chandrica

தமிழர்கள் விவகாரம்; கடந்த அரசாங்கங்களைச் சாடுகிறார் சந்திரிகா!

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண கடந்த காலத்தில் எந்தவொரு அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லையென 10 வருடங்கள் அதிகாரத்தில் இருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க குற்றம்சாட்டியுள்ளார். எனினும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் குரல் எழுப்புவதற்கு பலர் இருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்கள் தொடர்பில் மாத்திரமல்ல அனைத்து மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தியுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதியிடம், தமிழ் மக்கள் தொடர்பில் மாத்திரமே அவதானம் செலுத்தப்படுவதாகவும், முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் ஊடகவியலாளர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.

எனினும் இதற்கு பதிலளித்த சந்திரிகா குமாரதுங்க அது தவறு எனவும் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் படிப்படியாக நடைபெற்று வருவதாக சுட்டிக்காட்டினார்.

சந்திரிக்கா குமாரதுங்க “தமிழ் மக்களும் இதுவரை முழுமையா மீள்குடியேற்றப்படவில்லை. அவர்களிலும் கணிசமானவர்கள் இன்னமும் காத்துக்கொண்டிருக்கின்றார்கள். அந்த நேரத்தில் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் பல முஸ்லிம் தலைவர்கள் இருந்தார்கள்.

எனினும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வருகைத் தருவதை நிறுத்திக்கொண்டார்கள். ஏதோ காரணங்களுக்காக தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த எவரும் இருக்கவில்லை. இப்பொழுது அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. ஆகவே பேசுகின்றார்கள். முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் தொடர்ச்சியாக நாடாளுமன்றில் இருந்தார்கள்.

முஸ்லிம் மக்களை அவர்கள் மீளக் குடியேற்றினார்கள். மன்னாரில் இன்றும் மீள்குடியேற்றம் நடைபெறுகின்றது. வில்பத்துவிலும் மீள் குடியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகவே முஸ்லிம் மக்களுக்கான போராட பலர் இருக்கின்றார்கள். நாங்களும் இது தொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

எனினும் தமிழ் மக்கள் தொடர்பில் எம்மால் கூட பேச முடியவில்லை. மேலும் தமிழ் மக்களைப் போல் ஐந்து ஆறு இலட்சம் மக்கள் இடம்பெயரவில்லை. சுமார் 40 அல்லது 50 ஆயிரம் முஸ்லிம்களே இடமபெயர்ந்துள்ளனர். தமிழர்களின் பிரச்சினை பரந்து விரிந்தது. முதன்முறையாக தமிழ் மக்கள் தொடர்பில் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

மற்றுமொரு விடயத்தை குறிப்பிட வேண்டும் சந்திரிகா தமிழ் மக்களுக்காக மாத்திரம் செயற்படுவதாக சிங்கள மக்கள் கூறுவதாக சிலர் என்னிடம் தெரிவித்திருக்கின்றார்கள். சிங்கள மக்களுக்கு நான் என் வாழ்நாள் முழுவதும் பணியாற்றி இருக்கின்றேன். இந்த நாட்டிற்கு சமாதானத்தை கொண்டுவர என்னுயிரையும் நான் இழக்கவிருந்தேன். சிங்கள மக்கள் தொடர்பில் சிந்திக்க 200ற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

எனினும் முல்லைத்தீவில் யுத்தத்தின் பின்னர் மீள் குடியேறியுள்ள முஸ்லிம் மக்களுக்கு காணிகளை வழங்கும் விடயத்தை சுயநல அரசியல்வாதிகள் தடுக்க முயற்சிப்பதாக வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றம்சாட்டினார்.

முல்லைத்தீவில் மீள்குடியேறி காணிகள் அற்ற நிலையில் வாழும் மக்கள் முஸ்லிம் மக்களை சந்தித்த அவர் ஊடங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தின் நீராவிப்பிட்டி கிழக்கு, மேற்கு, தண்ணீருற்று கிழக்கு, மேற்கு இச்சிராபுரம் மற்றும் முல்லைத்தீவு நகர் பகுதிகளில் முஸ்லிம் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக கரைதுரைப்பற்று பிரதேச செயலாளர் ஐ.பி.சி தமிழுக்கு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*