்டில் ஒரு யுத்தம் மூண்­டி­ருந்­தது.

தமிழ் இளை­ஞர்கள் ஒன்­றி­ணைந்து முன்­னெ­டுத்­தி­ருந்த ஆயுதப் போராட்டம் பல்­வேறு மாற்­றங்­களின் பின்னர் விடு­த­லைப்­பு­லி­க­ளினால் மிகத் தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது. நியூயோர்க் மாந­கரின் உலக வர்த்­தக நிலையத் தொடர்­மாடிக் கட்­டி­டத்தில் அமெ­ரிக்க தேசிய பாது­காப்பு நிறு­வ­ன­மா­கிய பென்­டகன் மீது 2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி அல்­கைதா அமைப்­பி­னரால் நடத்­தப்­பட்ட விமானத் தற்­கொலைத் தாக்­கு­தலின் போது பேர­ழிவு ஏற்­பட்­டி­ருந்­தது. அதில் 3000 பேர் கொல்­லப்­பட்­டனர். ஆறா­யிரம் பேர் காய­ம­டைந்­தனர். அல்­கைதா அமைப்பைச் சேர்ந்த 19 பேர் கடத்­தப்­பட்ட விமா­னங்­களைப் பயன்­ப­டுத்தி பல முனை­க­ளி­லான இந்தப் பயங்­க­ர­வாதப் படு­கொலை தாக்­கு­தலை நடத்­தி­யி­ருந்­தனர். உல­கமே விக்­கித்துப் போனது. இத­னை­ய­டுத்து, செப்டெம்பர் 11 பயங்­க­ர­வாதத் தாக்­குதல் என இது குறிக்­கப்­பட்­டது. அத்­துடன் உல­க­ளா­விய ரீதியில் பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ரான அர­சியல் பாது­காப்பு நிலை­யி­லான ஒரு போக்கு தலை­யெ­டுத்­தி­ருந்­தது.

இந்த உலகப் போக்கை அல்­லது உலகம் கடைப்­பி­டித்த ஒழுங்கைப் பின்­பற்­றிய இலங்கை அர­சாங்கம் தமிழ் மக்­களின் உரி­மைக்­காக ஆயுதம் ஏந்திப் போரா­டிய விடு­த­லைப்­ப­ுலி­களின் செயற்­பா­டு­களைப் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளாகச் சித்­த­ரித்து, அவர்­க­ளுக்குப் பயங்­க­ர­வா­திகள் என பெயர் சூட்­டி­யது. இதற்கு முன்­ன­தா­கவே தமிழ் இளை­ஞர்­களின் அர­சியல் உரி­மைக்­கான ஆயுதப் போராட்­டத்தை நசுக்­கு­வ­தற்­காக பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் 1979 ஆம் ஆண்­டி­லேயே அர­சாங்­கத்­தி­னால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

அர­சியல் உரி­மைக்­காகப் போரா­டி­ய­வர்­களைப் பயங்­க­ர­வா­தி­களாகச் சித்­த­ரித்த அர­சாங்கம் அந்தப் போராட்­டத்தில் பங்­கெ­டுத்­தார்கள் என்ற சந்­தே­கத்­தின் ­பேரில் கைது செய்­யப்­பட்­ட­வர்­களைப் பயங்­க­ர­வா­திகள் என்றே அடை­யா­ளப்­ப­டுத்தி வரு­கின்­றது. அர­சியல் உரி­மைக்­கான போராட்­டத்­துடன் தொடர்­பு­டைய நட­வ­டிக்­கை­களில் சம்­பந்­தப்­பட்­டார்கள் என்ற கார­ணத்­திற்­காகக் கைது செய்­யப்­பட்­ட­வர்­களைத் தமிழ் மக்­களும் தமிழ் அர­சி­யல்­வா­தி­களும், அர­சியல் கைதிகள் என குறிப்­பி­டு­கின்ற போதிலும், அதனை அர­சாங்­கமும் இரா­ணு­வமும் தொடர்ந்து மறு­த­லித்து வரு­கின்­றன.

அந்த வகை­யி­லேயே நீதி அமைச்­ச­ராகப் புதி­தாக நிய­மனம் பெற்­றுள்ள தலதா அத்­துக்­கோ­ர­ளையும் அர­சியல் கைதிகள் என நாட்டில் எவரும் கிடை­யாது. விடு­த­லைப்­பு­லி­க­ளுடன் தொடர்பு கொண்­டி­ருந்­தார்கள் என்ற கார­ணத்­திற்­காக சிறைச்­சா­லை­களில் பயங்­க­ர­வா­தி­களே தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள் என குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.

யுத்தம் முடிந்­தது – பயங்­க­ர­வாதம்?

தமிழ் மக்­களின் நியா­ய­மான அர­சியல் உரி­மைக்­கான சாத்­வீகப் போராட்­டங்கள் கணக்கில் எடுக்­கப்­ப­ட­வில்லை. மாறி மாறி ஆட்­சிக்கு வந்த அரசாங்­கங்கள் அவற்றை எள்ளி நகை­யா­டின. போலி­யான பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி கிழித்­தெ­றி­வ­தற்­காக அல்­லது கிடப்பில் போடப்­ப­டு­வ­தற்­கா­கவே ஒப்­பந்­தங்­களைச் செய்­தன. அதனால் தீவிரம் பெற்ற போராட்­டங்­களை அள­வுக்கு அதி­க­மான பலத்தைப் பிர­யோ­கித்து வன்­மு­றையின் மூலம் போராட்­டங்­களை அடக்கி ஒடுக்­கின. இதனால் தனி­நாட்­டுக்­கான போராட்டம் வெடித்­தது, போராட்­டத்தைத் தீவி­ரப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும், அரச பயங்­க­ர­வா­தத்தில் இருந்து போராட்­டத்தைப் பாது­காப்­ப­தற்­கா­கவும் ஆயுதப் போராட்டம் பயன்­ப­டுத்­தப்­பட்­டது.

நாட்டு மக்­களில் ஒரு பகு­தி­யி­ன­ரா­கிய தேசிய சிறு­பான்மை இனத்­த­வ­ரா­கிய தமிழ் மக்­க­ளு­டைய போராட்­டத்தைப் பயங்­க­ர­வா­த­மா­கவும் அந்தப் போராட்­டத்தில் ஈடு­பட்­டார்கள் அல்­லது ஆத­ரித்­தார்கள் என்ற கார­ணத்­திற்­காக, அவர்­களைப் பயங்­க­ர­வா­தி­க­ளாக சித்­த­ரித்து, பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­ட­வர்கள் சிறைச்­சா­லை­களில் தொடர்ந்து தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். அவர்­க­ளுக்கு எதி­ராக உரிய சட்ட நட­வ­டிக்­கைகள் சீரான முறையில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. இதுவே அர­சியல் கைதிகள் விவ­காரம் எரியும் பிரச்­சி­னை­யாகக் கொதித்துக் கொண்­டி­ருக்­கின்­றது.

பயங்­க­ர­வா­திகள் என்ற சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­ட­வர்­களை என்ன செய்­வது, எவ்­வாறு தண்­டிப்­பது என்­பது தொடர்பில் அரச தரப்பில் திட­மான கொள்கை இருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. பயங்­க­ர­வாதம் தொடர்­பாக தேசிய அள­வி­லான கொள்கை அர­சாங்­கத்­திடம் இல்லை என்­பதே இதற்கு முக்­கிய கார­ண­மாகக் கருத வேண்­டி­யி­ருக்கின்றது.

முன்­னைய ஆட்சிக் காலத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான யுத்தம் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­டது. யுத்தம் முடி­வ­டைந்­த­தை­ய­டுத்து நாட்டில் நில­விய பயங்­க­ர­வா­தமும் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­டு­விட்­டது என்று அர­சாங்­கமே உறு­தி­யாகக் கூறு­கின்­றது. பயங்­க­ர­வாதம் ஒழிக்­கப்­பட்டு நாட்டில் அமைதி நில­வு­கின்­றது. மக்கள் சுதந்­தி­ர­மாக வாழ்­கின்­றார்கள் என்­பது அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு. ஆனால் எட்டு வரு­டங்கள் கழிந்த பின்னும், பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்பு கொண்­டி­ருந்­தார்கள் என்ற சந்­தே­கத்தில் கைது செய்­யப்­பட்ட அர­சியல் கைதி­களின் விடயம் விவ­கா­ர­மாகத் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது.

முரண்­பா­டான நிலைப்­பாடு

அவர்­களை அர­சியல் கைதிகள் என ஏற்­றுக்­கொள்­வ­தற்கு அர­சாங்கம் மறுத்து வரு­கின்­றது. அப்­ப­டி­யானால், அர­சாங்கம் கூறு­வதைப் போன்று பயங்­க­ர­வா­திகள் என சந்­தேக­த்தில் கைது செய்­யப்­பட்­ட­வர்­களை அர­சாங்கம் என்ன செய்யப் போகின்­றது என்ற கேள்­விக்கு அர­சாங்­கத்­திடம் சரி­யான பதில் கிடை­யாது. பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு அந்த சட்­டத்தின் கீழ் விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­டு­கின்ற வழக்­கு­களில் சந்­தேக நபர்­க­ளு­டைய வாக்­கு­மூ­லங்­களே, ஒப்­புதல் வாக்­கு­மூலம் என்ற பெயரில், அவர்கள் குற்றம் செய்­தார்கள் என்­ப­தற்­கான முழு­மை­யான ஆதா­ர­மாக நீதி­மன்­றங்­களில் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. அதன் அடிப்­ப­டையில் அவர்­க­ளுக்குத் தண்­ட­னைகள் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

ஒப்­புதல் வாக்­கு­மூலம் ஒன்றே பயங்­க­ர­வாதச் செயற்­பாட்டில் ஒருவர் ஈடு­பட்டார் என்­ப­தற்­கு­ரிய போது­மான ஆதா­ர­மாகக் கரு­தப்­ப­டு­கின்ற நிலையில், நூற்­றுக்கும் மேற்­பட்ட கைதி­களை, உள்­நோக்கம் கார­ண­மா­கவே அர­சாங்கம் பல வரு­டங்­க­ளாக இன்னும் சிறைச்­சா­லை­களில் அடைத்து வைத்­தி­ருக்கின்றது என்று கருத வேண்­டி­யி­ருக்­கின்­றது.

இந்த நாட்டை முப்­பது வரு­டங்­க­ளாக ஆட்­டிப்­ப­டைத்த பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற சந்­தே­கத்­தின்­பேரில் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­பதில் காட்­டப்­ப­டு­கின்ற தாம­தமும், இழுத்­த­டிப்பும் ஆட்­சி­யா­ளர்­களின் அர­சியல் நேர்மை, அர­சியல் நிர்­வாக நேர்மை குறித்து பல கேள்­வி­களை எழுப்­பி­யி­ருக்­கின்­றன.

பயங்­க­ர­வா­தத்தில் ஈடு­பட்­ட­மைக்­காகக் கைது செய்­யப்­பட்­ட­வர்கள் அல்­லது இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்­த­வர்கள் மற்றும் பயங்­க­ர­வா­தத்தில் ஈடு­பட்­டார்கள் என்ற சந்­தே­கத்தில் கைது செய்­யப்­பட்­ட­வர்கள் ஆகிய இரு பிரி­வி­ன­ரையும் அர­சாங்­கமும் அரச நீதித்­து­றையும், இரா­ணுவ புல­னாய்வு பிரி­வி­னரை உள்­ள­டக்­கிய இரா­ணு­வமும் கையாண்டு வரு­கின்ற முறைமை வேடிக்­கை­யா­ன­தாக இருக்கின்றது.

யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர் பாது­காப்பு அளிக்­கப்­படும், பொது மன்­னிப்பு வழங்­கப்­படும் என்ற அர­சாங்­கத்தின் ஒலி­பெ­ருக்கி அறி­வித்­தல்கள் மூல­மான பகி­ரங்க உத்­த­ர­வா­தத்தை ஏற்று சர­ண­டைந்­த­வர்­களும், காட்­டிக்­கொ­டுக்­கப்­பட்டும், புல­னாய்­வா­ளர்­க­ளினால் கண்டுபிடிக்­கப்­பட்டும் கைது செய்து விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட 11 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்­ட­வர்கள் இரா­ணு­வத்தின் புனர்­வாழ்வுப் பயிற்­சியின் பின்னர் விடு­தலை செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றார்கள்.

இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்­த­வர்­களில் பெரும் எண்­ணிக்­கை­யி­லான மற்றும் ஒரு தொகு­தி­யினர் என்ன ஆனார்கள், அவர்­களை இரா­ணுவம் என்ன செய்­தது என்­பது இன்னும் மர்­ம­மாக இருக்­கின்­றது. இரா­ணு­வத்­தி­னரால் இவர்கள் வலிந்து காணாமல் ஆக்­கப்பட்டார்கள் என்ற போர்க்­குற்­றச்­சாட்டு படை­யினர் மீதும் அர­சாங்­கத்தின் மீதும் சுமத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது என்­பது பிறி­தொரு விவ­கா­ர­மான விட­ய­மாகும்.

ஆனால், பயங்­க­ர­வாதச் செயற்­பா­டு­க­ளுக்கு உத­வி­னார்கள் அல்­லது மறை­மு­க­மாகச் செயற்­பட்­டார்கள் என்ற கார­ணத்­திற்­காகக் கைது செய்­யப்­பட்­ட­வர்­களை விசா­ரணை செய்­யவோ துரித சட்ட நட­வ­டிக்­கைக்கு உட்­ப­டுத்­தவோ விருப்­ப­மில்­லாத ஒரு போக்­கையே அர­சாங்கம் கடைப்­பி­டித்து வரு­கின்­றது.

இது பயங்­க­ர­வாதம் தொடர்பில் அர­சாங்கம் கொண்­டி­ருக்­கின்ற இரட்டை நிலைப்­பாட்­டையே எடுத்­துக்­காட்­டு­கின்­றது. அத்­துடன் பயங்­க­ர­வாதம் என்ற விட­யத்தை சிறு­பான்மை தேசிய இனத்தைச் சேர்ந்த இளை­ஞர்­களை திட்­ட­மிட்ட வகையில் பழி­வாங்­கு­வ­தற்­காகப் பயன்­ப­டுத்­து­கின்ற ஓர் அர­சியல் மூர்க்­கத்­த­னத்­தையும் அடை­யாளம் காண முடி­கின்­றது.

பயங்­க­ர­வாதம் குறித்து தெளி­வான தேசிய கொள்கை ஒன்று இருக்­கு­மே­யானால், அர­சியல் கைதிகள் – அர­சாங்­கத்­தினால் குறிப்­பி­டப்­ப­டு­கின்ற பயங்­க­ர­வாதச் சந்­தேக நபர்கள் அல்­லது பயங்­க­ர­வா­திகள் – சிறைச்­சா­லை­களில் இருக்­க­மாட்­டார்கள்.

சட்ட ரீதி­யாக முதன்மை பெறு­வது எது?

பயங்­க­ர­வா­தத்தை மோச­மான குற்­றச்­செ­ய­லாகக் கரு­து­கின்ற அர­சாங்கம், அந்தக் குற்­றத்தைச் செய்­தார்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக எடுக்­கப்­ப­டு­கின்ற சட்ட நட­வ­டிக்­கை­க­ளிலும் முரண்­பா­டான போக்­கையே கடைப்­பி­டித்து வரு­கின்­றது. அனு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் உண்­ணா­வி­ரதம் இருந்து வரு­கின்ற மூன்று தமிழ் அர­சியல் கைதி­களின் விட­யத்தில் இது தெளி­வாக வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது,

அனு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­ப­வர்­களில் இரா­ச­துரை திரு­வருள், மதி­ய­ழகன் சுலக் ஷன், கணேசன் தர்ஷன் என்ற மூன்று அர­சியல் கைதி­களும் எட்டு வரு­டங்­க­ளாகச் சிறையில் வாடு­கின்­றார்கள். இவர்­க­ளுக்கு எதி­ராக வவு­னியா மேல் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்­குகள் அங்கு நான்கு வரு­டங்­க­ளாகத் தொடர்ந்து நடை­பெற்று வந்­தி­ருக்­கின்­றன.

இந்த நிலையில் அரச படை­யி­னரைக் கொலை செய்­தார்கள் என குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள இந்தக் கைதி­க­ளுக்கு எதி­ரான வழக்­கு­களில் சாட்­சி­ய­ம­ளிப்­ப­வர்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டி­ருப்­ப­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்த அச்­சு­றுத்தல் கார­ண­மாக அந்த சாட்­சிகள் வவு­னியா நீதி­மன்ற வழக்கு விசா­ர­ணை­க­ளுக்கு வர­மு­டி­யா­துள்­ளன. எனவே சாட்­சி­களின் பாது­காப்­பையும் அவர்­களின் நலன்­க­ளையும் கருத்­திற்­கொண்டு, இந்த அர­சியல் கைதி­க­ளுக்கு எதி­ரான வழக்­கு­களை அனு­ரா­த­புரம் மேல் நீதி­மன்­றத்­திற்கு மாற்­றப்­பட வேண்டும் என முன்­வைக்­க­ப்­பட்ட கோரிக்கை ஏற்­கப்­பட்டு, சட்­டமா அதி­ப­ரினால், அந்த வழக்­குகள் அனு­ரா­த­ர­புரம் மேல் நீதி­மன்­றத்­திற்கு மாற்­றப்­பட்­டி­ருக்­கின்­றன.

இவ்­வாறு இந்த வழக்­கு­களை அனு­ரா­த­பு­ரத்­திற்கு மாற்­று­வ­தற்­கான விண்­ணப்பம் வவு­னியா மேல் நீதி­மன்­றத்தில் முன்­வைக்­கப்­பட்ட உட­னேயே, அதற்கு இந்த அர­சியல் கைதிகள் மூவரும் ஆட்­சே­ப­னையும் எதிர்ப்பும் தெரி­வித்­தி­ருந்­தனர். ஆனால் அவற்றை சட்­டமா அதிபர் கவ­னத்திற் கொள்­ள­வில்லை. அனு­ரா­த­பு­ரத்­திற்கு வழக்கு விசா­ர­ணை­களை மாற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் 2017 ஆகஸ்ட், செப்­டெம்பர் மாதங்­களில் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. இதனால் தமது வேண்­டு­கோளை வலி­யு­றுத்தி இந்தக் கைதிகள் மூவரும் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை ஆரம்­பித்­தி­ருந்­தார்கள். இந்தப் போராட்டம் வழக்­குகள் அனு­ரா­த­பு­ரத்­திற்கு மாற்­றப்­பட்­டதன் பின்­னரும் தொடர்ந்து இடம்­பெற்று வரு­கின்­றது.

பொது­வாக வழக்கு ஒன்றின் அனு­கூ­லங்கள் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு குற்றப் பத்­திரம் தாக்கல் செய்­யப்­பட்­டதன் பின்னர் எதி­ரி­க­ளாகக் குறிக்­கப்­ப­டு­ப­வர்­க­ளுக்கே சேர வேண்டும் என்­பது நீதித்­து­றையின் நடை­மு­றை­யாகும். அதே­வேளை அந்த வழக்கில் சாட்­சி­க­ளாக இருப்­ப­வர்­க­ளு­டைய பாது­காப்பு குறித்து கவனம் செலுத்த வேண்­டி­யது நீதிமன்­றத்தின் மிக முக்­கி­ய­மான பொறுப்­பாகும். அனு­ரா­த­பு­ரத்தில் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள 3 தமிழ் அர­சியல் கைதி­களின் விட­யத்தில் இந்த நீதி நடை­முறை கைந­ழுவ விடப்­பட்­டி­ருக்­கின்­றது.

எதி­ரி­க­ளிலும் பார்க்க, சாட்­சி­களின் நலன்­க­ளி­லேயே சட்டமா அதிபர் கவ­னத்தைக் குவித்­தி­ருக்­கின்றார். வவு­னியா நீதி­மன்­றத்­திற்கு வருகை தரு­வதில் ஆபத்­துக்கள் இருக்­குமேயானால், அதற்­கு­ரிய பாது­காப்பை வழங்க வேண்­டி­யது நீதி­மன்­றத்­தி­னதும், சட்­டமா அதி­ப­ரி­னதும் கட­மை­யாகும். அந்தக் கடமை இங்கு புறக்­க­ணிக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவே சட்ட வல்­லு­னர்கள் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கி­ன்­றார்கள்.

சட்­டமா அதி­பரின் மறுப்பு

இந்த வழக்­குகள் அனு­ரா­த­பு­ரத்­திற்கு மாற்­றப்­ப­டு­வதைத் தடுத்து நிறுத்­து­மாறு கோரி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் ஜனா­தி­ப­திக்கு எழு­திய கடி­தத்­திற்கு உரிய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு நீதி அமைச்­சுக்கு ஜனா­தி­ப­தியின் செய­லா­ள­ரினால் கடிதம் அனுப்­பப்­பட்­டி­ருந்­தது. ஆனால், அதன்­படி நட­வ­டிக்கை எதுவும் எடுக்­கப்­ப­ட­வில்லை. அத்­துடன் தமி­ழ­ருக்கு ஒரு நீதியும் சிங்­க­ள­வ­ருக்கு ஒரு நீதி­யு­மாக மிகுந்த பார­பட்­சத்­துடன் சட்­டமா அதிபர் நடந்து கொள்­கின்றார் என்று கடிந்­துள்ள சிவ­சக்தி ஆனந்தன், தமி­ழர்­களின் ஆத­ரவில் ஆட்சிபீட­மே­றி­யுள்ள நல்­லாட்சி அர­சாங்­கமும் இதனைக் கண்டும் காணாத வகையில் நடந்து கொள்­கின்­றது என சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இந்த விடயம் குறித்து சட்­டமா அதி­ப­ருடன் பேச்­சுக்கள் நடத்­திய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன், சட்ட ரீதி­யாக இந்த வழக்கு விசா­ர­ணை­களை அனு­ரா­த­பு­ரத்­திற்கு மாற்ற முடி­யாது என்­பதைச் சுட்­டிக்­காட்­டிய போதிலும், அதனை அவர் ஏற்­க­வில்லை. அனு­ரா­த­புரத்­திற்கு மாற்­றப்­பட்ட வழக்குகள் அங்கேயே விசாரணை செய்யப்படும். வவுனியாவுக்கு மீண்டும் மாற்றப்படமாட்டாது என உறுதியாகக் கூறிவிட்டார். அமைச்சர் மனோகணேசனும் ஜனாதிபதியை சந்தித்து கைதிகள் விவகாரம் குறித்து பேசியிருந்தார்

இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்தப்பட்டு, அவர்களை எதிரிகளாகக் கொண்ட வழக்குகள் திருகோணமலை, வவுனியா போன்ற இடங்களில் இருந்து அனுராதபுரம், கொழும்பு உட்பட சிங்களப் பிரதேசங்களில் உள்ள நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழ் அரசியல் கைதிகள் எதிரிகளாகக் குறிப்பிடப்பட்ட வழக்குகளை, அனுராதபுரம், பொலனறுவை, கொழும்பு போன்ற பிரதேசங்களில் இருந்து வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மாவட்டங்களுக்கு மாற்ற வேண்டும் என முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகள் சட்டமா அதிபரினால் அரிதாகவே ஏற்றுக்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற முக்கிய பாலியல் கொலை வழக்குகளில் ஒன்றாகிய கிருசாந்தி கொலை வழக்கு எதிரிகளின் பாதுகாப்பு நலன்களுக்காக கொழும்புக்கு மாற்றப்பட்டிருந்தது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருந்த தமிழர்களான சாட்சிகள் மிகுந்த உயிரச்சத்துடனேயே கொழும்பில் சென்று சாட்சியமளித்தார்கள். அவர்களுடைய பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்திய நீதிமன்றம் அவர்களுக்கு உரிய வசதிகளை கொழும்பில் செய்திருந்தது என்பதை இங்கு நினைவுபடுத்துவது அவசியம்.

மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த கிருசாந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட இராணுவத்தினருக்கு யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு இல்லை என்ற காரணத்திற்காகவே கொழும்புக்கு மாற்றப்பட்டிருந்தது. ஆனால், இந்த மூன்று தமிழ் அரசியல் கைதிகள் எதிரிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள வழக்கில் சட்டமா அதிபர் நேர்முரணான நடவடிக்கை எடுத்திருப்பதையே காண முடிகின்றது.

நீதித்துறையில் நிலவுகின்ற இப்படியான முரண்பாடான போக்கும் தமிழர்கள் மீது அவ்வப்போது காட்டப்படுகின்ற பாரபட்சமான நிலைமைகளுமே இந்த நாட்டின் நீதித்துறையின் மீது அவர்கள் நம்பிக்கை இழக்கச் செய்திருக்கின்றது, நீதித்துறையின் இந்த முரண்பாடான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அனுராதபுரத்தில் 3 தமிழ் அரசியல் கைதிகள் கடுமையான உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்திருக்கின்றார்கள்.அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வடபகுதியில் கடையடைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. நீதித்துறையின் பாரபட்சமான போக்கைக் கண்டித்து, நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவராகிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நீதி கேட்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

– பி.மாணிக்­க­வா­சகம் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*