Shivshankar_Menon-380-seithy

இலங்கையில் சீனா – இந்தியாவை விமர்சிக்கும் சிவ்சங்கர் மேனன்!

சவால் ஏற்படுத்தும் வகையில் இலங்கையில் சீனா கால்பதிக்க இந்தியாவின் தூரப்பார்வையற்ற சில செயற்பாடுகளே காரணமாகியது. அயல் நாடுகளைக் கையாளும் விடயத்தில் இந்தியாவின் அணுகுமுறைகளில் மாற்றம் செய்யப் பட வேண்டும். அந்த வகையில் இலங் கை விடயத்தில் இந்தியா தவறிழைத்து விட்டது என இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா அயல் நாடுகளை கையாளும் முறைமையில் மாற்றங்களைச் செய்ய வேண்டியதுள்ளது. அயல் நாடுகள் இந்தியாவிற்கு மாத்திரம் அயல் நாடுகள் என்று நினைத்து கருத்தில் கொள்ள முடியாது. அந்த நாடுகள் ஏனைய நாடுகளுக்கும் கூட அயல் நாடுகள் தான். இதுவே பூகோள அரசியலும் ஆகும்.

வெளிநாட்டு விவகாரங்களுக்கான இந்திய செய்தியாளர்களின் சங்கத்தின் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக அபிவிருத்தி தொடர்பாக இலங்கை கோரிக்கை விடுத்த போது எதிர்காலம் குறித்து சிந்தித்து பதிலளிக்காமை இந்தியாவின் மிகப் பெரிய தவறாகும். இதன் விளைவாக சீனா இலங்கையில் நிலை கொண்டு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்தியாவின் 83 வீதமான வர்த்தக நடவடிக்கைகள் கொழும்பு துறைமுகத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற நிலையில், கொழும்பு துறைமுக அபிவிருத்தி தொடர்பாக இலங்கையின் கோரிக்கைக்கு இந்தியா பின்வாங்கியமை ஆச்சரியமளிக்கின்றது.

ஈரான் – சபஹார் துறைமுகத்தின் அபிவிருத்தி விடயத்தில் இந்தியா பக்கத்தில் ஏற்பட்டுள்ள தாமதமும் கூட புத்திசாலித்தனமானது அல்ல. பத்தாண்டுகளுக்கு பிந்திய பாதையில் தான் இந்தியா இன்னமும் செய்து கொண்டிருக்கிறது என்றும் கூறியுள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*