sn

இலங்கைக்கு குட்டுவைத்த மனித உரிமைகள் ஆணையர் (சமகாலப் பார்வை)

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை யின் 36ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியிருக் கிறது. இந்தக் கூட்டத்தொடரின் தொடக்க நாளன்று உரையாற்றிய ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், இலங்கை தொடர்பாக நாசூக்காகவும், வெளிப்படையாகவும் சில விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அவர் வெளிப்படையாக வலியுறுத்திய விடயங்கள் மூன்று.

நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை அரசாங்கம் விரைவாக முன்னெடுக்க வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, சர்வதேச மனித உரிமை சாசனங்களுக்கு அமைவான, மாற்றுச் சட்டம் ஒன்றை விரைவாகக் கொண்டு வர வேண்டும்.

ஜெனீவாவில், ஏற்றுக்கொண்ட 30/1 தீர்மானத்துக்கு அமைய, நிலைமாறு கால நீதிப்பொறிமுறைகளை உருவாக்கி வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

இந்த மூன்று விடயங்களுக்குள் உள்ளடக்கப்பட வேண்டிய குறிப்பிட்ட சில விடயங்களும் கூட அவரது நீண்ட உரை யின், இலங்கை பற்றிய சுருக்கமான ஒரு பந்திக்குள் சேர்க்கப்பட்டிருந்தன.

நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவ டிக்கைகளுக்குள், காணாமல் போனோர் பணியகத்தை விரைவாக செயற்பட வைக்க வேண்டும் என்பதும் ஒன்று. இந்தப் பணியகம், காணாமல் போனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் என்றே அரசாங்கம் கூறியது.

கடுமையான எதிர்ப்புகளுக்கும் மத்தியில் இந்தப் பணியகத்தை உருவாக்கும் சட்டத்தையும், அரசாங்கம் பாராளுமன் றத்தில் நிறைவேற்றியது. இருந்தாலும், அதனை செயற்பட வைக்கும் உத்தரவை, வெளியிடாமல் ஜனாதிபதி இழுத்தடித்து வந்தார்.

ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை வெளியான 24 மணிநேரத்தில் தான், காணாமல் போனோர் பணியகத்தை செயற்படவைக்கும் வர்த்தமானி அறி விப்பை ஜனாதிபதி வெளியிட்டார்.

அடுத்து, போரின் போது இராணுவத்தி னரால் கைப்பற்றப்பட்ட நிலங்களை விரைவாக மீள ஒப்படைக்க வேண்டும் என்பது நம்பிக்கையை கட்டியெழுப்பும் மற்றொரு நடவடிக்கையாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் சுட்டிக் காட்டியி ருக்கிறார்.

வடக்கில் காணி விடுவிப்பு இடம்பெற் றாலும், அது மிகமிகக் குறைந்தளவேயா கும். கடந்தவாரம், அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகளைச் சந்தித்த பின்னர் வடக்கு மாகாண முதலமைச்சர் வெளி யிட்ட தகவல்களின்படி, வடக்கில், இன்ன மும் 60 ஆயிரம் ஏக்கர் காணி, இராணு வத்தினர் வசமுள்ளது. வெறும் 5 ஆயிரம் ஏக்கர் காணி மாத்திரமே விடுவிக்கப்பட் டுள்ளது.

இந்த விடயத்தில் அரசாங்கம் வேகமாகச் செயலாற்ற வேண்டும் என்ற வடக்கு மக் களின் நியாயமான எதிர்பார்ப்பை, ஐ.நா. மனித உரிமை ஆணையாளரும் தனது உரையில் பிரதிபலித்திருக்கிறார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு நீண்டகாலமாக இழுபறிப்படும் வழக்குகளை விரைவாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பது நம்பிக்கையைக் கட்டியெழுப்பு வதற்கான மற்றொரு விடயமாக அவர் கூறியிருக்கிறார். இது அரசியல் கைதிகள் விவகாரத்தில் அரசாங்கத்தின் விரைவான நடவடிக்கையை வலியுறுத்துகிறது.

அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு அவர் கோரவில்லை, சட்டரீதியாக எடுக் கப்படும் நடவடிக்கைகளை, விரைந்து முடிக்க வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடாக இருக்கிறது.

அடுத்து, பயங்கரவாத தடைச்சட்டத் தை நீக்குவதாக அரசாங்கம் வாக்குறு தியைக் கொடுத்திருந்தது. அதற்கு மாற்றான ஒரு வரைவையும் தயா ரித்து வெளியிட்டது. ஆனாலும், அதில் நிறையவே குறைபாடுகளும், ஆபத்தான விடயங்களும் இருப்பது சுட்டிக்காட்டப் பட்ட நிலையில், அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவ தில் உறுதியாக இருப்பதாக அரசாங்கம் கூறிக்கொண்டாலும், உள்ளூர அதற்கான விருப்பு அரசாங்கத்திடம் இருக்கிறதா என்ற சந்தேகம், ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கு வந்திருக்கிறது போலவே தெரிகிறது.

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டியுள்ள மூன்றா வது விடயம், நிலைமாறுகால நீதிப் பொறி முறைகளை விரைவாக உருவாக்க வேண் டும்.

இதற்கான வாக்குறுதியை, 30/1 தீர்மானத்தில் இலங்கை அரசாங்கம் கொடுத்திருக்கிறது என்பதை, அவர் நினைவுபடுத்தியிருக்கிறார். அத்துடன், இதனையும், ஏனைய வாக்குறுதிகளையும் நடைமுறைப்படுத்துவதற்கு தெளிவான காலவரம்பு ஒன்றை நிர்ணயித்து செயற்படுமாறும் அவர் கூறியிருக்கிறார்.

நிலைமாறுகால நீதிப் பொறிமுறைக ளுக்குள் தான், பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறைகள் உள்ளடக்கப்படுகின்றன. குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள், அது தொடர்பான சட்டநடவடிக்கைகள், இழப்பீடு, உண்மையை வெளிப்படுத்தல், நல்லிணக்கம், மீள நிகழாமையை உத்தரவாதப்படுத்தல் உள்ளிட்ட மிகச் சவாலான விடயங்களை உள்ளடக்கியது இந்த விடயம் தான்.

அரசாங்கம் ஜெனீவாவில் வழங்கிய ஏனைய வாக்குறுதிகள் விடயத்தில், ஏதோ சிறு துரும்பளவேனும், நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது, அல்லது எடுக்க முனைந்திருக்கிறது,

ஆனால், நிலைமாறுகால நீதிப்பொறிமுறைகளை உருவாக்கும் விடயத்தில், அரசாங்கம் எதையும் செய்யவில்லை என்றே கூறலாம். பொறுப்புக்கூறலுக்கான, உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கான பொறிமுறைகளை உருவாக்கும் நடவடிக்கைகளை எடுத்தால், தமக்கு அரசியல் ரீதியாகப் பின்னடைவு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் அரசாங்கத்துக்கு இருக்கிறது.

அதைவிட, பொறுப்புக்கூறல் என்ற பெயரில், தமது படையினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது எப்படி என்ற குழப்பமும், அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற விருப்பமும் அரசாங்கத்திடம் இருக்கிறது.

அண்மையில் ஜெனரல் ஜயசூரியவுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு விவகாரத்தில், அரசாங்கம் கடைப்பிடிக்கும் உத்தியில் இருந்தே இதனை உணரமுடியும். படையினரைப் பாதுகாப்போம், அவர்களைக் கைவிடமாட்டோம் என்று திரும்பத் திரும்ப அரசாங்கம் கீழ் இருந்து மேல் மட்டம் வரை வாக்குறுதிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு நியாயமான வழிமுறைகளின் ஊடாகச் செயற்படுதல் மற்றும், படையினரைப் பாதுகாக்கும் பொறுப்பு தமக்கே இருப்பதாக நிரூபித்தல் ஆகிய இரண்டு தோணிகளின் மீது பயணிக்க முடியாமல் அரசாங்கம் தடுமாறுகிறது.

இந்தக் கட்டத்தில், எத்தகைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும், போர் வீரர்களைப் பாதுகாத்தல் என்பதே தமது பிரதான கடப்பாடு என்று அரசாங்கம் கருதுகின்றது.

இந்த நிலையானது, ஜெனீவாவில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை மீறுவதாகும். அந்தக் கடப்பாட்டில் இருந்து விலகுவதாக அமையும்.

அதேவேளை, ஜெனீவா வாக்குறுதிகளை நடைமுறையில் நிறைவேற்றாமலும், நிறைவேற்றும் அர்ப்பணிப்பில் இருப்பதாகவும், அரசாங்கம் இரட்டை நிலையை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறது.

கடைசியாக, கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு 2 ஆண்டுகள் காலஅவகாசம் அளிக்கப்பட்டது. அதற்குள் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விடும் என்றும், இல்லாவிட்டால் மேலும் காலஅவகாசம் கோர முடியும் என்றும், அண்மையில் கூறியிருந்தார் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன.

அதுபோல, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஊடக ஆசிரியர்களுடனான சந்திப்பின் போது, பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள் மெதுவாகவே நடக்கும் என்றும், ஏனைய நாடுகளில் அவ்வாறு தான் நடந்திருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதாவது ஏனைய நாடுகளின் உதாரணத்தை முன்னிறுத்தி, கொடுக்கப்பட்டுள்ள நீண்டகால அவகாசத்துக்குள் எதையோ செய்து முடிப்போம் என்ற மனப்பாங்கில் தான் அரசாங்கம் இருக்கிறது.

இதனால் தான், ஜெனீவா தீர்மான கடப்பாடுகளை, காலவரம்புடன், நிறைவேற்றுமாறு ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்.

இந்த விடயத்தை ஒட்டியதாக, ஐ.நா. மனித உரிமை ஆணையாளர், மேலும் இரண்டு விடயங்களை அரசாங்கத்துக்குச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

வடக்கில் பாதிக்கப்பட்டவர்கள் நடத்தும் எதிர்ப்புப் போராட்டங்கள், மெதுவாக நடக்கும் சீர்திருத்தங்கள் அவர்களின் ஏமாற்றத்தை அதிகரிக்கச் செய்து வருவதை சுட்டிக்காட்டுகின்றன என்பது அவர் கூறியுள்ள ஒரு விடயம். அரசாங்கம் விரைந்து செயற்பட்டால், இதுபோன்ற நிலையைத் தவிர்க்கலாம் என்பது இதன் மறைபொருள்.

இன்னொன்று, பொறுப்புகளை நிறைவேற்றுவதை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையைச் சமாதானப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக அரசாங்கம் கருதக் கூடாது. தனது எல்லா மக்களுக்கும் உரிமைகளை வழங்குவதற்கான ஓர் அவசியமான கடமை இதுவென்று கொள்ள வேண்டும் என்பதாகும்.

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் இதனைக் குறிப்பிட்டமைக்கு ஒரு காரணம் உள்ளது.

ஜெனீவா தீர்மானங்களுக்கு இணங்கிச் செயற்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதற்கு மஹிந்த ராஜபக் ஷ ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனுடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையே காரணம் என்று தற்போதைய அரசாங்கம் கூறி வருகிறது.

ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்காவிட்டால் ஐ.நாவினால் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டிருக்கும் என்றும் அதில் இருந்து நாட்டைக் காப்பாற்றியிருப்பதாகவும், அரசாங்கம் கூறி வருகிறது.

அதாவது, பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் நாட்டின் எதிர்காலத்துக்கு அவசியம் என்று உணராமல்-ஒப்புக்கொள்ளாமல் ஏதோ நிர்ப்பந்தத்தின் பேரில் தான், இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது என்பது போலவே அரசாங்கம் கருத்துக்களை வெளியிட்டு வருகிறது.

இதனால் தான், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர், பொறுப்புக்களை நிறைவேற்றுவது, ஐ.நாவுக்காக என்றில்லாமல், நாட்டு மக்களுக்கு உரிமைகளை வழங்குவதற்கு அவசியம் என்று அரசாங்கம் கருத வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

அதேவேளை, ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் உரையில் இலங்கை பற்றிய பந்தியின் கடைசி வரி மிகவும் முக்கியமானது. அது வெளிப்படையான பொருளைக் கூறவில்லை.

சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்ய நம்பகமான நடவடிக்கைகளை இலங்கை எடுக்காதமையானது, உலகளாவிய நீதித்துறை நடவடிக்கைகளுக்கு இன்னும் அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

இதன் அர்த்தம் ஆழமானது. அதுவும், ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், அவருக்கு எதிராக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இருந்து நோக்கும் போது, இந்த விடயத்தின் பெறுமானம் இன்னும் அதிகமாகவே தெரிகிறது.

பொறுப்புக்கூறலுக்கான நம்பகமான நடவடிக்கைகளை அரசாங்கம் இன்னமும் உறுதி செய்யவில்லை என்பது ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் குற்றச்சாட்டாக வெளிப்பட்டிருக்கின்ற அதேவேளை, இதனால், உலகளாவிய நீதித்துறை நடவடிக்கையின் அவசியம் உணரப்படுகிறது என்றும் கூறியிருக்கிறார்.

இது, ஜெனரல் ஜயசூரிய மீது உள்நாட்டில் நடவடிக்கை எடுத்திருந்தால், இலத்தீன் அமெரிக்காவில் அவருக்கெதிராக வழக்குத் தொடுக்கப்படும் நிலை உருவாகியிருக்குமா என்ற கேள்வியை எழுப்புவதாகவும் இருக்கலாம்.

இனிமேலும், இலங்கைக்கு வெளியே எடுக்கப்படக் கூடிய நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதாகவும் இருக்கலாம். அல்லது, நியாயமான பொறுப்புக்கூறல் இல்லாவிடின், சர்வதேச நீதித்துறைத் தலையீடுகள் இருக்கும் என்பதற்கான ஓர் எச்சரிக்கையாகவும் இருக்கலாம். உலகளாவிய நீதித்துறை நடவடிக்கை என்பது, இன்னமும் ஐ.நாவின் மற்றொரு தெரிவாக இருக்கிறது என்பதையே, ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் இந்தக் கருத்து உணர்த்தி நிற்கிறது.

– சுபத்திரா –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*