newe2

சிக்கலுக்குள் சிக்கியது அமைச்சர்களா? முதலமைச்சரா? (ஆசிரியப்பார்வை)

தமிழ்மக்கள் மத்தியில் அண்மைய நாட்களாக பேசுபொருளாக மாறியிருப்பது வடக்கு மாகாண அமைச்சர்கள் இருவர் தொடர்பிலான விசாரணைக்குழு பரிந்துரையும் சில ஊடகங்கள் அவற்றுக்குக் கொடுத்த முக்கியத்துவமும்.

குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லாத சமூகத்தில் வாழ்ந்த மக்கள் இந்த விடயத்திற்கும் தண்டனையை எதிர்பார்ப்பதை இம்மியளவும் நிராகரிக்க முடியாது. அது கல்வி அமைச்சர் த.குருகுலராஜா என்பதாகவோ அல்லது விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் என்பதாகவோ இருக்கலாம் ஏன் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனாக இருந்தால் கூட குற்றம் இழைத்திருந்தால் இழைக்கப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளவே முடியாது. தப்பித்துக்கொள்ளவும் கூடாது.

ஆனாலும்,

விசாரணைக்குழு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட இறுதித் தாளுக்கு முன்பாக சொல்லப்பட்டிருக்கின்ற குற்றச்சாட்டுக்களும் அவற்றுக்கு சேகரிக்கப்பட்ட சாட்சியங்களும் முடிவில் குழுவினால் வழங்கப்பட்ட தீர்ப்பு தனியே எழுத்துக்களாக மட்டுமல்லாமல் அதனுள்ளே பல்வேறு பாரதூரமான விடயங்களையும் தாங்கிநிற்கின்றது.

ஊடகங்கள் சில அமைச்சர்கள் தொடர்பில் வெளியிட்ட செய்திகளும் வெளியிடப்பட்ட பாணியும் பார்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அமைச்சர்களும் குறைந்தது பத்து மில்லியன் ரூபாய் என்றாலும் கையாடியிருப்பார்கள் என்று எண்ணவைத்திருந்தன. ஆனால் ஒரு ரூபாய் கூட அவர்கள் மோசடி செய்திருக்கிறார்கள் என்பதை அறிக்கையின் ஒரு வரியிலும் தரிசிக்க முடியவில்லை.

கணக்காய்வாளர்கள் எவரும் சாட்சிக்கு அழைக்கப்பட்டதாகவோ, அவர்கள் குற்றச்சாட்டுக்களை உறுதி செய்ததையோ குறிப்பிடவில்லை.

இதில் இன்னொரு விடயத்தினை மிக முக்கியமாக சுட்டிக்காட்ட முடியும், வடக்கு மாகாணசபை தனியான நிர்வாக அலகாக செயற்பட்டாலும் அதற்கென தனித்தனியான அரச அதிகாரிகள் செயற்பட்டாலும் மத்திய அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்ற கணக்காய்வாளர்கள் அமைச்சர்களின் நிதிப்பங்கீடுகள் தொடர்பில் ஆய்வு செய்யவோ, முறைப்பாடு செய்யவோ முடியும் என்ற நிலையில் இந்த விசாரணைக்குழு ஏன் அவ்வாறான ஆதாரங்களை சேர்க்கவோ இணைக்கவோ முற்படவில்லை என்ற கேள்வி பெரிதாகவே தெரிகிறது.

பல குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டபோதிலும் அவற்றுக்கான சரியான சான்றாதாரங்களை சேகரிக்காமலேயே விசாரணை முடிவுகளை அறிவிக்கும் கைங்கரியத்தை விசாரணைக்குழு மேற்கொண்டிருக்கிறது.

விசாரணைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் விசாரணை முடிவுகள் தொடர்பிலும் விசாரணைக்குழு வெளியிட்டிருக்கின்ற அனைத்து விடயங்களையும் எமது இணையத்தளத்தில் வாசகர்கள் பார்வையிட்டுக்கொள்ளலாம்.

இந்த இடத்தில் முக்கிய விடயத்திற்கு வரலாம்,

விசாரணைக்குழு அறிக்கையால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பது குற்றம் சுமத்தப்பட்ட அமைச்சர்கள் இருவருமா அல்லது வடக்கு மாகாண முதலமைச்சரா? என்பது தொடர்பில் ஆராய்வதே இந்தப் பத்தியின் நோக்கம்.

தமிழ் மக்களின் அரசியல் பரப்பில் பிரதான பாத்திரம் வகிக்கிறது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு. வலுவான ஆரோக்கியமான மாற்று சக்தி எதுவுமே இல்லாத நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தமிழ் மக்கள் தேர்வுசெய்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களின் குரலாகச் செயற்படுவதாகச் சொல்லி செயற்பட்டும்வருகிறது.

வலுவான மாற்று சக்தி இன்மையால் கூட்டமைப்பின் தலைமைப் பீடத்தில் இருக்கின்ற ஒரு சிலரே தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கின்ற வகையிலும் செயற்பட்டும் வருகின்றனர். உதாணமாக இறுதிப்போரில் நிகழ்ந்த கொரூரங்களில் இருந்து அன்றைய ஆட்சியாளர்களைக் காப்பாற்றும் கைங்கரியத்தில் இன்றுவரையில் ஈடுபடும் பணியில் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலர் வலுதீவிரமாகச் செயற்பட்டுவருகின்றனர்.

ஒட்டுமொத்தத்தில் இலங்கை அரசில் அங்கம் பெறுகின்ற அரசாங்கங்கள் ஒவ்வொன்றிற்கும் தோள்கொடுத்துக் காக்கின்ற பணியில் கூட்டமைப்பு தீவிரம் காட்டி செயற்பட்டே வருகிறது.

இந்த இடத்தில் தான் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தன்னுடைய அரசியல் முதிர்ச்சியை கனகச்சிதமாக பயன்படுத்த முற்பட்டது மட்டுமல்லாமல் அதில் வெற்றியும் பெற்றுவருகின்றார்.

நாற்பது ஆண்டுகளால் இனவிடுதலைப்போராட்டத்தில் இரண்டறக் கலந்த எமது தமிழ் மக்கள் இணக்க அரசியல் என்கிற பாதையை என்றும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதை சம்பந்தன் மிகத் தெளிவாக புரிந்துகொண்டவர் தான்.. எனவே அரசாங்கத்துடன் இணக்க அரசியலில் கை கோர்த்துள்ள சம்பந்தன் எதிர்பரசியல் மனோ நிலையில் இருக்கின்ற தமிழ் மக்களின் வாக்குவங்கியை கூட்டமைப்பு கைக்குள் வைத்திருக்கவேண்டும் என்பதை விரும்பினார்.

சம்பந்தனின் சூட்சுமம் நிறைந்த இந்தத் திட்டத்திற்கு துருப்பாகப் பயன்படுத்தப்படுகிறார் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன். தொடக்கத்தில் இருந்த போக்கிற்கும் பின்னாளில் ஏற்பட்ட மாறுதலுக்கும் ஒரு சந்தர்ப்பத்திலும் சம்பந்தன் எதிர்ப்புக் காட்டவோ, முதல்வரைக் கட்டுப்படுத்தவோ முற்படவில்லை என்பது பகிரங்கமான விடயம். இந்த இடத்தில் தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் கூட்டமைப்பினர் கடுமையான எதிர் நிலைப்பாட்டினை எடுத்த நிலையிலும் சம்பந்தன் மட்டும் முதல்வருக்கு பச்சைக் கொடி காட்டியிருந்ததன் உள்நோக்கத்தினை இப்போது வாசகர்கள் புரிந்துகொள்ளமுடியும்.

பின்நோக்கிச் சென்று பார்த்தால்,

முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பின்னர் சில இடங்களில் ஈழவிடுதலைப்போராட்டப் பாதை தொடர்பில் முன்வைத்த எதிர் நிலைக் கருத்துக்கள் சமூகத்தில் பலத்த எதிர்ப்புக்களைச் சம்பாதிக்கத் தொடங்கின.

இவ்வாறான நிலைப்பாடு தொடர்ந்த நிலையில், தன்னுடைய போக்கில் சடுதியான மாற்றத்தை வெளிக்காட்டியதுடன், அதனை பகிரங்கமாக அறிவிக்கவும் அவர் தவறவில்லை. அப்போது தொடக்கம் அவர் தமிழ் மக்களின் குரலாகச் செயற்படத் தொடங்கினார். இன்றுவரையில் அவருடைய பயணம் இடையறாது தொடர்கிறது.

சம்பந்தனின் எண்ணப்பாட்டின் அடிப்படையில் அறிந்தோ அறியாமலோ விக்னேஸ்வரன் முன்னெடுத்துச் செல்லும் எதிர்ப்பரசியல் பாதை எல்லை மீறிச் செல்லக்கூடாது என்பதில் சம்பந்தன் மிகத் தெளிவாக நடந்துகொள்கிறார் என்பதை புரிந்துகொள்வதற்கு பல சம்பவங்களை குறிப்பிடமுடியும்.

அதற்கான பணியினை சம்பந்தனின் பிரத்தியேக செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் காத்திரமாக முன்னெடுத்துவருகிறார்.

வடக்கு மாகாணசபையில் முதலமைச்சருக்கு நெருக்கடி தரும் விடயங்களை ஏற்படுத்துவது, மிக நெருக்கடி ஏற்படுவதாக தோற்றம் காணப்படும் சந்தர்ப்பங்களில் சம்பந்தன் தலையிட்டு விக்னேஸ்வரனுக்கு சாதகமாக நடந்துகொள்வது போன்று முடிவுகளை அறிவிப்பார். இதன் மூலம் விக்னேஸ்வரன் எப்போதும் சம்பந்தனின் அன்புக்குரியவராக தான் இருப்பதாகவே எண்ணிக்கொள்ளலாம்.

ஆனாலும் முருங்கை மரமும் வேதாளமும் என்பதாக சுமந்திரனின் ஆணைக்கு தலைசாய்த்து செயற்படும் மாகாணசபை உறுப்பினர்கள் குழு மட்டும் சந்தர்ப்பங்கள் வரும் போதெல்லாம் முதலமைச்சரை நெருக்கடிக்கு ஆளாக்கும் முயற்சிகளை கைவிட்டதே கிடையாது. முதலமைச்சரை நெருக்கடிக்குள் தள்ளும் தொடர் நடவடிக்கைகளை குறித்த குழு மேற்கொண்டு வந்தது.

இதன் ஒரு கட்டம் தான் முதலமைச்சருக்கு விசுவாசமாகத் தெரியும் அமைச்சர்களை ஓரங்கட்டுவது அல்லது அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவது.

இதே குழுவினால் அமைச்சர்கள் மீது தொடர்ந்தும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடுத்து அதற்கு முடிவுகட்ட முற்பட்டு இன்று பாரிய இக்கட்டுக்குள் சிக்கியிருக்கிறார் வடக்கு முதல்வர்.

மோசடி, ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிக்க குழு ஒன்றை நியமித்தார் முதல்வர். பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கானதாய் ஆகிவிட்டது அவருடைய முடிவு.

விசாரணைக்குழு அறிக்கை ஊடகங்களில் கசிந்து, பின்னர் மாகாணசபையில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும் எதிர்பாராத நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. அதுதான் இந்தப் பத்தியின் முக்கிய புள்ளியாக பார்க்கப்படவேண்டியது.

வழமையாக முதல்வருக்கு எதிராகவும் அவருக்கு ஆதரவானவர்களுக்கு எதிராகவும் பொங்கி எழுகின்ற சுமந்திரப் புன்னகைகள் இன்று தலைகீழாக தங்கள் நிலைப்பாட்டை எடுத்திருந்தன.

மாகாணசபை சபை உறுப்பினர் சயந்தன் மற்றும் அஸ்வின் ஆகியோர் இந்தத் தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டியதில்லை என்ற சாரப்பட கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.

இதனிடையே மாகாணசபை அமர்வுக்கு முன்பாக மாட்டின் வீதியில் உள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் மாவை சேனாதிராஜா, சுமந்திரன் தலைமையில் கூடிய கூட்டத்தின் போது, முதலரைமச்சரே பார்த்துக்கொள்ளட்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியிருக்கிறார்கள்.

எனவே மிகத் தெளிவான முடிவு ஒன்றை அவர்கள் இந்த இடத்தில் எடுத்திருப்பதை பார்க்க முடிகிறது.

அவர்களுடைய பார்வையில்,

இந்த விவகாரம் முதலமைச்சருக்கு மிகுந்த நெருக்கடியைத் தரவல்லது.

தாமே தெரிவு செய்த குழுவினர் வழங்கிய தீர்ப்பினை நிராகரிப்பதா?

அவர்கள் முன்னாள் நீதிபதிகள் உள்ளடங்கியவர்கள் என்பதால் அவர்கள் பரிந்துரையை நிராகரிப்பது முன்னாள் நீதியரசர் என்ற அடிப்படையில் தவறாக அமையாதா?

தீர்ப்பில் திருப்தியில்லை எனத் தெரிவித்து நிராகரித்தால் தனக்கு நெருக்கமானவர்கள் என தோற்றம் காட்டுகின்ற அமைச்சர்களை காப்பாற்றுவதாக மற்றையவர்கள் கருதமாட்டார்களா?

பரிந்துரைக்கு அமைய நடவடிக்கை எடுத்தால், ஏனைய அனைவரும் எதிர் நிலை எடுக்கும் போது அத்தனை பேரையும் எதிர்த்து தன்னுடன் நிற்பவர்களை வெளியில் விட்டால் தனிமரம் ஆகிவிடமாட்டோமா?

இன்னும் ஏராளம் கேள்விகளுக்குள் சிக்கியிருக்கிறார் முதலமைச்சர் என்பதே முக்கியமாகிறது. எனவே மிக மிக நெருக்கடிக்களுக்குள் சிக்கியிருக்கின்ற முதலமைச்சரின் கையறு நிலையினை பயன்படுத்தி அதிலும் ஆதாயம் தேடமுற்பட்டே சுமந்திரனின் வாரிசுகள் தங்கள் போக்கில் மாறுதலை ஏற்படுத்தியிருக்கின்றனர் என்பதே வெளிப்படையானது.

வழமையாக சிறிய சிறிய விடயங்களுக்கே பொங்கி எழும் அவர்கள் தற்போது நிலைப்பாட்டில் மாற்றத்தைக் காட்டுவதன் உள்நோக்கம் தான் என்ன?

இதனிடையே அண்மைய காலமாக தமிழ் மக்கள் மனங்களில் உயரிய இடத்தினை பெற்றிருக்கின்ற முதலமைச்சர் தெரிவு செய்த விசாரணைக்குழுவினர் எவ்வாறு தவறான முடிவுகளை வழங்குவர் என்ற கேள்வி தவிர்க்கமுடியாதுதான்.. இந்த இடத்தில் தான் முதலமைச்சர் சொன்ன பதிலையே அந்தக் கேள்விக்கான பதிலாக வழங்க முடியும்.

கொழும்பிலிருந்து வந்த எனக்கு இங்கு அனைத்துமே புதியவை தான்.. மக்களுடன் நாளுக்கு நாள் பழகி அறிந்துகொண்டவற்றின் அடிப்படையிலேயே நான் என்னில் மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கினேன் என்ற சாரப்பட முதலமைச்சர் ஒரு நிகழ்வில் உரையாற்றியிருந்தார்.

இந்த விடயத்தினையே விசாரணைக்குழுவினர் தெரிவிக்கான பதிலாக ஏன் வழங்கக்கூடாது.

விசாரணைக்குழுவினரை முதமைச்சருக்கு பரிந்துரைத்தவர்கள் உள்நோக்கத்துடன் செயற்பட்டிருக்கலாம். அல்லது அவர்கள் தொடர்பிலான பின்னணி தெரிந்திருக்காமல் அவர்கள் தொடர்பில் சரியான விபரங்கள் தெரியாமலேயே முதலமைச்சர் நியமித்திருக்கலாம்.

அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கருதுகோள்களாகவும் ஆதாரங்கள் அற்றவையாகவும் காணப்படுகின்ற நிலையில் அவற்றில் இருந்து அவர்களால் இலகுவில் வெளியில் வந்துவிடமுடியும் என்று வைத்துக்கொண்டாலும் இந்தச் சிக்கல்களில் சிக்கிக்கொண்டிருப்பவர் முதலமைச்சர் தான் என்றால் அதில் மாற்றுக்கருத்து இருப்பதற்கு இடமில்லை.

கடந்த கூட்டத் தொடரின் போது, அறிக்கை சமர்ப்பித்து உரையாற்றிய முதல்வர் கருத்துத் தெரிவிப்பவர்கள் தெரிவிக்கலாம், ஆனால் இறுதி முடிவை தானே எடுப்பேன் எனத் தெளிவாக வலியுறுத்தியிருந்தார்.

ஆக ஒரு தெளிவான உறுதியான முடிவினை அவர் முன்வைக்கத்தான் போகிறார்.. எந்த முடிவும் அரசியல் சூழ்ச்சிகளைக் கடந்ததாய், நீதியின் பக்கம் நிற்பதாய் அமையவேண்டும் என்பதே தமிழ் மக்கள் ஒவ்வொருவரதும் எதிர்பார்ப்பாகும்.

-தமிழ்லீடர் ஆசிரியர்பீடம்

தொடர்புபட்ட செய்தி

வடமாகாண சபை அமைச்சர்கள்மீதான விசாரணை அறிக்கை (முழுவடிவம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*