peedathipathi

சர்வதேச விசாரணை வேண்டாம் – அல் ஹுசைனிடம் வலியுறுத்திய அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகள்

இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு சர்வதேச விசாரணை பொறிமுறை அவசியமில்லை என்று மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் நேற்று கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்ததுடன் மல்வத்த, அஸ்கிரிய பீடங்களின் தேரர்களை சந்தித்து கலந்துரையாடினார். இதன் போதே கலகம ஸ்ரீ தம்மதஸ்ஸ மற்றும் திப்படுவாவே ஸ்ரீசுமங்கல தேரர் ஆகியோர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.

ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அல் ஹுசைன் நேற்று காலை மல்வத்து பீடத்தின் தேரரையும் அதன் பின்னர் அஸ்கிரிய பீடத்தின் தேரரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

குறிப்பாக இந்த சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட அஸ்கிரி, மற்றும் மல்வத்து பீடங்களின் தேரர்களான கலகம தம்மதஸ்ஸ தேரர் மற்றும் திப்படுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் ஆகியோர் குறிப்பிடுகையில்,

இலங்கையில் நல்லிணக்கம் என்பது மிகவும் உயர்ந்த மட்டத்தில் காணப்படுகின்றது. இந்த நாட்டில் சிங்களம், தமிழ், முஸ்லிம், மற்றும் பறங்கி ஆகிய இனமக்கள் மிகவும் ஒற்றுமையுடன் செயற்பட்டு வருகின்­றனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்காக வருகை தந்த பயங்கரவாதியைக் கூட ஜனாதிபதி மன்னிப்பளித்ததன் மூலம் நல்லிணக்கத்திற்கு உயர்ந்த முன்னுதாரணத்தை வெளிக்காட்டியிருக்கின்றார். நாட்டில் நல்லாட்சி நிலவிக் கொண்டிருக்கிறது. அனைத்து மக்களும் ஐக்கியமாக வாழ்கின்றனர். ஜனாதிபதியும் பிரதமரும் இணைத்து செயற்பட்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இந் நிலையில் சர்வதேச விசாரணை என்பது அர்த்தமற்றதான விடயமாகும். உள்ளக பிரச்சினைகளை உள்நாட்டிலேயே தீர்த்துக் கொள்வதே சிறந்தது

அத்துடன் இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு எக்காரணம் கொண்டும் வெளிநாட்டு விசாரணை பொறிமுறை அவசியமில்லை என்றுதெரிவித்தனர். இதேவேளை அஸ்கிரி, மற்றும் மல்வத்து பீடங்களின் தேரர்களை சந்தித்த பின்னர் வெளியே வந்த ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டார்.

அவர் அங்கு குறிப்பிடுகையில்,

நான் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட தேரர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினேன். இதேவேளை நாட்டின் பல்வேறு தரப்பினரையும் நான் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். குறிப்பாக செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்துப் பேசுவதற்கு ஏற்பாடாகியுள்ளது. இந்த நாட்டில் சமாதானம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே எனது விஜயம் அமைந்துள்ளது. நான் வடக்கு கிழக்கிற்கு விஜயம் செய்து அனைத்து தரப்பினரையும் சந்தித்து அவர்களின் உணர்வுகளை, பிரச்சினைகளைக் கேட்டறிந்தேன்.

இங்கு மகாநாயக்க தேரர்களையும் சந்திக்கக் கிடைத்தமை பாக்கியமாகக் கருதுகின்றேன். உங்கள் ஆசிர்வாதத்தையும் கருத்துக்களையும் கவனத்திற் கொள்வேன் என்றார்.

இதேவேளை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை பொறிமுறை அவசியமில்லையென்று மல்வத்து, மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகள் தெரிவித்த கருத்து தொடர்பில் செயிட் அல் ஹுசைன் ஊடகவியலாளர்களிடம் எதனையும் பகிர்ந்து கொள்ளவில்லை.

இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் ஹுசைன் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்கும் திருகோணமலைக்கும் விஜயம் செய்திருந்ததுடன் அங்கு முதலமைச்சர் மற்றும் ஆளுநர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். மேலும் நேற்றைய தினம் பாதுகாப்பு செயலாளர், முப்படை தளபதிகள், மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் ஆகியோரையும் ஹுசைன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அத்துடன் கடந்த கால யுத்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மை மக்களையும் அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இன்றைய தினம் அல் ஹுசைன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*