is3

ஐ.எஸ். அச்சுறுத்தல் – பின்னணி என்ன (சமகாலப் பார்வை)

இரத்­ம­லானை விமான நிலை­யத்தில் இருந்து விமானம் ஒன்றைக் கடத்திச் சென்று, கொழும்பில் உள்ள அமெ­ரிக்கத் தூத­ரகம் மீது ஐ.எஸ் தீவி­ர­வா­திகள் தாக்­குதல் நடத்த திட்­ட­மிட்­டி­ருப்­ப­தாக அமெ­ரிக்க புல­னாய்வு அமைப்­புகள் எச்­ச­ரித்­தி­ருப்­ப­தாக ஒரு செய்தி அண்­மையில் ஊட­கங்­களில் உலா­வி­யது. இது­கு­றித்து விசா­ரிக்க அமெ­ரிக்க புல­னாய்வு அதி­கா­ரி­களின் குழு­வொன்று கொழும்பு வந்­தி­ருப்­ப­தா­கவும், விமான நிலை­யங்­களில் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் கூட அந்தச் செய்­தி­களில் கூறப்­பட்­டி­ருந்­தது.

விடு­தலைப் புலி­களின் காலத்தில் ஊட­கங்­களில் இது­போன்ற செய்­திகள் வரு­வது வழக்­க­மா­னது. புலிகள் அங்கு தாக்கத் திட்­ட­மிட்­டுள்­ளார்கள். இங்கு தாக்கப் போகி­றார்கள் என்று பெரும்­பாலும் சிங்­கள ஊட­கங்­களில் செய்­திகள் வெளி­யா­வது வழக்கம்.

அவை பெரும்­பாலும் ஊகங்­க­ளா­கவே இருப்­ப­துண்டு. பர­ப­ரப்­புக்­காக ஊட­கங்கள் இத்­த­கைய செய்­தி­களை வெளி­யிட்­டதும் உண்டு. சில வேளை­களில் மக்­களை எச்­ச­ரிக்கை செய்­வ­தற்­காக- புல­னாய்வுப் பிரி­வு­களே இது­போன்ற செய்­தி­களை கசிய விட்­டதும் உண்டு.

இப்­ப­டி­யான செய்­திகள் வெளி­யா­கிய பின்னர் விடு­தலைப் புலி­களின் தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றமை அபூர்வம் தான். விடு­தலைப் புலி­களின் தாக்­குதல் திட்­டங்கள் துல்­லி­ய­மாக அறி­யப்­பட்­ட­தாக இருப்­ப­தில்லை என்­பது அதற்குக் காரணம்.

இப்­போது விடு­தலைப் புலிகள் இல்லை. ஐ.எஸ் தீவி­ர­வா­தி­களே தாக்­குதல் நடத்த திட்­ட­மிட்­டி­ருக்­கி­றார்கள் என்று செய்­திகள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

இந்தச் செய்தி வெளி­யா­னதும், அதனை அமெ­ரிக்கத் தூத­ரகம் நிரா­க­ரிக்­க­வில்லை. ஆங்­கில ஊடகம் ஒன்று கேள்வி எழுப்­பிய போது புல­னாய்வு விவ­கா­ரங்கள் தொடர்­பாக, கருத்து எதையும் தெரி­விக்க முடி­யாது என்று பூட­க­மாகப் பதி­ல­ளிக்­கப்­பட்­டது.

அது­போ­லவே, பொலிஸ் பேச்­சா­ளரும், விமா­னப்­படைப் பேச்­சா­ளரும், தமக்கு அப்­படி எந்த தக­வலும் கிடைக்­க­வில்லை என்றே கூறி­யி­ருந்­தனர்.

இவை­யெல்லாம் இந்தச் செய்தி உண்­மை­யா­னது போன்ற தோற்­றப்­பாடு ஏற்­படக் கார­ண­மா­கி­யது.

இந்த விவ­காரம் குறித்து பாரா­ளு­மன்­றத்தில் கேள்வி எழுப்­பப்­பட்ட போது, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அப்­படி எந்த எச்­ச­ரிக்­கையும் விடுக்­கப்­ப­ட­வில்லை என்றும், இது தொடர்­பாக ஊட­கங்­களில் வெளி­யான செய்­திகள் குறித்து விசா­ரிக்க பொலி­சா­ருக்கு பணிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் கூறி­யி­ருந்தார்.

ஆக, ஒரு பாது­காப்பு சார்ந்த- புல­னாய்வு எச்­ச­ரிக்கை போன்று ஒரு செய்தி, எந்­த­வொரு அடிப்­படை ஆதா­ரமும் இல்­லாமல் வெளி­யாகி மக்கள் மத்­தியில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இந்தச் செய்­தியின் பின்­னணி வெறும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­து­வது மாத்­திரம் தானா? அல்­லது இதற்குப் பின்­னாலும் அர­சியல் உள்­நோக்­கங்கள் உள்­ளதா என்று அறி­யப்­பட வேண்­டி­யுள்­ளது.

ஐ.எஸ் அமைப்பு சிரி­யா­விலும், ஈராக்­கிலும் பல­வீ­னப்­ப­டுத்­தப்­பட்டு வந்­தாலும், உலகில் ஆங்­காங்கே சில தாக்­கு­தல்­களை நடத்தி வரு­கி­றது. தெற்­கா­சி­யாவில் குறிப்­பாக இந்­தி­யா­விலும் தனது தாக்­கு­தல்­களை விரி­வு­ப­டுத்தும் திட்­டமும் அதற்கு உள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

ஆனாலும், இந்­தி­யாவில் இது­வ­ரையில் ஐ.எஸ் அமைப்பின் தாக்­குதல் செயற்­பா­டுகள் ஏதும் அறி­யப்­ப­ட­வில்லை.

இந்­த­நி­லையில், விமா­னத்தைக் கடத்தி அமெ­ரிக்கத் தூத­ர­கத்தை தகர்ப்­பது என்­பது இலங்­கையில் கடி­ன­மா­ன­தொரு காரியம். ஏனென்றால், மற்­றைய நாடு­களை விட, இலங்கை தீவி­ர­வாத எதிர்ப்பு செயற்­பா­டு­களில் கூடுதல் கவ­னத்தைச் செலுத்தும் நாடு.

விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போர், தீவி­ர­வாத முறி­ய­டிப்பு உத்­திகள் குறித்து மற்­றைய நாடு­க­ளுக்கு போதிக்­கின்ற அள­வுக்கு இலங்­கைக்கு ஆற்­றலைக் கொடுத்­தி­ருக்­கி­றது.

அது­போல இங்­குள்ள பாது­காப்புக் கட்­ட­மைப்­பு­களும் வலு­வா­னவை.

இந்த நிலையில், கொழும்பில் உள்ள அமெ­ரிக்கத் தூத­ர­கத்தை குறி­வைக்க ஐ.எஸ் அமைப்பு திட்­ட­மி­டுமா என்­பது சந்­தேகம் தான்.

ஆனாலும், இந்தச் செய்­தியின் முக்­கிய நோக்கம் அமெ­ரிக்கத் தூத­ர­க­மாகத் தெரி­ய­வில்லை.

அண்­மைக்­கா­ல­மாக, இலங்­கையில் அதி­க­ரித்து வரு­கின்ற, வெறுப்­பு­ணர்வு பிர­சா­ரத்தின் ஓர் அங்­க­மாகக் கூட இது இருப்­ப­தற்கு வாய்ப்­புகள் உள்­ளன.

சிங்­கள பௌத்த அடிப்­ப­டை­வா­தி­களால், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வெறுப்­பு­ணர்வுக் கருத்­துக்கள் பரப்­பப்­பட்டும், முஸ்­லிம்­களின் வழி­பாட்­டுத்­த­லங்­களும் வர்த்­தக நிலை­யங்­களும் தாக்­கப்­பட்டும் வந்­தன. வெறுப்­பு­ணர்வு செயற்­பா­டுகள் முடி­வு­கட்­டப்­பட வேண்டும் என்று அமெ­ரிக்கா, கனடா போன்ற நாடுகள் அர­சாங்­கத்­துக்கு அழுத்­தங்­களைக் கொடுக்கும் அள­வுக்கு நிலை­மைகள் சென்­றன.

இதை­ய­டுத்து, அர­சாங்கம் கடும் நட­வ­டிக்­கையில் இறங்க நேரிட்­டது. இதற்குப் பின்னர், தான் நிலை­மைகள் சற்று கட்­டுக்குள் வந்­தி­ருக்­கி­ன்றன.

ஐ.எஸ் தீவி­ர­வா­தத்தை முன்­னி­றுத்தி, முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கெடு­பி­டி­களை கட்­ட­விழ்த்து விடச் செய்யும் உத்­தி­யா­கவும் கூட, இது­போன்ற வதந்­திகள் செய்­தி­க­ளாக்­கப்­ப­டு­வ­தற்கு வாய்ப்­புகள் உள்­ளன.

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல்கள், அச்­சு­றுத்­தல்கள் மற்றும் வெறுப்­பு­ணர்வு நட­வ­டிக்­கை­களின் மூலம், அர­சாங்­கத்­துக்கு நெருக்­கடி கொடுப்­ப­தற்கு திரை­ம­றைவில் முயற்­சிகள் நடப்­பது ஒன்றும் இர­க­சி­ய­மல்ல. மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நடத்­தப்­பட்ட வெறுப்­பு­ணர்வு தாக்­கு­தல்­களே, அவ­ருக்கு எதி­ராக முஸ்­லிம்கள் அணி­தி­ரளக் கார­ண­மா­யிற்று. அதனை ஒரு சதி என்றே மஹிந்த ராஜபக் ஷ கூறி­யி­ருந்தார்.

இப்­போதும், அது­போன்று தாக்­கு­தல்கள் நடத்­தப்­ப­டு­கின்­றன. இது அர­சாங்­கத்­திடம் இருந்து முஸ்­லிம்­களை அந்­நி­யப்­ப­டுத்­து­வ­தற்­கான திட்­ட­மா­கவும் இருக்கக் கூடும்.

ஒரு பக்­கத்தில் மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியைக் கவிழ்ப்போம் என்று சூளு­ரைக்­கிறார். முஸ்­லிம்கள் உள்­ளிட்ட சிறு­பான்­மை­யி­னரின் ஆத­ரவைப் பெறும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தா­கவும் அவர் கூறி­யி­ருக்­கிறார்.

இந்தப் புள்­ளியில் இருந்து பார்த்தால், தற்­போது முன்­னெ­டுக்­கப்­படும் வெறுப்­பு­ணர்வைத் தூண்டும் சம்­ப­வங்­களின் பின்னால் ஓர் அர­சியல் நோக்கம் இருப்­ப­தற்­கான நியா­ய­மான சந்­தே­கங்கள் இருக்­கின்­றன.

மஹிந்த ராஜபக் ஷவுக்கு இன்­னமும் கூட, வெளி­நாட்டு பாது­காப்பு மற்றும் புல­னாய்வு அமைப்­பு­களின் ஆத­ரவு இருப்­ப­தையும் மறுப்­ப­தற்­கில்லை. உதா­ர­ணத்­துக்கு, அண்­மையில் பாகிஸ்­தா­னுக்கு மஹிந்த ராஜபக் ஷ சென்­றி­ருந்த போது, பாகிஸ்­தானின் ஐ.எஸ்.ஐ புல­னாய்வு அமைப்பின் முன்னாள் தலை­வ­ரான மேஜர் ஜெனரல் றிஸ்வான் அக்தர், “மஹிந்த ராஜபக் ஷவுக்கு எந்த நேரத்­திலும் உத­வு­வ­தற்கு பாகிஸ்தான் தயா­ராக இருக்கும்” என்று கூறி­யதை நினைவில் கொள்­ளலாம்.

சீனாவின் பாது­காப்புத் துறை­யி­ன­ருக்கும் கூட மஹிந்த ராஜபக் ஷ வேண்­டப்­பட்­ட­வ­ராகத் தான் இருக்­கிறார்.

வெளி­நாட்டுப் புல­னாய்வு அமைப்­புகள் தமது தேவைக்­கேற்ப, ஆட்­சி­மாற்­றங்­களை ஊக்­கு­விப்­பது வழக்கம்.

மஹிந்த ராஜபக் ஷ கூட தன்னை மேற்­கு­லக மற்றும் இந்­திய புல­னாய்வு அமைப்­பு­களே தோற்­க­டித்­த­தாக முன்னர் கூறி­யி­ருந்தார்.

எனவே, ஆட்சி மாற்றம் ஒன்றை இலக்கு வைத்து அதற்­கான சூழலை ஏற்­ப­டுத்தும் நோக்­கிலும், அர­சாங்­கத்தை இக்­கட்­டான நிலையில் சிக்க வைக்கும் நோக்­கிலும் கூட, செய்­திகள் பரப்­பப்­பட்­டி­ருக்­கலாம்.

அதை­விட கொழும்பில் அமெ­ரிக்கத் தூத­ரகம் தனது கட்­ட­மைப்­பு­களை விரி­வு­ப­டுத்தி வரு­வதை, சீனா உள்­ளிட்ட பலம்­மிக்க நாடுகள் விரும்­பா­தி­ருக்­கவும் கூடும்.

அமெ­ரிக்­காவைப் பொறுத்­த­வ­ரையில் இலங்­கையை கிட்­டத்­தட்ட தனது மூலோ­பாய பாது­காப்புக் கூட்­டாளி என்ற அள­வுக்கு கொண்டு செல்லும் நிலையை நோக்கி நகரத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

முன்­னெப்­போது இருந்­த­தையும் விட, கடந்த இரண்டு ஆண்­டு­களில் இரண்டு நாடு­க­ளுக்கும் இடையில் பாது­காப்பு ரீதி­யாக வலு­வான உற­வுகள் ஏற்­பட்­டுள்­ளன.

அண்­மையில் வொசிங்­டனில் ஒரு கருத்­த­ரங்கில் உரை­யாற்­றிய, தெற்கு மத்­திய ஆசிய பிராந்­திய விவ­கா­ரங்­க­ளுக்­கான உதவி இரா­ஜாங்கச் செய­ல­ராகப் பணி­யாற்­றிய ரொபேர்ட் ஓ பிளேக், ஆட்­சி­மாற்­றத்­துக்குப் பின்னர், இலங்­கை­யுடன் மிகச் சிறப்­பான இரா­ணுவ உற­வுகள் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டுள்­ள­தாக கூறி­யி­ருக்­கிறார்.

இலங்கை இரா­ணு­வத்­து­ட­னான உற­வு­களை அமெ­ரிக்கா மட்­டுப்­ப­டுத்­தியே வைத்­தி­ருந்­தாலும், கடற்­படை மற்றும் விமா­னப்­ப­டை­யுடன் அமெ­ரிக்­காவின் உற­வு­களும், ஒத்­து­ழைப்­பு­களும் மிகவும் விசா­ல­மா­ன­வை­யாக மாறி­யி­ருக்­கின்­றன.

இது அமெ­ரிக்­காவின் கூட்­டாளி நாடு­களின் வரி­சையில் இலங்­கை­யையும் இடம்­பெறச் செய்­துள்­ளது. மூலோ­பாயக் கூட்­டாளி என்ற அந்­தஸ்துக் கூட இலங்­கைக்குக் கிடைத்தால் ஆச்­ச­ரி­ய­மில்லை.

Mobility Guardian Exercise என்ற ஒரு கூட்டு இரா­ணுவப் பயிற்­சியை, வொசிங்­ட­னுக்கு அரு­கே­யுள்ள, Fairchild விமா­னப்­படைத் தளத்தில் அமெ­ரிக்க விமா­னப்­படை இந்த மாதமும் அடுத்த மாதமும் நடத்­த­வுள்­ளது.

இந்த பாரிய கூட்டுப் பயிற்சி வான்­வழி மீட்பு, வான்­வ­ழி­யாகத் தரை­யி­றங்கி விமான ஓடு­பா­தை­களை கைப்­பற்­றுதல், வானில் இருந்து தரைக்கு விநி­யோ­கங்­களைப் பெறுதல் மற்றும் விமா­னங்­களில் இருந்து விமா­னங்­க­ளுக்கு எரி­பொருள் நிரப்­புதல் உள்­ளிட்ட தந்­தி­ரோ­பா­யங்­களை கொண்­ட­தாக இடம்­பெ­ற­வுள்­ளது.

Fairchild விமா­னப்­படைத் தளத்தில் உள்ள அமெ­ரிக்க வான் நகர்வு கட்­ட­ளை­ய­கத்தின் தள­ப­தி­யான, ஜெனரல் கார்ல்டன் டேவே எவஹாட் அமெ­ரிக்க ஊடகம் ஒன்­றுக்கு அளித்­துள்ள பேட்­டியில், இந்தக் கூட்டுப் பயிற்சி 25 இற்கும் மேற்­பட்ட அமெ­ரிக்­காவின் கூட்­டாளி நாடு­க­ளுடன் இணைந்து மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தாக கூறி­யி­ருக்­கிறார்.

அமெ­ரிக்­காவின் நட்பு நாடு­க­ளாக, அமெ­ரிக்க படை அதிகாரிகளால் பட்டியலிடப்பட்டுள்ள, பிரேசில், கொலம்பியா, பெல்ஜியம், தென்கொரியா, பிரான்ஸ், பாகிஸ்தான், பிரித்தானியா, நியூசிலாந்து, கனடா, அவுஸ்ரேலியா, டென்மார்க், ஜேர்மனி, இத்தாலி, சுவீடன், உக்ரேன், புர்கினோ பாசோ, மொரிட்டானியா, பங்களாதேஷ், நைஜீரியா, தென்னாபிரிக்கா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, கிர்கிஸ்தான், ஜமைக்கா ஆகிய நாடுகளின் வரிசையில், இலங்கையும் அடங்கியுள்ளது.

இவ்வாறாக, அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் உருவாகி வரும் பாதுகாப்பு நெருக்கத்தை விரும்பாத சக்திகள் கூட, இதுபோன்ற வீண் வதந்திகளை உருவாக்கி குழப்பங்களை ஏற்படுத்த முனைந்திருக்கலாம்.

ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தல் இலங்கையில் இல்லை என்று பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதி, புலனாய்வு பிரிவினர், அரசாங்கம் என்று எல்லாத் தரப்பினரும் கூறினாலும், ஐஎஸ் தீவிரவாதம் குறித்த எச்சரிக்கைகள் அதையும் மீறி வந்து கொண்டிருக்கின்றன.

இதற்குப் பின்னால் இருக்கின்ற அரசியல் அல்லது பாதுகாப்பு நலன்கள் அறியப்படாத வரையில், இதுபோன்ற ஊகச் செய்திகள் மக்களை முட்டாள்களாக்கிக் கொண்டு தான் இருக்கும்.

– ஹரிகரன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*