suma-editorial frame

சுதந்திரமும் சுமந்திரனும்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் இலங்கையின் 68 ஆவது சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கலந்துகொள்ளும் என்று சுதந்திர தினத்துக்கு சில நாட்களுக்கு முன்பு பெருமையுடன் தெரிவித்திருந்தார். அவர் கூறியதோடு நில்லாமல் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் சுதந்திர தின நிகழ்விலும் கலந்துகொண்டார்.

சுமந்திரனைப் பொறுத்தவரையில் சுதந்திர தினத்தைக் கொண்டாட அவருக்கு தகுதியும், உரிமையும் உண்டு. ஏனெனில் அவர் பல விதங்களில் சுதந்திரம் பெற்றவர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் அவர் ஜனாதிபதியாக இருந்தபோதே கிரிக்கற் விளையாடவும், விழாக்களில் கலந்துகொள்ளவும் சுதந்திரம் கொண்டிருந்தவர். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் நட்புறவைப் பேணும் வகையில் அடிக்கடி சந்திப்புக்களை நடத்தும் சுதந்திரத்தைக் கொண்டிருந்தவர்.

அதுமட்டுமல்ல-

புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு. புலிகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எவ்வித உறவும் கிடையாது எனவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் கொள்கைகளை ஏற்கவுமில்லை எனவும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கும் சுதந்திரமும் அவருக்கு உண்டு.

புலிகள் வடக்கை விட்டு முஸ்லிம்களை வெளியேற்றியமை ஒரு இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை எனப் பகிரங்கமாக அறிவிக்கும் சுதந்திரமும் அவருக்குண்டு.

தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது ஒரு இனப்படுகொலை என வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்காக முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனைக் கண்டிக்கும் சுதந்திரமும் அவருக்குண்டு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எவ்வித தீர்மானமும் இன்றி சம்பந்தனுடன் 2015, 2016 சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொண்ட சுதந்திரமும் அவருக்குண்டு.

இப்படியாக அவரின் சுதந்திரம் தனித்துவமானது. இந்தச் சுதந்திரம் தமிழ் மக்களின் வெறுப்புக்குரியதாகவும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு எதிராகவும் இருக்கலாம்.

ஆனால்

அவருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிலுள்ள ஒரு சிலருக்கும் இந்தச் சுதந்திரம் உவப்பானது. பேரினவாதிகளை மனம் குளிர வைக்கும் அற்புதமான சக்தி கொண்டது.

இது சுமந்திரனால் ஆரம்பிக்கப்பட்டதல்ல!

இந்த மாற்றான மாற்றம் 2013 மே தினத்தில் யாழ்ப்பாண மண்ணில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்திலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் தொடங்கி வைக்கப்பட்டது.

அன்று ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து சிறிலங்காவின் தேசியக் கொடியை உயரத் தூக்கிப் பிடித்து பெருமை கொண்டவர் இரா.சம்பந்தன். தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட 1972ஆம் ஆண்டு அரசியலமைப்பு மூலம் பௌத்தம் முதன்மை மதமாக்கப்பட்டுத் தேசியக் கொடியில் நான்கு மூலைகளிலும் அரச இலைகள் பொறிக்கப்பட்ட கொடியைத் தனது கொடியாகத் தாங்கிப் பூரித்து நின்றவர் இரா.சம்பந்தன்.

அவரால் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகக்கொண்டு வரப்பட்ட சுமந்திரன் இன்னும் ஒருபடி மேலே பாய்ந்துள்ளார்.

2015ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் முன்னறிவித்தல் ஏதுமின்றி இருவரும் கலந்து சிறப்பித்ததை மறந்துவிட முடியுமா? அது போல் தலைவர் வழியில் தடம்மாறாது 2016 சுதந்திர தின விழாவிலும் பங்குகொண்டிருந்தார் சுமந்திரன்.

தமிழ் மக்கள் மீதான படுகொலைகளினதும், சகல ஒடுக்குமுறைகளினதும் நாயகன் மகிந்த ராஜபக்ச. அவர் சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ளவில்லை. தனது மகனும், நண்பர்களும் சிறையில் வாட எப்படித்தான் சுதந்திர விழாவில் பங்கெடுப்பது என்பது அவரின் கேள்வி. அவரளவில் அது அவரின் நியாயம்!

தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் வாட, காணாமற் போனோரின் உறவுகள் கண்ணீரில் தோய, போரில் இடம்பெயர்ந்தவர்கள் அகதி முகாங்களிலும் உறவினர் வீடுகளிலும் இன்னல் சுமக்க, தமிழ் மக்கள் தமது உரிமைகளைப் பெற எந்த ஒரு அறிகுறியும் தென்படாமல் தவிக்க சுமந்திரன் இலங்கை ஆட்சியாளர்கள் பெருமையுடன் கொண்டாடிய சுதந்திர தின விழாவில் பங்குகொண்டு ‘நல்லெண்ணத்தை’ வெளிப்படுத்தியுள்ளார்! இது சுமந்திரனின் நியாயம்.

58,000 வாக்குகளால் அவரை நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்த தமிழ் மக்களின் நியாயங்கள் தூக்கு மேடையில் ஏற்றப்பட்டுவிட்டன. தமிழ் மக்களுக்கு விரோதமாகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பை சரணாகதிப் பாதையிலும் கொண்டு செல்லும் சுமந்திரனின் சுதந்திரத்தையும், சம்பந்தனில் வழிகாட்டலையும் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்பதுதான் இப்போது எழும் கேள்வி.

தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு விற்பனைப்பண்டமல்ல. அது எமது உரிமைப் போராட்ட அமைப்பு என்பது உணரப்பட வேண்டும். களைகள் களையப்பட்டால் மட்டுமே பயிர்கள் பலன்தர முடியும்!

– தமிழ்லீடர் ஆசிரியர் பீடம் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*