news4

திருமுருகன் காந்தியை விடுவிக்கக் கோரி யாழில் போராட்டம்! (படங்கள்)

மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டமையைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டமையைக் கண்டித்து இந்தியா உட்பட புலம்பெயர் நாடுகளிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழக பொலிஸாரால் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவையும் மீறி சென்னை – மெரீனா கடற்கரையில் மே 17 இயக்கத்தினர் ஒன்றுகூடினர்.

இதன்போது அவர்களது அஞ்சலியைத் தடுத்து நிறுத்திய பொலிஸார் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 17 பேரைக் கைதுசெய்து புழல் சிறையில் அடைத்துள்ளதுடன் திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக இன்று முற்பகல் 10.30 அளவில் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் திருமுருகன் காந்தியையும் அவரது தோழர்களையும் விடுதலை செய், நினைவேந்தல் நிகழ்வு தமிழர்களின் உரிமை தமிழக அரசே நசுக்காதே, ஈழத்தமிழர்களின் ஆதரவாளர்களை விடுதலை செய் என்ற கோஷங்களை எழுப்பியவாறும் பதாகைகளைத் தாங்கியவாறும் கவனயீர்ப்பில் பங்கேற்றனர்.

இந்த போராட்டம் குறித்து கருத்து வெளியிட்ட சட்டத்தரணி க.சுகாஸ், ஜனநாயகம் சாகடிக்கப்பட்டுள்ளதாகவும் உலகத்துக்கு அகிம்சையை போதித்த நாட்டில் அகிம்சை குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளதாகவும் விசனம் வெளியிட்டார்.

இதேவேளை ஈழத்தமிழ் மக்களது விடுதலைக்காக போராடிய திருமுருகன் காந்தி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளமையானது தவறு என்று சுட்டிக்காட்டியுள்ள வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், இவ்வாறான செயற்பாடுகள் மென்மேலும் அடக்குமுறைக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈழத்தமிழர்களது பெயரைப் பயன்படுத்தி ஐக்கிய நாடுகள் சபையில் செயற்படும் வல்லரசு நாடுகளது நோக்கங்களை அம்பலப்படுத்தி வந்த திருமுருகன் காந்தி போன்றவர்களது விடுதலைக்காக தாம் தொடர்ந்தும் உழைப்போம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பதாக தெரிவிக்கும் தமிழக அரசு இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், சட்டத்தரணிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

news2news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*