ema

ஏமாற்றப்படும் கூட்டமைப்பு (சமகாலப் பார்வை)

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் அர­சியல் கையறு நிலைக்குத் தள்­ளப்­பட்­டி­ருப்­ப­தா­கவே தோன்­றுகின்றது. நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மீது கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் கொண்­டி­ருந்த நம்­பிக்கை அற்றுப் போயி­ருப்­பதே இதற்கு முக்­கிய கார­ண­மாகும். இந்த அரசின் மீது முழு­மை­யான நம்­பிக்கை வைத்து, முண்டு கொடுத்­தி­ருந்த தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­மையின் முகத்தில் கரி­பூ­சு­கின்ற வகை­யி­லான அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கை­களே அவரை இந்த நிலை­மைக்கு இட்டுச் சென்­றி­ருக்­கின்­றன.

அரச தலை­வர்­க­ளான ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் மீதும், அவர்­க­ளுக்குப் பின்னால் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் முக்­கிய தூணாகக் கரு­தப்­ப­டு­கின்ற முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க மீதும் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் அள­வற்ற நம்­பிக்கை வைத்து, அர­சியல் ரீதி­யி­லான காய் நகர்த்­தல்­களை மேற்­கொண்டு வந்தார்.

ஆனால் எதிர்­பார்த்­த­வாறு தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணும் முயற்­சியில் அர­சாங்­கத்தின் ஒத்­து­ழைப்பை அவரால் பெற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை.

குறிப்­பாக புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வதன் மூலம்,இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காணப்­பட்­டு­விட வேண்டும் என அவர் விரும்­பி­யி­ருந்தார். அர­சியல் ரீதி­யான விருப்­பத்­திற்கு அப்பால், 2016 ஆம் ஆண்டின் இறு­திக்குள் அர­சியல் தீர்வை எட்­டி­விட முடியும் என்று அவர் நம்­பி­யி­ருந்தார்.

ஆனால் அர­சியல் ரீதி­யான அந்த நம்­பிக்கை படிப்­ப­டி­யாகத் தேய்ந்து, அவரை பெரும் ஏமாற்­றத்­திற்கு உள்­ளாக்­கி­யி­ருக்­கின்­றது.

இந்த ஏமாற்­ற­மா­னது, அவரை நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மீது அர­சியல் ரீதி­யாக சீற்றம் கொள்ளச் செய்­தி­ருக்­கின்­றது என்றே கூற வேண்டும். அதன் கார­ண­மா­கத்தான், ஐ.நா .செய­லாளர் நாய­கத்­தையும், உலக நாடு­க­ளையும் இலங்கை விவ­கா­ரங்­களில் தலை­யிட்டு, பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க முன்­வர வேண்டும் என கடி­தங்கள் மூல­மாகக் கோரிக்கை விடுத்­தி­ருக்­கின்றார்.

நிபந்­த­னை­யற்ற அர­சியல் ஆத­ரவு

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ யுத்­தத்தில் வெற்­றி­பெற்­ற­தை­ய­டுத்து, தமிழ் மக்­களின் ஆத­ரவைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கவோ, அல்­லது நீண்ட கால­மாக, தமிழ் மக்­களை வருத்­திக்­கொண்­டி­ருக்­கின்ற இனப்­பி­ரச்­சி­னைக்கு ஒரு தேசிய தலைவர் என்ற ரீதியில் ஓர் அர­சியல் தீர்வு காண்­ப­தற்கோ அவர் உளப்­பூர்­வ­மாக முயற்­சிக்­கவே இல்லை.

மாறாக யுத்­தத்தில் அடைந்த வெற்­றியை நீண்­ட­காலம் ஜனா­தி­பதி பத­வியில் ஒட்­டிக்­கொண்­டி­ருப்­ப­தற்­கான ஒரு கரு­வி­யாக அவர் பயன்­ப­டுத்­தினார். அது மட்­டு­மல்­லாமல், யுத்த வெற்­றியை அர­சியல் ரீதி­யாகப் பூதா­க­ர­மாக்கி, அதனை சுய­லாப அர­சி­ய­லுக்குப் பயன்­ப­டுத்தி இருந்தார். இது அவரை ஏதேச்­ச­தி­கார வழியில் பய­ணிக்கச் செய்­தி­ருந்­தது.

அதே­வேளை. தெற்­கா­சிய பிராந்­தி­யத்தில் இந்­தி­யாவின் பாது­காப்பு நலன்­களை சவால்­க­ளுக்கு உட்­ப­டுத்தும் வகையில் அவர் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடு­க­ளுடன் அர­சியல், பொரு­ளா­தார, இரா­ணுவ ரீதி­யி­லான உற­வு­களைப் பேணி­யி­ருந்தார். இது இந்தப் பிராந்­தி­யத்தில் அமெ­ரிக்­காவின் நலன்­க­ளையும் கேள்­விக்கு உள்­ளாக்­கு­வ­தாக அமைந்­தி­ருந்­தது.

உள்­ளூரில் ஜன­நா­ய­கத்தைத் துவம்சம் செய்து, சர்­வா­தி­காரப் போக்கைக் கடைப்­பி­டித்­த­துடன், இந்­தியா, அமெ­ரிக்கா உள்­ளிட்ட நாடு­களின், அர­சியல் ரீதி­யான அதி­ருப்­தி­யையும் அவர் சம்­பா­தித்­தி­ருந்தார். அதன் கார­ண­மா­கவே, அவரைப் பத­வியில் இருந்து அகற்­று­வ­தற்­கான முயற்­சி­களில் வெளிச்­சக்­தி­களும் செல்­வாக்கைப் பிர­யோ­கித்­தி­ருந்­தன.

இந்த செல்­வாக்கே, ஜனா­தி­பதி தேர்­தலில் மஹிந்த ராஜ­பக் ஷ தோல்­வி­ய­டைந்து, மைத்­தி­ரி­பால சிறி­சேன புதிய ஜனா­தி­ப­தி­யா­கவும், சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும், ஐக்­கிய தேசிய கட்­சியும் இணைந்து ஒரு நல்­லாட்சி அர­சாங்­கத்தை உரு­வாக்­கு­வ­தற்கும் வழி­யேற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

அதே­நேரம் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ஷவின் இரா­ணுவ ரீதி­யி­லான அர­சியல் ஒடுக்­கு­மு­றை­க­ளிலும், மத ரீதி­யி­லான அடக்­கு­மு­றை­க­ளிலும் சிக்கி, வெறுப்­புற்­றி­ருந்த சிறு­பான்மை தேசிய இனங்­க­ளா­கிய தமிழ் மற்றும் முஸ்லிம் சமூ­கங்­களும் புதிய ஜனா­தி­ப­தியைத் தெரிவு செய்­வ­தற்கும், நல்­லாட்சி அர­சாங்­கத்தை உரு­வாக்­கு­வ­தற்கும் துணை புரிந்­தி­ருந்­தன.

தமிழ் மக்­களின் சார்பில் நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்­கிய தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் மைத்­தி­ரி­பால சிறி­சேன, ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க ஆகிய மும்­மூர்த்­தி­களும், அர­சி­யலில் புதிய மாற்­றத்தைக் கொண்டு வரு­வ­தற்கு, பேரு­தவி புரிந்­தி­ருந்தார்.

இந்த நிபந்­த­னை­யற்ற அர­சியல் ஆத­ர­வுக்குப் பதி­லு­ப­கா­ர­மாக, தமிழ் மக்கள் எதிர்­நோக்­கி­யுள்ள நாளாந்த எரியும் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­படும் என்றும், புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக அதி­கா­ரப்­ப­ர­வ­லாக்­கலைக் கொண்ட அர­சியல் தீர்வு காணப்­படும் என்றும் நல்­லாட்சி அர­சாங்­கத்­தி­ன­ருக்கும் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­த­னுக்கும் இடையில் உடன்­பாடு எட்­டப்­பட்­டி­ருந்­தது.

புதிய அரசி­ய­ல­மைப்பும் அர­சியல் தீர்வும்

நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி ஆட்சி முறை­மையே முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக் ­ஷவை சர்­வா­தி­காரப் போக்­கிற்கு இட்டுச் சென்­றி­ருந்­தது. அத்­த­கைய நிலைமை இனி­மேலும் ஏற்­ப­டாமல் தடுக்­கப்­பட வேண்டும் என்­பது நல்­லாட்சி அர­சாங்­கத்­தி­ன­ரு­டைய முக்­கிய நோக்­க­மாக இருந்­தது.

அதே­வேளை, இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்­காக, மித­வாத தமிழ் அர­சியல் தலை­வர்­க­ளுக்கும் சிங்­கள தேசிய அர­சியல் தலை­வர்­க­ளுக்கும் இடையில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களும், அத­னை­யொட்டி செய்து கொள்­ளப்­பட்ட ஒப்­பந்­தங்­களும் வர­லாற்று ரீதி­யாகத் தோல்­வி­யையே கண்­டி­ருந்­தன.

எனவே, வெறும் பேச்­சு­வார்த்­தை­க­ளி­னாலும், ஒப்­பந்­தங்­க­ளி­னாலும் அர­சியல் தீர்வு காண முடி­யாது என்ற பட்­ட­றிவை தமிழ் அர­சியல் தலை­வர்கள் பெற்­றி­ருந்­தனர். எனவே, அர­சி­ய­ல­மைப்பில் மாற்­றங்­களைக் கொண்டு வரு­வதன் ஊடா­கத்தான் நிலை­யா­னதோர் அர­சியல் தீர்வை எட்ட முடியும் என்ற தெளிவை அவர்கள் பெற்­றி­ருந்­தனர்.

அத­ன­டிப்­ப­டையில் புதிய அர­சி­ய­ல­மைப்பைக் கொண்டு வர­வேண்டும் என்ற தேவையைக் கொண்­டி­ருந்த நல்­ல­ர­சாங்­கத்­தி­ன­ரு­டைய நிலைப்­பாடு, இனப்­பி­ரச்சி;னைக்கு அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்­கான வழியைத் திறந்­து­விட்­டி­ருந்­தது.

ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கா­ரங்­களை மட்­டுப்­ப­டுத்தி பாரா­ளு­மன்­றத்தின் ஊடாக பிர­த­ம­ரு­டைய அதி­கா­ரத்தை மேலோங்கச் செய்­வ­தற்கும், தேர்தல் முறையில் மாற்­றங்­களைக் கொண்டு வரு­வ­தற்கும் ஏற்ற வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்க வேண்­டிய தேவை நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு இருந்­தது.

எனவே புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக இனப்­பி­ரச்சினைக்குத் தீர்வு காண்­ப­தற்­கான வாய்ப்பை எதிர்­நோக்­கி­யி­ருந்த தமிழ் தரப்­பினர் குறிப்­பாக தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் இந்தச் சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு முனைந்­தி­ருந்தார்.

அதன் கார­ண­மா­கவே ஜனா­தி­பதி ஆட்சி முறையில் மாற்றம், தேர்தல் முறையில் மாற்றம் என்­ப­வற்­றுடன் இனப்­பி­ரச்­சி­னைக்கு அதி­காரப் பர­வ­லாக்­கத்தின் ஊடாக ஐக்­கிய இலங்­கைக்குள் அர­சியல் தீர்வு காண்­பது என்ற விட­யத்­தையும் உள்­ள­டக்கி புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன.

நடந்­த­தென்ன?

நிறை­வேற்று அதி­கார பலம் கொண்ட ஜனா­தி­ப­தி­யாக அர­சி­யலில் அதி­யுச்ச அதி­கா­ரங்­களைக் கொண்டு தனிக்­காட்டு ராஜா­வாக அர­சோச்­சிய முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ எதிர்க்­கட்சித் தலை­வ­ராகக் கூட தலை­யெ­டுக்க முடி­யாத அள­வுக்கு தேர்­தல்­களில் தோற்­க­டிக்­கப்­பட்­டி­ருந்தார்.

இந்தத் தோல்­வியை அவரால் எளிதில் ஜீர­ணிக்க முடி­ய­வில்லை. இருந்­தாலும், ஜனா­தி­பதி தேர்­தலில் தோற்­க­டிக்­கப்­பட்­டி­ருந்­தாலும், இரண்டாம் நிலையில் அவர் பெற்­றி­ருந்த வாக்­கு­களின் அடிப்­ப­டையில் மக்­க­ளு­டைய ஆத­ரவை மேலும் விரி­வு­ப­டுத்தி மீண்டும் ஆட்­சியைக் கைப்­பற்­று­வ­தற்­காக பகீ­ரத முயற்­சி­களில் ஈடு­பட்­டி­ருந்தார்.

நல்­லாட்சி அர­சாங்­கத்தை எப்­ப­டி­யா­வது கவிழ்த்து ஆட்­சியைக் கைப்­பற்ற வேண்டும் என அர­சியல் ரீதி­யாகத் துடித்துக் கொண்­டி­ருந்த மகிந்த ராஜ­பக்­ ஷவுக்கு சிங்­கள மக்கள் மத்­தியில் ஆத­ரவு பெரு­கத்­தக்க வகை­யி­லான எந்­த­வொரு காரி­யமும் தமிழர் தரப்பு அர­சியல் செயற்­பா­டுகளில் இடம்­பெற்­று­விடக் கூடாது என்­பதில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் பாராளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் மற்றும் இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராஜா சகிதம் மிகத் தீவிர கவனம் செலுத்திச் செயற்­பட்­டி­ருந்தார்.

நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்ற பின்பும், தமிழ் மக்­க­ளு­டைய முக்­கி­ய­மான பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணும் விட­யத்தில் அரச தரப்­பினர் உரிய முன்­னேற்­றத்தைக் காட்­ட­வில்லை.

பல்­வேறு உறு­தி­மொ­ழிகள் வழங்­கப்­பட்­ட­னவே தவிர அவற்றை நிறை­வேற்­று­வ­தற்கு காத்­தி­ர­மான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை. இதனைச் சுட்­டிக்­காட்டி, அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­களும், பாதிக்­கப்­பட்ட பொது­மக்­களும் பல்­வேறு வழி­மு­றை­களில் வற்­பு­றுத்­திய போதிலும், அதற்கு கூட்­ட­மைப்பின் தலைமை இடம் கொடுக்­க­வில்லை.

தங்­களால் உரு­வாக்­கப்­பட்ட நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுப்­ப­தற்­கான அர­சியல் நட­வ­டிக்­கைகள், நல்­லாட்சி அர­சாங்­கத்தின் இருப்பைப் பாதிக்கத் தக்க வகையில், இன மத ரீதி­யாக துவே­சங்­களைப் பரப்பி, தென்­னி­லங்­கையில் மகிந்த ராஜ­பக்­ ஷவுக்கு ஆத­ர­வான அர­சியல் அலையை ஏற்­ப­டுத்­தி­விடும் என்­பதைச் சுட்­டிக்­காட்டி, கூட்­ட­மைப்பும் தமிழ் மக்­களும் பொறு­மை­யாக இருக்க வேண்டும், அமைதி காக்க வேண்டும் என அடிக்­கடி அறி­வு­றுத்தி வந்தார்.

நல்­லாட்சி அர­சாங்கம் படிப்­ப­டி­யாக தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கும் என்ற நம்­பிக்­கையை கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­க­ளுக்கும், தமிழ் மக்­க­ளுக்கும் தொடர்ச்­சி­யாக ஊட்டி வந்தார். இதனை ஒரு வகையில் அர­சாங்­கத்­திற்கு சார்­பா­னதோர் அர­சியல் பிர­சா­ர­மா­கவே அவ­ரு­டைய வழி­ந­டத்­தலில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைமை முன்­னெ­டுத்து வந்­தது என்றே கூற வேண்டும்.

மக்கள் முன்­னெ­டுத்த போராட்­டங்கள்

இடம்­பெ­யர்ந்த மக்­க­ளு­டைய காணி­களைக் கைப்­பற்றி அவற்றில் இரா­ணு­வத்­தினர் நிலை­கொண்­டி­ருப்­பதன் கார­ண­மாக யுத்தம் முடி­வுக்கு வந்து பல வரு­டங்­க­ளா­கி­விட்ட போதிலும், இடம்­பெ­யர்ந்­தி­ருந்த ஆயி­ரக்­க­ணக்­கான குடும்­பங்கள் தமது சொந்தக் காணி­களில் மீள்­கு­டி­யேற முடி­யாத நிலைமை தொடர்ந்­தது.

இறுதி யுத்­தத்தின் போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்ட மீறல்­களை உள்­ள­டக்­கிய போர்க்­குற்றச் செயற்­பா­டு­க­ளுக்கு பொறுப்பு கூற வேண்டும் என ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் அமெ­ரிக்­கா­வினால் கொண்­டு­வ­ரப்­பட்ட தீர்­மா­னங்­களை நிறை­வேற்ற வேண்டும் என்ற சர்­வ­தேச அழுத்­தமும் தொடர்ந்­தி­ருந்­தது.

இந்தப் பின்­ன­ணியில், இரா­ணு­வத்­தினால் கைப்­பற்­றப்­பட்ட காணி­களை, அவற்றின் உரி­மை­யா­ளர்­க­ளிடம் கைய­ளிக்க வேண்டும், வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் அர­சாங்கம் பதி­ல­ளிக்க வேண்டும், யுத்தம் முடி­வுக்கு வந்து, முன்னாள் போரா­ளி­களான விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்கள் 12 ஆயிரம் பேருக்கு பொது­மன்­னிப்பு வழங்­கப்­பட்­டுள்ள நிலையில் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு உத­வி­னார்கள், அவர்­க­ளுடன் இணைந்து செயற்­பட்­டார்கள் என்ற சந்­தே­கத்­தின்­பேரில் கைது செய்­யப்­பட்டு நீண்ட கால­மாக சிறை­களில் வாடு­கின்ற தமிழ் அர­சியல் கைதி­களை விடு­தலை செய்ய வேண்டும் என்ற கோரிக்­கைகளை முன்­வைத்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ளினால் பல்­வேறு போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன.

தமது கஷ்­டங்­க­ளையும் துன்­பங்­க­ளையும் நன்கு புரிந்­து­கொண்­டுள்ள நல்­லாட்சி அர­சாங்கம் தமது பிரச்­சி­னை­க­ளுக்கு நேர்­மை­யான முறையில் விரைந்து தீர்­வு­களைத் தரும் என்று தமிழ் மக்கள் கொண்­டி­ருந்த எதிர்­பார்ப்­பையும் நம்­பிக்­கை­யையும் நிறை­வேற்­றத்­தக்க வகையில் அர­சாங்கம் செயற்­படத் தவ­றி­யி­ருந்­ததன் கார­ண­மா­கவே மக்கள் தாங்­க­ளா­கவே போராட்­டங்­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தார்கள்.

அர­சியல் தலை­மை­யின்றி பாதிக்­கப்­பட்ட மக்கள் தாங்­களே எழுச்சி பெற்று நடத்­திய இந்தப் போராட்­டங்­க­ளுக்குத் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு போதிய அளவில் தலை­மைத்­து­வத்தை வழங்­கவோ அவற்றை உரிய முறையில் வழி­ந­டத்தி அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுப்­ப­தற்கோ முன்­வ­ர­வில்லை.

நிலை­மாற்றம்

இதனால் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்த ஒரு­சிலர் கூட்­ட­மைப்பின் தலைமை மீது எரிச்­சலும் சீற்­றமும் கொண்­டி­ருந்­தார்கள். இந்த எரிச்­சலும், சீற்­ற­முமே கூட்­ட­மைப்பின் தலை­வர்­களை மிகத் தீவி­ர­மான முறையில் கண்­டிக்­கின்ற செயற்­பா­டு­களில் அவர்­களை ஈடு­படத் தூண்­டி­யி­ருந்­தன.

பாதிக்­கப்­பட்ட மக்­களின் அதி உச்ச கட்­டத்­தி­லான இந்த உணர்ச்சி வெளிப்­பா­டா­னது, தமி­ழ­ரசுக் கட்­சிக்கு அர­சியல் ரீதி­யாக அப­கீர்த்தி உண்­டாக்கும் வகையில், மேற்­கொள்­ளப்­பட்ட திட்­ட­மிட்ட உள்­நோக்கம் கொண்ட செயற்­பா­டா­கக்­கூட நோக்­கப்­பட்­டது.

நல்­லாட்சி அர­சாங்கம் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்குப் பதி­லாகக் காலம் கடத்தி வரு­கின்­றது. மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்கு முன்­னு­ரிமை அடிப்­ப­டையில் தீர்வு காணப்­பட வேண்டும்.

எனவே, காலம் கடத்­து­கின்ற அர­சாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற பங்­கா­ளிக்­கட்­சி­க­ளி­னது கோரிக்­கையும், பிரச்­சி­னை­க­ளுக்கு உட­ன­டி­யாகத் தீர்வு வேண்டும் என்ற மக்­களின் எதிர்­பார்ப்பும் உரிய முறையில் கூட்­ட­மைப்பின் தலை­மை­யினால் கவ­னத்தில் எடுக்­கப்­ப­ட­வில்லை. அரசு மீது மக்கள் கொண்­டுள்ள அதி­ருப்தி உணர்வை புரிந்து கொண்டு அதற்­கேற்ற வகையில் கூட்­ட­மைப்பின் தலைமை செயற்­பட்­ட­தாக பாதிக்­கப்­பட்ட மக்­களால் அறிந்து கொள்ள முடி­ய­வில்லை.

இத்­த­கைய நிலை­மை­யி­லேயே அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்கை இழந்து ஐ.நா. மன்­றத்­தையும் சர்­வ­தேச நாடு­க­ளையும் நோக்கி அபயம் கோரி கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் கடி­தங்­களை அனுப்பி வைத்­துள்ளார்.

கேப்­பாப்பு­லவு காணிப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காணப்­படும் என்று எதிர்க்­கட்சித் தலை­வரும், கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மா­கிய இரா.சமப்ந்­த­னிடம் அர­சாங்­கத்­தினால் உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது. அந்த உறு­தி­மொழி மீது நம்­பிக்கை வைத்து உட­ன­டி­யாக காணிப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காணப்­படும் என்று அவர் காணிக்­காக போராட்டம் நடத்தி வரு­கின்ற மக்­க­ளிடம் வாக்­க­ளித்­தி­ருந்தார். ஆனால், அவர் கூறி­ய­வாறு காணி­களைக் கைவி­டு­வ­தற்கு இரா­ணுவம் முன்­வ­ர­வில்லை.

இந்தக் காணிப்­பி­ரச்­சினை தொடர்­பாக அவர் எழு­திய கடி­தத்­திற்கு அர­சாங்­கத்­திடம் இருந்து பதில் கிடைக்­க­வில்லை.

அதனால் பொறுமை இழந்த நிலையில் தான் பொறுமை இழந்­தி­ருப்­பதைத் தொனி செய்து மீண்டும் அவர் எழு­திய கடி­தத்­திற்கும் அர­சாங்கம் பதி­ல­ளிக்­க­வில்லை.

இந்த அர­சாங்­கத்தைப் பத­விக்குக் கொண்டு வரு­வ­தற்­காக வாக்­க­ளித்த தமிழ் மக்கள் பொறுமை இழந்­து­விட்­டார்கள் எனவே, உட­ன­டி­யாகப் பிர்­ச­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண வேண்டும் என தெரி­வித்து அனுப்­பிய கடி­தங்­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கா­தது மட்­டு­மல்ல. நேர­டி­யான பேச்­சு­வார்த்­தைக்கு நேரம் ஒதுக்கித் தரு­மாறு விடுக்­கப்­பட்ட கோரிக்­கைக்கும் ஜனா­தி­ப­தி­யி­ட­மி­ருந்து பதில் கிடைக்­க­வில்லை.

இதனால், தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­வரும், எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மா­கிய தன்­னுடன் அர­சாங்கம் பரா­மு­க­மாக நடந்து கொள்­கின்­றது என்ற உணர்வின் கார­ண­மா­கத்தான், இனி­மேலும் பொறுக்க முடி­யாது என்ற நிலை­யி­லேயே, ஐ.நா. செய­லாளர் நாய­கத்­தையும் சர்­வ­தேச நாடு­க­ளையும் அவர் நாடி­யி­ருப்­ப­தாகத் தெரி­கின்­றது.

ஐ.நா.வும் சர்­வ­தே­சமும் உத­விக்கு ஓடி வருமா…..?

ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் இலங்கை விவ­காரம் தொடர்பில் மொத்­த­மாக நான்கு பிரே­ர­ணைகள் கொண்டு வரப்­பட்­டுள்­ளன. அவற்றில் மூன்று பிரே­ர­ணைகள் மனித உரிமை மீறல்­க­ளுக்கு பொறுப்பு கூறு­வ­துடன் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­பட வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­து­வ­தாக அமைந்­தி­ருந்­தன.

குறிப்­பாக நான்­கா­வது பிரே­ரணை, பிரே­ர­ணை­களில் சொல்­லப்­பட்ட விட­யங்­களை நிறை­வேற்­று­வ­தற்­கென மேல­தி­க­மக இரண்டு வரு­டங்கள் கால அவ­காசம் வழங்கி பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கு­மாறு வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. யுத்தம் முடி­வுக்கு வந்த 2009 ஆம் ஆண்­டி­லி­ருந்து கடந்த எட்டு வரு­டங்­க­ளாக ஐ.நா. மன்றம் இலங்கை விவ­கா­ரத்தில் கவனம் செலுத்தி வந்­துள்ள போதிலும்,, ஐ.நா .மனித உரிமைப் பேர­வையின் பிரே­ர­ணையை நிறை­வேற்­று­வதில் அர­சாங்கம் இழுத்­த­டிப்­பான போக்­கையை கடைப்­பி­டித்து வரு­கின்­றது.

இந்த நிலையில், மனித உரிமை மற்றும் போர்க்­குற்றச் செயற்­பா­டு­க­ளுடன் சிறு­பான்மை இன மக்­களின் அர­சியல் உரிமை உள்­ளிட்ட விட­யங்­களில் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண வேண்டும் என்­ப­தற்­காக அர­சாங்­கத்­திற்கு நெருக்­கடி ஏற்­ப­டுத்தும் வகையில் அழுத்­தங்­களை இது­வ­ரையில் பிர­யோ­கித்­தி­ருக்­க­வில்லை. ஐ.நா. மன்­றத்தின் இந்தப் போக்கில் உட­ன­டி­யாக மாற்றம் ஏற்­ப­டு­வ­தற்­கான அறி­கு­றி­களைக் காண முடி­ய­வில்லை.

அதே­வேளை சர்­வ­தேச நாடு­களும் நல்­லாட்சி அர­சாங்கம் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண வேண்டும் என்­பதை பல்­வேறு வழி­களில் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்­ற­னவே தவிர, அர­சாங்­கத்­திற்கு அது­தொ­டர்பில் நேர­டி­யான அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்­க­வில்லை என்றே கூற வேண்டும்.

இதற்கு விதி­வி­லக்­காக ஐரோப்­பிய ஒன்­றியம் மாத்­தி­ரமே மனித உரி­மைகள் மேம்­பாடு மற்றும் சிறு­பான்மை மக்கள் விவ­காரம் என்­ப­வற்றை முதன்­மைப்­ப­டுத்தி, ஜி.எஸ்.பி. வரிச்­ச­லுகை விட­யத்தில் நேர­டி­யாக அழுத்­தத்தைப் பிர­யோ­கித்­தி­ருந்­தது. எனவே, இப்­போ­தைய நிலையில் இலங்­கையில் தலை­யீடு செய்து பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று ஐ.நா. மன்­றத்­தி­டமும், சர்வதேச நாடுகளிடமும் இரா.சம்பந்தன் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு உடனடியாக செவி சாய்க்கப்படுமா என்பது தெரியவில்லை.

ஐ.நா. மன்றத்திற்கோ அல்லது சர்வதேச நாடுகளுக்கோ இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்வதற்கு உடனடியான காரணங்களோ அல்லது தேவைகளோ இருப்பதாகவும் தெரியவில்லை.

அதேநேரத்தில் ஐ.நா. மன்றமும், சர்வதேச நாடுகளும் சம்பந்தனின் கோரிக்கையை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருடைய கோரிக்கையாகவா அல்லது இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவருடைய கோரிக்கையாகவா – எந்த வகையில் நோக்கப் போகின்றன என்பதும் தெரியவில்லை.

கூட்டமைப்பின் தலைவர் என்பதிலும் பார்க்க, எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் அவருடைய கோரிக்கை நோக்கப்பட்டாலும்கூட, ஐ.நா. மன்றத்திற்கோ அல்லது சர்வதேச நாடுகளுக்கோ தங்களளவில் இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்கான அவசரத் தேவை எதுவும் இருப்பதற்கான அறிகுறிகளையும் காண முடியவில்லை.

ஆனால், இலங்கையின் சர்வதேச அரசியல் அணுகுமுறையானது, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார விடயங்களில் பாதிப்பை ஏற்படுத்தத் தக்க வகையில் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் நெருங்கிய உறவை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் தமிழர்களின் பிரச்சினையை, இந்தியா கையில் எடுத்து, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஓர் அறிகுறி தென்படுகின்றது.

ஆயினும், அந்த வகையில் இந்தியா மீண்டும் இலங்கை விவகாரத்தில் நேரடியாகத் தலையீடு செய்யுமா என்பது தெரியவில்லை.

போர்க்குற்றச் செயற்பாடுகளுக்குப் பொறுப்பு கூறும் விடயத்தில் அரசாங்கம் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் வழங்கப்பட்டுள்ள கால வரையறைக்குள் நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் செயற்படவில்லை. அதேபோன்று அரசாங்கத்திற்குள்ளேயே ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக நல்லாட்சி அரசாங்கத்தில் காணப்படுகின்ற ஸ்திரமற்ற நிலைமை, புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள தாமதமும், சிறிலங்கா சுதந்திரக்கட்சியும், ஐக்கிய தேசிய கட்சியும் மேற்கொண்டு வருகின்ற இழுத்தடிப்பு நிலையும் ஒன்றை மாத்திரம் நிச்சயமாக வெளிப்படுத்தியிருக்கின்றன.

தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக இப்போது நடுத்தெருவில் கொண்டு வந்துவிடப்பட்டிருக்கின்றார்கள் என்பதே அது.

செல்­வ­ரட்னம் சிறி­தரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*