Northern Province

புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கு வடமாகாண சபையில் குழு

புதிய அரசியலமைப்பு தேவை என்ற முன்மொழிவு பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளதாலும் இதுவரை காலமும் இயற்றப்பட்ட அரசியல் அமைப்பு யாப்புக்கள் தமிழ்த்தேசிய இனத்தின் இணக்கப்பாட்டுடன் மேற்கொள்ளப்படவில்லை என்பதாலும் புதிய அரசியலமைப்பில் முன்வைக்கப்படவேண்டிய முன்மொழிவுகளை சமர்ப்பிக்கவென வடக்குமாகாண சபையால் மாகாண சபை உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் 44 ஆவது அமர்வு புதன்கிழமை (27-01-2016) கைதடியில் அமைந்துள்ள வடக்குமாகாண சபையின் பேரவைச் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது மேற்குறித்த விடயங்கள் அடங்கிய பிரேரணை வடமாகாண சபை அவைத்தலைவரால் கொண்டுவரப்பட்டது.புதிய அரசியல் அமைப்பு என்ற வகையில் வடக்கு மாகாண சபைக்கு முக்கிய பொறுப்பும், கடமையும், உரிமையும் உள்ளதாலும் தமிழ்த்தேசிய இனம் சார்பில் முன்வைக்கவேண்டிய முன்மொழிவுகளை வரைந்து வடக்குமாகாண சபையின் பரிசீலனைக்குச் சமர்ப்பிக்கவென பின்வரும் மாகாண சபை உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படுகின்றது.

அதற்கமைய குறித்த குழுவின் தலைவராக வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இணைத்தலைவராக வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் செயற்படவுள்ளனர்.

குறித்த குழுவின் உறுப்பினர்களாக வடமாகாண சபை அமைச்சர்களான த.குருகுலராஜா, பா.டெனீஸ்வரன், ப.சத்தியலிங்கம், பொ.ஐங்கரநேசன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான கே.சஜந்தன், அ.சூ.பிறிமூஸ் சிராய்வா, ம.அன்ரனிஜெகநாதன், ஜி.ரி.லிங்கநாதன், க.சிவாஜிலிங்கம், ப.அரியரட்ணம், எம்.தியாகராசா, அ.பரஞ்சோதி, அயுப் அஸ்மின், வை.தவநாதன், திருமதி அனந்தி சசிதரன், இ.ஆனோல்ட், ஆ.க.சர்வேஸ்வரன் ஆகியோர் குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவிற்கான தமது ஆலோசனைகளை அக்கறையுள்ள தனிநபர்கள் மற்றும் சமூக நிறுவனங்கள், அமைப்புக்கள் என்பன எழுத்துமூலம் எதிர்வரும் பெப்ரெவரி மாதம் 5ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கமுடியும் என்பதுடன் தேவைப்படுமிடத்து ஆலோசனைகளை முன்வைக்க விரும்புபவர்களை நேரடியாக அழைத்து கருத்தறிந்து தமது அறிக்கையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி அல்லது அதற்கு முன்பாக வடக்குமாகாண சபைக்கு சமர்ப்பிக்கமுடியும்.

குறித்த அறிக்கை சபையினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் செயற்பாட்டுக் குழு மூலமாக அரசியல் அமைப்புச் சமைக்கு சமர்ப்பிப்பதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சிச் தலைவருமான இரா.சம்பந்தனிடம் சமர்ப்பிக்கப்படும் என குறித்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அவைத் தலைவரால் கொண்டுவரப்பட்ட பிரேரணையானது வடமாகாண சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*