ravik

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு உதவத் தயார் – மோடி தெரிவிப்பு!

வௌிவிவகார அமைச்சராக பதவியேற்ற பின்னர் தனது முதல் பயணமாக இந்தியா சென்றுள்ள ரவி கருணாநாயக்க, அந்த நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். நேற்று இரவு நரேந்திர மோடியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை விஸ்தரிப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.

மேலும், வௌிவிவகார அமைச்சராக பொறுப்பேற்றமை தொடர்பில், ரவி கருணாநாயக்கவிற்கு, மோடி தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த சந்திப்பில், அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பலியானவர்கள் தொடர்பிலும் இந்தியப் பிரதமர் தனது இரங்கலை வௌிப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு உதவத் தயார் எனவும் மோடி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, அனர்த்த நிலைமைகளின் போது விரைந்து உதவ நடவடிக்கை எடுத்தமைக்காக ரவி கருணாநாயக்க இந்தியப் பிரதமரிடம் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உறவினை வலுப்படுத்த இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இதுஇவ்வாறு இருக்க, இந்தியா – இலங்கைக்கு இடையிலான பிரச்சினைகள் தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது, அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையின் பொறுப்பிலுள்ள 42 மீனவப் படகுகளை விடுவிக்கவும் வாய்ப்புள்ளதாக, ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சு தற்போது மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு அமைய இதனை செயற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த சந்திப்பை அடுத்து, இந்திய வௌிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜூடனும் ரவி கருணாநாயக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*