nkna

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 49

ஓமந்தை ரம்பைக் குளத்திலிருந்து மூன்றுமுறிப்பு, பனங்காமம் வரையான பகுதி நீண்டகாலமாகவே அமைதியாக இருந்தது. எனினும் ஓமந்தைப் படையினர் இடையிடையே காடுகள் வழியாகச் கொத்தம்பியா குளத்தை நெருங்க முயல்வதும் பலமாக அடி விழுந்ததும் திரும்பி ஓடுவதுமாக சிறு சிறு சண்டைகள் நடப்பதுண்டு.

ரம்பைக் குளத்திலிருந்து ஒரு புறம் புளியங்குளம் வரையான ஏ – 9 வீதி மறுபுறம் சின்னப்புவரசங்குளம் வரையான பகுதி திவ்வியனின் தலைமையிலான படையணியின் பொறுப்பிலேயே இருந்தது. சின்னப் புவரசங்குளத்திலிருந்து பனங்காமம் வரையான பகுதியின் பாதுகாப்பை நகுலா தலைமையிலான மகளிர் படையணியே பாதுகாத்தது.

சேமமடு ஏற்கனவே இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில் அப்பகுதி மக்களும் மரையடிச்ச குளம், பனிக்கநீராவி, அனந்த புளியங்குளம் ஆகிய இடங்களின் மக்களும் கனகராயன்குளம் பக்கமாக இடம்பெயர்ந்துவிட்டனர்.

காடுகளுக்கு நடுவில் உள்ள கிராமங்கள் ஊடாக படையினர் சுலபமாக முன்னேறிவிட முடியுமாதலால் திவ்வியனின் அணியினர் மிகவும் விழிப்பாகவே இருக்கவேண்டியிருந்தது.

திவ்வியன் சிறுத்தைப் படையணி இருந்த காலத்தில் நாற்பது பேர் கொண்ட ஒரு அணிக்குப் பொறுப்பாகவிருந்தவன். அவனுக்கு அந்தக் காடுகளின் ஒவ்வொரு அங்குலமும் தெரியும். படையினர் நகரக் கூடிய பாதைகள் தொடர்பாக மிகவும் தெளிவாகவேயிருந்தான். அதன் காரணமாக படையினரின் முன்னேற்ற முயற்சிகளை ஆரம்பத்திலேயே முறியடித்து அவர்களை விரட்ட முடிந்தது. அவன் படையினரை முன்புறமாகத் தாக்கும் அதேவேளையில் அவர்களின் விநியோகப் பாதைகளை உடைப்பதற்கும் ஒரு சிறப்புக் குழுவை எப்பொழுதுமே தயார் நிலையில் வைத்திருந்தான்.

நகுலாவின் அணியும் மிகவும் அனுபவம் வாய்ந்த போராளிகளைக் கொண்டிருந்தது. குளவிசுட்டான் பீரங்கிப் படைத்தளம் ஓயாத அலை மூன்று நடவடிக்கையின் போது அவர்களாலேயே தாக்கியழிக்கப்பட்டது.

புதூர் கோவிலின் தெற்கு, மேற்கு புறங்களிலிருந்து ரம்பைக்குளம், மூன்றுமுறிப்பு வீதிவரை மிகவும் அடர்ந்த காடு அமைந்திருந்தது. அது கரடிகளும் குழுமாடுகளும் நிறைந்த காடாகையால் அங்கு நடமாடுவது மிகவும் அவதானமாகவே மேற்கொள்ளவேண்டியிருந்தது.

போராளிகள் பல சமயங்களில் ஆபத்துக்களுக்கு முகம் கொடுக்கவேண்டி வருவதுண்டு. கரடிகள் சத்தம் ஏதுமன்றி மனிதரின் பின்னால் வந்து எதிர்பாராத ரேத்தில் பின்புறமாகக் கட்டிப்பிடித்துவிடும். அப்படியான நேரங்களில் அதனிடமிருந்து தப்புவது அவ்வளவு இலகுவான காரியமல்ல.

எல்லாவித சிரமங்களையம் சமாளித்தவாறே போராளிகள் எல்லைகளைக் கண்ணுறக்கமின்றிக் காத்தனர்.

அன்று பின்னிரவுப் பொழுதில் ஓமந்தைப் படை முகாமில் எவ்வித பரபரப்புமின்றி நொச்சிமோட்டையிலிருந்து ஒரு இராணுவ அணி பறங்கியாற்றின் மேற்குப் பகுதி ஊடாகக் காட்டுக்குள் இறங்கியது. அது மெல்ல எந்தவித அரவமுமின்றி காடுகளுடாக நடந்து சின்னப் புவரசங்குளத்துக்கும், குஞ்சுக்குளத்துக்கும் இடையே வீதியிலிருந்து சற்றுத் தொலைவில் நிலையெடுத்துக் கொண்டது. இன்னொரு அணி பெரிய வலையன்கட்டிலிருந்து இரணை இலுப்பை, மூன்று முறிப்பு வீதியின் இரு மருங்கிலும் காடுகளுக்குள்ளால் நகர்ந்து நிலையெடுத்துக் கொண்டது.

கிழக்கு வெளிக்கும்வரை எல்லாமே  அமைதியாயிருந்தது.

அதிகாலையில் ஒரு ஆட்காட்டிக் குருவியின் ஒலி கேட்கவே நகுலா உசார் நிலை அறிவித்தல் கொடுத்தாள். உடனடியாக எதிர்பாராத நிலையில் சின்னப்புவரசங்குளம் பக்கமிருந்தும் நவ்வி பக்கமிருந்தும் இரு இராணுவ அணிகள் அதிரடியாகப் பெண் போராளிகள் மேல் பாய்ந்தன. நகுலாவின் அணி முன்னும் பின்னுமாக இரு முனைகளில் போராட வேண்டியிருந்தது.

மூண்டுமுறிப்பில் இறங்கிய படை மகளிர் அணியை அந்த இடத்தில் உடைத்து பனங்காமப் பக்கமாகச் சண்டையைத் திசை திருப்பியது. ஓமந்தையிலிருந்து ரம்பைக்குளம், கொத்தாம்பியா குளம் ஆகிய பகுதிகளை நோக்கி டாங்கிகள் சகிதம் முன்னேறிய படையினரை எதிர்த்து திவ்வியனின் அணி போராடவேண்டியிருந்தது.

நகுலாவின் அணி சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் மூன்று முறிப்புப் பக்கமிருந்தோ ரம்பைக்குளம் பக்கமிருந்தோ உதவிகளை வழங்க முடியவில்லை. திவ்வியனின் அணி பின்வாங்கி நகுலாவின் அணியை மீட்க முனைந்தால் அனைவரும் பெரும் சுற்றி வளைப்புக்குள் மாட்டுப்படவேண்டிவரும்.

நகுலா கட்டளை பீடத்திற்குக் கோரிக்கைகளை அனுப்பியவாறே கடுமையாகப் போரிட்டுக்கொண்டிருந்தாள். தாங்கள் சுற்றிவளைக்கப்பட்டதை உணர்ந்த பெண் போராளிகள் ஆவேசமாகப் போரிட ஆரம்பித்தனர்.

கிழக்கிலும் தெற்கிலும் காப்புச் சூடுகளை நடத்தக் கட்டளையிட்டுவிட்டு மேற்குப் புறமாக நகுலாவின் தலைமையில் தீவிர உடைப்புத் தாக்குதல் தொடங்கியது. அடுத்தடுத்துப் பெண் போராளிகள் வீரச்சாவடைந்த போதிலும் எஞ்சியோர் ஆவேசமாகப் போரிட்டனர். ஏறக்குறைய ஒரு மணிநேர சண்டையின் பின்பு மேற்குக் கரை உடைக்கப்பட்டது. அந்த உடைப்பால் அவர்கள் பின்வாங்கியபோது நவ்வியில் ஒரு இராணுவ அணி காட்டுக்குள்ளிருந்து தாக்குதலைத் தொடுத்தது. முதல் தாக்குதலிலேயே நகுலா தலையில் குண்டடி பட்டு சுருண்டு விழுந்தாள்.

சம்பவத்தை அடுத்து உடனடியாக சித்திரா தலைமையேற்றுக் கட்டளைகளை வழங்கப் பெண் போராளிகள் எதிர்த் தாக்குதலைத் தொடுத்தனர்.

அந்த நிலையில் ஏகலைவனின் சிறப்புப் படையணி மூன்று முறிப்பை அடைந்துவிட்டது. அது இரண்டாகப் பிரிந்து ஒரு அணி பனங்காமம் பக்கமாகவும் மற்றைய அணி நவ்வி பக்கமாகவும் தாக்குதலைத் தொடுத்தது.

ஒரு புறம் மகளிர் அணியின் தாக்குதலும் மறுபுறம் சிறப்புப் படையணியின் தாக்குதலுமாக ஆரம்பிக்கப்பட்டபோது படைத்தரப்பு திக்குமுக்காடத்தொடங்கியது. அடுக்கடுக்காக ஏராளமானோர் இறந்து விழத் தொடங்கினர்.

மதியம் இரண்டு மணியளவில் படையினர் காடுகளுக்குள் பின் வாங்கி ஓட ஆரம்பித்தனர். ஓமந்தையிலிருந்து புறப்பட்ட படையினர் ரம்பைக்குளத்தில் தமது நிலைகளைப் பலப்படுத்திக் கொண்டு முன்னேற்ற முயற்சிகளை நிறுத்தினர்.

நகுலா உட்பட்ட இருபத்திரண்டு பெண் போராளிகளின் வித்துடல்கள் மீட்கப்பட்டு கிளிநொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டன.

நகுலாவின் மற்ற அணியை பின்தள்ளி சிறிது சிறிதாக இராணுவம் மேற்குப்புறமாக முன்னேறி பனங்காமம் வரை கைப்பற்றியது.

அதேவேளையில் தட்சிணாமருதமடுவிலிருந்து காடுகளுக்குள்ளால் டாங்கிகள் சகிதம் பறங்கியாற்றைக் கடந்து வந்த ஒரு இராணுவ அ ணி நட்டாங்கண்டலில் ஏறியது.

இரு முனைத் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாத போராளிகள் அணி நட்டாங்கண்டலையும் விட்டுப் பின்வாங்க வேண்டிவந்துவிட்டது.

நட்டாங்கண்டல் கைப்பற்றப்பட்ட நிலையில் மூன்று முறிப்பை உடைத்து பனங்காமம் பக்கம் முன்னேறுவது பயனில்லை என்ற நிலையில் ஏகலைவனின் அணி கட்டளைப் பீடத்தால் திருப்பியழைக்கப்பட்டது.

ஒரு புறம் ரம்பைக்குளத்தில் இராணுவம் நிலைகொண்டுவிட்டதாலும், மூண்டுமுறிப்பு முதல் நட்டாங்கண்டல் வரை படையினர் கைப்பற்றிவிட்டதாலும் திவ்வியனின் அணி சுற்றிவளைக்கப்படும் அபாயம் இருப்பதாக திவ்வியனைப் புளியங்குளத்திற்குப் பின்வாங்குமாறு கட்டளை வந்தது.

திவ்வியனின் மனம் சற்றுக்கூட அதை எதிர்பாக்காவிட்டாலும் கட்டளைகளைப் பின்பற்ற வேண்டிய கட்டாயமிருந்ததால் தனது அணியை பின்நகர்த்தினான்.

இப்போது திவ்வியனின் காவல் வரிசை புளியங்குளம், மாமடு, நயினாமடு, நெடுங்கேணி, ஒட்டுசுட்டான் என நீண்டுவிட்டது. சேமமடு இராணுவம் அனந்த புளியங்குளம் ஊடாக மாமடு, நயினாமடு நோக்கி முன்னேற வாய்ப்பிருந்ததால் அவன் தன் தலைமையகத்தை நயினாமடுவுக்கு மாற்றிக் கொண்டான்.

சித்திராவின் காவல் எல்லையும் பாண்டியன்குளம், மல்லாவி எல்லைக்கு மாற்றப்பட்டது. பாலியாற்றுப் பாலத்தை அண்டிய பகுதிகளைத் தாண்டி படையினர் முன்னேற முடியாதெனவே அவர்கள் கருதினார்கள். பாண்டியன்குளம் மக்கள் ஏற்கனவே படையினர் நட்டாங்கண்டலை நெருங்கிய போதே இடம்பெயர்ந்துவிட்டனர். இப்போது மல்லாவி, ஒட்டங்குளம், துணுக்காய் மக்களும் இயங்கன்குளம், புத்துவெட்டுவான், கிளிநொச்சி எனப் பல இடங்களை நோக்கி குடிபெயரத் தொடங்கிவிட்டனர்.

போராளிகள் பாண்டியன்குளத்தை விட்டுப் பின்வாங்கிவிடட போதிலும் படையினர் நட்டாங்கண்டலிலேயே தங்கள் நிலைகளைப் பலப்படுத்தினர்.

பாண்டியன் குளத்துக்கும் மல்லாவிக்குமிடையிலான பிரதேசம் பெரும் வயல் வெளிகளாதலால் படையினரை எதிர்கொள்ளப் பீரங்கிப் படையினரை  பல ரக உந்துகணைகள் வைக்கப்பட்டிருந்தன.

நகுலாவின் படையணி இப்போ நகுலா உட்பட 30 போராளிகளை இழந்துவிட்டது. அதை ஈடு செய்யும் வகையில் அவளுக்கு 20 போராளிகள் கையளிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் புதிதாக இணைக்கப்பட்டவர்கள். சித்திரா அவர்களுக்கு தைரியமூட்டி உற்சாகப்படுத்தினாள்.

அவர்களுள் பிரேமா நல்ல அழகி. அவள் பல்கலைக்கழகத்திற்கும் தெரிவாகியிருந்தாள். அவள் தாங்கள் நான்கு பெண்கள் எண்டும் ஒரே தம்பி போராளியாகப் போய்விடக்கூடாது என்பதற்காகவே தான் இயக்கத்தில் இணைந்ததாகவும் கூறினாள்.

சித்திரா அவளிடம் சிரித்தவாறே, “நீர் தம்பிக்காகப் போராட வேண்டாம். நாட்டுக்காகப் போராடும்”, என்றாள்.

“நாட்டுக்காகப் போராடுறது தம்பிக்காக போராடுதும் தானே அக்கா. நாடு விடுதலை பெற்றால் தானே தம்பிக்கும் உண்மையான பாதுகாப்புக் கிடைக்கும்”, என்றாள் பிரேமா.

பலர் பல்வேறு அக, புறக் காரணங்களால் போராட்டத்தில் இணைந்து கொள்ளத் தயங்கினாலும் அவர்கள் ஒவ்வொருவர் நெஞ்சிலும் விடுதலை வேட்கையும் போராட்டத்தில் இணைய வேண்டிய உணர்வும் இருப்பதை சித்திரா புரிந்து கொண்டாள்.

சில  மணி நேரங்களிலேயே இருவரும் நல்ல தோழிகளாகிவிட்டனர். பிரேமா சண்டை நுணுக்கங்களைப் பற்றித் துருவித்துருவிக் கேட்க ஆரம்பித்தாள்.

சித்திராவும் அலுப்பின்றி தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டாள்.

சிவம், மங்களா, சுகுணன் ஆகியோரின் அணிகளுக்கு இரண்டு நாட்களாக எந்தப் பணியும் வழங்கப்படவில்லை. அவர்களை நன்றாக ஓய்வெடுக்கும்படி கட்டளையிடப்பட்டது.

அந்த ஓய்வு உண்மையிலேயே அவர்களுக்கு ஒரு தண்டனை போலவே தோன்றியது. அவர்கள் அடிக்கடி கேள்விப்படும் செய்திகள் நம்பமுடியாதவையாகவும் குழப்பம் தருவனவாகவுமே விளங்கின.

இயக்கம் ஒரு புறம் மல்லாவி வரையும் மறுபுறம் புளியங்குளம் வரையும் பின்வாங்கிவிட்டது என்ற செய்தியை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

சுகுணன் கேட்டான், “சிவமண்ண.. இப்பிடியே தொடர்ந்து பின்வாங்கிக் கொண்டு போனால் என்ன நிலைமை?”

“ஓம்  எனக்கும் அதுதான் மனசுக்குள்ளை ஒரே குழப்பமாய்க் கிடக்குது”, என்றாள் மங்களா.

சிவம் மெல்லச் சொன்னான், “என்னாலையும் இப்பிடியான பின்வாங்கலை ஏற்கத்தான் முடியாமல் இருக்குது.. ஆனால்…”

“ஏன் நிப்பாட்டிட்டீங்கள். சொல்லுங்கோ!” என்றாள் மங்களா.

“ஜெயசிக்குறுவிலை எவ்வளவோ இழப்புகளைச் சந்திச்சும் மாங்குளம் மட்டும் பின்வாங்க வேண்டி வந்தது. பிறகு ஓயாத அலையளிலை விட்ட இடங்களை மட்டுமில்லை புது இடங்களையும் பிடிச்சம். ஆனையிறவுப் படைத்தளத்தையும் தகர்த்தம்”, என்று கூறி நிறுத்திவிட்டு அவர்களின் முகத்தைப் பார்த்தான் சிவம்.

அப்போது திடீரென சிவத்தின் வோக்கி இயங்க ஆரம்பத்தது.

“ம். வேலை ஏதோ வந்திட்டுது”, என மகிழ்ச்சியுடன் கூறியவாறே சிவம் வோக்கியை நோக்கிப் போனான்.

-தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்-

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*