battie

கிழக்கில் போராட்டம் தொடர்கிறது!

திருகோணமலை மல்லிகைத்தீவு பெரியவெளிப் கிராமத்தில் எட்டு வயது சிறுமிகள் மூவர் வன்புணர்வுக்குட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினம் மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

மட்டக்களப்பு வாகரை பால்சேனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் வம்பிவட்டுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் இணைந்து, மட்டக்களப்பு – திருகோணமலை வீதியிலுள்ள பால்சேனை பாடசாலை முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர்கள் கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகளும் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளைத் தாங்கியவாறும் கோஷங்களையும் எழுப்பியவாறும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அத்துடன், தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை வாகரைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கையளித்தனர்.
மல்லிகைத்தீவு பெரியவெளிக் கிராமத்திலுள்ள பாடசாலையொன்றில் கட்டட நிர்மான பணிகளில் ஈடுபட்டுவந்த தொழிலாளர்கள் சிலர், பிரத்தியேக வகுப்புக்குச்சென்ற எட்டு வயது சிறுமிகள் மூவரை வன்புணர்வுக்குட்படுத்தியதாக கூறப்படுகின்றது.

இந்தச் சம்பவத்தை கண்டித்து மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள பாடசாலை மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*