bookebaylow

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 48

அன்றும் சுந்தரம் வித்துடல் அஞ்சலி மாவீரர் துயிலும் இல்லப்பணிகள் என போராளிகளுடன் இணைந்து சகல வேலைகளையும் முடித்துவிட்டு வந்த போது நேரம் எட்டுமணியைத் தாண்டிவிட்டது. அன்று 32 வித்துடல்கள் வந்திருந்தன. ஒவ்வொரு நாளும் வரும் வித்துடல்களின் தொகையைப் பார்க்கும் போது அவர்களின் இடத்தைத் தங்களைப் போன்றவர்களே இட்டு நிரப்ப வேண்டும் என்ற எண்ணத்தை அது மேலும் மேலும் வலுப்படுத்தியது. எப்படியும் திருமணம் முடித்தால் தான் தன் பெற்றோரை முத்தம்மாவின் பொறுப்பில் விட்டுப் போகலாம் என்ற நிலைமையில் அவன் அவளின் முடிவை அறியத் தவித்தான். அவளோ அவனை இயன்றவரை சந்திப்பதைத் தவிர்த்து வந்தாள்.

சுந்தரம் குளித்துவிட்டு வந்து தாயிடம், “என்னம்மா கறி?”, எனக் கேட்டான்.

“முயல் கறி.. சாப்பாடு போடுறன் வா”, என்றாள் அவள்.

முதல் நாள் முருகர் கட்டுக்கம்பி வாங்கிச் சுருக்குவலை செய்து கொண்டிருந்தது அவன் நினைவுக்கு வந்தது. அவரின் வேட்டை நாயையும் வேட்டைத் துவக்கையும் பாலம்பிட்டியில் விட்டுவிட்டு வந்த போதிலும் அவரின் வேட்டைப் புத்தி இன்னும் மாறவில்லை என அவன் நினைத்துக் கொண்டான். ஓரிரண்டு நாட்களில் திரும்பிவிடலாம் என்ற நம்பிக்கையில் தான் அவர் அவற்றை அங்குவிட்டு வந்தார். இப்படி அவற்றை நிரந்தரமாகப் பிரியவேண்டி வரும் என அவர் எதிர்பார்க்கவேயில்லை.

எனினும் அவர் சளைத்துவிடவில்லை. இப்போதெல்லாம் வேலுப்பிள்ளையின் நாய்க்கு உடும்பு வேட்டை பழக்க ஆரம்பித்துவிட்டார்.

கடுகு, சீரகம், வெந்தயம் என்பனவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்ட போதிலும் பார்வதி மிகவும் சுவையாகவே முயல் இறைச்சி சமைத்திருந்தாள். சுந்தரம் சாப்பாட்டில் ஒன்றிப் போய்விட்டான்.

பார்வதி மெல்லக் கேட்டாள், “என்னடா, முத்தம்மாவுக்கு கலியாணம் பேசுறியாம்”,

சுந்தரம் நிமிர்ந்து பார்வதியின் முகத்தைப் பார்த்துவிட்டு, “ம்”, என்றான். முத்தம்மா தனது தாயிடம் தான் கதைத்தது பற்றி ஏதோ சொல்லிவிட்டாள் என்பதை அவளால் புரிந்து கொள்ளமுடிந்தது. அவன் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

“அவளுக்கு இந்தக் கரைச்சல் நேரம் கலியாணத்துக்கு என்ன அவசரம்?” பார்வதி நிதானமாகக் கேட்டாள்.

“கரைச்சல் நேரமெண்டபடியால் தான் அவசரம்”

“நீ என்ன சொல்லுறாய்?”

“அம்மா.. வீட்டுக்கு ஒருதர் இயக்கத்துக்கு போகவேண்டும் எண்ட நிலைமைதான் இப்ப இருக்கு. அவள் இப்பிடி குமர்ப்பிள்ளையாய் இருந்தால் அவள் போராடப்போகவேண்டி வரும். பிறகு பெருமாளையும் வேலாயியையும் ஆர் பாக்கிறது. ராமுவை என்ன செய்யிறது?”

“அப்பிடியே.. அப்பிடியெண்டால் உடனயே முடிக்கத்தானே வேணும்”, என ஆமோதித்தாள் பார்வதி. அப்ப எங்கை மாப்பிளை பாத்தனீ”, எனக் கேட்டாள்.

சுந்தரம் மெல்லச் சிரித்தவாறே, “இஞ்சை தான்”, என்றான்.

“இஞ்சையெண்டால்..?”

“இஞ்சையெண்டால் எங்கடை வீட்டிலை தான்”, என்றுவிட்டு பார்வதியின் முகத்தைப் பார்த்து மெல்லப் புன்னகைத்தான் சுந்தரம்.

“நீ என்னடா சொல்லுறாய்?”

“மாப்பிளை.. நான் தானெணை”, என்றுவிட்டு எழுந்து கையைக் கழுவினான் சுந்தரம்.

பார்வதி அதிர்ந்து போய்விட்டாள். பின்னால் போய் அவனிடம் சாப்பாட்டுத் தட்டை வாங்கியவாறே, “டேய்.. உது நடக்கிறது காரியமே.? அதுகள் ஆர் ஆக்களெண்டு தெரியாதே?” எனக் கேட்டாள்.

“ஏன் அதுகளும் தமிழர் தானே?”

“தமிழர் எண்டால் நாங்களும் அவையளும் ஒண்டே?”

“ஒண்டுதான் மற்ற எவையையும் விட உன்னையும் ஐயாவையும் அவள் வடிவாய் அன்போட பாப்பாள்”

“பாப்பள் எண்டதுக்காக மருமேள் ஆக்க முடியுமே?”

“ஏன் ஆக்கினால் ஆக்குப்படாதே?.. அப்பிடி ஆக்குப்படாட்டில் அவள் நாளைக்கு இயக்கத்துக்குப் போடுவள்.. பெருமாள் குடும்பத்தை நீ வைச்சுப் பார்”, என்றுவிட்டு விடுவிடென்று அப்பால் போனான் சுந்தரம்

அவன் சொன்ன கடைசி வார்த்தைகள் பார்வதியின் மனதில் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டன. முத்து சண்டைக்குப் போய் வித்துடலாக வருவதையும் தாங்கள் அழுதழுது மலரஞ்சலி செய்வதையும் அந்தக் குடும்பம் படும்பாட்டையும் அவளின் மனதால் ஏற்கமுடியவில்லை. அதற்காக ஒரு மலையகத்தை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தையும் சம்பந்திகளாக ஏற்கவும் அவளின் மனம் இடம் கொடுக்க மறுத்தது. எல்லாவற்றையும்விட பரமசிவம் இதைக் கடைசிவரை ஏற்கமாட்டார் என்றே அவள் நம்பினாள்.

சுந்தரம் அது பற்றி பெரிதாகக் கவலைப்படவில்லை. எல்லோரும் தனது விருப்பத்துக்கு இணங்கிவருவர் என்றே அவன் திடமாக நம்பினான். எனினும் இந்த விஷயத்தை முருகரப்பு மூலம் தன் தந்தையின் காதில் போடவேண்டும் என முடிவெடுத்தான்.

கடந்த மூன்று நாட்களாக முத்தம்மா சுந்தரத்தைச் சந்திப்பதைத் தவிர்த்துக் கொண்டாலும் கூட அவள் மனம் அவனின் சந்திப்பை வேண்டித் தவித்துக்கொண்டிருந்தது. தன் மனதை அடக்க அவள் பகீரதப் பிரயத்தனம் செய்த போதும் அது அவளை ஒவ்வொரு விநாடியும் துன்புறுத்திக்கொண்டேயிருந்தது. அவள் புரண்டு புரண்டு படுத்தாள். நடுச்சாமம் ஆகிவிட்டபோதிலும் தூக்கம் வர பிடிவாதமாக மறுத்தது.

வெளியே போய்நிலவில் சற்று நேரம் இருந்தால் சற்று ஆறுதலாக இருக்கும் போல தோன்றவே அவள் எழுந்து வெளியே வந்தாள்.

நிலவு அந்த முற்றத்தை ஒரு அழகாபுரியாக மாற்றியிருந்தது. முற்றத்தில் நின்ற வேப்பமர இலைகள் நிலவொளியில் பளபளப்பது போலவே அவளுக்குப்பட்டது. மெல்லிய காற்று அந்த இலைகளில் சத்தமற்ற சில அசைவுகளை ஏற்படுத்தியது.

அந்த நேரத்தில்தான் வேப்பமரத்தின் கீழ் யாரோ பாயைப் போட்டுவிட்டு படுத்திருப்பது அவளின் கண்களில் பட்டது.

அவள் மெல்ல அடிக்குமேல் அடிவைத்து அந்த உருவத்தின் அருகில் சென்றாள்.

அவள் அருகில் சென்றதும் அந்த உருவம் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்து கொண்டது. அது சுந்தரம் தான் என்பதை அவள் புரிந்துகொண்டாள்.

“ஏய் இந்தச் சாமத்திலை முத்தத்திலை என்ன செய்யிறாய்?”, என வியப்புடன் கேட்டான் சுந்தரம்.

“ஒண்டுமில்லை.. சும்மா வெளியிலை வந்தன். உங்களைக் கண்டாப்போலை…”, எனச் சமாளித்தாள் முத்தம்மா.

“மூண்டு நாள் உன்னோடை கதைக்காததை நினைக்க எனக்கு நித்திரை வர மாட்டனெண்டிட்டுது. உனக்கு ஏன் நித்திரை வரயில்லை”, எனக் கேட்டான் சுந்தரம்.

சில விநாடிகள் எதையுமே பேசாத முத்தம்மா பின்பு “எனக்கும் அப்பிடித்தான்” என தயங்கித் தயங்கிச் சொல்லி முடித்தாள்.

சுந்தரம் கையில் பிடித்து இழுத்து அருகில் அவளை அமர்த்திக் கொண்டான். பின்பு, “அப்பிடியெண்டால் ஏன் இந்த மூண்டு நாளும் எனக்குக் கிட்ட வரேல்லை? என்னக் கலியாணம்  செய்ய உனக்கு விருப்பமில்லையே?”

அவளையறியாமலே அவளின் கை அவனின் வாயைப் பொத்தியது.

பின்பு, “இல்லை.. இல்லை.. அப்பிடி இல்லை”, என்றாள்.

“அப்ப ஏன் எனக்கு கிட்ட வாறேல்லை?”

“கலியாணம் கட்டினால் நீங்கள் என்னைவிட்டிட்டு இயக்கத்துக்குப் போடுவீங்கள்”

“கலியாணம் எங்கடை காதலின்ரை தேவை! போராடுறது எங்கடை நாட்டுக்கு செய்யவேண்டிய தேவை. ஒண்டுக்காக ஒண்டை விட்டுக்குடுக்க ஏலாது”

முத்தம்மாவின் கண்கள் கலங்கின, “நீங்கள் சொல்லுறது சரி. அதைப் பிழையெண்டு எவரும் சொல்ல ஏலாது, ஆனால் கலியாணம் கட்டின உடனை புருஷனைப் பிரியிறது எந்தப் பொம்பிளையால ஏலும்?”

“சரி ஒரு மாதத்திலை பிரிவம்”

“எப்பிடியும் அதுவும் பிரிவு தானே?”

“நாளைக்கு கிபிர் அடிச்சு நானோ நீயோ செத்தாலும் அதுவும் பிரிவு தானே. அது பரிதாபமான பயன் இல்லாத பிரிவு. இது நாட்டுக்கான பெருமைக்குரிய பிரிவு”

“அப்பிடிப் பிரியிறதெண்டால் நான் போராடப் போகலாம் தானே?”

“போகலாம் பெருமாளையும் ராமுவையும் என்னாலை பராமரிக்க முடியுமே?” எனக் கேட்டுவிட்டு சுந்தரம் நிறுத்தினான்.

அவள் எதுவுமே பேசவில்லை.

“சொல்லன்”, என அவன் மீண்டும் கேட்டான்.

அவள் கண்களிலிருந்து நீர் பொலபொலவென்று வழிந்தது. அவள் கம்மிய குரலில் கேட்டாள், “வேற வழியே இல்லையோ?”

“இருந்தால் நான் ஏன் இப்பிடி ஒரு முடிவுக்கு வாறன்?”

“நம்பிக்கையாய் என்னோட ஒரு மாதம் இருப்பியளே?”

“ஓ.. நிச்சயமாய்.. ஒரு மாதத்தையும் ஒரு யுகமாய் நினைப்பம்”, என்ற சுந்தரம் அவளை இழுத்து அணைத்து இரு கன்னங்களிலும் முத்தமிட்டான். பின் “இனி நித்திரை வருமே?” எனக் கேட்டான்.

“ஒரு மாதத்தை நினைச்சால் நித்திரை வரும்! அதுக்குப் பிறகான நாட்களை நினைச்சால் அழுகை வரும்” என்றுவிட்டு எழுந்தாள் முத்தம்மா.

“இல்லை..  பெருமை வரும்”, என்றுவிட்டு அவளுக்கு விடை கொடுத்தான் சுந்தரம். அவன் கொடுத்த முத்தங்கள் அவளின் குழப்பங்களை விரட்டி மனதில் ஒருவித ஆறுதலைக் கொடுத்ததை அவள் உணர்ந்து கொண்டாள்.

சிவம், மங்களா, சுகுணன் ஆகியோரின் அணிகள் பின்னால் எடுக்கப்பட்டுவிட்டன. இப்போ பறங்கியாற்றின் கரையோரமாக நிலத்தடி பதுங்குகுழிகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த இரும்பு பாலத்தை விட இலுப்பைக்கடவையை நோக்கி முன்னகர வேறு வழிகள் இல்லை. படையினரோ அல்லது டாங்கிகள், கவசவாகனங்களோ பறங்கியாற்றுக்குள் இறங்கித்தான் அதைக் கடக்க வேண்டும். ஆற்றுக்குள் வைத்தே அவர்களை அழித்துவிடும் வகையில் போராளிகளின் நில மட்டத்திலான காவலரண்களும் பாம்பு பங்கர்களும் அமைக்கப்பட்டிருந்தன.

பள்ளமடு, ஆட்காட்டி வெளி, சன்னார் காவல் வேலியை விட இந்த இடம் போராளிகளுக்கு மிகவவும் சாதகமாக அமைந்திருப்பதாகவே சிவத்துக்குத் தோன்றியது.

ஆனால் அங்கு காவலரண்களில் வேறு அணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. சங்கீதாவின் மகளிர் அணியும், நித்தியின் அரசியல் படையணியும் கடற்கரைப் பக்கமாக மாயவனின் கடற்புலிகள் அணியும் நிறுத்தப்பட்டிருந்தன. ஓயாத அலைகள் நான்கு இடம்பெற்ற போது சங்கீதாவின் அணியும் சாவகச்சேரியை கைப்பற்றிய அணிகளில் ஒன்றாகும்.

சிவத்தைக் கண்டுவிட்டு சங்கீதா அருகில் வந்தாள்.

“சிவமண்ணா.. பண்டிவிரிச்சான், பள்ளமடுவெல்லாம் உங்கடை சண்டையைப் பற்றி எல்லாரும் அந்தமாதிரிக் கதைக்கினம்” என்றாள் அவள்.

அருகில் நின்ற மலையவன், “என்ன நாங்கள் இடங்கள ஆமியிட்ட பறிகுடுத்திட்டு வந்ததைப் பற்றியோ?” என்று கேலியுடன் கேட்டான்.

“மலையவண்ணா! சில தந்திரோபாயப் பிரச்சினையைளுக்காக கட்டளை பீடம் பின்வாங்கச் சொல்லேக்க பின்வாங்கிறது தோல்வியில்லை” என்றாள் சங்கீதா.

“என்னவோ! எவ்வளவோ போராளியளைப் பலி கொடுத்து தக்க வைச்ச இடங்களை விட்டு விலகிறது மனதுக்குச் சரியான கஷ்டமாய்த் தான் இருக்குது”, எனச் சிவம் பெருமூச்சுடன் சொன்னான்.

“அண்ணா! யோசிக்காதேங்கோ ஒரு கிழமையுக்கை நாங்கள் அந்த இடத்தை மீட்டுத்தாறம்!”, என்றாள் சங்கீதா உறுதியான குரலில்.

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் ஒரு போராளி வந்து,

“அண்ணா! வாகனங்கள் வந்திட்டுது, வரட்டாம்”, என்றான்.

சிவமும், மலையவனும் சங்கீதாவிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டனர்.

-தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்-

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*