vikatan2 copy

பெண் போராளிகளை இழிவுபடுத்தி யாழில் நூல்?! (விகடனுக்கு திறந்த மடல்) (இணைப்பு 2)

முன்னாள் பெண் போராளி ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டுவருவதாக புனைவு ஒன்றை எழுதி உண்மைபோல ஆனந்தவிகடனில் வெளியிட்டிருந்த சிவமகாராசா அருளினியன் தமிழ்த் தேசவிரோத சக்திகளுடன் இணைந்து அதனை யாழ்ப்பாணத்தில் வெளியிடுகிறார் என்ற தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. குறித்த பதிவு வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் விகடன் ஆசிரியர் குறித்த சம்பவம் மாணவப்பத்திரிகையாளர் ஒருவராலேயே எழுதப்பட்டிருந்தாக தெரிவித்து அன்றைய அதிர்வலைகளை தணிவித்திருந்தார்.

இந்நிலையில் அந்தப் பதிவு நூலுரு பெற்று யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படுவதாகவும், தமிழ் ஈழ விடுதலைப்போர் தொடர்பிலான எதிர் விமர்சனங்களை வெளியிட்டுவருகின்ற சில நபர்களே குறித்த வெளியீட்டு நிகழ்வின் பின்னணியில் இருப்பதுடன் அவர்களே கருத்துகரைகளையும் வழங்கவிருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.

இணைப்பு இரண்டு:-

இதனிடையே யாழ்ப்பாணத்தில் குறித்த எழுத்தாளரின் நூல் ஒன்று மட்டுமே வெளிவரப்போவதாகவும் முன்னாள் பெண் போராளி தொடர்பிலான நூல் வெளியிடப்படவில்லை என்றும் எழுத்தாளர் தரப்பு தகவல் வெளியிட்டிருக்கின்றது.

வெளிவரவுள்ள நூலினை ‘தமிழர் தேசமொன்றை அமைக்கும் பெருங்கனவுடன் வித்தாகிப் போன சகோதர சகோதரிகளுக்கு சமர்ப்பித்து இருக்கிறேன்” என எழுத்தாளர் குறிப்பிட்டிருப்பதாக தெரியவருகிறது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் ஒரு தளபதி நிலையில் இருந்த வித்தியா ராணி என்கிற போராளி ஒருவர் யாழ்ப்பாணத்தில் பாலியல் தொழிலாளியாக காணப்படுகிறார் எனத் தெரிவித்து 2012ஆம் ஆண்டில் விகடன் சஞ்சிகையில் குறித்த எழுத்தாளர் பதிவு ஒன்றினை வெளியிட்டிருந்தமை பெண் போராளிகள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் கடும் விமர்சனங்களைத் தோற்றுவித்திருந்தது.

இவ்வாறான சூழலில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்போகின்ற இந்தியாவின் கேரளா தொடர்பிலான நூலினைஎமக்காக வித்தாகிப் போன சகோதர சகோதரிகளுக்கு சமர்ப்பிக்கிறேன் எனக் குறிப்பிடுவதன் ஊடாக அவர் எதனைச் சொல்லவிளைகின்றார் என்ற கேள்வியை அவதானிகள் முன்வைக்கின்றனர்.

இந்த நிலையில் அன்று 2012 இல் தமிழ்லீடர் ஆசியர் பீடம் விடகன் சஞ்சிகைக்கு எழுதியிருந்த திறந்த மடலினை வாசகர்களுக்காக மீளவும் பிரசுரிக்கிறோம்..

முன்னாள் போராளியை விபச்சாரியாக்கிய விகடனுக்கு திறந்த மடல்!

2012 நவம்பர்.

தாய்த்தமிழகத்தில் இருந்து வெளிவரும் விகடனுக்கு அன்புகலந்த வணக்கம்!

நொந்து போய் மீளமுடியாத அவலத்துள் வாழும் ஈழத்தமிழ் மக்களின் மனங்களுடன் உங்களை வணங்குகிறோம். இனவிடுதலைப் போர் தொடர்பிலான நியாயங்களை தமிழக மக்களுக்கு எடுத்துச் சென்ற தமிழக ஊடகங்களில் பிரதான பங்கைப் பெறத்தக்க வகையில் செயற்பட்ட உங்களது சஞ்சிகையில் அண்மையில் வெளிவந்த ஆக்கம் தாயகத்திலும் புலத்திலும் உள்ள தமிழ் மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

உங்கள் தனித்துவத்துடன், புதிய, புதுமையான விடயங்களை சுவாரஸ்யமாக வெளியிட்டு வரும் நீங்கள் தமிழகத்தின் ஏனைய சஞ்சிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிவருகிறீர்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

தேசியவிடுதலைப் போருக்காக நாற்பதாயிரம் வரையிலான மாவீரர்கள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்திருக்கிறார்கள். அது போன்ற இரண்டு மடங்கிற்கும் அதிகமான போராளிகள் தங்கள் அங்கங்களை பறிகொடுத்திருக்கிறார்கள். இத்தனைக்கும் மேலாக பல இலட்சம் மக்கள் தங்கள் உயிர்களையும் உடைமைகளையும் இழந்திருக்கிறார்கள். 30 ஆண்டுகளுக்கும் மேலாக எமது இன விடுதலைப் போராட்டம் கடக்க முடியாத நெருப்பாறுகளைக் கடந்தே பயணித்தது. இத்தனை ஆயிரம் இழப்புக்களும் தமிழீழம் என்ற நோக்கம் ஒன்றை இலக்காகக் கொண்டே அமைந்திருந்தன. சில வார்த்தைகளுக்குள் சில பக்கங்களுக்குள் எழுதி முடித்துவிடும் அளவிற்கு சின்னத்தனமானதல்ல எமது விடுதலைப் போராட்டம் என்பதை எமது மாவீரர்களும் கரும்புலிகளும் நிகழ்த்திச் சென்ற வரலாற்றுப்பக்கங்களைப் புரட்டிப்பார்த்தால் புரியும்.

இத்தனை ஆயிரம் இழப்புக்களின் பின்னாலும் எமது போராட்டம் நசுக்கி அழித்தொழிக்கப்பட்டிருக்கின்றது. ஆனாலும் தாய்த்தமிழகத்திலும் புலத்திலும் இன்னமும் சுடர்விடும் எமக்கான ஆதரவுத்தளம் எம் மக்களை ஆறுதலடைய வைத்திருக்கிறது. இந்த நிலையில் தேசிய விடுதலைப்போரில் பங்கெடுத்த முன்னாள் பெண் போராளி ஒருவர் விபச்சாரியாக தொழில்புரிவதாகத் தெரிவித்து அருளினியன் என்பவர் எழுதியிருக்கின்ற ஆக்கம் முழுமையான உள்நோக்கம் கொண்டது என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

முழுக்க முழுக்க விடுதலைப்புலிகளையும் விடுதலைப்போராட்டத்தையும் இழிவுபடுத்தும் நோக்கம் கொண்டதாக குறித்த பேட்டி கற்பனை மூலம் சித்திரிக்கப்பட்டிருக்கின்றது. தங்கள் சஞ்சிகையின் மாணவ நிருபராகப் பணி புரிகின்ற குறித்த நபர் யாழ்ப்பாணம் குப்பிளானைச் சேர்ந்தவர் என்பது தங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் அவரது தந்தையார் தற்போது வரையில் தமிழ்நாட்டில் தேடப்படும் குற்றவாளியாக விளங்குகின்ற டக்ளஸ் தேவானந்தாவின் மிக நெருக்கத்துக்குரியவர் என்பது தங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்து கலாசார, பண்பாட்டலுவல்கள் அமைச்சராக இருந்தபோது உங்கள் மாணவப் பத்திரிகையாளரின் தந்தையார் மகாலிங்கம் அமைச்சரின் மிகுந்த விசுவாசத்துக்குரிய ஒரு நபராக பணிக்கமர்த்தப்பட்டிருந்தார். இலகுவில் எவராலும் நெருங்க முடியாத அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அருகமர்ந்து பணி செய்யும் பாக்கியம் பெற்ற சிவமகாராஜாவின் அன்புக்குரிய புத்திரனே முன்னாள் பெண் போராளியையும் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் வகையில் புனைதலை மேற்கொண்டிருக்கின்றார்.

இதனைவிடவும் அருளினியன் பதிவுகள் என்கிற அவரது தனிப்பட்ட இணையப்பதிப்பினைப் பார்வையிட்டால் அவரது தேசிய விடுதலையைக் கொச்சைப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டிருக்கின்ற பதிவுகளைப் பார்வையிட முடியும். அவரது தந்தையாரின் விசுவாத்துக்குரிய அமைச்சருக்கு விசுவாசம் காட்டுவதற்காகவே அருளினியன் தனது புனைதலை முன்னாள் போராளி என்ற விடயத்தின் மூலம் முன்வைத்திக்கின்றார். இந்த விடயம் மட்டுமே குறித்த பேட்டியின் உண்மைத் தன்மை தொடர்பில் தோலுரித்துக் காட்டியிருக்கும் என்று நம்புகிறோம். ஆனாலும் குறித்த பதிவு தொடர்பிலான சில தெளிவுறுத்தல்களை மேற்கொள்வதற்கு நாங்கள் முற்படுகிறோம்.

முற்றிலும் புனையப்பட்ட படைப்பு என்பதற்கான பெருமளவான ஆதாரப்படுத்தல்களை முன்வைக்க முடியும். அவற்றில் சிலவற்றை தங்கள் பார்வைக்காக முன்வைக்கின்றோம்.. விகடனின் தனித்துவங்களில் ஒன்று செவ்வி வழங்குபவர்கள் சொல்லும் வார்த்தைகளை அட்சரம் பிசகாமல் அவ்வாறே ஒப்புவிப்பது. ஆனால் முன்னாள் பெண் போராளி என்ற பெயரில் பிரசுரிக்கப்பட்டுள்ள செவ்வியில் அதற்கு முற்றுமுழுதாக மாறுதலையே காண முடிகின்றது.

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர்களோ அல்லது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்த மக்களோ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை சாதாரண உரையாடல்களின் போது கூட “பிரபாகரன்” என்று குறிப்பிடமாட்டார்கள் என்பது முக்கியமான விடயமாகும். அண்ணை அல்லது தலைவர் என்பதுதான் அவர்களின் அடைமொழியாக இருக்கும். குறிப்பாக போராளிகள் அனைவரும் “அண்ணை” என்றே தலைவர் அவர்களை அழைப்பார்கள். ஆனால் பேட்டியில் பிரபாகரன் என்று அழுத்தம் திருத்தமாக பல இடங்களில் அவரது பெயர் விழிக்கப்பட்டிருக்கின்றது.

விடுதலைப்புலிகளின் கட்டமைப்பில் பொறுப்புக்கள் நியமிக்கப்படுகின்ற போது கடந்தகாலங்களில் போராளிகள் செயற்பட்ட விதம், அவர்களின் திறைமை என்பவற்றை அடிப்படையாகக்கொண்டே பதவி நிலைகள் வழங்கப்பட்டுவந்திருக்கின்றன. இந் நிலையில சாதாரண பொறுப்புக்களில் உள்ளவர்களுக்கே பல்வேறு பயிற்சிகள், தலைமைப் பண்புகளை அதிகரிப்பதற்கான வகுப்புக்கள் இன்னும் பெருமளவான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். இவ்வாறான நிலையில் குறித்த பெண் ஒரு முன்னணித் தளபதியாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றார். அவர் ஒரு முன்னணித் தளபதியாக இருந்திருந்தால் அவர் மிகத்திறமை வாய்ந்த ஒருவராகவே இருந்திருப்பார். பேட்டியில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போன்று அவர் பிச்சை எடுக்கும் நிலைக்குச் சென்றிருப்பதற்கான வாய்ப்பே இல்லை.

சாதாரண கச்சான் விற்பனையில் இருந்து வீதித் திருத்த வேலைகளில் கூட யாழ்ப்பாணத்தில் பெண்கள் ஈடுபட்டுவருகின்றார்கள். வட்டுக்கோட்டையில் இருந்து பல கிலோமீற்றர் தூரம் பயணித்து யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்தில் சோர்ந்து படுக்கவேண்டிய தேவை அந்தப் போராளிக்கு ஏற்பட்டிருக்க சந்தர்ப்பமே இல்லை. அதனைவிடவும் முன்னாள் போராளி என்பதால் வேலை வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்ற சாரப்படவும் கருத்துச் சொல்லப்பட்டிருக்கின்றது. இராணுவத்தின் தடுப்பு முகாம்களில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகளுக்கு தனியார் நிறுவனங்கள், பொது அமைப்புக்கள், விற்பனை நிலையங்கள் உட்பட்ட பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. முன்னாள் போராளிகளை மக்கள் எவரும் தீண்டத் தகாத பொருட்களாகப் பார்க்கவில்லை. பிச்சை போடுவதற்கு கூட யாழ்ப்பாண மக்கள் பயந்ததாக அவரின் பெயரால் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. யாழ்ப்பாணம் அவ்வாறான ஒரு இழி நிலைக்கு இன்னும் போகவில்லை. பல போராளிகள் பிறந்த அந்த மண்ணில், அம்மக்களின் விடுதலைக்காக போராடிய போராளிக்கு பிச்சை போடுவதற்கு தயங்கும் நிலையும் அங்கில்லை.

இதேவேளை குறித்த பேட்டியின் ஊடாக அரசியல் பழிவாங்கலுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. குறித்த பேட்டியில் , தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் தாயகத்தில் உள்ள அரசியல்வாதிகளையும் தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகளையும் இலக்குவைத்து அவர்களை சாடி எழுதப்பட்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக இரண்டு விடயங்களைச் சுட்டிக்காட்ட முடியும், முதலாவதாக தாயகத்தில் உள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகக் கூறிக்கொள்பவர்கள் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதுடன் அவர்களை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் கூட குறித்த பதிவு எழுதப்பட்டிருக்கவில்லை. தாயகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய இரண்டு கட்சிகள் செயற்பட்டுவருகின்றன. அவை இரண்டும் முடிந்த வரையில் உதவி தேடிச் செல்லும் ஏதிலிகளுக்கு உதவி வருவதாகவே நாம் அறிகிறோம். தம்மிடம் இல்லாவிடினும் புலத்தில் உள்ளவர்களின் துணையுடன் முடிந்தவரையில் உதவிகள் வழங்கப்பட்டே வந்திருக்கின்றன. அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டினை முன்வைக்கும் அவர் யாரிடம் உதவிக்குப் போய் மனம் உடைந்தார் என்பதற்கான ஆதாரம் விகடனிடம் இருக்கிறதா?

அதேவேளை, “அதனால் தான் இன்றும் இனி ஒரு ஈழப்போர் வெடிக்கும். பிரபாகரன் திரும்பி வருவார்” என்றெல்லாம் சும்மா எழுதிக்கொழுத்திப் போடுகின்றனர்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்ற அதேபேட்டியில் எனது குழந்தைகளுக்கு அடுத்த வேளை உணவு இல்லாமல் பாலியல் தொழில் செய்துவரும் என்னிடம் வந்து “எப்போது உங்கள் அடுத்த போராட்டம்” என்று கேட்டால், விளக்குமாறால் அடிப்பேன் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அடுத்தவேளை உணவுக்காக பாலியல் தொழில் செய்யும் ஒரு நபர் தமிழகத்தில் என்ன எழுதுகிறார்கள்? எவ்வாறு எழுதுகிறார்கள் என்று ஆய்வு செய்து அறிந்து கொள்ளுமளவிற்கு நிலைமை இருக்கிறதா? அல்லது அவரிடம் செல்பவர்கள் விளக்கம் சொல்கிறார்களா? என்ற கேள்விகளுக்கு செவ்வி கண்ட நபர் பதில் தருவாரா?

இன்னொரு முக்கியமான விடயத்தினை நோக்க முடியும்.. வவுனியாவில் வைத்து தானும் தனது குழந்தைகளும் பிரிக்கப்பட்டதாக குறிப்பிடும் அவர், அந்தக் குழந்தைகள் எங்கிருந்தன. அவர்களை யார் பராமரித்தது? எப்போது மீண்டும் தன்னுடன் சேர்ந்தார்கள் என்ற விடயத்தினை எந்த இடத்திலும் சுட்டிக்காட்டவில்லை. குழந்தைகள் மீது அதீத பாசத்தின் விளைவாகவே அவர் பாலியல் தொழிலுக்குச் சென்றதாக சொல்லப்பட்டிருக்கின்றது. தாய் தனது பிள்ளைகளை பிரிந்த நாட்களை மறந்திருப்பாரா? அந்த விடயத்தினைக் கூறாமல் மறந்து போகும் நிலையில் ஒரு தாயுள்ளம் இருக்குமா?

இதனை விடவும் சிறிது காலத்தின் பின்னர் இராணுவத்தினர் அவர்களாகவே விடுவித்ததாகவும் முல்லைத்தீவில் ஒரு காட்டுப் பகுதியில் விடப்பட்டதாகவும் சொல்லியிருக்கின்றார். இராணுவத்திடம் சரணடைந்த தளபதி நிலையில் இருந்த விடுதலைப்புலிப் புலிகள் எவரும் இன்றுவரையில் விடுதலை செய்யப்படவில்லை. இந்நிலையில் சோதியா படையணியின் முன்னணித் தலைவி எவ்வாறு விடுதலையானார்? அதனைவிடவும் முன்னாள் போராளிகளை இராணுவம் கொண்டு சென்று காடுகளில் மீள்குடியேற்றம் செய்வதில்லை. அவர்களை குடும்பத்தவர்கள் பொறுப்பேற்றால் மாத்திரமே, இராணுவத்தினரால் கையளிக்கப்படுவர். விடுதலை செய்யப்பட்ட அனைத்துப் போராளிகளுக்கும் ஐ.ஓ.எம் நிறுவனம் தலா ஒரு இலட்சத்தினை அண்மித்த தொகை நிதி உதவி வழங்கி வருகின்றது. அதுவும் சுயதொழில் முயற்சிக்காக மட்டுமே அந்த உதவி வழங்கப்படுகின்றது. அதன் மூலம் வீதியோர வியாபாரம் கூட அந்தப் போராளியினால் செய்திருக்க முடியும்.

முல்லைத்தீவில் காட்டில் விட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஒரு தளபதிக்கு வன்னியில் எந்த இடத்தில் விடப்பட்டோம் என்பதைக் கூட அவரால் அறிந்து கொள்ளமுடியவில்லையா? அல்லது முன்னாள் போராளியை வைத்துக் கதை எழுதிய நபருக்கு முல்லைத்தீவில் இருக்கும் இடங்கள் தெரியாதா? என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது.

குறித்த செவ்வியில் மிக மோசமாக இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுவதுடன், குறித்த விடயம் சொல்லப்படும் பாங்கு எழுதியவரின் எண்ண ஓட்டத்தினை பிரதிபலிக்கின்றதோ என எண்ணத் தோன்றுகிறது. காரணம் இலங்கை அரசிற்கு எதிரான போர்க்குற்ற ஆதாரங்கள் மிக மோசமான எதிர்விளைவை இலங்கை அரசாங்கத்திற்கு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை ஆனந்தவிகடன் பேட்டி காணும் அளவிற்கு இலங்கை இராணுவம் அதி முட்டாள் தனமாக நடந்து கொள்வதாக எண்ணுகிறீர்களா? அல்லது இராணுவப் புலனாய்வு மிகவும் நலிவடைந்து காணப்படுவதாக நினைக்கிறீர்களா?

அனைத்தையும் கடந்து யாழ்ப்பாணத்தில் பிறந்த குறித்த எழுத்தாளர், ஒரு பெண் குறிப்பாக அவரது பார்வையில் மிகச் சிறந்த வீராங்கனையாகக் கருதப்படுகின்றவர் இவ்வாறான நிலையில் இருப்பதை பார்த்து எழுதி விளம்பரம் தேட முற்படுவாரா? அல்லது அவரின் அடுத்த கட்ட வாழ்வியலுக்காக என்ன செய்ய முற்பட்டார்? என்பதைத் தெரியப்படுத்த முடியுமா? தமிழர் தாயகத்தில் பிறந்த உணர்வுள்ள ஒருவன் இவ்வாறான நிலையில் இருக்கின்ற ஒரு பெண்ணை தொடர்ந்தும் இவ்வாறான இழிவான தொழில் செய்வதற்கு அனுமதிக்கமாட்டான். யாழ்ப்பாணத்தில் இன்னமும் பெருமளவு சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் இருக்கின்றன. எங்காவது ஒரு இடத்தில் அந்தக் குழந்தைகளை சேர்ப்பித்திருக்க முடியும். குறித்த பெண் போராளியின் பரிதாப நிலையினை யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற ஏதாவது ஒரு கத்தோலிக்க மத நிர்வாகத்தினர்களிடம் தெரிவித்திருந்தால் அவர்கள் கட்டாயம் அவருக்கான மாற்றீட்டு ஏற்பாடு ஏதாவது செய்திருப்பார்கள். இதனை வேண்டுமானால் நாங்கள் பகிரங்க சவாலாக விகடனிடம் முன்வைக்கின்றோம் முடிந்தால் குறித்த பெண் தொடர்பிலான சரியான தகவல்களை, அனுப்பிவக்க முடியுமா?

ஆக, இன்னும் ஏராளமான ஆதாரங்கள் குறித்த பேட்டியினுள்ளே புதைந்திருக்கின்றன. ஒட்டுமொத்தத்தில் முன்னுக்குப்பின் முரணாக பேட்டி முழுமையிலும் முரண்பாடுகளைக் கொண்டே புனையப்பட்ட ஒரு கட்டுக்கதை தான் இந்த முன்னாள் போராளி தொடர்பிலான பேட்டி என்பதை விகடன் நிர்வாகிகளுக்குச் சுட்டிக்காட்டவிரும்புகிறோம்.

மதிப்புக்குரிய விகடன் நிர்வாகத்தினரே!

எங்களுக்காக எழுதும் உங்கள் பணிகளுக்காக எங்கள் தலைகளைச் சாய்த்துக் கொள்கிறோம். அரசியல் பழிவாங்கல்களுக்காக மிகப் பெரிய ஊடக நிறுவனம் ஒன்று பயன்படுத்தப்பட்டிருப்பது வேதனைக்குரியது. ஆனாலும் விகடன் நிர்வாகம் மீதான விமர்சனமே அதிகளவில் வெளிவந்திருக்கின்றது. உண்மையில் குறித்த கட்டுரையின் பின்னணி என்ன? என்பதை வெளிப்படுத்துவதும் எதிர்காலத்திலாவது உரிய பதிவுகளை ஆதாரங்களுடன் விகடன் வெளிப்படுத்த வேண்டும் என்பதுமே எங்களின் எதிர்பார்ப்பாகும். எனவே எமது இனத்தின் வலி உணர்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் விடைகொள்கின்றோம்..

நன்றி.
தமிழ்லீடர் ஆசிரியர் பீடம்.

aruliyan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*