nkna

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 55

படையினர் மிகவும் அவதானமாகவே தங்கள் நகர்வை மேற்கொண்டிருந்தனர். டாங்கிகள் இரண்டு கவசவாகனங்கள் இரண்டு என்பவற்றின் துணையுடன் மூன்று அடுக்கு வடிவமைப்பில் ஒவ்வொரு வரிசையும் ஒன்றன் பின் ஒன்றாக முன்னேறினர். இரு அணிகள் படுத்து காப்புக் கொடுக்க ஒரு அணி ஓடிச் சென்று முன்னால் படுப்பதும் பின்பு அடுத்த அணி குனிந்து ஓடி முன்னால் படுப்பதும் என மாறி மாறி செயற்பட்டவாறு முன்னேறினர்.

காகம் குருவி கூடக் காணப்படாமல் அப்பிரதேசம் வெறிச்சோடிப் போயிருந்த போதிலும் படையினர் மிகவும் எச்சரிக்கையாகவுமே நகர்வை மேற்கொண்டனர். திடீரென நிலமட்டத்திலிருந்து  வளிவந்த ஒளிக்கீற்றுக்கள் இரு டாங்கிகளையும் செயலிழக்க வைக்கவே அதிர்ந்து போயினர். குனிந்து ஓடியவாறு முன்னேறிய படையினரில் பலர் பொத்து பொத்தென விழுந்தனர்.

நிலமட்டத்துடன் நிலத்திற்கு சமாந்தரமாகப் பாய்ந்த ரவைகள் படுத்திருந்த படையினரைப் பதம் பார்த்தன. கிரனைட் லோஞ்சர்கள் கக்கிய கைக்குண்டுகள் படையினர் நடுவில் வெடித்துச் சிதறின.

இராணுவப் படையணிகளின் மேஜர்களும் லெப்ரினன்களும் எதைக் கட்டளையிடுவது எப்படிக் கட்டளையிடுவது என்று தெரியாமல் தடுமாறினர்.

கவச வண்டிகள் கூட என்ன செய்வது எனத் தெரியாமல் பின்வாங்க ஆரம்பித்தன.

நாலு பக்கமிருந்தும் வேட்டுக்கள் பறந்து வந்தனவேயொழிய ஒரு போராளியைக் கூடக் கண்ணில் காணமுடியவில்லை.

ஒவ்வொரு பத்துப் பன்னிரண்டு பேர் கொண்ட இராணுவ அணிகளும் தனித்தனியாகத் தாம் சுற்றிவளைக்கப்பட்டு விட்டது போன்று உணரும் வகையிலேயே தாக்குதல் தொடுக்கப்பட்டது.

ஆனால் போராளிகள் நிலக்கீழ் பாம்பு பங்கர்களில் நின்று ஓடி ஓடி தமது நிலைகளை மாற்றி மாற்றிச் சுட்டுக்கொண்டிருந்தனர். அவைக நிலமட்டத்துடன் நன்றாக முள்ளுச் செடிகளாலும் புல்லுக் கற்றைகளாலும் உருமறைப்புச் செய்யப்பட்டிருந்தமையால் படையினரால் அவற்றை அடையாளம் காணமுடியவில்லை.

பின்வாங்கிய கவச வண்டியொன்று தலைகுப்புற பொறிக் கிடங்கொன்றில் விழுந்தது. அதற்குள்ளிருந்து வெளியேறிய படையினரை அறுபது மி.மீ உந்துகணை ஒன்று பதம் பார்த்தது.

ஏறக்குறைய அறுநூறு பேரைக் கொண்ட படையணி ஒவ்வொரு விநாடியும் அளவுகணக்கற்ற படையினரைப் பலி கொடுத்துக் கொண்டிருந்தது.

நிலைமையைப் புரிந்து கொண்ட களமுனைத் தளபதி உடனடியாகவே படையினரைப் பின்வாங்கும்படி கட்டளையிட்டான். அது கூட அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. படையினரின் பின்புறமாகப் போராளிகள் எறிகணைகளால் வேலியமைக்கத் தொடங்கினர்.

படையினரும் போராளிகளும் அருகருகே நின்று போரிட்டமையால் இராணுவத்தால் எறிகணைத்தாக்குதலோ விமானத் தாக்குதலோ நடத்தமுடியவில்லை. எனவே அவர்களின் கட்டளைப் பீடம் உடனடியாக இழப்புக்களைப் பொருட்படுத்தாமல் பின் வாங்கும்படி உத்தரவிட்டது.

படையினர் எறிகணைகளையும் பொருட்படுத்தாமல் பறங்கியாற்றைக் கடந்து பின்வாங்கத் தொடங்கினர்.

போராளிகளின் கட்டளைப் பீடத்திலிருந்து பின் வாங்கும் படையினரைத் தொடர்ந்து தூரத்தில் செல்ல வேண்டும் எனவும், ஒரு போராளி கூட விடாமல் நாச்சிக்குடா நோக்கி காடுகளுக்கால் பின் வாங்கும்படியும் உத்தரவு வந்தது.

போராளிகள் பங்கர்களை விட்டு வெளியே வந்து காட்டுப் பக்கமாக நகரத் தொடங்கினர்.

அடுத்து ஐந்து நிமிடத்தில் கிபிர் விமானங்கள் திருமலையிலிருந்து புறப்பட்டுவிட்டதாகவும் போராளிகளைக் காடுகளுக்குள் பாய்ந்து மறைவாகப் பின்வாங்கும்படியும் அறிவித்தல் வந்தது.

பத்து நிமிடங்களில் போராளிகள் காடுகளில் பாய்ந்து வேகமாக நாச்சிக்குடா நோக்கிப் பின்வாங்க ஆரம்பித்தனர்.

பத்து நிமிடங்களில் விமானங்கள் வந்துவிட்டன. அதற்குள் போராளிகள் களமுனையிலிருந்து நீண்ட தூரம் பின் வாங்கிவிட்டனர்.

ஏறக்குறைய ஒரு மணி நேரமாக இரண்டு, இரண்டு விமானங்களாக வந்து மாறி மாறிக் குண்டு பொழிந்தன. போராளிகள் விமான எதிர்ப்புத் தாக்குதல் கூட நடத்தவில்லை. விமானங்கள் விருப்பம் போல் குண்டுகளைப் பொழிந்து தள்ளின.

ஆனால் போராளிகளின் ஒரு அறுந்த செருப்பைக் கூட அழிக்கமுடியவில்லை. மாறாக படையினரால் கைவிடப்பட்ட டாங்கிகளையும் கவசவாகனங்களையும் நொருக்கித்தள்ளின.

விமானங்கள் தங்கள் அட்டகாசங்களை முடித்துச் சென்ற பின்பு சண்டை இடம்பெற்ற பகுதியை நோக்கி இரவு முழுவதுமே எறிகணைகள் தொடர்ந்து வீசப்பட்டன.

மாலை வேளையில் இரு விமானங்கள் வந்து முழங்காவில் குடியிருப்புகள் மீது குண்டுகளை வீசின. ஒரு குண்டு மருத்துவமனையை நிர்மூலமாக்கியது.

அந்த ஊரில் மக்கள் மட்டுமல்ல மக்கள் வளர்த்த நாய்கள் கூட வெளியேறிவிட்டன என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

விமானங்கள் வந்து வெள்ளாங்குளம் பக்கமாகக் குண்டு பொழிய ஆரம்பித்த சிறிது நேரத்தில் சிங்காரம் மாஸ்ரரின் படையணி நாச்சிக்குடாவுக்குத் திரும்பிவிட்டது. இப்பெரும் வெற்றித் தாக்குதலை நடத்தி முடித்துவிட்டு நாச்சிக்குடாவுக்குப் பின்வாங்கிய சிங்காரம் மாஸ்ரரின் சிறப்புப்படையணி உடனடியாகவே ஒருங்கிணைப்புத் தளபதியிடம் விடைபெற்றுக் கொண்டு தங்கள் இடத்திற்குப் புறப்பட்டுவிட்டது.

இப்பெரும் சமரில் இரண்டே இரண்டு போராளிகளுக்குச் சிறு காயங்கள் மட்டும் ஏற்பட்டிருந்தன. ஒரு போராளி கூட வீரச்சாவடையவில்லை என்ற விஷயம் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்திவிட்டது. பாம்பு பங்கர்கள் அமைக்கும் பணியில் மட்டுமே களமுனைப் போராளிகள் ஈடுபட்டிருந்தனர். சமரின் ஏனைய திட்டங்கள், நெறிப்படுத்தல்கள் எல்லாமே சிங்காரம் மாஸ்ரரின் சிறப்புப் படையணியின் மூலம் தலைவர் தொலைத் தொடர்பு ஊடாக களமுனையை நேரடியாக வழிநடத்தியிருந்தார். அன்று காலை சிறப்புப் படையணி வந்திறங்கியபோது களமுனைத் தளபதிகள் உட்பட எவருக்குமே ஏன் வந்தார்கள், என்ன செய்யப்போகிறார்கள் என்பது தெரிந்திருக்கவில்லை.

எனினும் ஒருங்கிணைப்புத் தளபதிக்கு களமுனை அணிகளைத் தயார் நிலையில் வைத்திருக்கும்படி மட்டும் கட்டளை வந்திருந்தது.

சிவம், மங்களா, சுகுணன் ஆகியோர் தங்கள் அணிகளைத் தயார் நிலையில் வைத்திருந்தனர். வெள்ளாங்குளம் பக்கமாக வெடியோசைகளும் குண்டுச் சத்தங்களும் கேட்ட பொழுது எந்த நிமிடமும் தங்களுக்கு அழைப்பு வரக்கூடுமும் என அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

ஆனால் மாலை வரை எந்த ஒரு அழைப்பும் வரவில்லை.  சிவத்தினாலோ ஏனைய போராளிகளினாலோ என்ன நடந்தது என்பதை ஊகிக்கமுடியவில்லை.

தாக்குதலில் கலந்து கொண்ட போராளிகளுடன் உரையாடியபோது சிவத்தால் நடந்த விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. அவர்களுக்கு கூட களத்தில் இறக்கப்படும் வரை தாங்கள் எங்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பதே தெரிவிக்கப்படவில்லையாம்.

மூன்றுமுறிப்பு முகாம் தாக்குதல் பெரும் துரோகத்தால் முறியடிக்கப்பட்ட நிலையில் இத் தாக்குதல் மிகவும் இரகசியமாகப் பேணப்பட்டுள்ளது என்பதைச் சிவம் புரிந்து கொண்டான்.

இப் பெரும் வெற்றி காரணமாக போராளிகள் மத்தியில் எல்லையற்ற மகிழ்ச்சியும் புதிய உற்சாகமும் தோன்றிவிட்டன. எனினும் சிவத்தைப் பொறுத்தவரையில் தான் இப்பிடி ஒரு தாக்குதலில் பங்குகொள்ள முடியாமல் போனது மனதை நெருடத்தான் செய்தது.

சிவம் ஒரு இடத்தில் அமர்ந்திருந்து சட்டைப் பையில் எஞ்சியிருந்த கண்டோசை உரித்து வாயில் போட்ட போது மலையவன் அங்கு வந்து சேர்ந்தான்.

“அண்ண.. முள்ளிக்குளத்திலையிருந்து இலுப்பைக்கடவை வரைக்கும் எவ்வளவு சண்டையைப் பிடிச்சிருப்பம்.. இப்ப பாத்தியளே.. அண்ணை நேரடியாய் நெறிப்படுத்தின சண்டையிலை மட்டும் எங்களை கழிச்சுவிட்டிட்டினம்”, என்றான் ஒருவித கொதிப்புடன்.

சிவம், “இல்லையடாப்பா.. எங்களுக்கு ஏதோ பெரிய வேலை தரப்போகினம். அதுக்காக ஓய்வு தந்திருக்கினம்”, என்றான்.

மலையவன் அவசரமாக, “இல்லை.. இல்லை.. மூண்டுமுறிப்புத் தோல்வியோட அண்ணை எங்களிலை நம்பிக்கை இழந்திட்டார்”, எனக் கொதித்தான்.

“தம்பி, அண்ணை ஒரு நாளும் போராளியளிலை நம்பிக்கை இழக்கிறேல்லை. மூண்டுமுறிப்புத் தோல்விக்குக் காரணமான துரோகியைக் கண்டுபிடிக்கும் வரை ஒவ்வொரு விஷயமும் இரகசியமாகவும் எதிர்பாராத விதமாயும் தான் செய்யவேணும் நாங்கள் இஞ்சை ஓய்வெடுக்கிற நேரம், இன்னுமொரு அணி இரகசியமாய் இறங்கித் தாக்குதலை நடத்தேக்கை எதிரிக்குத் தகவல் போக வாய்ப்பில்லை. இந்தக் களத்திலை நாங்கள் மூண்டு அணிகளும் பிரதான தாக்குதல் அணியளாய் இருக்கிற காரணத்தால துரோகி எங்கடை நகர்வுகளைத் தான் அவதானிப்பான்”

சிவத்தின் அந்தப் பதிலில் மலையவன் திருப்தியடைந்திருக்க வேண்டும்,

“இப்பிடி ஒரு பிரச்சினை இருக்கெண்டு நான் நினைக்கேல்லை அண்ண” என்றான் அவன்.

இந்த இடத்துக்கு மங்களாவும் ரூபாவும் வந்தார்கள்.

“ஆணும் பெண்ணும் சமம் எண்டு வசனம் பேசுவியள், பொறுத்த நேரத்திலை வழக்கமான ஆம்பிளைப் புத்தியைக் காட்டிப் போடுவியள், என்ன?” எனச் சிடுசிடுத்தாள் மங்களா.

“ஏன் என்ன நடந்தது?” எனக் சர்வசாதாரணமாகக் கேட்டான் சிவம்.

“இண்டையான் சண்டையிலை ஒரு பெட்டையைக் கூடிச் சேர்க்கேல்லை! பொம்பிளையள் எண்டால் சக்கட்டையே?”,

சிவம் பெரிதாகச் சிரித்துவிட்டான். பின்பு, “ஐயோ சிங்காரம் மாஸ்ரரின்ரை படையணியிலை மகளிர் இல்லை”, என்றான் அவன்.

“ஏன் எங்களையும் சேர்த்திருக்கலாம் தானே?” எனப் பாய்ந்து விழுந்தாள்.

சிவம் நிதானமாக நிலைமையை விளங்கப்படுத்தினான்.

மங்களா சிவம் சொன்னவற்றைக் கேட்டு சமாதானமடைந்த போதிலும், “எல்லாம் சரிதான் ஆனால் எங்களுக்கு எவ்வளவு கவலையாய் இருக்குது தெரியுமே?” என்றாள்.

மலையவன் கேலியாக, “ரூபாக்கா நீங்கள் கணேசண்ணையைக் கைவிட்டிட்டு மங்களாக்காட்டை பாரம் குடுங்கோ. குதிக்கவும் கொதிக்கவும் நல்ல சோடி”, என்று விட்டு மங்களாவை விட்டு சற்று விலகி நின்றான்.

“டேய் மலையாண்டி மாமா, எனக்கு மாப்பிள்ளையே தேடுறாய்.. நான் உன்னைத் தான் கட்டுறது.. கட்டி இருத்தி எழுப்புவன்”, என்றாள்.

“நான் ஒரு பொம்பிளையைத் தான் கட்டுவன்”, என்றுவிட்டு அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டான் மலையவன்.

-தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்-

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*