bookebaylow

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 50

தொலைத்தொடர்பு அறையிலிருந்து சிவம் சிரித்த முகத்துடன் வெளியே வந்தான். சுகுணன் ஆவலுடன் அவனிடம் போய், “என்ன சிவமண்ணை என்னவாம்?”, எனக் கேட்டான்.

சிவம், “ஒரு பெரிய தாக்குதலுக்கு எந்த நேரமும் திடீரெண்டு வெளிக்கிடத் தக்க வகையில் தயாராய் இருக்கட்டாம்”, என்றான்.

அவன் வார்த்தைகளில் எல்லையற்ற மகிழ்ச்சி இழையோடியது.

“பெரிய தாக்குதலோ… எதுவாயிருக்கும்?” எனக் கேட்டாள் ரூபா.

“அதைப்பற்றி ஒண்டும் சொல்லேல்ல.. வழக்கமாய் சொல்லுறேல்ல தானே.. நான் நினைக்கிறன்..”, எனக் கூறிவிட்டு இடை நிறுத்தினான் சிவம்.

“சொல்லுங்கோ.. நினைச்சதும் நான் நினைச்சதும் ஒண்டோ எண்டு பாப்பம்”, என ஆவலுடன் கேட்டாள் ரூபா.

“இப்ப இரண்டு, மூண்டு நாளைக்கிடையிலை ஆமி மூண்டுமுறிப்பிலை ஒரு காம்ப் போட்டிருக்கிறானாம். மூண்டுமுறிப்பு ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம். பாண்டியன் குளம் போகலாம். காட்டுக்கை இறங்கி புளியங்குளம் எங்கடை காவலரண்களுக்குப் பின்னாலை புதூரிலை மிதக்கலாம். பாலைப்பாணிக்காலை இறங்கி வவுனிக்குளம் அலைகரையிலை ஏறலாம். இவ்வளவையும் பாதுகாக்க எங்களிட்டை ஆளணி போதாது. அந்த முகாமை அகற்றிவிட்டமெண்டால் ஆமிக்கு இவ்வளவு சாதகமான நிலையும் இல்லாமல் போய்விடும்”.

“நீங்கள் உண்மையிலேயே காட்டுப்புலி தான்”, என்றான் சுகுணன்.

“அப்பிடில்லை.. இலுப்பைக் கடவை மட்டும் வந்த ஆமி அதை ஓயப்போட்டிட்டு மூண்டுமுறிப்பை பிடிக்கிறான் எண்டால் யோசிக்கத்தானே வேணும்”

“ஓமோம் அவங்கள் வடிவாய் பலப்படுத்த முந்தி இப்பவே அடிச்சுப்போட வேணும்”, என்றாள் ரூபா.

“என்ரை ஊகம் இது. வேறை எங்கையும் தாக்குதலாயும் இருக்கலாம்” என்றான் சிவம்.

“அப்பிடியெண்டாலும் இவங்களை அடிச்சுக் கலைச்சால் தான் நித்திரை வரும்”, என்றான் சுகுணன்.

ரூபா, “உங்களுக்கு அடிச்சுக் கலைச்சாத்தான் நித்திரைவரும். எனக்கு அடிச்சுக் கலையாட்டில் நித்திரை வந்தாலும் கொள்ள முடியாது”, என்றாள்.

“ஏன்?”

“கணேசிட்டை பேச்சு விழுமே”, என்றாள் மெல்லிய புன்னகையுடன்.

“நல்லதொரு காதலனும், நல்ல ஒரு காதலியும்”, என்றுவிட்டு கடகடவெனச் சிரித்தான் சுகுணன்.

கணேசிடம் ஏச்சு வாங்குவதைக் கூட பெருமையாகக் கருதும் ரூபாவை நினைக்க சிவத்துக்கு பெரும் வியப்பாகவிருந்தது.

அன்று மாலை முழங்காவில் முருகன் கோவிலில் போராளிகளின் பரப்புரைக் கூட்டம் இடம்பெற்றது. அப்பகுதி மக்களும் இடம்பெயர்ந்த மக்களுமாக ஏராளமானோர் அங்கு கூடியிருந்தனர்.

அரசியல் துறையைச் சேர்ந்த ஒரு போராளி உணர்ச்சிவசமாக உரையாற்றிக் கொண்டிருந்தான்.

முன்னேறிவரும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட, பெரும் ஆயுத தளபாட வசதி கொண்ட அரச படைகளுக்கு எதிராகப் பல முனைகளிலும் சில ஆயிரம் போராளிகளே பல முனைகளிலும் போராட வேண்டிய நிலை இருப்பதை அவன் தெளிவுபடுத்தினான். மேலும் பல மாவீரர்களதும் போராளிகளதும் உயிர்த்தியாகம் உட்படப் பலவேறு அர்ப்பணிப்புக்களாலும் கைப்பற்றப்பட்டுப் பாதுகாக்கப்பட்ட பிரதேசங்கள் ஒவ்வொன்றாக பறிகொடுக்கப்பட்டு வரும் துரதிஷ்டமான நிலைமையைச் சுட்டிக்காட்டினான். விடுதலை அமைப்பின் ஆட்தொகை பற்றாக்குறையை ஈடு செய்ய வீட்டுக்கு ஒருவராவது போராளியாக இணைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டான். சில குடும்பங்களில் இருவர், மூவர், நால்வர் பங்களிப்பை வழங்கும் போது சில குடும்பங்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பது தொடர்பாக அவன் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தான்.

விருப்பமானவர்கள் இப்போதே இணைந்து கொள்ள முடியும் எனக் கூறி அவன் தனது உரையை நிறைவு செய்து கொண்டான்.

பரமசிவமும் முருகரும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

தூரத்திலிருந்தே முருகரைக் கண்டுவிட்ட கந்தசாமியும் அவர்களின் அருகில் வந்து அமர்ந்துகொண்டான்.

முருகர் மெல்ல பரமசிவத்திடம்  சொன்னார், “ம்.. வயது  போட்டுது.. இல்லாட்டில் நான் தான் முதல் ஆளாய் போய் நிப்பன்”, என்றார்.

கீரி சுட்டானில் பாலம்பிட்டியில் இருக்கும் போது பல வேறு வழிகளில் போராளிகளுக்கு உதவி செய்தமையையும் தற்போது அந்த வாய்ப்புக்கள் போய்விட்டதையும் நினைக்கும் போது அவரின் மனம் சஞ்சலப்பட்டது.

“எனக்கண்ணை இப்பவே போய்ச் சேரவேணும் போல கிடக்குது. மனுஷி மாதமாய் இருக்கிறாள். நான் போனால் பாவம் அவள் பிறகு என்ன செய்யிறது?”, எனக் கவலைப்பட்டான் கந்தசாமி.

பல இளைஞர்களும் யுவதிகளும் எழுந்து போய் தாங்கள் போராளிகளாக இணையப் போவதாகத் தெரிவித்தனர்.

அதில் ஒரு இளைஞனை கூட்டத்தில் உரையாற்றிய அரசியல்துறைப் போராளி தன்னருகில் அழைத்தான்.

“தம்பி உங்கடை ஒரு அண்ணா மாவீரர். மற்ற அண்ணா போராளியாய் இன்னும் களத்திலை நிக்கிறார்.. நீர் வீட்டை போம்”

அந்த இளைஞன் குறுக்கறுத்துக் கேள்வி கேட்டான், “இந்த மண்ணை பாதுகாக்க அண்ணாமாருக்கு உள்ள உரிமை எனக்கில்லையே?” அரசியல்துறைப் போராளி மட்டுமன்றி அங்கிருந்த அனைவருமே திகைத்துப்போய்விட்டனர்.

“அப்பிடியில்லை தம்பி.. அப்பா அம்மாவுக்கு துணையாய் நீர் ஒரு பிள்ளையெண்டாலும் இருக்கவேண்டாமே?”, எனக் தயக்கத்துடன் கேட்டான் போராளி.

அந்த இளைஞன் சலிக்கவில்லை, “நான் கிபிரிலையோ செல்லிலையோ செத்தால் அப்பா, அம்மாவை ஆர் பாக்கிறது?”, எனக் கேட்டான் அவன் எவ்வித தயக்கமுமின்றி.

இச் சம்பவம் பரமசிவத்தை உலுப்பிவிட்டது. எந்த நேரமும் போராளிகளுடனேயே உதவி செய்துகொண்டு திரியும் சுந்தரம் கூட இப்படியான ஒரு முடிவுக்கு வரக்கூடும் என அஞ்சினார். ஒவ்வொரு வினாடியும் சிவத்தை நினைத்துக் கவலைப்படும் அவர் சுந்தரமும் போராளியாகிவிட்டால் அதைத் தான் தாங்கிக் கொள்ள முடியாதெனவே நம்பினார். அதை விடப் பார்வதியை எவ்விதத்திலும் ஆற்றுப்படுத்த முடியாதென்பதையும் அவர் நன்கு புரிந்துகொண்டிருந்தார்.

கூட்டம் முடிந்து திரும்பும் போது நன்றாக இருட்டிவிட்டது. மின்மினிப் பூச்சிகள் காட்டு மரங்களுக்கு வெளிச்சம் போட்டுக்கொண்டிருந்தன.

முருகர் மெல்ல பரமசிவத்தைக் கேட்டார், “பரமு.. போற போக்கைப் பாத்தால் இவன் பெருமாளின்ரை பெட்டையும் இயக்கத்திலை சேரவேண்டி வரும் போலை கிடக்குது. பிறகு பெருமாளையும் பெண்டிலையும் நீங்கள் தான் சுமக்கவேண்டி வரும், என்ன செய்யலாம்?”
சுந்தரம் என்ன செய்வானோ என நினைத்து கலங்கிய பரமசிவத்துக்கு  இது இன்னுமொரு பிரச்சினையாக குழம்பவைத்தது.

பரமசிவம் ஒரு பெருமூச்சுடன், “எனக்கெண்டால் ஒண்டுமாய் விளங்கேல்லை”, என்றார்.

முருகர், “அவளுக்கு ஒரு கலியாணம் செய்து வைச்சிட்டால் பிரச்சினையில்லை”, என்றார்.

“இப்ப அவசரத்துக்கு எங்கை போய் மாப்பிளை தேடுறது?”

“பரமசிவம்.. சுந்தரத்தின்ரை போக்கும் வித்தியாசமாய்க் கிடக்கு. அவனும் இயக்கத்திலை சேர்ந்தாலும் சேர்ந்திடுவன்”,

“ம். நானும் அப்பிடித்தான் பயப்பிடுறன்”, என்றார் பரமசிவம்.

“அதுக்கு ஒரு வழி இருக்குது”

“என்னது?”

“அவள் முத்தியைச் சுந்தரத்துக்கு கட்டி வைச்சு விடுறதுதான்”

என முருகர் சொல்லவே நடந்து கொண்டிருந்த பரமசிவம் அதே இடத்தில் நின்றுவிட்டார்.

“உனக்கு அதுகள் ஆக்கள் ஆர் எண்டு தெரியாதே?”

“தெரியும் இந்தக் காலத்திலை உதுகளப் பாக்க ஏலுமே?”, முதல் பெடியனும் பெட்டையும் தப்ப வேணும்”, என்றார் முருகர்.

மிக இறுக்கமாகவே சுந்தரம் சொல்லிக் கொடுத்தபடியே முருகர் தடம் மாறாமல் விஷயங்களைப் போட்டுக்கொண்டிருந்தார்.

எதுவும் பேசாமலே பரமசிவம் ஆழ்ந்த் யோசனையுடன் நடக்க ஆரம்பித்தார். முருகர் சொல்வதை விட வேறு வழி இருப்பதாக அவருக்குப்படவில்லை.

பரமசிவம் திடீரென்று கேட்டார், “அதுக்கு பெடியனும் பெட்டையும் சம்மதிக்கவேணுமே?”

“அது நானெல்லோ சம்மதிக்க வைக்கிறது”, என அழுத்தமாகச் சொன்னார் முருகர்.

பெருமாள் குடும்பம் மலையகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ஒரு உறுத்தல் மனதில் இருந்த போதிலும் அது தமது சாதிய பிற்போக்குத்தனமான நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவாகியிருந்த உறுத்தலே என்பது அவருக்கு விளங்கியிருந்தது. போராட்டவாழ்க்கை சாதியத்தை உடைத்துவிட்டபோதும் அந்த மாற்றத்தை உள்வாங்க அவர் சங்கடப்பட்டிருக்கவேண்டும்.

“சரி.. நான் ஒண்டும் கதைக்கமாட்டன்.. எல்லாத்துக்கும் நீ தான் பொறுப்பு”, என்றுவிட்டு மீண்டும் நடக்கத் தொடங்கினார் பரமசிவம்.

சுந்தரம் போராளியாகப் போகக் கூடும் என்ற ஒரு நிலையைக் காட்டியே அவன் போராளியாகத் திட்டமிடுகிறான் என்பதை அவர்கள் இருவரும் புரிந்திருக்கவில்லை.

அதிகாலை மூன்று மணிக்கு உடனடியாகப் புறப்படத் தயாராகும்படி சிவத்துக்கு கட்டளை வந்தது. அனைத்துப் போராளிகளையும் எழுப்பிவிட்டு புறப்படுவதற்கான எல்லாத் தயார்ப்படுத்தல்களையும் மேற்கொள்ளும்படி உத்தரவிட்டான்.

சில நிமிடங்களிலேயே எல்லோரும் தயாராகிவிட்டனர். ரூபாவின் அணியினரும் சுகுணனின் அணியினரும் கூட அவ்விடத்துக்கு வந்து சேர்ந்துவிட்டனர்.

ஏதோ ஒரு பெரிய காத்திரமான தாக்குதல் இடம்பெறப்போகிறது என்பதைச் சிவம் புரிந்து கொண்டான். அடுத்தடுத்துப் போராளிகள் பின்வாங்கும் கள நிலையைத் தலைகீழாக மாற்றி பல பிரதேசங்களை விடுவிக்க வழி கோலும் தாக்குதலாகவே அது அமையும் என அவன் எதிர்பார்த்தான்.

சிறிது நேரத்தில் வாகனங்கள் வந்து  அவர்களை ஏற்றிக்கொண்டன.

வாகனங்கள் கிடங்கும் பள்ளமுமான காட்டுப்பாதையில் போய்க்கொண்டிருந்தன. ஏறக்குறைய இரண்டு மணித்தியாலங்கள் ஓடிய பின்பு ஒரு பெரிய தென்னைகள் நிறைந்த காணியில் போய் வாகனங்கள் நின்றன. அனைவரும் இறங்கிக் கொண்டனர்.

சிவம் கீழே இறங்கிச் சுற்றும் முற்றும் பார்த்தான். மெல்ல மெல்ல கிழக்கு வெளித்துக்கொண்டிருந்தது. அந்தத் தென்னை மரக் காணியெங்கும் போராளிகளின் தலைகளே தெரிந்தன.

அதில் ஒரு சிறு கொலனி வீடு மட்டுமே இருந்தது. கிணறு மட்டும் பெரிதாகவும் கட்டுக்கிணறாகவும் அமைந்திருந்தது. காணியின் பின் புறமாக அடர்த்தியான பற்றைகள் தெரிந்தன. போராளிகள் காலைக் கடன்கழிக்க அதற்குள் போத்தல்களுடன் போய் வந்து கொண்டிருந்தனர்.

அருகில் வந்த மலையவன் ஒரு முறை கைகளை உயர்த்திச் சோம்பல் முறித்துவிட்டு, “தோள்கள் தினவெடுக்குது”, என்றான்.

சிவம் அவன் என்ன சொல்கிறான் என்பதை புரிந்து வைத்திருந்த போதிலும், “ஏன்.. என்ன பிரச்சினை?” எனக் கேட்டான்.

அவன் சிரித்துக் கொண்டே, “இண்டைக்கு நல்ல வேட்டை இருக்குது” என்றான்.

சிவம் கேலியுடன், “வதனியை நினை.. வேட்டையிலை மரை மரையாய் விழும்”, என்றான்.

மலையவனின் முகம் இறுகியது. அவன், “மரையள் மட்டுமில்லை.. சிங்கங்களையும் விழுத்துவன்”, என்றான்.

-தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்-

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*