nkna

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 51

சிறிது நேரத்தில் காலை உணவு வந்தது, எல்லோரும் சாப்பிட்டுவிட்டு தென்னை நிழல்களிலும் இடையிடையே நின்ற மாமரங்களின் கீழும் படுத்து ஓய்வெடுத்துக்கொண்டார்கள். ஆனால் எல்லோர் மனதிலும் ஏதோ ஒரு பெரும் சாதனையை நிகழ்த்தப் போகும் மகிழ்ச்சி படர்ந்து கிடந்தது.

சிவத்துக்கு ஓய்வெடுக்க முடியவில்லை. காணியை ஒருமுறை சுற்றிப் பார்ப்பதற்காக முடிவெடுத்த அவன் எழுந்து புறப்பட்டான். ரூபாவும் “சிவம் நானும் வாறன்”, என்றவாறே அவனுடன் இணைந்து கொண்டாள்.

மலையவன் அவர்களைப் பார்த்து, “இரண்டு தளபதியள் வாறமாதிரித்தான் கிடக்கு”, என்றான் கேலியாக. உண்மையாகவே அவர்களின் அந்த உயரமான கட்டுமஸ்தமான தோற்றமும் கம்பீரமான நடையும் எவரையுமே அப்படித்தான் எண்ணத் தோன்றும்.

“போடா மலையாண்டி மாமா”, என்றுவிட்டு நடந்தாள் ரூபா.

ஆனால் அந்த வார்த்தைகள் சிவத்தின் மனதில் அவனையறியாமலேயே ஒரு கிளுகிளுப்பை ஊட்டுவதை அவன் உணரத் தவறவில்லை.

மருத்துவப்பிரிவு, வழங்கல் பிரிவு என முக்கியமான  பகுதிகளின் போராளிகளும் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். பீரங்கிப் படையணி, மோட்டார் படையணி என்பனவும் வந்திருந்தன.

அவர்கள் மருத்துவ அணியை நெருங்கிய போது, “ரூபாக்கா”, என்றவாறே ஓடி வந்து ஒரு இளம் போராளி அவளைக் கட்டிப்பிடித்தாள்.

ரூபா ஆச்சரியத்துடன், “ஏய் ரேணுகா! எப்ப இயக்கத்துக்கு வந்தனீ?” என வியப்புடன் கேட்டாள்.

“இப்ப.. மூண்டு மாதம் தானக்கா..”, என்றாள் ரேணு.

“அப்ப உன்ர படிப்பு?”

“நாலு வருஷம் முடிச்சிட்டன். இன்னும் ஒரு வருஷம் இருக்கு. லீவுக்கு வீட்டை வந்தாப்போலை என்ரை மருத்துவப் படிப்பு போராட்டத்துக்கு உதவட்டும் எண்டு இயக்கத்திலை சேந்திட்டன்”.

அவள் கொழும்பு மருத்துவபீடத்தில் இறுதியாண்டு மாணவி என்பதை ரூபா சிவத்துக்கு விளங்கப்படுத்தினாள்.

“பூப்போலை வளர்ந்தனீ.. எப்பவும் ஸ்ரைல் பண்ணிக் கொண்டு திரிவாய்.. எப்பிடி போராளி வாழ்க்கையைச் சமாளிக்கிறாய்?” எனக்  கேட்டாள் ரூபா.

“இரண்டு, மூண்டு கிழமை கஷ்டமாய்த்தான் இருந்தது. இப்ப இது நல்லாய்க்கிடக்குது”, என்றாள் சிரித்துக் கொண்டே.

“சரி.. சரி.. நல்லாய் செய்”, எனச் சிரித்தவாறே கூறிவிட்டு விடைபெற்றாள் ரூபா.

எமது மக்களின் விடுதலை வேட்கையையும் அர்ப்பண உணர்வையும் நினைத்த போது சிவத்தின் உடல் புல்லரித்தது.

எல்லா அணிப் பொறுப்பாளர்களும் போராளிகளும் மிகவும் உற்சாகத்துடனும் கலகலப்பாகவும் இருந்தனர். ஆனால் எவருக்குமே நடக்கப்போவது என்ன என்று தெரிந்திருக்கவில்லை. சிவம் ஒரு மூத்த போராளியாதலால் அனைவரும் சிவத்தைக் கேள்விகளால் துளைக்க அவன் பதில் சொல்ல முடியாமல் திண்டாடிக்கொண்டிருந்தான்.

அன்று மதியம், வேறு எங்கோ தயாரிக்கப்பட்ட புரியாணி பார்சல்கள் வந்தன. சாப்பாடு முடிந்த பின்பு ஐஸ்கிறீமும் வழங்கப்பட்டது. பெரும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படவுள்ள சமயங்களில் இப்படியான சிறப்பு உணவுகள் வழங்கப்படுவதால் அவர்கள் அது பற்றி பெரிதாக ஆச்சரியப்படவில்லை.

பிற்பகல் மூன்று மணியளவில் ஒருங்கிணைப்புத் தளபதி, சிறப்புத் தளபதிகள், அரசியல்துறைப் பொறுப்பாளர், புலனாய்வுப் பொறுப்பாளர் ஆகியோர் வந்திறங்கினர்.

எட்டு அணிகளின் பொறு்பபாளர்களும் ஒரு பிரத்தியேகமான இடத்துக்கு அழைக்கப்பட்டனர். முகாமின் வரைபடம் முன்வைக்கப்பட்டு முகாமின் அமைப்பு விளக்கப்பட்டது. அவர்களின் காவல் நிலைகள், கட்டளை மையம், தொலைத்தொடர்பு மையம் என்பன குறியிடப்பட்டு காட்டப்பட்டன. ஒவ்வொரு அணிகளுக்கும் அவரவர் பணிகள் விளங்கப்படுத்தப்பட்டன. சுக்கிரனின் அணி தடையுடைத்து உட் செல்வது எனத் தெரிவிக்கப்பட்டது. அதாவது வேவு குழுவினர் முட்கம்பி வேலியை வெட்டி பாதையெடுத்து இரகசியமாக முகாமுக்குள் இறங்க அவர்கள் பின்னால் சுக்கிரனின் அணி உட் சென்று அங்கிருந்து தாக்குதலை ஆரம்பிக்க வேண்டும். அவர்கள் ஒரே நேரத்தில் தொலைத் தொடர்பு கோபுரங்களைத் தகர்க்கவேண்டும். வேவு அணி ‘போக்கஸ்’ லைட்டுக்களின் மின்சாரத் தொடர்பைத் துண்டிக்கும். வெளியில் நிற்கும் அணிகள் தாக்குதலை நடத்தியவாறு முகாமில் புக வேண்டும். சிவத்தின் அணி மூண்டு முறிப்புக்கும் பனங்காமத்துக்குமிடையேயுள்ள இராணுவத் தொடர்பைத் துண்டித்து அவர்களைத் தனிமைப்படுத்தி நட்டாங்கண்டல் பக்கம் விரட்ட வேண்டும். சித்திராவின் அணி பாலத்திலிருந்து முன்னேறி பாண்டியன் குளத்தில் அந்த அணியை மறித்து தாக்க வேண்டும். மங்களாவின் அணி நவ்வியில் வைத்து ரம்பைக்குளத்துடனான தொடர்பைத் துண்டிக்கவேண்டும்.

திட்டங்கள் தெளிவு படுத்தப்பட்டதும் அணிப் பொறுப்பாளர்களின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இது விளையாடி விளையாடி வெற்றிபெறக் கூடிய ஒரு சமர் எனவே அவர்கள் கருதினர்.

பொறுப்பாளர்களும் தளபதிகளும் வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

ஒவ்வொரு அணித் தலைவர்களும் தங்கள் அணியை பத்துப் பேர் கொண்ட குழுக்களாகப் பிரித்து அவர்களுக்கு ஒவ்வொருவரை தலைமையாக நியமித்தனர்.

மெல்ல மெல்ல வானம் சிவக்கத் தொடங்கியது.

இரவு எட்டுமணியளவில் வாகனங்கள் வந்து அனைவரையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டன. அனைவரும் பாலைப்பாணி கிராமத்தில் இறக்கப்பட்டனர். அங்கிருந்து மக்கள் பல நாட்கள் முன்பதாகவே வன்னிவிளாங்குளம் பக்கமாக வெளியேறிவிட்டனர்.

ஒவ்வொரு அணிகளும் ஒவ்வொரு வேவுப் பிரிவுப் போராளிகளுடன் அவர்களுக்கென வழங்கப்பட்ட இடங்களுக்குக் கால்நடையாகப் புறப்பட்டனர்.

இரவு பன்னிரண்டு மணியளவில் அவர்களது ஒவ்வொரு அணியும் நிலையெடுத்துக் கொண்டது. முகாமின் மின்சார விளக்குகள் தூரத்தே தெரிந்தன. ‘போக்கஸ்’ லைட்டுக்களிலிருந்து அண்மையாக ஆனால் வெளிச்சம் படாத தொலைவில் நிலையெடுத்தனர்.

முகாமின் உள்ளே விளக்குகள் எரிந்த  போதும் எவ்வித படையினரின் நடமாட்டமும் தென்படவில்லை.

நேரம் ஒரு மணியை நெருங்கிய போது திடீரென முகாமுக்குள் சரமாரியாகத் துப்பாக்கி வேட்டுக்கள் கேட்கத் தொடங்கின. வெளியில் நின்றிருந்த அணிகள் முகாமை நோக்கிப் பாயத் தயாரான போது திடீரென காடெல்லாம் ஒளிவெள்ளம் பாய்ந்தது.

என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளும் முன்பே நாலு பக்கங்களிலிருமிருந்து போராளிகளை நோக்கி துப்பாக்கி ரவைகள் பாயத் தொடங்கின.

தாங்கள் ஒரு பயங்கர சுற்றிவளைப்புக்குள் அகப்பட்டுவிட்டதை சிவம் புரிந்து கொண்டான்.

எப்படியோ முகாம் தாக்கப்படப்போகிறது என்ற செய்தி படையினருக்கு எட்டிவிட்டது. அவர்கள் முகாமிலிருந்து சற்றுத் தொலைவில் மின்சார ‘வ்வோக்கஸ்’ விளக்குகளைக் காட்டு மரங்களில் இணைத்து, அவற்றை எந்த நேரமும் ஒளிர வைக்கும் வகையில் அமைத்திருந்தனர். அவர்கள் மரங்களிலும் பற்றைகளுக்குள்ளும் இருளில் முகாமுக்கு வெளியே வந்து பதுங்கிக்கொண்டனர்.

தாங்கள் எதிர்பார்த்த எல்லைக்குள் போராளிகள் வரும் வரை காத்திருந்த அவர்கள் போராளிகள் வந்து சேர்ந்ததும் ஒரே நேரத்தில் விளக்குகளை ஒளிரவிட்டனர்.

இப்போ போராளிகள் பட்டப்பகல் போன்ற வெளிச்சத்தின் நட்ட நடுவில் அகப்பட்டுக்கொண்டனர். இராணுவமோ சுற்றிவர இருட்டில் நின்று வேட்டுக்களைப் பொழிந்து கொண்டிருந்தது.

சிவம் நிலையை நன்றாக விளங்கிக் கொண்டான். உடனடியாக பின்வாங்கி வெளிச்சத்தைக் கடந்து இருளில் வருமாறு கட்டளையிட்டான்.

கட்டளைப் பீடத்திலிருந்து ஏதோ ஒரு பெரிய தவறு நடந்துவிட்டதாகவும் ஒவ்வொரு போராளிகளையும் பாதுகாப்பாக பின்வாங்குமாறு கட்டளை வந்தது. இப்போது உயிரைக் காப்பது கூட அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. சிவம் ஒருவாறு உருண்டு புரண்டு இருளுக்குள் வந்துவிட்டான்.

அவன் அணியில் சிலர் வீரச்சாவடைந்த போதும் பலர் காயங்களுடன் தப்பிவிட்டனர். எல்லோரையும் பின் நோக்கிப் பாலைப் பாணிக்கு நகரும்படி கட்டளையிட்டான்.

சிவம் ஒரு பெரிய பாலை மரத்தின் பின் பதுங்கிக் கொண்டு இருளிலிருந்து படையினரின் வேட்டுக்கள் ஒலியைக் கவனமாகக் கேட்டு அவை புறப்படும் இடத்தை ஊகித்து ஒவ்வொரு வெடியாகப் போட்டான். ஒரு மகசீன் முடிந்த போதும் ஐந்தாறு ‘மகே அம்மே’க்களே கேட்டன. ஆனால் அவன் எதிர்பாராத இன்னொரு பலன் கிட்டியது. இருளில் தங்கள் சகாக்களின் அவல ஒலியைக் கேட்ட பதுங்கியிருந்த படையினர் பலர் எழுந்து முகாமை நோக்கி ஓட ஆரம்பித்தனர். அவர்கள் வெளிச்சமான இடத்தைக் கடந்தே முகாமுக்குள் ஓட வேண்டியிருந்தது. அவர்கள் வெளிச்சத்தில் ஓடும் போதே ஒருவர் விடாமல் சுட்டுத்தள்ளினான் சிவம்.

அதன் பிறகே படையினர் அங்கு போராளி ஒருவன் பதுங்கியிருந்து சுடுகிறான் என்பதைப் புரிந்து கொண்டனர். துப்பாக்கி வேட்டுகள் சிவம் இருந்த திசை நோக்கிப் பாயத் தொடங்கின. வரும் ஆபத்தைப் புரிந்து கொண்ட சிவம் ஒரு மரத்தின் பின் நின்று சுட்டு விட்டு அடுத்த மரத்தின் பின்னால் நின்று  சுடுவது. பின்பு அடுத்த மருத்துக்கு தாவுவது என்ற வகையில் பின் வாங்கினான். பல போராளிகள் நிற்பதாகக் கருதிய அவர்கள் அவனைப் பின் தொடரவில்லை.

சிவம் பாலைப்பாணியை அடைந்த போது நேரம் இரண்டு மணியைத் தாண்டிவிட்டது. ஏறக்குறைய முப்பது வித்துடல்கள் அங்கு அடுக்கப்பட்டிருந்தன. அங்கு நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. பல போராளிகளின் வித்துடல்கள் மீட்கப்படாமலும் போயிருக்கலாம் என சிவம் கருதினான்.

சுகுணன், ரூபா, மங்களா ஆகியோருக்கு என்ன நடந்தது என்பதை அவனால் தெரிந்து கொள்ள முடியவில்லை. தங்களைப் போன்ற அனுபவசாலிகளையே தடுமாற வைத்த அந்தச் சண்டையில் புதிய போராளிகள்  என்ன பாடுபட்டிப்பர் என்பதை நினைத்த போது அவர்கள் மேல் பெரும் பரிதாபமே அவனுக்கு ஏற்பட்டது.

மாபெரும் தரையிறக்கம், தீச்சுவாலை, முல்லைமுகாம் தகர்ப்பு, ஜெயசிக்குறு, ஓயாதை அலைகள் மூன்று எனப் பெரும் சமர்களிலெல்லாம் சாதனைகளை ஈட்டிய அவன் இந்த சின்ன முகாம் தகர்ப்பில் பெரும் தோல்வியடைந்தமை அவனுக்கு பெரிய அவமானமாகவே தோன்றியது.

சிவம் எவருடனும் எதுவுமே பேசாது கண்களை மூடியவாறு ஒரு மரத்தில் சாய்ந்தவாறே அமர்ந்து கொண்டான்.

-தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்-

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*