kannadashan

கண்ணதாஸன் மீதான தண்டனை; நடப்பது என்ன?

கலைஞர் கண்ணதாஸனுக்கு ஆயுள் தண்டனைத் தீர்ப்பு பற்றிய விடயங்கள் பரவலாக தமிழ் மக்களின் கவனத்தினை ஈர்த்திருக்கின்றன. நல்லாட்சி என்ற பெயரில் தமிழினத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவருகின்ற மோசமான நடவடிக்கைகளின் சாட்சியமாக கண்ணதாஸன் அவர்கள் மீதான தீர்ப்பினை பார்க்க முடியும்.

தமிழ் மக்களின் வாக்குக்களால் அரியணை ஏறி தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை பரவலாக முன்னெடுத்துவருகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், “ஆட்சேர்ப்பில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

அவர் அவ்வாறு தெரிவித்து ஒரு மாதத்திற்குள்ளாகவே கண்ணதாஸ் அவர்களுக்கு ஆயுள் தண்டனைத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் அடிப்படையிலேயே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

உண்மையிலேயே ஆட்சேர்ப்பு என்ற நடவடிக்கையை தனியே கண்ணதாஸன் முடிவெடுத்து முன்னெடுக்கவில்லை. மாறாக தமிழீழ விடுதலைப்புலிகளின் உயர்மட்டம் எடுத்த முடிவினை நடமுறைப்படுத்தும் ஆயிரக்கணக்கானவர்களில் ஒருவராகவே அவர் செயற்பட்டிருக்கின்றார்.

இந்த நிலையில் சரணைந்த முன்னாள் போராளிகள் அனைவரையும் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலைசெய்வதாக சர்வதேசத்தின் முன்னால் கடந்த இரண்டு அரசாங்கங்கங்களும் அறிவித்து விளம்பரம்செய்தே வந்திருக்கின்றன.

அவ்வாறான புனர்வாழ்வு அளிக்கப்பட்டுவிடுதலை செய்யப்பட்டவர்களில் ஒருவராக கண்ணதாஸனும் இருந்திருக்கிறார். அரசாங்கம் முன்னாள் போராளிகள் ஒவ்வொருக்கும் வழங்கிய தண்டனையை அவரும் அனுபவித்தே கடந்திருக்கிறார்.

இவ்வாறான நிலையில் கண்ணதாஸன் அவர்கள் மீதான குற்றச்சாட்டு பல்வேறு கேள்விகளை முன்னாள் போராளிகள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் முன்வைத்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். அரசாங்க நிகழ்ச்சி நிரலில் முன்னாள் போராளிகள் இவ்வாறான ஏதாவது ஒரு வகையறாக்குள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்ற நடவடிக்கை தொடரப்போகின்றது என்பதே இந்தத் தீர்ப்பின் ஊடான பட்டவர்த்தனம்.

ஆட்கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆயுள்தண்டனை வழங்கப்படுகின்ற அளவிற்கு சட்டம் பாரதூரமானதாக சொல்லவில்லை என்றாலும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் அடிப்படையிலேயே அவருக்கான தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

சரணடைந்த முன்னாள் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதாக அரசாங்கங்கள் அறிவித்ததன் அடிப்படையிலேயே முன்னாள் போராளிகள் தமது தொழில் துறைகளில் அக்கறை செலுத்தி தமது வாழ்க்கைப் பயணத்தில் இணைந்துகொண்டனர்.

முற்றுமுழுதாக தங்களை சாதாரண வாழ்க்கைப் பயணத்தில் இணைத்துக்கொண்ட முன்னாள் போராளிகளுக்கு இந்தத் தீர்ப்பு பலத்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றே கொள்ளமுடிகிறது.

இதனையும் தாண்டி கண்ணதாசன் அவர்கள் மீதான தீர்ப்பினை அறிவித்த நீதிபதி அவர்கள்,

தான் மனவருத்தத்துடனேயே தீர்ப்பை அறிவிப்பதாகவும், சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து தனக்கு வழங்கப்பட்ட பணிப்பிற்கமையவே குறித்த தீர்ப்பு வழங்குவாகவும் தெரிவித்தே அந்தத் தீர்ப்பினை அறிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் சட்டமா அதிபர் திணைக்களம் அவசரமான குறித்த தீர்ப்பினை அறிவித்தது, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதை பட்டவர்த்தனமாக்கியிருக்கின்றது.

அதாவது, இந்தத் தீர்ப்பின் ஊடே ஏதோ ஒரு வகையிலான அரசியல் இலக்கினை எட்டுவதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.

ஒன்று, இனவாத வாக்கு வங்கியில் சரிவினை எதிர்கொண்டுவருகின்ற மைத்திரி – ரணில் கூட்டணி அரசாங்கம் மீளவும் சிங்களப் பெரும்பான்மை இன மக்களின் இனவாத வாக்குவங்கியை ஈடுசெய்வதாக இருக்கலாம்.

அல்லது,

முன்னாள் போராளிகளைத் தண்டிக்கிறோம் எனத் தெரிவித்து படைத்தரப்பில் சிலருக்கும் தண்டனை வழங்கிவிட்டு சர்வதேசத்தின் மத்தியில் அனைவருக்கும் ஒரே நீதி எனத் தெரிவித்து போர்க்குற்ற விடயங்களிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

அல்லது,

இவ்வாறான தண்டனைகளை நிறுத்துமாறு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்தால், பொது மன்னிப்பு என்றவிடயத்தினை மீளவும் கையிலெடுத்து முன்னாள் போராளிகளை தண்டிக்காது விடுகிறோம், படையினரையும் தண்டிக்காது விட்டாலேயே சமநிலையான முடிவாக அமையும் என கூறி அதிலிருந்து மீளலாம்.
இவற்றில் எதாவது ஒரு உள்நோக்கம் கொண்டதாகவே கண்ணதாசன் அவர்கள் மீதான தீர்ப்பினை நோக்கமுடியும்.

இந்த சந்தர்ப்பத்தில் இன்னொரு கேள்வியையும் வலுவாக முன்வைக்கத் தோன்றுகிறது,

எப்போதும் கொழும்ப அரச விசுவாசியாக செயற்படுகின்ற கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்,

சில வாரங்களுக்கு முன்பாக, கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்ட முன்னாள் போராளிகளையும் விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என பகிரங்கமாக தெரிவித்திருந்தார். எனவே “யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே” என்பதாக கண்ணதாசன் அவர்களுக்கான தீர்ப்பிற்கு முன்பாகவே சுமந்திரன் விடயத்தினை வெளிப்படுத்தி, சமூகத்திலோ சர்வதேச மட்டத்திலோ வருகின்ற எதிர்வினைகளை மோப்பம் விட்டார்களா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

வாக்குவேட்டைக்காகவும், அரசியல் நலனுக்காகவும் தமிழீழ விடுதலைப்புலிகளையும் மாவீரர்களையும் துணைக்கு இழுத்துக்கொள்கிற கூட்டமைப்பு, இந்தத் தீர்ப்பின் பின்னால் எதாவது ஒரு நடவடிக்கையை முன்னெடுத்ததா? என்றால் இல்லை என்றே தெரிகிறது.

இவ்வாறான நடவடிக்கைகள் நீதியின் பாற்பட்டவையாகவோ, முழுமையான நீதிமன்ற நடைமுறைகளுடன் இடம்பெறவில்லை என்றே நீதிமன்ற நடைமுறையை அவதானித்த சட்டத்துறையைச் சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே உள்நோக்கம் கொண்ட இந்த தீர்ப்பின் பாரதூரத் தன்மையை முன்கூட்டியே உணர்ந்து செயற்படுவது எமது தமிழ்த் தலைமைகள் எதிர்காலத்தில் எஞ்சியிருக்கின்ற முன்னாள் போராளிகளுக்கு செய்கின்ற பாதுகாப்பாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*