bookebaylow

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 52

பொழுது விடிவதற்கு முன்பாகவே சகல அணிகளும் வாகனங்களில் ஏற்றப்பட்டு பல்லவராயன்கட்டிலுள்ள ஒரு முகாமுக்கு கொண்டுவரப்பட்டுவிட்டனர். ஏற்கனவே காயமடைந்த போராளிகள் முதலுதவியின் பின்பு நேரடியாகவே கிளிநொச்சி மருத்துவப்பிரிவு முகாமுக்கு ஏற்றப்பட்டுவிட்டனர். வித்துடல்களும் கிளிநொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு பின் அஞ்சலிகளுக்காக அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டன.

அன்று முகாம் பெரும் சோகமயமாகவே காணப்பட்டது. போராளிகள் ஒருவருடன் ஒருவர் கதைப்பதே அரிதாக இருந்தது. ஒவ்வொருவரும் ஏதோ தாங்கள் பெரும் குற்றத்தை இழைத்துவிட்டது போன்று மனம் வாடிப்போயிருந்தனர். ஏராளமான தோழர்கள், தோழியரை இழந்தும் கூட முகாம் தாக்குதல் பெரும் தோல்வியில் முடிந்ததை அவர்களால் சகிக்க முடியவில்லை.

சிவம் ஒரு மரத்தின் கீழ் படுத்திருந்தான். இலைகளின் இடைவெளிகளால் அரிவெயில் பொட்டு பொட்டாக அவன் மேனியில் விழுந்ததைக் கூட அவன் பொருட்படுத்தவில்லை. அவன் அந்த முகாம் தாக்குதல் தொடர்பாக ஏதோ ஒரு பெரிய தவறு அல்லது சதி நடந்துவிட்டதாகவே கருதினான். முகாம் தாக்குதல் மேற்கொள்ளப்பபோகும் செய்தியை எற்கனவே இராணுவத்தினர் அறியாவிட்டால் இப்படியான தயாரிப்புக்களுடன் அவர்கள் காத்திருக்கமுடியாதெனவே அவன் திடமாக நம்பினான்.

முகாம் தாக்கப்படுவதற்குச் சிறிது நேரம் முன்பு தான் அணிகளின் பொறுப்பாளர்களுக்கென ஒருங்கிணைப்புத் தளபதியால் தாக்குதல் திட்டம் வரைபடம் மூலம் விளங்கப்படுத்தப்பட்டது. அது வரை எவருக்குமே தாங்கள் ஏன் மல்லாவிக்கு கொண்டுவரப்பட்டோம் என்ற விஷயம் கூடத் தெரிந்திருக்கவில்லை.

அப்படியான நிலையில் எதிரிகளுக்கு எப்படித் தகவல் போயிருக்க முடியும் என அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

பல இடங்களிலும் தேடிக் கடைசியாக ரூபா ஒரு மாதிரி சிவத்தைக் கண்டுபிடித்தாள். அவளுக்கும் அவனிடம் எதைப் பேசுவது எனத் தெரியவில்லை. அவள் அவனருகில் இருந்து கொண்டாள்.

சிவம் அவள் பக்கமாகப் புரண்டு கையை தலையில் கொடுத்தவாறே,

“என்ன ரூபா?” எனக் கேட்டான்.

“ஒண்டுமில்லை.. சாப்பீட்டீங்களே?”’
“ம்.. இல்லை. பசியில்லை.. இன்னும் பல்லுக்கூடத் தீட்டேல்லை”, என்றான் சிவம் சோர்வுடன்.

“நான் போய் சாப்பாடு எடுத்து வரட்டே?”

“வேண்டாம்.. பிறகு பாப்பம்…”

“ம் சாப்பிடாம் விட்டால் பட்ட தோல்வி வெற்றியாய் போமே?”

எனக் கேட்டுவிட்டு பதிலை எதிர்பாராமல் எழுந்து சென்றாள் ரூபா.

சிறிது நேரத்தில் ரூபா இரண்டு சொப்பிங் பைகளில் இரு சாப்பாடுகளைக் கொண்டு வந்து ஒன்றைச் சிவத்திடம் நீட்டினாள்.

“இனித்தானே நீங்களும் சாப்பிடப் போறியள்?”
“ஓ.. இவ்வளவு நேரமும் திறமான சாப்பாடு வருமெண்டு பாத்தன்.. இன்னும் வந்து சேரேல்லை.. இனி என்ன செய்ய? இதைச் சாப்பிடுவம்”

“என்ன திறம் சாப்பாடோ…?”

“ஓ… இரவு தோல்விக்காக கணேஸ் எடுத்துத் திட்டுவார் எண்டு எதிர்பாத்தன். ஏன் சாகாமல் ஓடி வந்தனீ என நடக்கும் எண்டு நினைச்சன். இன்னும் காணேல்லை”, என்றாள் ரூபா ஒரு விரக்தி கலந்த புன்னகையுடன்.

“உங்களுக்கு அவனிட்டை திட்டு வாங்கிறது சந்தோசமே?”

“அவர் உரிமையோட தானே திட்டுறார்?”, என்றுவிட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

அவனில் அவள் வைத்துள்ள அன்பும் மதிப்பும் சிவத்தை மெய் சிலிர்க்க வைத்தது.

சிவம் வாய்க்கு கொண்டுபோன சாப்பாட்டை வாயில் வையாமலேயே, “இந்த முறை எங்களை அவன் மட்டுமில்லை எவருமே கண்டிக்க ஏலாது. எங்கடை அறிவுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒண்டு நடந்திருக்குது”, என்றான்.

“என்னது?”

“அதுதான் தெரியேல்லை.. எப்பிடியும் வலு கெதியிலை தெரியவரும்”, என ஒரு பெருமூச்சுடன் சொன்னான் சிவம்.

சிறிது நேரத்தில் கிடைத்த தகவல் அவர்களை அதிர வைத்துவிட்டது.

பாலைப்பாணியில் இருந்த போராளிகளின் எரிபொருள் களஞ்சியத்தின் மீது இலக்குத் தவறாமல் கிபிர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அது பற்றியெரிவதையும் அதில் போராளிகள் பலர் சாவடைந்துவிட்டதாகவும் செய்திகள் வந்தன.

அதே வேளையில் இராணுவம் பாலைப்பாணி வரை முன்னேறி காடுகளுக்குள்ளால் வவுனிக்குளம் அலைகரையை நோக்கி முன்னேறுவதாகவும், மல்லாவி நோக்கி முன்னேற முயலும் படையினருடன் சித்திராவின் அணி கடுமையாக மோதுவதாகவும் தொலைத் தொடர்பில் இருந்த போராளி தெரிவித்தான்.

சிவம் உட்பட முகாமில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த போராளிகள் உடனடியாகவே புறப்படுவதற்கு தயாரானார்கள். ஆனால் நீண்ட நேரமாகியும் எவ்வித கட்டளைகளும் வரவில்லை.

பாலைப்பாணி ஊடாக காடுகளுக்கால் இறங்கிய இராணுவம் வவுனிக்குளம் வால்க்கட்டுப் பகுதியில் ஏறி மல்லாவியை நோக்கி நகர்ந்தது. அந்த இராணுவ அணியை பாலையடியில் வைத்து அகிலனின் படையணி வழிமறித்துத் தாக்கியது.

அகிலனும் ஓயாதலை அலைகள், குடாரப்பு தரையிறக்கம், தீச்சுவாலை எதிர்ச்சமர் எனப் பல களங்களில் சாதனை படைத்து அனுபவம் பெற்றவன். போராளிகளுக்கு மிகக் குறைந்த இழப்புடன் எதிரிகளை அழிப்பதில் திறமையானவன் என்பதால் பல முறை தலைவரின் பாராட்டைப் பெற்றவன். உயிருடன் இருக்கும் போதே அவனுக்கு லெப்.கேணல் பட்டம் வழங்கப்பட்டிருந்தது.

அகிலன் அணியின் தாக்குதலின் முன் படையினரால் நின்றுபிடிக்க முடியவில்லை. மெல்ல மெல்ல அவர்கள் பின்வாங்கத் தொடங்கினர்.

எனினும் அவர்களைப் பின் தொடர முடியாமல் அவர்கள் போராளிகளுக்கும் தங்களுக்குமிடையே எறிகணைகளால் வேலி போட ஆரம்பித்தனர்.

திடீரென வானில் தோன்றிய நான்கு கிபிர், மிக் விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து போராளிகள் மீது குண்டுகளை பொழிய ஆரம்பித்தன. பாலையடிக் கட்டிடங்கள் சிதறிப் புகை மண்டலத்தில் அமிழ்ந்தன. போராளிகளின் விமான எதிர்ப்புப் பீரங்கிகள் முழங்கிய போதும், விமானங்கள் ஏவுகணை எதிர்ப்புக் குண்டுகளைத் தள்ளிவிட்டு மேலெழும்பின.

புகை அடங்கிய போது அகிலன், வீரன் உட்பட நாற்பதற்கும் மேற்பட்ட போராளிகள் வீரச்சாவடைந்துவிட்டனர். ஏராளமானோர் காயமடைந்துவிட்டனர். மீண்டும் முன்னேற முயன்ற படையினரை எதிர்த்து எஞ்சிய போராளிகள் போரிட, மருத்துவப் பிரிவினர் வேகமாகக் காயமடைந்தவர்களையும் வித்துடல்களையும் களத்தைவிட்டு அகற்றினர்.

படையினரோ டாங்கிகளில் ஆயிரக்கணக்கில் தொடர்ந்து வந்துகொண்டிருந்தனர். போராளிகளுக்கு பின் வாங்குவதை விட வேறு வழியிருக்கவில்லை.

அதே வேளையில் பாண்டியன்குளத்திலிருந்து முன்னேற முயன்ற படையினரை சித்திராவின் அணியினர் தடுத்து நிறுத்திப் போராடிக் கொண்டிருந்தனர். படையினர் எறிகணை வீச்சுடன் முன்னேறிய போதும் மகளிர் அணி விட்டுக்கொடுக்கவில்லை. பாலையடியிலிருந்து பின்வாங்கிய போராளிகளும் சித்திராவின் அணியுடன் இணைந்து கொண்டனர்.

பாலையடியில் இருந்து முன்னேறி வரும் படைக்கும் பாண்டியன் குளம் இராணுவ அணிக்குமிடையில் ஒரு சுற்றிவளைப்புக்குள் அகப்படக்கூடிய அபாயம் இருப்பதை சித்திரா புரிந்து கொண்டாள்.

பின்வாங்கி வந்த அகிலனின் அணிப் போராளிகளையும் மகளிர் அணியையும் தனது கட்டளைக்குக் கீழ் கொண்டு வந்த சித்திரா புதிய திட்டத்தை வகுத்தாள்.

இரு அணிகள் பாலையடிப்பக்கமாகவும் வயல்வெளிப்பக்கமாகவும் தடுத்து நிறுத்தப் போராட மற்ற அணி மல்லாவிக்கும் பாண்டியன் குளத்துக்குமிடையிலான காட்டுப்பக்கம் உடைப்புப் போரை நடத்தியது. அப்பக்கத்தில் இராணுவம் மிகவும் பலவீனமாக இருந்தபடியால் சுலபமாக அதை மேற்கொள்ள முடிந்தது.

அந்த இடைவெளியில் எதிர்ச்சமர் புரிந்தவாறே போராளிகள் துணுக்காய் நோக்கிப் பின்வாங்கினர்.

அதே நேரத்தில் களமிறங்கிய உதவிப் படையணி பின் வாங்கிய போராளிகளுடன் இணைந்து கொண்டது.

மாங்குளம் – துணுக்காய் வீதியில் படையினரை ஏறி விடாதபடி போராளிகள், பீரங்கிப் படையணியின் உதவியுடன் தடுத்துநிறுத்திவிட்டனர்.

மூன்றுமுறிப்பு முகாம் தோல்வி, மல்லாவிக்குள் இராணுவம் இறங்கியமை என்பவற்றை அடுத்து பல திடீர் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.

போராளிகளின் முகாம்கள், மருத்துவப்பிரிவு முகாம்கள், சமையல் இடங்கள் என சகலதுமே புதிய இடங்களுக்கு மாற்றப்பட்டன.

இலுப்பைக்கடவை, பறங்கியாற்றுக் காவல் வேலி கைவிடப்பட்டு போராளிகள் வெள்ளாங்குளத்துக்கு எடுக்கப்பட்டனர். ஆனால் முன்பு போல் வலுவான காவலரண்கள் அமைக்கப்படவில்லை.

போராளிகளின் கழுத்தளவு ஆழமான பாம்பு பங்கர்களிலேயே போராளிகள் நிறுத்தப்பட்டனர். ஒவ்வொரு இடத்திலும் மூன்று போராளிகளுடன் ஒரு கனரக ஆயுதப் போராளியும் நிறுத்தப்பட்டனர்.

இப்போ பெண்கள் அணிக்கு சக்தியும், ஆண்கள் அணிக்கு சூரியாவும் பொறுப்பாக நியமிக்கப்பட்டனர். இந்த அணிகளில் கணிசமான புதிய போராளிகளும் இணைக்கப்பட்டிருந்தனர்.

இந்த மாற்றங்கள் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டன. மல்லாவிக்குள் இராணுவம் இறங்கிவிட்ட விஷயமும் எல்லா இடமும் பரவிவிட்டது.

தேவன்பிட்டி, வெள்ளாங்குளம், சேவாலங்கா குடியிருப்பு என இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்களும் அவ் ஊர்களின் மக்களும் வடக்கு நோக்கி இடம்பெயர ஆரம்பித்துவிட்டனர்.

முழங்காவிலில் தங்கியிருந்த மக்களும் இடம்பெயர ஆரம்பித்துவிட்டனர்.

ஆனால் முழங்காவிலின் நிரந்தரக் குடிகள் அவ்விடத்தை விட்டுப் போகத் தயங்கினர்.

மக்கள் சாரியாக இடம்பெயர்ந்து கொண்டிருக்கும் போதே அங்கு வேலுப்பிள்ளை வந்தார்.

“என்ன பரமசிவம்! சனமெல்லாம் போகுது.. நீங்கள் என்ன செய்யிறதாய் யோசினை?” எனக் கேட்டார் வேலுப்பிள்ளை.

“உங்கடை யோசினை என்ன?”, எனக் கேட்டார் முருகர்.

“இந்தக் காணி, பயிர் பச்சை, மாடு, கண்டு, சாமான் சக்கட்டு எல்லாத்தையும் விட்டிட்டு என்னண்டு போறது எண்டு தான் யோசிக்கிறன்”, என்றார் வேலுப்பிள்ளை.

“லான்ட் மாஸ்ரர் நிக்குது தானே.. ஏலுமான அளவு ஏத்திக்கொண்டு போவம்”, என்றார் பரமசிவம்.

“ஆயிரம் அடி வாழை கிடக்குது.. எல்லாம் குலை போட்டதும் போடாததுமாய் கிடக்குது”, என்றார் வேலுப்பிள்ளை ஒரு பெருமூச்சுடன்.

காயும் பழமுமாய் இரண்டு ஏக்கர் மிளகாய்த் தோட்டத்தை விட்டு வந்தது பரமசிவத்தின் நினைவில் வந்து போனது.

அவர்கள் கதைத்துக் கொண்டிருக்கும் போதே இரு விமானங்கள் வெள்ளாங்குளம் பக்கம் குண்டுகளை வீசிவிட்டு மேலெழுந்தன. விழுந்த குண்டுகளின் அதிர்வு பரமசிவத்தின் தகரக் கொட்டிலை அதிர வைத்தது.

-தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்-

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*