bookebaylow

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 54

மன்னார் பூநகரி வீதியில் அந்த மக்கள் வெள்ளம் மிகவும் மெதுவாகவே நகர்ந்துகொண்டிருந்தது. கால் நடையாக தலையிலும் கையிலுமாகச் சில சிறிய மூடைகளுடனும் உடுப்புப் பெட்டிகளையும் சுமந்து செல்லும் பெருந்தொகையான மக்களைக் கடந்து வாகனங்கள் செல்வது எளிதான காரியமாக இருக்கவில்லை. உழவு இயந்திரங்களும், லான்ட் மாஸ்ரர்களும், வண்டில்களும் சைக்கிள் மோட்டார் சைக்கிள்களும் நின்று நின்றும் மெதுவாக ஊர்ந்தும் வசதியான இடங்களில் வீதியால் இறங்கித் தரவைகளாலும் செல்ல வேண்டியிருந்தது. குண்டும் குழியுமாகவும் குழிகளுக்குள் கூரான கற்கள் துருத்திக் கொண்டும் காட்சியளித்த அந்தப் பாதையால் நடந்து செல்வது கூட அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை.

முதல் நாள் காலையிலேயே மக்கள் இடம்பெயர ஆரம்பித்துவிட்டனர். இரவிரவாக இடப்பெயர்வு தொடர்ந்த போதிலும் மறுநாள் காலையில் கூட வீதியில் நெருக்கடி குறையவில்லை. மன்னார் மாவட்டத்தில் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அத்தனை பகுதி மக்களும் அந்த வீதியால் நகர்ந்து கொண்டிருந்தனர். அதை விட இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளிலிருந்து ஏற்கனவே வெளியேறி மடுவில் தஞ்சமடைந்தவர்களும் வடக்கு நோக்கி நடப்பவர்களுடன் இணைந்து கொண்டிருந்தனர்.

மடுவிலிருந்து புறப்படும் போது பல நூறுகளாக வெளியேறிய மக்கள் இப்போது ஆயிரங்களாகி பல பல்லாயிரங்களாகி ஒரு இலட்சத்தை விட அதிகரிக்குமளவுக்குப் பெருகிவிட்டனர்.

எனினும் கூட அதில் சென்று கொண்டிருந்தவர்களில் ஒரு சிலருக்காவது தாங்கள் எங்கு செல்கிறோம் என்பது பற்றிய தெளிவு எதுவுமே இருக்கவில்லை. ஏதோ உயிரைக் காக்க ஓடுகிறோம் என்ற உணர்வு மட்டுமே எஞ்சியிருந்தது.

பரமசிவத்தின் வண்டில் நாச்சிக்குடாச் சந்தி, குமுழமுனைச் சந்தி என்பவற்றைக் கடந்து தரவை வெளிக்கு வர நேரம் கிட்டத்தட்ட எட்டு மணியை எட்டிவிட்டது.

பார்வதி இரு கரைகளிலும் எங்காவது ஒரு மரத்தரடி கிடைக்காதா என அவதானமாகப் பார்த்துக் கொண்டு வந்தாள். அவள் காலையில் புறப்படுவது என்ற முடிவை இரவு எடுத்தவுடனேயே உலையில் கூடுதலாக அரிசியைப் போட்டுச் சோறாக்கி வைத்திருந்தாள். அனைவரும் இரவு சாப்பிட்டது போக மிகுதியை நீரூற்றி வைத்திருந்தாள். அதை எடுத்து பக்குவமாக லான்ட் மாஸ்ரரில் ஏற்றி சரிந்துவிடாமல் பாதுகாப்பாகக் கொண்டுவந்தாள்.

எங்காவது ஒதுங்க ஒரு இடம் கிடைத்தால் பழைய சோற்றைக் கரைத்து எல்லோருக்கும் கொடுக்கலாமென நினைத்தாள்.

ஆனால் வீதியில் இரு மருங்கிலும் எங்கு பார்த்தாலும் மக்கள் குடும்பம் குடும்பமாக குந்தியிருந்தனர்.

தொடர்ந்து சென்று கொண்டிருந்த போது ஒரு வயல்வெளி நடுவில் ஒரு புவரசமரம் நிற்பதையும், அதனருகில் ஒரு கட்டுக்கிணறு இருப்பதையும் பார்வதி கண்டுவிட்டாள்.

அவள் அவசரமாக, “வேலுப்பிள்ளை அண்ணை.. அந்த மரத்தடிக்குவிடு.. வயித்துப் பாட்டைப் பாத்துக் கொண்டு அங்காலை போவம்”, என்றாள்.

வேலுப்பிள்ளையும் பின்னால் பார்த்து பரமசிவத்துக்குக் கையைக் காட்டிவிட்டு லான்ட் மாஸ்ரரை மெதுவாக வயலுக்குள் இறக்கினார். சிறு வரம்புகளாயிருந்த காரணத்தால் லான்ட் மாஸ்ரர் சிறிது கஷ்டப்பட்டாலும் பூவரசடியை போய்ச் சேர்ந்தது.

பரமசிவமும் வண்டிலை வயலில் இறக்கி தாங்கியில் நிறுத்திவிட்டு மாடுகளின் கயிற்றை அவிழ்த்து விட்டார். அவை வரம்புகளில் நிலத்தோடு நிலமாகக் கிடந்த புற்களை காந்தத் தொடங்கின. நல்ல பச்சைப் புல்லும் தவிடும் புண்ணாக்கும் தின்று வளர்ந்த தனது எருதுகள் அந்தப் புற்களைக் காந்திய போது கவலையில் அவருக்கு ஒரு பெரு மூச்சு எழுந்தது. வண்டியில் இருந்த கிணற்று வாளியை எடுத்துக் கொண்டு கிணற்றடியை நோக்கி நடக்க மாடுகளும் அவருக்குப் பின்னால் நடந்தன.

வயல் வெளியில் கட்டுக் கிணற்றில் நீரள்ளி அவற்றுக்கு வைத்தார். அவையும் ‘மட மட’வெனக் குடித்து முடித்தன.

அதற்குள் பார்வதி தேங்காய் ஒன்றை எடுத்து துருவிப் பிழிய முத்தம்மா வெங்காயம் பிஞ்சு மிளகாயை வெட்டிக் கொடுக்க பழங்கஞ்சி தயாராகிவிட்டது. வேலுப்பிள்ளையின் மனைவி மீனாட்சி குண்டுக்கோப்பைகளையும், சிறு கிண்ணங்களையும் கழுவிக் கொண்டு வந்து வரிசையாக வைத்தாள். பார்வதி அவற்றுள் கஞ்சியை ஊற்ற மீனாட்சியும் செல்லாயியும் ஒவ்வொருவராக எல்லோருக்கும் கொடுத்தனர்.

முத்தம்மா இரு கிண்ணங்களை எடுத்துக் கொண்டுபோய் இடது கையில் இருந்ததை முருகரிடம் கொடுத்து விட்டு மற்றதை இரு கைகளாலும் பிடித்து பரமசிவத்திடம் நீட்டினாள். கையில் வாங்கிய பரமசிவம் நிமிர்ந்து அவளின் முகத்தைப் பார்த்தார். அவள் தலையைக் குனிந்து விட்டு அவ்விடத்தை விட்டு மெல்ல நகர்ந்தாள்.

முருகர் அர்த்த புஷ்டியுடன் பரமசிவத்தைப் பார்த்து புன்னகைத்துவிட்டு, “பெட்டை மாமனிலை கவனம் தான்”, என்றார்.

வியப்புடன் முருகரை நோக்கிய பரமசிவம், “என்ன பெடியனையும் பெட்டையும் சம்மதம் கேட்டிட்டியே?” எனக் கேட்டார்.

“அதுகள் நான் கேட்க முந்தியே சம்மதம்”, என்றுவிட்டு பலமாகச் சிரித்தார் முருகர்.

“அப்பிடியெண்டால் கெதியாய்ச் சோத்தைக் குடுத்திட வேணும்”

வர வர நிலைமை மோசமாய்ப் போகுது”, என்றுவிட்டு கஞ்சியைக் குடிக்க ஆரம்பித்தார் பரமசிவம்.

முத்தம்மா தன்னிடம் கூலிக்கு வேலை செய்யும் ஒரு மலையகப் பெற்றோருக்குப் பிறந்த பெண்ணாக இருந்தாலும் அவளின் நல்ல குணத்துக்காக அவளைத் தன் மருமகளாக ஏற்கத் துணிந்த பரமசிவத்தை நினைத்து வியப்படைந்தார் முருகர்.

பார்வதி அதை விரும்பப் போவதில்லை என முருகர் கருதியபோதும் அவளால் பரமசிவத்தின் சொல்லை மீற முடியாது என்பதை அவர் அறிந்திருந்தார்.

சுந்தரம் காட்டுக் கத்தியைக் கையில் எடுத்துவனாக, “ஐயா! நேர போகாமல் வண்டிலை பல்லவராயன்கட்டுப் பக்கம் விடுங்கோ.. நான் முன்னாலை போய் இராப்பாட்டுக்குத் தங்க ஒரு இடம் ஒழுங்கு செய்யிறன்” என்றான்.

“என்ன அங்கை தங்கவோ?” எனக் கேட்டார் முருகர்.

“இல்லையப்பு. வன்னேரிப் பக்கம் போய் ஒரு இடம் பாப்பம். இரவைக்கு மட்டும் தங்கிப் போட்டு விடியவாய் அங்காலை போவம்”, என்றான் சுந்தரம்.

முருகருக்கும் அது சரியாகப்பட்டது. அவருக்குத் தெரிந்த தில்லையம்பலம் என்ற வேட்டைக்காரனின் இடம் வன்னேரிதான்.

“சரி சரி.. கவனமாய் போ” என்றார் பரமசிவம்.

முத்தம்மாவின் அருகில் சென்ற சுந்தரம், மிகத் தாழந்த குரலில், “நீயும் ஒரு மண்வெட்டியை எடுத்துக் கொண்டு வாவன்”, என்றான்.

“நான் வரயில்லை”, என்றாள் முத்தம்மா.

“ஏன்?”

“அவை என்னவும் நினைப்பினை”

“இவ்வளவு காலமும் என்னோடை வேலைக்கு வரேக்கை ஒண்டும் நினைக்கேல்லை.. இப்ப மட்டும் நினைப்பினமே?”

அவள் எதுவும் பேசாமல் தலையைக் குனிந்தாள்.

“சரி சரி போய்க் கொம்மாவிட்ட சொல்லிப் போட்டுவா..” என்றுவிட்டு பதிலை எதிர்பாராமல் சைக்கிளை நோக்கிச் சென்றான் சுந்தரம்.

அவள் சில வினாடிகள் தயங்கிவிட்டு, செல்லாயிடம் போய்,

“அம்மா, இடம் துப்புரவாக்க என்னையும் வரட்டாம்”, என்றாள்.

சுந்தரம் முத்தம்மா காதல் பற்றி செல்லாயி எதுவும் அறியாததால் அவளும், “சரி”, என்றுவிட்டாள். ஆனால் சற்றுத் தொலைவில் நின்ற பார்வதிக்கு அது கேட்டுவிட்டது.

அவள், “அங்கை இயக்கத்துக்கு ஆள் சேர்க்கிறாங்களாம். நீ ஏன் இப்ப அங்கை?” என்றாள்.

“அதை நான் பாப்பன்.. நீ வா”, என்றுவிட்டு சைக்கிளில் ஏறினான் சுந்தரம். முத்தம்மா பார்வதியை பயத்துடன் பார்த்துவிட்டுத் தயங்கியபடியே போய் சைக்கிள் கரியலில் ஏறினாள்.

சைக்கிள் பிரதான வீதியில் சென்று பின்பு பல்லவராயன் கட்டுக்குப் போகும் மண் பாதையில் இறங்கியது. கிராமம் பிரதான வீதிலியிருந்து சற்றுத்தூரம் உள்ளேயே அமைந்திருந்தது. சிறிது தூரம் சென்ற பின்பு சுந்தரம் கேட்டான். “என்ன உம் எண்டு கொண்டு வாறாய்?.. என்னோடை வர விருப்பமில்லையே?”

அவள் அவன் முதுகில் மெதுவாகத் தட்டிவிட்டு, “விருப்பம் இல்லாமல் இருக்குமே? உங்கடை அம்மா என்ன நினைக்கிறாவோ எண்டு பயமாய் கிடக்குது”

“என்ன நினைக்கிறது அவவும் சேர்ந்து தானே கலியாணம் கட்டி வைக்கப் போறா.. ஐயா முருகரப்புவிட்ட சம்மதம்  சொல்லிப்போட்டாராம்.. இனியென்ன?” எனக் கேட்டான் சுந்தரம்.

அவள் ஒரு பெருமூச்சுடன், “அதை நினைக்கத்தான் கவலையாக் கிடக்குது”, என்றாள்.

“என்ன கலியாணத்தை நினைக்கவோ?”

“ஓ.. கலியாணம் முடிஞ்சால்.. ஒரு மாதத்திலை என்னை விட்டுப் போடுவியளல்லே?”

“ஏன் நான் இயக்கத்துக்குப் போறது உனக்கு விருப்பமில்லையே? முதலே அப்பிடித்தானே கதைச்சம்?”

“இயக்கத்துக்குப் போறது விருப்பமில்லையெண்டில்லை, என்னை விட்டுப் போறது தான் விருப்பமில்லை”, என முத்தம்மா கூறிய போது அவள் குரல் தளதளத்தது.

“ஒரு மாதம் ஒண்டா இருப்பம் தானே?”

“ஒரு பெண்ணுக்கு ஒரு மாதக் குடும்ப வாழ்க்கை போதுமே?” எனக் கேட்டாள் அவள்.

“ஒரு மாதமும் ஒரு யுகம் வாழுற வாழ்க்வை அனுபவிப்பம் பிறகேன் கவலை?”, எனக் கேட்டான் சுந்தரம்.

அவள் எதுவுமே பேசவில்லை. அவனின் முதுகில் முகத்தைச் சாய்த்துக் கொண்டாள். அவளின் கண்ணீர் அவன் முதுகைச் சுட்டது.

அன்று நண்பகல் தாண்டும் வரை களம் மிகவும் அமைதியாகவே இருந்தது. ஆனால் பிற்பகல் இரண்டு மணியளவில் இலுப்பைக்கடவையை நோக்கி எறிகணைகள் சரமாரியாக விழ ஆரம்பித்தன. முதல் நாள் முன்னிரவு எறிகணைகளால் சிதைக்கப்பட்ட காவல் நிலைகள் மீது மீண்டும் மீண்டும் விழுந்து வெடித்தன.

எறிகணை வட்டம் முன்னோக்கி நகரப் படையினர் டாங்கிகள் சகிதம் முன்னேறி பறங்கியாற்றில் இறங்கி அதைக் கடந்தனர். எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் இருக்கவே அவர்கள் துரிதமாக முன்னேற ஆரம்பித்தனர்.

அவர்கள் வெள்ளாங்குளம் எல்லையை நெருங்கும் வரை ஒரு சிறு எதிர்ப்பைக் கூடச் சந்திக்கவில்லை.

திடீரென முன்னால் வந்த டாங்கி ஒன்றின் செயின் ஆர்.பி.ஜி அடியில் பத்து அடி மேலெழுந்து கீழே விழுந்தது. இன்னொரு டாங்கியின் சுடுகுழல் எகிறப்பட்டு தூரத்தே போய் விழுந்தது.

-தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்-

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*