தக

சோரம்போன கலைஞரும்; விலைபோகாப் பெருந்தலைவனும்!

வீழ்ந்துபட்டுக் கிடக்கும் ஈழத்தமிழர்களதும் உலகத் தமிழர்களதும் உணர்வுகளைச் சீண்டிப்பார்க்கும் கலைஞர் கருணாநிதி அவர்களின் விசுவாசிக்களாகச் சொல்லிக்கொள்கின்ற ஒரு அணி சமூக வலைத்தளங்கள் ஊடாக தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களையும் ஈழவிடுதலைக்காக கொடுக்கப்பட்ட உயிர்விலைகளையும் கொச்சைப்படுத்தி மிகக் கேவலமான பரப்புரை நடவடிக்கைகளை மிகத் தீவிரமாக மேற்கொண்டுவருகின்றது.

தமிழனுக்கு உலகில் முகவரி தந்த தேசியத்தலைவர் அவர்களையும் அவரின் போரியல் நடவடிக்கைளையும் இழிவுபடுத்தும் நபர்கள் தெரிவுக்கும் கருத்துக்களுக்கான சரியான பதில் வழங்கவேண்டிய கடப்பாடு தமிழ்லீடர் இணையத்தளத்திற்கு உண்டு என்ற அடிப்படையில் ஆசிரியர் பீடம் பதிவு ஒன்றினை முன்வைக்கின்றது,

(25-07-2013 அன்று வெளிவந்த பதிவு காலத்தின் தேவை கருதி மீள்பதிவு செய்யப்படுகிறது)

வஞ்ச மனதான் படிற்றொழுக்கம்

‘வஞ்சமனதான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்’

           இது வள்ளுவன் தந்த என்னும் இறவா வாய்மொழி.

செந்நாட்டுப் புலவரின் குறள்களைச் சொல்லி மேடை மேடையாக முழங்கிய கலைஞர் கருணாநிதியைப் பார்த்தும் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகைக்கின்றன.

‘கோவிலிலே குழப்பம் விளைவித்தேன் கோவில் கூடாது என்பதற்காக அல்ல கூடாதவர்களின் கூடாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக’ எனக் கனல் கக்கியவர், பேரறிஞர் அண்ணா கட்டி வளர்த்த திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கூடாதவர்களின் கூடாரமாக்கி வஞ்சனையும் பொய்மையும் ஊழலும் நிறைந்த கூடாரமாக்கி அதன் தலைவராகக் கோலோச்சுகிறார். ‘பூசாரியைத் தாக்கினேன் பக்தன் என்பதற்காக அல்ல பக்தி பகல் வேஷமாக மாறி விட்டதைக் கண்டிப்பதற்காக’, என்றவர் பகல் வேஷதாரிகளான பார்ப்பனிய மேலாதிக்க சக்திகளின் மேலாதிக்கத்திற்குச் சரணடைந்து சாமரம் வீசுகிறார்.

அது வஞ்சமனதான் படிற்றொழுக்கம்!

எனவே – ஐம்பெரும் பூதங்களும் அகத்தே நகையோ நகையென நகைக்கின்றன.

கருணாநிதியின் பாசறையில் வளர்ந்த பெருமைக்குரிய ராசாவும் கலைஞரின் அருமை மகள் கனிமொழியும் ஏழைத் தமிழ் மக்களின் ஆதரவில் அதிகாரபீடத்தை கைப்பற்றி விட்டு வட இந்திய வர்த்தக முதலைகளுடன் சல்லாபித்து ஊழல் நதியில் நீந்தியவர்கள்.

இந்தியச் சிறைக் கூடங்களின் தடுப்புக் கம்பிகளை எண்ணி தம் வினையால் தம்மைத் தாமே கட்டிக்கொண்டவர்கள்.

கருணாநிதியினதும் அவரின் பரிவாரங்களினதும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற சுலோகம் அர்த்தமிழந்து போய் தற்கொலை செய்து கொண்டது.

அத்தனை கேவலங்களைளும் வஞ்சனைகளையும் அவமானங்களையும் குழைந்தெடுத்து முடியாகச் சூடிக்கொண்ட கலைஞரும் அவரின் பக்த கோடிகளும் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் மீது சேறள்ளி வீச ஆரம்பித்துள்ளன.

தங்கள் முதுகுப் புண் நாறி மணப்பதை மறைத்து முன்னால் நிற்பவரின் முகப்பருவை பார்த்து மூச்சிரைக்கத் திட்டுகின்றனர்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து பல்லாயிரம் ஈழத்தமிழர்களின் கொலைக்கு கொலைவெறியன் மஹிந்தவுக்கு துணைபோன கருணாவையும், என்றென்றும் திராவிட இயக்கங்களினதும் தமிழினத்தினதும் பரமவைரியுமான பார்ப்பனிய ஊது குழல் ‘சோ’ வையும் சாட்சிக்கிழுத்திருக்கின்றனர்.

பொருத்தமான கூட்டு!

தமிழகத்தில் ஈழம் பற்றிப் பேசமுடியாமல் செய்தவர்கள் யார்? எனக் கேள்வி எழுப்புகின்றனர் கலைஞரின் பரிவாரங்கள்!

விடுதலைப் புலிகளால் தான் என அர்த்தப்படுமா?

கருணாநிதி டெசோ அமைப்பை உருவாக்கி ஈழம் பற்றிப் பேசினார். பின்னர் பல வருடங்கள் ஈழம் பற்றி அவர் பேசவேயில்லை.

ஆனால் நெடுமாறன் பேசினார்; வை.கோ பேசினார்; பெருஞ்சித்தனார் பேசினார்; வீரமணி பேசினார்; கொளத்தூர் மணி பேசினார்; புலமைப்பித்தன் பேசினார்; தென்னிந்திய சினிமா கலைஞர்கள் பேசினர்;
அந்தப் பேச்சுக்கள் எதுவும் அவர் காதில் விழவில்லை!

அவரும் பேசவில்லை!

அவரை பேச விடாமல் செய்தது – விடுதலைப் புலிகள் அல்ல; வைகோவும் நெடுமாறனும் அல்ல;

அவரைப் பேச விடாமல் செய்தது அவர்களின் அமைச்சர் பதவிகள்; ஊழல்கள் சம்பந்தமான கோவைகள்; அதிகாரப் பேராசைகள்!

மத்திய அரசு நெற்றிக்கண்ணைத் திறந்தால் பதவிகள் பறிபோய்விடுமே என்ற பயத்தில் வாயை மூடிக்கொண்ட அவர் விடுதலைப் புலிகளைச் சாட்டித் தப்பப் பார்க்கிறார்.

பாவம்! பரிதாபத்துக்குரியவர்!

எதற்கெடுத்தாலும் இந்தியாவையும் கருணாநிதியையும் பழி சுமத்தாதீர்கள் எனவும் அவர்களின் ஒரு கோரிக்கை!

காரணமின்றி கருணாநிதியையும், ஆதாரமின்றி இந்தியாவையும் பழிசுமத்த ஈழத்தை நேசிப்பவர்கள் அப்படி ஒன்றும் மனநோயாளிகளும் அல்ல; சொந்த உறவுகளை சுயநலத்திற்காக விற்கும் மூன்றாம் தர அரசியல் கட்சிகளுமல்ல;

தமிழீழ விடுதலைப் போர் வெற்றி மேல் வெற்றி பெற்று வடக்கிலும் கிழக்கிலும் விடுதலைப் பிரதேசங்களை அமைத்து விடுதலையை நெருங்கிக் கொண்டிருக்கும் காலத்தில் – இலங்கை அரசுக்கு ஆயுத உதவி, ஆயுதப் பயிற்சி, போர் தொழில்நுட்ப உதவி, ஆளணி உதவி, புலனாய்வுத் தகவல்கள் என அள்ளி அள்ளி வழங்கி எமது ஆயுதப் போராட்டத்தைத் தோற்கடிப்பதில் பிரதான பாத்திரம் வகித்த இந்தியாவைக் குற்றம் சொல்வது தவறா?

இலங்கையின் போர்க்குற்றங்கள், மனிதகுல விரோத நடவடிக்கைகள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்த போதும் பல்வேறு சூழ்ச்சிகரமான நடவடிக்கைகள் மூலம் இருமுறையும் அதை நீர்த்துப் போக வைத்துப் பயனற்றதாக்கிய இந்தியாவை குற்றம் கூறாமல் இருக்க முடியுமா?

பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்படவும் ஊனமுற்றவர்களாக்கப்படவும் காலம் காலமாகத் தேடி வைத்த சொத்துக்களை இழக்கவும் இலட்சக்கணக்கானோர் அகதிகளாக வெளியேறவும் காரணமாயிருந்த இலங்கை அரசின் மக்கள் விரோத போக்குக்கும் மனிதாபிமானமற்ற இன அழிப்புக்கும் இந்தியா பரிபூரண ஒத்துழைப்பு வழங்கியது துரோகமா இல்லையா?

இலங்கை அரசு போர்த்தவிர்ப்பு வலயம் எனக் கூறி எமது மக்களை ஒரு சிறு பகுதிக்குள் ஒதுக்கிவிட்டு, எறிகணைகளாலும், விமானக் குண்டு வீச்சுக்களாலும் பெருங்கொலை வெறியாட்டம் நடத்தியது. அக் கொடுமை கண்டு தமிழக மக்கள் கொதித்து எழுந்தனர். வீதியில் இறங்கிப் போராடினர். தம் எதிர்ப்பை வெளியிட தம்மைத் தாமே எரியூட்டி தியாக வேள்வி நடத்தினர்.

அந்த எழுச்சியை திசை திருப்பி மழுங்கடிக்கும் விதமாக இலங்கை அரசு உடனடியாகப் போர்நிறுத்தம் செய்யும் வகையில் இந்தியா நடவடிக்கை எடுக்காவிடில் மத்திய அரசிலிருந்து விலகப் போவதாகச் சூளுரைத்த கலைஞர் ராஜிநாமாக் கடிதங்களை வாங்கிச் சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டார். ராஜிநாமா விவகாரத்தை கிடப்பில் போட்டுவிட்டு சாகும்வரை உண்ணாவிரதம் என ஒரு நாடகமாடினார். மதியமே போர் நிறுத்தப்பட்டுவிட்டதாகக் கூறி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். ஆனால் போர் நிறுத்தப்பட்டுவிட்டது என கலைஞர் கூறிய சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு வினாடியும் ஈழத்தமிழ் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்ததை மறுக்க முடியுமா?

தமிழக மக்களை ஏமாற்றவும் அவர்களின் எழுச்சியைத் திசை திருப்பவும் நாடகமாடி ஏமாற்றி இலங்கை அரசு எமது மக்களைக் கொன்று குவிக்க துணைபோனது துரோகமில்லையா?

தமிழ் மக்களின் கவசமாக விளங்கிய விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டமையால் தானே இன்று எங்கள் உரிமைகள் சிதைக்கப்படுகின்றன! எங்கள் நிலங்கள் பறிக்கப்படுகின்றன! எங்கள் வாழ்வாதாரங்கள் முடக்கப்படுகின்றன!

இந்த நிலையில் இந்திய மத்திய அரசையும் கலைஞரையும் குற்றம் சுமத்தாமல் எப்படி இருக்க முடியும்?

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கருணாவின் பங்கு இல்லையா? எனக் கேள்வி எழுப்புகின்றனர் கலைஞரின் பரிவாரங்கள்! ஒரு காலத்தில் போராட்டத்தில் பங்காளிகள் என்பதற்காக, அவர்கள் துரோகிகளாக மாறி மஹிந்தவின் கையாட்களாகி மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் போது அவர் பின்னால் போகவேண்டுமா? அல்லது ஆலயம் அமைத்து வழிபடவேண்டுமா?

துரோகிகளின் கண்களில் துரோகிகள் வீரர்களாகத் தெரியலாம்! மக்களைப் பொறுத்தவரை துரோகிகள் துரோகிகள் தான். துரோகங்களுக்குத் துதிபாடும் கலைஞரின் ஊழல் பரிவாரங்களுக்கு இது எங்கே புரியப்போகிறது!

எங்கள் தேச விடுதலை பற்றிக் கதைப்பவர்கள் யார்? என்ற கேள்வியைக் கூட அவர்கள் எண்ணிப் பார்ப்பதற்கு தயாராகவில்லை. எமது விடுதலைப் பயணத்தை இழிவுபடுத்துவதில் இருந்து தமது பாவங்கள் கழுவப்படும் என்று எண்ணிக்கொள்கிறார்களோ? என்று எண்ணத் தோன்றுகிறது.

எங்கள் விடுதலைக்காக கொடுக்கப்பட்ட இளையவர்களின் அளவிட்டுப்பார்க்க முடியாத தியாகங்களை இவர்களால் புரிந்து கொள்ளமுடியுமா?

நாங்கள் நாங்களாக யாருக்கும் பணியாமல் வாழ்ந்த நாட்களில் எங்கள் சிறுவர்களிடமும் இளைஞர்களிடமும் எம்மை ஒடுக்கும் எதிரிகளுக்கு எதிராக துப்பாக்கி ஏந்தும் உற்சாகம் இருந்தது; விடுதலைக்காக எதையும் இழக்கும் உத்வேகம் இருந்தது; சுதந்திர தீபத்தை கையேந்தி உயிரை விலை கொடுக்கும் உத்வேகம் இருந்தது; விடுதலைப் பிரதேசத்தை அமைத்து தனி நிர்வாகம் நடத்தும் உத்வேகம் இருந்தது;

இது மத்திய அரசின் தமிழர் விரோத நடவடிக்கைகளுக்கு புனுகு பூசும் உற்சாகமல்ல; உண்ணாவிரத நாடகமாடி உலகை ஏமாற்றும் உத்வேமல்ல; மாநாடுகள் நடத்தி மக்களை திசை திருப்பும் மாயமலை உத்வேகமல்ல, எங்கள் சிறுவர்களிடமும்; இளைஞர்களிடமும் இருப்பது உண்மையின் உத்வேகம்; விடுதலை வேட்கையின் உத்வேகம்; எங்கள் தலைவனின் வழிகாட்டலில் உருவான நம்பிக்கையின் உத்வேகம்; அரச செலவில் தொலைக்காட்சிப் பெட்டி இலவச தொலைக்காட்சிப் பெட்டி வழங்கிவிட்டு, தொலைக்காட்சிக் கட்டணம் அறவிட்டு தங்கள் சொந்தப் பைகளை நிரம்பிக் கொண்ட சுரண்டல் கனவான்களுக்கு எங்கள் உத்வேகம் எப்படிப் புரியும்?

ஏழைகளின் குருதியைக் குடித்து பணமெத்தைகளில் துயில்பவர்களுக்கு விடுதலைக்காக சிந்தும் இரத்தத்தின் விலை எப்படிப் புரியும்?

எங்கள் உத்வேகத்தை, சுயநலத்தால் மரத்துப் போய்விட்ட மண்டைகளுக்கு எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?

பிரபாகரனின் கடைசி நேர முட்டாள்தனமாம்! அப்படியானால் எது புத்திசாலித்தனம்?

விடுதலைக்காக உயிர் நீத்த ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களுக்கும் முப்பதனாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களுக்கும் இரவு பகலாக உழைத்து எமது விடுதலைப் போருக்கு உரம் சேர்க்கும் புலம்பெயர் உறவுகளுக்கும் துரோகம் செய்து மண்டியிட்டு தருவதை பெற்று உயிரை மட்டும் காத்து அடிமைத் தனத்தை ஏற்பதா புத்திசாலித்தனம்?

அது ஊழலிலும் துரோகத்திலும் மிதக்கும் கலைஞர் பட்டாளத்திற்குப் பொருந்தும்.

ஆனால் விடுதலை வீரர்கள் என்றுமே விலை போவதில்லை!

தியாகிகள் என்றும் துரோகமிழைப்பதில்லை!

பிரபாகரன் ஒரு வரலாறு! அந்த வரலாற்றை தொடர இலட்சோப இலட்சம் தமிழ் மக்கள் வீறுகொண்டு மேலெழுந்து நிற்கின்றனர்.

வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசப்படப் போகும் துரோகிகளுக்கு அந்தப் பெயரை உச்சரிக்கக் கூடத் தகுதியில்லை என்பதை தமிழ்லீடர் ஆணித்தரமாகத் தெரிவித்துக் கொள்கிறது.

வஞ்சமனதான் படிற்றொழுக்க பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்

-தமிழ்லீடர் ஆசிரியர் பீடம் (மீள்பதிவு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*