nkna

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 53

அன்று இரவு எட்டுமணியளவில் சிவம் அணியினர் தங்கியிருந்த முகாமுக்கு அரசியல்த்துறைப் பொறுப்பாளர் வந்திருந்தார். அவர் வந்து சேர்ந்த சிறிது நேரத்தில் எல்லோரையும் ஒரு இடத்தில் கூடும்படி கட்டளை வந்தது.

வழமையாக யாராவது பொறுப்பாளர்கள் வருவதாக இருந்தால் முதலில் போராளிகள் கூட்டப்பட்டுவிடுவார்கள். அதன் பின்பே அவர்கள் வருவார்கள். இன்று அவர் வந்த பின்பே கூட்டம் கூட்டப்பட்டது சிவத்துக்கு எதோ வித்தியாசமாகப்பட்டது. யாரோ ஒரு முக்கிய பொறுப்பாளர் வரப்போகிறார் என்ற விஷயம் தங்களுக்கே தெரியக்கூடாது என்பதற்காக அப்படி ஒரு மாற்றம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனக் கருதினான் சிவம்.

மாவீர் வணக்கத்தைத் தொடர்ந்து பொறுப்பாளர் பேச ஆரம்பித்தார். எந்நேரமும் சிரித்த முகத்துடன் காணப்படும் அவரின் முகம் கூட வாட்டமடைந்திருந்தது.

“உங்கள் எல்லோரிட்டையும் அண்ண, தன்ரை சார்பிலை என்னை மன்னிப்புக் கேட்கச் சொல்லியிருக்கிறார்”

போராளிகள் அதிர்ந்து போய்விட்டனர். போராளிகளிடம் தலைவர் மன்னிப்புக் கேட்குமளவுக்கு அப்படி அவர் ஒரு பிழை செய்திருப்பார் என அவர்களால் நம்பமுடியவில்லை.

திடீரென மங்களா எழுந்தாள்.

“அண்ணை ஒரு நாளும் பிழை செய்யமாட்டார். நீங்கள் சொல்லுறதை எங்களால ஏற்க முடியாது”

சில விநாடிகள் அமைதி நிலவியது.

அரசியல்துறைப் பொறுப்பாளர் தொடர்ந்தார், “அண்ணை நேரடியாக எந்தப் பிழையும் செய்யேல்லை. ஆனால் இயக்கத்தின்ரை முக்கிய பொறுப்பிலை இருக்கிற ஆரோ எதிரியின்ரை கையாளாக மாறிப் பெரிய, ‘துரோகம்’ செய்து கொண்டிருக்கிறதாக தெரியவந்திருக்குது. அப்பிடி ஒரு நிலைமை எங்கட புனிதமான இயக்கத்துக்கை ஏற்பட்டதுக்கு அண்ணை தானே தார்மீகப் பொறுப்பேற்று உங்களிட்டை மன்னிப்புக் கேக்கிறார்”.

பின்பு அவர் தொடர்ந்து கதைக்க முடியாமல் இடைநிறுத்தினார்.

“ஆனபடியால் சகல காவலரண்கள், முகாம்கள் எல்லாத்தையும் இடம்மாத்தச் சொல்லீட்டார். அந்த வகையிலை நாங்கள் இலுப்பைக்கடவை லைனைப் பின்னுக்கு எடுத்ததோட முகாம்களையும் மாத்திப்போட்டம்”, என்றார் அவர்.

‘துரோகம்’ என்ற சொல்லே போராளிகளிடம் ஆவேசத்தை மூட்டிய போதும் அவர்கள் எதுவுமே பேசவில்லை.

மேலும் அவர் மூன்றுமுறிப்பு முகாமத் தாக்கப்படப்போகும் தகவல் இராணுவத்திற்கு முதலே போய்ச் சேர்ந்து விட்டதால் அவர்கள் எல்லாவிதத் தயார்ப்படுத்தல்களுடனும் இருந்ததாகவும், எரிபொருள் களஞ்சியம் இருக்கும் இடமும் அப்பிடியே அழிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். எப்பிடியும் வெகு விரைவில் துரோகியைப் பிடித்துவிடலாம் என உறுதி கூறி அவர் தனது உரையை முடித்தார்.

போராளிகள் அத்தனை பேருமே அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டனர். சிவம் கூட ஏற்கனவே ஏதோ ஒரு விதமான காட்டிக்கொடுப்பு நடந்திருக்கலாம் எனக் கருதியிருந்த போதிலும் இப்பிடியொரு திட்டமிட்ட பெரும் துரோகம் இழைக்கப்பட்டதை எதிர்பார்க்கவில்லை.

திடீரென மலையவன் எழுந்தான்.

“அண்ணை! துரோகியைப் பிடிச்சவுடனை எங்கடை கையில தாங்கோ.. வீரச்சாவடைஞ்ச போராளியளின்ரை எண்ணிக்கை அளவு துண்டுகளாக அவனை வெட்டவேணும்”,

அரசியல்துறைப் பொறுப்பாளர் நிதானமாக, “உங்கடை உணர்வை நான் மதிக்கிறன். எனக்கும் இப்பிடியான கோபம் உண்டு. ஆனால் இந்த வேலையளுக்கு வேறை ஒரு பிரிவு இருக்குது. பிடிபடுகிற துரோகியை வைச்சு அவனோடை தொடர்புடைய கனபேரைப் பிடிக்க வேணும்” என்றார்.

போராளிகள் மத்தியில் நிலவிய அமைதி அவரின் கருத்துக்களை அவர்கள் ஏற்றுக்கொண்டதைக் காட்டியது.

அவர் தொடர்ந்தார், “உங்களிலை நிறையப் பேர் சாப்பிடயில்லை எண்டு தெரிவிக்கப்படுது. அதாலை ஒரு பிரயோசனமும் இல்லை. வடிவாய்ச்சாப்பிட்டு அடுத்த சண்டைக்கு தயாராகுங்கோ. தோல்வியை வெற்றியாலை ஈடு செய்வம்”

சில விநாடிகள் இடைநிறுத்திவிட்டு, “தலைவர் நடந்த தவறை தானே பொறுப்பேற்று தனக்குத் தானே தண்டனை குடுத்திருக்கிறார். மூண்டு நாட்களுக்கு சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் உண்ணா நோன்பு இருக்கிறார்”, என்றார்

போராளிகளிடம் மயான அமைதி நிலவியது. தலைவர் ஒரு முடிவை எடுத்தால் அதை எவராலும் மாற்ற முடியாது  என்பதை அவர்கள் நன்கறிவார்கள்.

இரவு எல்லோரும் ஒன்றாக உணவருந்திவிட்டு இரவு பன்னிரண்டு மணியளவில் அரசியல் துறைப் பொறுப்பாளர் புறப்பட்டுச் சென்றார்.

அன்று மாலை விமானங்கள் இலுப்பைக்கடவையில் உள்ள போராளிகளின் பிரதான முகாம் மீது குண்டுகளைப் பொழிந்தன. வெள்ளாங்குளத்திலும் சேவாலங்கா குடியிருப்பின் மீதும் இரு குண்டுகள் வீசப்பட்டன. அன்று பகலே மக்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டதால் எவ்வித உயிரிழப்புக்களும் ஏற்படவில்லை.

இரவு ஏறக்குறைய பன்னிரண்டு மணி வரை இலுப்பைக்கடவையை நோக்கி படையினரின் எறிகணைகள் வீசப்பட்டன. ஒவ்வொரு எறிகணையும் இலக்குத்தவறாமல் இலுப்பைக் கடவையில் பறங்கியாற்றின் கரையிலிருந்த போராளிகளின் காவல் நிலைகள் மேல் விழுந்து வெடித்தன.

இலுப்பைக் கடவையில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் அதிர்வில் தேவன்பிட்டி ஆலயத்தின் கண்ணாடி யன்னல்கள் நொருங்கி விழுந்தன.

இப்படியான ஒரு பெரும் தாக்குதலின் போதும் ஒரு  போராளிக்குக் கூட சிறு காயம் தன்னிலும் ஏற்படவில்லை.

மூன்றுமுறிப்பு முகாம் தாக்குதல் தோல்வியடைந்த சில மணி நேரத்திலேயே தலைமைப்பீடத்திலிருந்து இலுப்பைக்கடவையை விட்டு முற்று முழுதாக வெளியேறும்படி கட்டளை வந்துவிட்டது. அவர்கள் பொழுது விடியுமுன்பே முழுமையாக வெள்ளாங்குளம் நோக்கி நகர்ந்துவிட்டனர். அவர்கள் பின்னோக்கிய நகர்வை மேற்கொண்டிருக்கும் போதே வேறு போராளி அணிகளாலும் பொதுமக்களாலும் வெள்ளாங்குளத்தில் பாம்பு பங்கர்கள் தயாராகிவிட்டன. பிரதான முகாம் பல்லவராயன் கட்டுக்கு நகர்த்தப்பட்டுவிட்டது.

நன்றாக பொழுது விடிந்த போது இலுப்பைக்கடவை முழுமையாகவே வெறிச்சோறிப்போய் விட்டது. எனினும் வேவு விமானத்தால் அதைக் கண்டுபிடிக்க முடியாதவாறு முகாமில் பாவனைக்கு உதவாத கைவிடப்பட்ட வாகனங்களை மேலிருந்து பார்த்தால் தெரியும்படி விட்டுவிட்டு வந்திருந்தனர் போராளிகள். காவல் நிலைகளின் துவாரங்களிலும் ‘டம்மி’ துப்பாக்கிகளையும் 50 கலிபர் போன்று தோற்றமளிக்கும் வகையிலான பிளாஸ்ரிக் குளாய்களையும் வைத்துவிட்டிருந்தனர்.

எனினும் படையினர் அன்று பகல் முழுவதும் எவ்வித தாக்குதல்களையும் மேற்கொள்ளவில்லை. மாலை சேவாலங்கா குடியிருப்பிலும் இலுப்பைக்கடவைப் போராளிகள் முகாம் மீதும் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலைத் தொடர்ந்து எறிகணை வீச்சு ஆரம்பமாகியது.

எனினும் அன்று மாலை நடைபெற்ற விமானத் தாக்குதல்களும், இரவு இடம்பெற்ற எறிகணைத் தாக்குதல்களும் துரோகிகள் வெகு சாதுரியமாகவே தகவல்களை வழங்கியிருந்தனர் என்பதைக் காட்டின.

எனினும் தலைமை எடுத்த புத்திசாலித்தனமான முடிவால் போராளிகளுக்கு இடம்பெறவிருந்த பேரழிவு தவிர்க்கப்பட்டுவிட்டது.

போராளிகள் அன்று அதிகாலையில் படையினர் பறங்கியாற்றைக் கடந்து முன்னேறக் கூடும் என எதிர்பார்த்த போதும் முற்பகல் வரை எதுவுமே நடக்கவில்லை.

முதல் நாள் மாலையே ஏராளமான மக்கள் முழங்காவிலை விட்டு இடம்பெயர்ந்த போதிலும் வேலுப்பிள்ளையாலோ பரமசிவத்தாலோ எந்த ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. ஆனால் மாலை இடம்பெற்ற விமானத் தாக்குதலும் தொடர்ந்து கேட்ட இடைவிடாத எறிகணை ஓசைகளும் அவர்களை முடிவெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் தள்ளிவிட்டன.

வெள்ளாங்குளத்தில் பங்கர்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுவிட்டு சுந்தரம் இரவு பத்து மணியளவிலேயே வீட்டுக்கு வந்திருந்தான்.

அவன் மறுநாள் சண்டை வெள்ளாங்குளத்துக்கு நகர்ந்துவிடும் எனவும் இனி முழுங்காவிலில் இருக்க முடியாது என்பதையும் பரமசிவத்துக்குக் கூறினான்.

அவனது கூற்றைத் தொடர் எறிகணை ஓசைகளும் உறுதிப்படுத்தின.

சுந்தரம் முத்தையாவுடன் சென்று கோவிலடியில் அவர் போட்டிருந்த தேனீர்க் கடையைப் பிடுங்கி ஏற்றிவந்தான்.

ஏற்றக்கூடிய பொருட்களை எல்லாம் வண்டிலில் ஏற்றிக் கொண்டனர். சமையல் பாத்திரங்களையும் சாப்பாட்டுச் சாமான்களையும் வேலுப்பிள்ளையின் லான்ட் மாஸ்ரரில் ஏற்றினர்.

வேலுப்பிள்ளையால் இடப்பெயர்வு என்தைச் சகிக்கவே முடியவில்லை. ஆனால் உயிர் தப்ப வேண்டுமானால் அங்கிருந்து வெளியேறியே ஆகவேண்டும் என்ற நிலையில் அவருக்கு வேறு வழி தெரியவில்லை. எனினும் முத்தல் வாழைக் குலைகளாக ஏழெட்டை வெட்டி வண்டிலில் சாமான்களுக்கு மேல் ஏற்றினர். அதிகாலையில் புறப்படுவது என்ற முடிவுடன் அனைவருமே முற்றத்திலேயே படுத்துவிட்டனர்.

இரவு பன்னிரண்டு மணியளவில் எறிகணை வீச்சுக்கள் நின்றுவிட்டிருந்தன. அதிகாலை புறப்படத் தயாரான நிலையில் வேலுப்பிளை, “சத்தத்தைக் காணயில்லை.. பாத்துப் போவமே?” எனக் கேட்டார்.

அதைச் சற்றுத் தொலைவில் நின்று கேட்ட சுந்தரம்,“இப்பிடித்தான் நாங்களும் பாலம்பிட்டியிலையிருந்து வெளிக்கிடேக்கை மனமில்லாமல் அந்தரப்பட்டனாங்கள், இனி என்ன தான் செய்ய முடியும்?, மினக்கெட்டால் ஆபத்து” என்றான்.

வேலுப்பிள்ளை அதற்கு மேல் எதுவுமே பேசவில்லை.

வண்டிலில் வீடு கட்டும் பொருட்களும், நெல்லு மூட்டை, மிளகாய் மூட்டை, வாழைக்குலை என்பனவும் ஏற்றப்பட்டன. அதில் ஒரு பக்கமாக முருகேசரும், பெருமாளும், முருகரும் ஏறி மிகச் சிரமப்பட்டு நெல்லு மூட்டைகளின் மேல் அமர்ந்து கொண்டனர்.

லான்ட் மாஸ்ரரில் சமையல் பாத்திரங்களும், சில அவசிய தட்டுமுட்டுச்சாமான்களும் ஏற்றப்பட்டன. இரு பக்கங்களிலும் பெண்களும், சிறுவர்களும் ஏறிக்கொண்டனர்.

சுந்தரம் அவர்களின் பின்னால் சைக்கிளில் புறப்பட்டான்.

லாண்ட் மாஸ்ரர், வண்டில் என்பவற்றை வீதியில் ஏற்ற முடியாத அளவுக்கு வீதி நகர்ந்து கொண்டிருக்கும் மக்களால் நிறைந்திருந்தது. வேலுப்பிள்ளை லாவகமாக தனது வாகனத்தை வீதியில் ஏற்றினார். அதன் பின்னால் பரமசிவத்தின் வண்டியும் ஏறிக்கொண்டது.

அப் பெரும் மக்கள் வெள்ளத்தின் நகர்வில் அவையும் சங்கமமாகின.

முருகேசர் ஏக்கத்துடன் பரமசிவத்திடம் கேட்டார், “எங்க போறம்?”

பரமசிவம் ஒரு பெருமூச்சுடன், “ஏதோ போகு மட்டும் போவம்”, என்றார்.

-தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்-

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*