nkna

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 47

யோசப் குறிப்பாக அந்தப் பெண்ணை ஏன் அழைத்தார் என்பதை அருட்சகோதரரால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனினும் அந்த மக்கள் யோசப்பை மிகவும் மதித்தனர் என்பதை அவர் அறிந்திருந்தார்.

அருகில் வந்த அந்தப் பெண்ணிடம் யோசப், “றோசம்மா.. நீங்கள் ஏன் மடுவுக்கு வந்தனீங்கள்”, எனக் கேட்டார்.

அவள் தயங்கியபடி, “யாழ்ப்பாணத்திலை இருக்க முடியாமல் தான்”, எனப் பதிலளித்தார்.
“ஏன், அப்பிடி என்ன பிரச்சினை?”

“வெள்ளை வானில வந்தவங்கள் என்ரை புருஷனை வீட்டு முத்தத்திலை வைச்சு சுட்டுப்போட்டு போட்டாங்கள். பிறகு ஒரு நாள் வந்து மகனைக் கொண்டு போனாங்கள். இண்டைக்கு வரைக்கும் எங்கயெண்டு இல்ல. இந்தப் பொம்பிளைப் பிள்ளையயாவது காப்பத்துவம் எண்டு தான் மடுவுக்கு ஓடி வந்தம்”

யோசப்பு இறுக்கமான குரலில் கேட்டார், “தொண்ணூற்றைஞ்சாம் ஆண்டு சூரியக்கதில் நடவடிக்கையில நீங்கள் ஐஞ்சு இலட்சம் பேர் உயிரைக் காக்க தென்மராட்சிக்குப் போனியள். பிறகு இராணுவத்தின்ரை பசப்பு வாத்தையள நம்பி பிறகும் யாழ்ப்பாணம் போனியள். பலன் புருஷனை பலிகுடுத்தாய், மகனை எங்க எண்டு தெரியாமல் தவிக்கிறாய், இப்ப மடு இராணுவத்தின்ரை கட்டு்பபாட்டிலை. அங்கை போய் இந்தப் பொம்பிளைப் பிள்ளையையும் பலி குடுக்கப் போறியே?”

றோசம்மா தயக்கத்துடன், “எப்பிடியும் மாதா எங்களைக் காப்பாத்துவா எண்டு தான்…”, என இழுத்தாள்.

“மாதா உங்களைக் காப்பாத்துறதுக்காகத் தான் தானும் உங்களோட இடம்பெயர்ந்து இஞ்சை வந்தவா.. நீங்கள் அதை மீறித் திரும்பிப் போகப் போறியளே?”

றோசம்மா எதுவுமே பேசாது தலையைக் குனிந்துகொண்டாள்.

அங்கு நின்றவர்களிடம் ஒரு நிர்மலமான அமைதி நிலவியது.

இப்போது அருட்சகோதரர் பேச ஆரம்பித்தார்.

“நீங்கள் எல்லாருமே வவுனியா, யாழ்ப்பாணம், மன்னார் எண்டு இராணுவக்கட்டுப்பாட்டுக்கை இருக்க முடியாமல் தான் மடுவுக்கு வந்தனீங்கள். நீங்கள் திரும்பவும் அவங்களிட்டைப் போய் பலியாகக் கூடாது எண்டது தான் மாதாவின்ர விருப்பம். மாதா சொரூபம் மடுவுக்குப் போனாலும் மாதா நீங்கள் எங்கை போனாலும் உங்களோட தான் இருப்பா”

அங்கு நின்ற ஒரு பெரியவர், “நாங்கள் போகேல்ல”, என்றார். இன்னும் பலரும் தாங்கள் போகவில்லை என்பதை தெரிவித்தனர்.

யோசப், “சரி எல்லாரும் மூட்டை முடிச்சுக்களை கொண்டுபோய் வைச்சிட்டு வாங்கோ. மாதாவை வழியனுப்பி வைப்பம்”, என்றார்.

எல்லோரும் மாதாவை ஆராதித்துக் கண்ணீருடன் வழியனுப்பிவைத்தனர்.

அங்கு நின்ற ஒரு முதிய குருவானவர், “பிள்ளையளே கவலைப்படாதேயுங்கோ.. கெதியிலை ஒரு சுதந்திர தேசத்தில் நீங்கள் மாதாவை தரிசிக்கலாம்” என்று சாந்தமுடன் கூறினார்.
அந்த வார்த்தைகள் சில பெண்களை விம்மியழ வைத்துவிட்டன.

அதிகாலை ஐந்து மணி தொடக்கம் மாலை ஐந்து மணிவரை எந்த வித தாக்குதல்களையும் நடத்த வேண்டாம் என சிவத்துக்கும் கட்டளை பீடத்திலிருந்து உத்தரவு வந்திருந்தது. காலை ஆறு மணியளவில் குருவானவர்கள் மூன்று வாகனங்களுடன் இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதியிலிருந்து வந்த போது தான், மாதாவைத் திரும்பவும் மடுவுக்குக் கொண்டு வரப் போகின்றனர் என்பது தெரியவந்தது.

வழமையாகப் பதினொரு மணிக்கே கால்நடையில் கொண்டுவரப்படும் காலைச் சாப்பாடு அன்று எட்டு மணிக்கே வந்துவிட்டது. போராளிகளும் எவ்வித அச்சமுமின்றி அன்று நிம்மதியாகச் சிரித்துப் பேசி சாப்பிட்டனர்.

மதியம் வலைப்பாடு, மூன்றாம்பிட்டி மீனவர்களின் ஏற்பாட்டில் எல்லா அணிகளுக்கும் கூழ் அனுப்பப்பட்டது.

மதியம் இரண்டு மணியளவில் மாதா சொரூபம் பள்ளிமுனை எல்லைக்கு வந்து சேர்ந்தது. போராளிகள் சுற்றி நின்று வழியனுப்பி வைத்தனர்.

இவ்வாறு மாதாவின் பயணம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது இராணுவத்தினர் அந்தப் போரில்லாத மணித்தியாலங்களை தமக்கும் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டனர்.
பெரியவலையன் கட்டிலிருந்து புறப்பட்ட ஒரு பெரும் இராணுவ அணி பறங்கியாற்றின் கிழக்குப் பக்கமாக ஆற்றுக்குச் சமாந்தரமாக காட்டுப்பகுதியினூடாக முன்னேறியது. பெரியமடுவுக்கு வட கிழக்கு திசையில் காட்டுக்குள் ஆற்றின் மறு கரையில் நிலை எடுத்துக் கொண்டது அந்தப் படையணி. அறுபது மி.மீ. எறிகணைகளும், தொலைதூரம் சுடும் துப்பாக்கிகளும் மட்டுமே அவர்கள் கொண்டுவந்திருந்தனர். அது போராளிகள் எதிர்பாராத ஒரு களமுனையாகும்.

போராளிகள் பெரியமடுவின் தென் பகுதியிலும், பாலியாற்றுப் பக்கமாக கிழக்குப் பகுதியிலுமே காவல் நிலைமைகளைப் பலப்படுததியிருந்தனர். வடக்கிலோ வட கிழக்கிலோ படையினர் வருவதற்கான சாத்தியம் இல்லையென்றே அவர்கள் நம்பியிருந்தனர்.

சரியாக ஐந்து மணிக்குப் போராளிகள் முற்று முழுதான தயார் நிலைக்கு வந்துவிட்டனர். எனினும் தாக்குதல் எதுவும் இடம்பெறவில்லை.

ஆனால் பாலியாற்றின் மறுகரையில் நிலையெடுத்திருந்த படையினர் இரவோடிரவாக ஆற்றைத் தாண்டி எதிர்க்கரையில் பற்றைகள், மரங்கள் மத்தியில் பதுங்கிக்கொண்டனர்.
சுகுணனின் அணியினர் சற்றும் எதிர்பாராத முனையாகவே அது அமைந்திருந்தது. இவ்வளவு தூரம் சுற்றி அவர்கள் நகர்வார்கள் என எப்படித்தான் எதிர்பார்க்க முடியும்?

அதிகாலை கிழக்கு வெளுத்துக் கொண்டிருந்த போது தட்சிணாமருதமடுப் பக்கமாக எறிகணைகள் உட்பட படையினரின் முன்னேற்ற முயற்சி ஆரம்பமாகியது. அதேவேளையில் கிழக்குப் பக்கமாகவும், வடகிழக்குப் பக்கமாகவும் தாக்குதல்கள் ஆரம்பமாகிவிட்டன.

தாங்கள் மூன்று பக்கங்களினால் சுற்றி வளைக்கப்பட்டதையும் சுகுணன் புரிந்து கொண்டான். உடனடியாகவே அணியை மூன்றாகப் பிரித்து மூன்று திசைகளிலும் பதில் தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தனர். எனினும் பாலியாற்றைக் கடந்து வந்த இராணுவம் கணிசமான தூரம் முன்னேறிவிட்டது.

எனினும் போராளிகளும் சளைத்துவிடவில்லை. சுகுணன் கட்டளைப் பீடத்திற்கு நிலைமையை அறிவித்துவிட்டு எதிர்த்தாக்குதலை நெறிப்படுத்தினான்.

சமகாலத்தில் சன்னார், ஆட்காட்டிவெளி, பள்ளமடு என பல பக்கங்களாலும் படையினர் தாக்குதல்களை ஆரம்பித்துவிட்டனர். அன்று காலை எல்லா முனைகளிலும் சண்டை உக்கிரமாக நடைபெற்றது.

வட கிழக்குப் பக்கமாக வந்த இராணுவ அணியினர் ஒரு பகுதி பள்ளமடு நோக்கி நகர இன்னுமொரு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து சன்னாருக்கும் பள்ளமடுவுக்குமுள்ள போராளிகளின் தொடர்பை உடைக்க முயன்றது. மங்களாவின் அணி அதைத் தடுக்க கடுமையாகப் போரிட்டது.

அவர்களும் முன்னுக்கும் பின்னுக்குமாக இரு முனைகளில் போராட வேண்டியிருந்தது.
கடற்புலிகள் தமது தளத்தை மூன்றாம்பிட்டிக்கு பின்நகர்த்திவிட்டதால் சிவத்தின் அணியும் விடத்தல் தீவையும் பள்ளமடுவையும் ஒரே நேரத்தில் பாதுகாக்க வேண்டியிருந்தது. எனினும் கடற்புலிகள் கடலில் நின்று பீரங்கிக் படகுகள் மூலம் சிவத்துக்கு உதவி வழங்கிக்கொண்டிருந்தனர்.

மங்களாவின் அணி இப்போ இரண்டு பக்கங்களில் போராடவேண்டியிருந்தது. ஒரு புறம் ஆட்காட்டிவெளி, பரப்புக்கடந்தானால் முன்னேற முயலும் படையினரையும் பின்புறமாக பெரியமடு, பள்ளமடு வீதியை நெருங்கும் படையினரையும் தடுத்து நிறுத்தப் போராடவேண்டியிருந்தது.

மங்களாவின் அணி பின்வாங்கினால் தாங்கள் நாலுபுறமும் சுற்றிவளைக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்படும் அபாயம் இருப்பதால் தெற்கில் பாதுகாப்புத் தாக்குதலை நடத்திக்கொண்டு வடக்கில் ஒரு அதிரடித் தாக்குதலுக்கு தனது அணியைத் தயார்ப்படுத்தினான்.
அந்த நேரத்தில் சுகுணனுக்கு உடனடியாக சன்னாரை நோக்கிப் பின்வாங்கி மங்களாவின் அணியுடன் இணையும்படி உத்தரவு வந்தது. மங்களாவுக்கும் சுற்றி வளைப்பை உடைத்து அரசியல்த்துறைப் படையணி பின்வாங்கப் பாதை ஏற்படுத்திக் கொடுக்கும்படி கட்டளை வந்தது.
ஒரு பெரும் சுற்றிவளைப்பை மேற்கொண்டு ஒரு போராளிகளின் அணியையே முற்றாக அழித்துவிடும் நோக்கில் போரிட்டுக்கொண்டிருந்த இராணுவம் முன்னும் பின்னும் ஒரே நேரத்தில் அதிரடித் தாக்குதல் நடத்தவே திணறிப்போய்விட்டது.

மகளிர் அணியும் அரசியல்த்துறைப் படையணியும் இழப்புக்களைப் பொருட்படுத்தாமல் கர்ணகடூரமாகப் போரிட்டனர். வீரச்சாவுகள் அதிகரித்த போதும் போராளிகளின் தாக்குதல் மேலும் மேலும் உக்கிரமடையத் தொடங்கியது.

படையினரின் சாவுகள் வேகமாக அதிகரிக்கத் தொடங்கின. சுற்றி வளைக்க வந்த படையினர் இறந்தவர்களின் உடல்களையும் விட்டுவிட்டு பின்வாங்கத் தொடங்கினர். அவர்களை விரட்டி பாலியாறு மட்டும் பின்தள்ளிக் கொண்டுபோய்விட்டாள் மங்களா.

அரசியல்துறைப் படையணியுடன் மோதி முன்னேறும் இராணுவம் திசையை மாற்றி தென்புறமாக இறங்கினால் மங்களாவின் அணி சுற்றிவளைக்கப்பட்டுவிடுமாதலால் உடனடியாக சன்னாருக்குப் பின்வாங்கும்படி கட்டளை வந்தது.

பெரியமடு முழுமையாக இராணுவத்திடம் விழுந்துவிட்ட நிலையில் சன்னாரை மையமாக வைத்து அரசியல்துறை படையணியும் மகளிர் அணியும் இணைந்து தடுப்புப் போரை நடத்திக் கொண்டிருந்தன. சிவம் படையினரைச் சிறிது தூரம் முன்னேற விட்டு சண்டையை மிகவும் நெருக்கமாகவே நடத்தினான். அப்படி இல்லையேல் விமானத் தாக்குதலிலும், எறிகணைகளிலும் பெரும் இழப்புக்களைச் சந்திக்க வேண்டிவரும்.

எனினும் டாங்கித் தாக்குதல்களுக்கு முகம் கொடுத்தே போராட வேண்டியிருந்தது. ஆர்.பி.ஜி. அணி மிக விழிப்புடன் செயற்பட்ட போதும் டாங்கிகள் முன்னேறித் தாக்குவதும் பின்வாங்குதுமாகத் தொல்லை கொடுத்துக்கொண்டிருந்தன.

மாலை நான்கு மணி வரை சண்டை எல்லா முனைகளிலும் ஓயாமல் தொடர்ந்து கொண்டிருந்தது. போராளிகள் உணவு எடுக்கக்கூட நேரமின்றிப் போரிட்டுக்கொண்டிருந்தனர்.
திடீரென சண்டையிட்டவாறே பதினைந்து நிமிடங்களுக்குள் முந்நூறு யார் பின்வாங்கும்படி சகல களமுனைகளுக்கும் தலைமையிலிருந்து கட்டளை பிறந்தது.

சிவம் 60மி.மீற்றர் உந்துகணையினையும், தொலைதூரத் துப்பாக்கிகளையும் பாவித்து தாக்குதல் நடத்தியவாறே படையணியை பின் நகர்த்தினான். மங்களாவும் சுகுணனும் கூட தங்கள் அணிகளை பின்பக்கமாக நகர்த்தினர்.

அவர்கள் பின்வாங்கி முடித்த கையுடனேயே படையினரை நோக்கி எறிகணைகள் மழைபோலப் பொழிய ஆரம்பித்தன. படையினர் அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
எதிர்ப்பக்கத்தில் நடப்பதைப் போராளிகள் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு நூற்றுக்கணக்கில் விழுந்து கொண்டிருந்த எறிகணைகள் பெரும் புகை மண்டலத்தை எழுப்பிவிட்டன.

மூன்றாம்பிட்டியிலிருந்து பீரங்கிப் படகுகளின் தாக்குதல்களும் சரமாரியாக நடத்தப்பட்டன. சில ஆட்டிலறி எறிகணைகள் தள்ளாடி முகாமுக்குள்ளும் போய் விழுந்தன.
மாலை ஆறு மணியளவில் சகல போராளிகளின் அணிகளையும் இலுப்பைக் கடவைக்குப் பின்வாங்கும்படி கட்டளை வந்தது.

அன்று மாலையுடன் களமுனை போராளிகளுக்கு சாதகமாக மாறும் எனவும் ஒரு அதிரடித்தாக்குதல் மூலம் மீண்டும் பெரியமடுவைக் கைப்பற்றி விடலாம் எனவும் எதிர்பார்த்த சிவத்துக்கு அந்தக் கட்டளை பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

-தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்-

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*