vp13

வலிசுமந்த பதிவுகள்- 13 (வெறுமை)

18-05-2009 அன்றையநாட்பொழுதும் புலர்ந்தது. காலையிலேயே கதிரவன் தனது கடமையை நிறைவாகச்செய்யத் தொடங்கியிருந்தான். நாங்களும் படையினரால் மேற்கொள்ளப்படுகின்ற உடற்சோதனைகளுக்குச் செல்வதற்கான வரிசையில் சேர்ந்துகொண்டோம். அந்த மக்களின் வரிசை மிகவும் நீண்டிருந்தது. நாங்கள் பின்வரிசையிலேயே நின்றிருந்தோம்.

எறும்புக்கூட்டம் நகர்கின்ற வேகத்திலும் குறைவான வேகத்திலேயே இந்த மக்கள்வரிசை நகர்ந்துகொண்டிருந்தது. கதிரவனும் எம்மக்கள்மீது கருணைகாட்டவில்லை. தனது வெப்பக்கதிர்களை பாரெங்கும் அள்ளிவீசினான். அந்த முல்லைத்தீவுக்கரைச்சிவெட்டையில் எங்காவது ஒருசிறுநிழல்கூடக்கிடைக்காதா என்று எனது மனம் அங்கலாய்த்துக்கொண்டிருந்தது.

சுற்றுமுற்றும் அவதானித்தேன். ஆனால் எனக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. வெப்பமிகுதியால் உடலெங்கும் வியர்த்தொழுகியதோடு நாவு தொண்டை வரண்டு தண்ணீர்த்தாகம் எடுத்தது. தொடர்ச்சியாக நிற்கவும் கால்கள் கடுக்கின. யாராவது தண்ணீர் வைத்திருந்தால் சொட்டுத்தண்ணீர் வாங்கி நாக்கையும் தொண்டையையும் ஈரமாக்கிக்கொள்வோம் என்று எனக்குள் எண்ணிக்கொண்டு சனக்கூட்டத்தைப்பார்த்தபடியே சிறிதுதூரம்வரையிலும் நடந்துசென்றேன்.

அப்போது முட்கம்பிவேலியின் உட்புறமாக நின்றபடி ஆண்கள் சிலர் கைகளில் வெற்றுப்போத்தல்களைக் காட்டியவாறு படையினரைப்பார்த்து “சேர் சேர் வத்துறு வத்துறு மாத்தயா மாத்தயா வத்துறு வத்துறு” என்று கெஞ்சிக்கொண்டிருந்தார்கள். ஓரிரு படையினர்கள் அவர்களிடம் அந்தப் போத்தல்களை வாங்கி தண்ணீர் எடுத்துக் கொடுத்தார்கள். மற்றையபடையினர்கள் அவர்களின் கெஞ்சுதல்களை செவிகளில் வாங்கிக் கொள்ளாதவர்கள் போல அப்பாற்சென்றார்கள்.

படையினரிடம் தண்ணீர் வாங்கியவர்கள் உடனேயே சனக்கூட்டத்தில் கலந்துவிட்டார்கள். தண்ணீர் வாங்கிக் குடிக்கும் எனது எண்ணமும் ஈடேறாமல்ப் போயிற்று. மீண்டும் வந்து வரிசையில் இணைந்துகொண்டேன். வாட்டிவதைக்கும் உச்சிவெயில்நேரத்தில் குறிப்பிட்டநேரத்திற்கு வரிசை நகராமல் நின்றது. பசி தாகம் வெயில்வெப்பம் என்பன ஒருங்கே வாட்டியெடுக்க நிறபதற்குக்கூட வலுவில்லாமல் தோளில் போட்டிருந்த சாரத்தை எடுத்து தலையைமூடிக்கொண்டு அப்படியே அந்தக்கட்டாந்தரையில் சுருண்டு படுத்துவிட்டேன்.

நான் அணிந்திருந்த சாரம் சேட் மற்றும் தோளில் போட்டிருந்த மற்றுமோர் சாரம் என்பவற்றைத் தவிர வேறு எந்தவிதமான உடமைகளும் என்னிடம் இருக்கவில்லை. நான் மேமாதம் 12-ம் திகதி வெள்ளாம்முள்ளிவாய்க்காலில் காயப்பட்ட சந்தர்ப்பத்தில் எனது உடமைபாக்குகள் அனைத்தும் கைவிடப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

என்னைப்போலவே வரிசையில் நின்றிருந்த இன்னும் பலரும் உடற்சோர்வினால் அந்தக்கட்டாந்தரையில் சுருண்டுபடுத்திருந்தார்கள். அப்போது முட்கம்பிவேலிப்பக்கமாக சனக்கூட்டம் நெரிபட்டுக்கொண்டிருந்ததை அவதானிக்கமுடிந்தது. என்னவென்று விசாரித்தபோதுதான் படையினர் வாகனம் ஒன்றில் தண்ணீர்ப்போத்தல்கள் மற்றும் பிஸ்கற்பைக்கற்றுக்கள் என்பவற்றைக்கொண்டுவந்து முட்கம்பிவேலிக்கு உட்புறமாக எறிந்துகொண்டிருக்கிறார்கள் எனவும் அவற்றை எடுப்பதற்காகவே மக்கள் முண்டியடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அறிந்தோம்.

ஆனாலும் வாகனத்தில் கொண்டுவரப்பட்ட தண்ணீர்ப்போத்தல்களும் பிஸ்கற்பைக்கற்றுக்களும் குறிப்பிட்ட ஒருதொகுதிமக்களுக்கு மட்டும்தான் கிடைத்திருந்தது. மற்றவர்கள் ஏமாற்றத்துடனேயே திரும்பினார்கள்.

குறிப்பிட்டநேரத்தின்பின்னர் மக்கள்வரிசை நகரத்தொடங்கியது. இவ்வாறு நகர்வதும் நிற்பதும் நகர்வதுமயச்சென்றுகொண்டிருந்த மக்கள்வரிசையுடன் நாங்களும் மெல்லமெல்ல நகர்ந்துகொண்டிருந்தோம். பொழுதுசாய்ந்து இருள்கவியத்தொடங்கியவேளையில் நாங்கள் முட்கம்பித்தடைவேலியை அண்மித்திருந்தோம். மக்கள் உள்நுழைகின்றபாதையிலும் முட்கம்பிச்சுருள்கள் போடப்பட்டிருந்தன.

அந்தக்கம்பிச்சுருள்களைக்கடந்துதான் உட்செல்லவேண்டும். பாதணிகள் இல்லாத கால்களுடன் முட்கம்பிச்சுருட்தடைகளைக்கடப்பதற்கு கடினமாகவேயிருந்தது. உடுத்திருந்த உடைகளிலும் முட்கம்பிகள் கொழுவின. இரண்டுபடையினர்கள் கால்களில் இராணுவச்சப்பாத்துக்கள் அணிந்து நின்றுகொண்டு மக்கள் முட்கம்பிச்சுருள்களைக்கடப்பதற்கு உதவிபுரிந்துகொண்டிருந்தார்கள்.

இவ்வாறு கம்பிச்சுருள்களைக்கடந்து அப்பாற்சென்றால் பனங்குற்றிகள் மற்றும் மண்மூட்டைகள்கொண்டு அமைக்கப்பட்ட படையினரின் பலமான காப்பரண்கள் காணப்பட்டன. அங்குதான் உடற்சோதனை மற்றும் உடமைச்சோதனைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. பெண்களுக்கான சோதனைகளை பெண்படையினர்கள் வேறானகாப்பரண்களில் மேற்கொண்டிருந்தார்கள்.

நாங்களும் கம்பிச்சுருள்களைக் கடந்து காப்பரண்களை அண்மித்தபோது எங்களைப் போன்ற இளைஞர் யுவதிகளைப் பார்த்து படையினர்கள் “நீ எல்ரிரி நீ எல்ரிரி” என்று அதட்டியும் மிரட்டியும் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு படையினன் என்னைப் பார்த்து “நீ எல்ரிரி” என்றுகூறி சிங்களத்திலும் கொச்சைத் தமிழிலுமாக தகாத வார்த்தைகளால் ஏசினான்.

கையில் வைத்திருந்த மரக்கொட்டானால் எனக்கு அடிக்க ஓங்கினான். நான் எதுவும்பேசாமல் மௌனமாக நின்றேன். அதட்டல்கள் மிரட்டல்கள் கெட்டவார்த்தைப்பிரயோகங்கள் போன்ற இம்சைகளையடுத்து நானும் உடற்சோதனைக்காக காப்பரணிற்கு உள்ளேசெல்ல அனுமதிக்கப்பட்டேன். காப்பரணிற்கு உள்ளேசென்ற என்னை நான் அணிந்திருந்த சாரத்தையும் சேட்டையும் கழற்றச்சொன்னார்கள். நானும் அவற்றைக்கழற்றினேன்.

பின்னர் அதுவும் போதாதென்று எனது உள்ளாடையையும் கழற்றச் சொன்னார்கள். வேறு வழியில்லாமல் அதையும் நான் கழற்றினேன். ஒருமனிதன் எதை இழக்கக்கூடாதோ அந்த மானத்தையும் நான் அன்று இழந்தேன். எனது நிர்வாணக் கோலத்தைப்பார்த்து சிங்களப் படையினர்கள் எக்காளமிட்டுச் சிரித்தார்கள்.

சிங்களப் படையினரது மனிதநேயம் எத்தகையது என்பதை நான் அந்தக் கணப்பொழுதில் புரிந்துகொண்டேன். பின்னர் எனது ஆடைகளை அணியச் சொன்னதையடுத்து நானும் ஆடைகளை அணிந்துகொண்டேன். உடற்சோதனை முடிந்தவர்கள் வீதியோரமாக வரிசையில் இருத்தப்பட்டிருந்தார்கள். நானும் உடற்சோதனை முடிந்து வீதிக்குச் சென்றுகொண்டிருக்கையில் வைத்தியகலாநிதி பத்மலோஜினிஅன்ரியைக்கண்டேன்.

பத்மலோஜினிஅன்ரி படையினரைப் பார்த்து கஸ்பன்ற் எங்கே என்று கேட்கவும் அதற்கு படையினர் “அன்ரி கஸ்பன்ற் பொடிச்செக்கிங்கிக்குப் போய்விட்டார்” என்று சொன்னதும் எனது செவிகளில் தெளிவாகக்கேட்டது. அவரது கஸ்பன்ற்தான் முன்னாள் மட்டு-அம்பாறைமாவட்ட சிறப்பு அரசியல்ப் பொறுப்பாளரும் பின்னைய நாட்களில் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனப் பொறுப்பாளருமாகிய திரு கரிகாலன் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

இன்று வைத்தியகலாநிதி பத்மலோஜினிஅன்ரியும் அவரது கணவர் கரிகாலன்அண்ணாவும் படையினரிடம் சரணடைந்து காணாமல்ப் போய்விட்டார்கள். ஆனால் இவர்கள் இருவரும் படையினரிடம் சரணடைந்ததற்கு நானும் சாட்சியாகவுள்ளேன். அன்ரியையும் அவரைச் சூழ சில படையினர்களும் நின்றதை நான் அவதானித்திருந்தேன். இருப்பினும் அவ்விடத்தில் ஒருநொடிப்பொழுதும் நான் நின்று தாமதிக்காமல் வீதிக்கு வந்து வரிசையில் அமர்ந்திருந்த மக்களுடன் நானும் சேர்ந்துகொண்டேன்.

நீண்டநேரத்திற்குப்பின்னர் உடற்சோதனைகள் மற்றும் உடமைச்சோதனைகள் முடிந்தவர்கள் அனைவரையும் வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரச பேரூந்துகளில் ஏற்றினார்கள். மூச்சுவிடக்கூட முடியாதளவிற்கு பேரூந்துகளில் ஆட்களை ஏற்றி அடைந்தார்கள். இவ்வாறு அளவுக்கதிகமான ஆட்களை ஏற்றிய பேரூந்துகள் ஆயுதம்தாங்கிய படையினர்களின் பாதுகாப்புடன் வவுனியா – ஓமந்தையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தன.

19-05-2009   பொழுது புலரும் காலைப்  பொழுதில் பிரதானவிதியின் இரண்டுபக்கங்களிலும் பச்சைப் பசேலென்ற பற்றைகளையும் புல்வெளியையும் அதற்கு அப்பால் உயர்ந்த அடர்ந்த மரங்களையும் கொண்ட இடத்தில் நாங்கள் நின்றிருந்தோம். வீதியின் முன்புறமாகவும் பின்புறமாகவும் கண்ணுக் கெட்டிய தூரம் வரையிலும் நிண்டவரிசையில் பேரூந்துகள் நின்றிருந்தன.

மேலும் பல பேரூந்துகள் வந்து ஒன்றன் பின் ஒன்றாகஅணி வகுத்து நிற்க அவற்றிலிருந்தும் கூடுதலான மக்கள் வந்திறங்கினார்கள். வீதியோர மரங்களுக்கு கீழ் மக்கள் கூட்டம் கூட்டமாகக் கூடிநின்று கதைத்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் புற்தரை வெளியிலிருந்து சுமார் மூன்று கிலோமிற்றர் தூரத்திற்கு அப்பாலேயே படையினரின் ஓமந்தை தடைமுகாம் அமைந்திருந்தது. அடுத்த கட்டமாக ஓமந்தை தடைமுகாமிற்குள் செல்வதற்காகவே பல ஆயிரக்கணக்கான மக்களும் அங்கு காத்துக் கிடந்தார்கள்.

அந்தப் புற்தரையில் மரங்களுக்குக் கீழ் பெரிய சிமெந்துக் கட்டுக் கிணறு ஒன்று அமைந்திருந்தது. மூன்று அல்லது நான்கு நாட்களாகஇடப்பெயர்வினால் ஏற்பட்ட உடற்களைப்பு உடற்சோர்வு என்பவற்றைப் போக்கஆண்கள் பெண்கள் சிறுவர்களென அந்தக் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் புல்வெளியில் ஏதிலிகளாக வந்திருந்தஆயிரக்கணக்கான மக்களுக்கும் குளித்து உடை மாற்றுவதற்கான சூழல் இருந்திருக்க வாய்ப்பில்லை.

அந்தக் குளிர்ச்சியான தண்ணீரில் குளித்தபோது அது அவர்களுக்குள் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கவேண்டும். ஏனக்குதண்ணீர்த் தாகம் எடுக்கவேஅந்தக் கிணற்றடிக்குச் சென்றேன். தோடர்ச்சியாக மக்கள் குளித்துக் கொண்டிருந்ததால் கிணற்றில் நிர்மட்டம் குறைந்திருந்ததோடு கலங்கிய தண்ணீரும் மண்ணும் சேர்ந்துதான் வாளியில் கோலியது.

வேறு வழியின்றிஅந்தக் கலங்கிய தண்ணீரையே இரு கைகளாலும் ஏந்தி வயிறுமுட்டக்குடித்து எனது பசியையும் தாகத்தையும் அப்போதைக்கு தணித்துக்கொண்டேன். ஏனயமக்களும் அந்த கலங்கிய தண்ணிரையே போத்தல்களில் எடுத்துச் சென்றார்கள். பகல் 10.00 மணியளவில் தான்  காலை உணவாக கொண்டல்கடலை சிறியசொப்பின் பைகளில் பொதி செய்யப்பட்டவாறு தந்தார்கள்.

அதுவும் ஒவ்வொருவருக்கும் ஒருபொதிமட்டும்தான் கிடைத்தது. முன்வரிசையில் நிற்கும் பேரூந்துகள் ஓமந்தை தடைமுகாமைச் சென்றடைய எப்படியும் இரவுப்பொழுதாகுமென எமக்குள் ஊகித்துக் கொண்டோம்.

விடுதலைப்புலி உறுப்பினர்களை தடைமுகாமில் பதிவு செய்கிறார்களாம். இந்தநிலை வருமெண்டு தெரிஞ்சிருந்தால் முதலே ஏதாவது ஒரு முடிவெடுத்து மக்களை சரணடையவிட்டிருக்கலாம். சர்வதேசமும் எங்களை கைவிட்டிட்டுது. இவ்வாறாகஆங்காங்கு கூடி நின்றவர்கள் வாய்க்கு வந்தபடி கதையளந்து கொண்டிருந்தார்கள்.

அன்றய மதியஉணவும் பிற்பகல் 4.00 மணியளவில் தான் வந்தது. மதிய உணவாக மரக்கறியுடனான சோற்றுப்பார்சல் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

பிரதான வீதியில் அணி வகுத்து நின்ற பேரூந்துகள் 10 மிற்றர் தூரம் வரை நகர்வதும் பின்னர் தரித்து நிற்பதும் பின்னர் நகர்வதுமாகச் செல்ல பேரூந்துகளோடு நாங்களும் மெல்ல மெல்ல நகர்ந்தோம். இவ்வாறு இரவுப் பொழுதாகியது. நாங்கள் ஊகித்தபடியே நாங்கள் ஓமந்தை தடைமுகாமை அண்மித்துவிட்டதற்குச் சான்றாக தடைமுகாமில் படையினரின் ஒலிபெருக்கி அறிவித்தல்கள் மெல்லியதாக எமது செவிகளில் விழுந்தன.

இருந்தாற் போல திடீரென வானத்தை முகில்க்கூட்டங்கள் மூடிக் கொண்டன. அதையடுத்து  மழைபெய்யத்தொடங்கியது. மழைக்காக பேரூந்தில் ஏறிக்கொண்டோம். ஆனால் பேரூந்தில் நிற்கவும் முடியவில்லை. இருக்கவும் முடியவில்லை. அந்தளவிற்கு மூச்சுவிடக்கூட முடியாதவாறு சனங்கள் நெருக்கு பட்டுக் கொண்டிருந்தார்கள். குழந்தைகள் வீரிட்டு அழுதார்கள்.

சிறிதுநேரத்தின பின்னர் மழை ஓய்ந்திருந்தது. நாங்கள் பேரூந்திலிருந்து இறங்கி ஈரமான அந்தப் புற்தரையில் புற்பாயை விரித்துப் படுத்திருந்தோம். குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் எங்களை மீண்டும் பேரூந்துகளில் ஏற்றினார்கள். ஏம்மை ஏற்றிய பேரூந்துகள் மெல்லநகர்ந்து சென்று ஓமந்தை தடைமுகாமிற்குள் பிரவேசித்து அங்கு எங்கள் எல்லோரையும் இறக்கிவிட்டார்கள்.

அப்போது இரவு 10.00 மணியைக் கடந்திருக்கும். கோவில் திருவிழாக்களைப் போல தடைமுகாமில்  மக்கள் அலை மோதிக்கொண்டிருந்தார்கள். ஒலிபெருக்கியில் தொடர்ச்சியாக ஒருவர் தமிழில் அறிவிப்புச் செய்து கொண்டிருந்தார். அதாவது விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஆகக்குறைந்தது ஒருநாள் அல்லது ஒருநிமிடமாவது செயற்பட்டவர்கள் உங்களை பதிவு செய்துவிட்டுச் செல்லுங்கள். அரசாங்கம் அனைவருக்கும்  பொதுமன்னிப்புவழங்கியுள்ளது. எவருக்கும் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை.

ஆனால் அவ்வாறு பதிவுசெய்யாது சென்றால் அது எம்மால் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் பதினைந்து ஆண்டுகள் உங்களது வாழ்க்கையை இழக்கநேரிடும். இதுவே அந்த அறிவித்தலாகும். அந்த அறிவித்தலைக் கேட்ட விடுதலைப்புலி உறுப்பினர்கள் பொதுமன்னிப்பு வழங்கிவிட்டார்கள் அதனால் எவ்விதமான பிரச்சினையும் வராது என்றவாறு தங்களைப் பதிவுசெய்துகொள்ளச் சென்றார்கள்.

அவ்வாறு பதிவுசெய்யச் சென்றவர்கள் மீண்டும் அவர்களது குடும்பத்தவர்களுடன் சேர்த்து விடப்படவில்லை. படையினரால் அவர்கள் பொதுமக்களிலிருந்து வேறாக்கப்பட்டு தடுப்புமுகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள்.

தடைமுகாமில் நீளமான மண்டபம் ஒன்றில் மேசைகள் கதிரைகள் போடப்பட்டு பதினைந்திற்கும் மேற்பட்ட படையினர்கள் பொதுமக்களை பதிவுசெய்து கொண்டிருந்தார்கள். பதிவு செய்ததன் பிரதி ஒன்றினையும் அவர்களின் கைகளில் கொடுத்தார்கள். பதிவின்போது முழுப்பெயர் வயது நிரந்தரமுகவரி பின்னர் இடம்பெயர்ந்து வசித்த இடங்கள் என்பவற்றை படையினர் கிரமமாகக் கேட்டார்கள்.

வரிசையாகச் சென்றுகொண்டிருந்த மக்களுடன் நாங்களும் சேர்ந்துகொண்டு படையினரின் பதிவிடத்தைச் சென்றடைந்தோம். அப்போது நள்ளிரவு 12.00 மணியளவில்தான் இருந்திருக்கும்.  படையினர்கள் மூன்று நான்குநாட்களாக தொடராக கடமையில் ஈடுபட்டிருந்ததால் அவர்கள் சோர்வுற்றிருந்தமை அவர்களின் முகங்களில் தெரிந்தது. இருப்பினும் அவற்றை வெளிக்காட்டிக் கொள்ளாது சுறுசுறுப்புடன் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

நாங்கள் படையினரின் பதிவிடத்தைச்சென்றடைந்ததும் எங்களது விபரங்களைக்கேட்டு பதிவுப்புத்தகத்தில் பதிவு செய்துவிட்டுஅதன் பிரதி ஒன்றை எங்களிடம் தந்தார்கள். வேறு எந்த விதமான கேள்விகளையும் கேட்டுஅவர்கள் எங்களை அலட்டிக்கொள்ளவில்லை. எமது  பதிவுகளை முடித்துக்கொண்டு அந்தமண்டபத்தின் வாசலுக்கு வந்தபோது எங்கள் எல்லோருக்கும் தண்ணீர்ப் போத்தல் பிஸ்கற்பைக்கற் குளுக்கோஸ் பெட்டி என்பன படையினரால் தரப்பட்டது.

அவற்றையும வாங்கிக் கொண்டு வெளியே வந்த எங்களை வீதியில் நிறுத்தியிருந்த சிவப்பு நிறப் பேரூந்துகளில் ஏற்றினார்கள். ஏங்களை ஏற்றிய பேரூந்துகள் அங்கிருந்து புறப்பட்டு ஓமந்தை மத்திய கல்லூரியைச் சென்றடைந்தன.

அங்கு இறக்கிவிடப்பட்ட நாங்கள் அங்குள்ள விடுதிகளுக்கு சென்றபோது சிலவிடுதிகளில் குப்பைகளும் மாட்டுச்சாணங்களுமாக அவ்விடுதிகள் மக்கள் தங்குவதற்கு ஏற்புடையதாகவிருக்கவில்லை. அவற்றில் ஒரு விடுதிதான் எங்களுக்குக் கிடைத்தது. குப்பைகளையும் மாட்டுச்சாணங்களையும் ஒதுக்கிவிட்டு அந்த மத்திய கல்லூரி விடுதியிலேயேஅன்றய மிகுதி இரவுப் பொழுதையும் கழித்தோம்.

மறுநாள் பொழுதும் புலர்ந்தது. அங்கிருந்த மலசலகூடங்களுக்கு முன்பாக பலர் இயற்கைக்கடன் கழிப்பதற்காக காத்து நின்றார்கள். மலசலகூடங்கள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. தண்ணீர்த்தாங்கிக்கு முன்பாக வரிசையில் நின்று போத்தலில் தண்ணீர் எடுத்துக் கொண்டு நிலைமைகளைச் சமாளித்துக் கொண்டு இயற்கைக்கடனையும் முடித்துவிட்டு தண்ணீர்த் தாங்கியில் தண்ணீர் எடுத்து நான்கு நாட்களாக தண்ணீர் காணாமலிருந்த நாங்கள் அணிந்திருந்த உடைகளையும் அலம்பிக் கொண்டுஅரைகுறைக் குளிப்பையும் முடித்துக்கொண்டோம்.

குளித்துவிட்டு விடுதிக்கு வந்தபோது வீ தியில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த பேரூந்துகளில் மக்களை ஏற்றிக் கொண்டிருந்தார்கள் படையினர். நாங்களும் அந்த மக்களின் வரிசையில் சேர்ந்து கொண்டோம். அன்றய காலைஉணவாக கொண்டல்கடலை எல்லோருக்கும் வழங்கப்பட்டது. அதையடுத்து தடைமுகாமில் படையினரால் தரப்பட்டிருந்த பதிவுப் பிரதியை வாங்கிக் கொண்டு எங்களையும் அந்த சிவப்புநிறப் பேரூந்துகளில் ஒன்றில் ஏற்றினார்கள்.

ஏதிலிகளாக வந்த மக்களை ஏற்றிய பேரூந்துகள் ஆயுதம் தரித்த படையினரின் பாதுகாப்புடன் வவுனியா – செட்டிகுளம் மெனிக்பாம் நலன்புரிமுகாம்களை நோக்கி விரைந்தன.

தாண்டிக்குளத்தில் படையினர்கள் கைகளில் சிங்கக்கொடிகளை அசைத்தவாறு வெற்றிக் களிப்பில் மிதந்தார்கள். பேரூந்துகளில் ஏதிலிகளாக வந்து கொண்டிருந்த மக்களின் துன்ப துயரங்களை அவர்கள் கருத்திற் கொண்டதாக தெரியவில்லை. பேரூந்துகளை வழிமறித்து மக்களுக்கு கிரிபத் எனப்படும் பாற்சோற்றை வாழையிலைகளில் வைத்துக் கொடுத்தார்கள்.

அப்போது பேரூந்தின் வாசலில் நின்ற படையினர் சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்கவர். தலைமயிர் இடையிடையே நரைத்திருந்தது. எனக்கு முன்ஆசனத்தில் அமர்ந்திருந்த முதியவர் ஒருவரைப் பார்த்து “ஐயா பிரபாகரன் செத்திபோச்சு” என்று கொச்சைத் தமிழில் ஏளனமாகக் கூறினார். அரச படையினரின் இத்தகைய வெற்றிக்களிப்பானது வார்த்தைகளால் விபரித்து  விடமுடியாதசோகங்களையும் துயரங்களையும் தமது இதயங்களில் சுமந்தவாறு வந்துகொண்டிருந்த மக்களின் மனங்களை மேலும் தாக்கத்திற்குள்ளாக்கியிருக்கவேண்டும்.அதைஅவர்களின் முகங்கள் வெளிக்காட்டியிருந்தன. படையினரின் வெற்றிக் கொண்டாட்டங்கள் எனக்கும் உள்ளுரத் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

நீண்டநேரப் பயணத்தின் பின்னர் பிற்பகல் 2.00 மணியளவில் முட்கம்பிவேலிகளால் சூழப்பட்ட செட்டிகுளம் – மெனிக்பாம் நலன்புரி நிலையங்கள் கனத்த இதயங்களோடு வந்த மக்களை வரவேற்றன. பேரூந்துகளிலிருந்து இறங்கிய எங்கள் எல்லோருக்கும் படையினரால் சைவ உணவுப் பார்சல்கள் தரப்பட்டன.

றேடியோ கமரா தொலைபேசி உள்ளிட்ட இலத்திரனியல்ப் பொருட்கள் எவையும் நலன்புரி நிலைய வளாகத்திற்கு உள்ளே கொண்டு செல்லமுடியாது என்ற கட்டுப்பாடுகளுடன் அங்குள்ள கூடாரங்களுக்கு கூட்டிச்சென்றனர். ஒவ்வொரு கூடாரங்களிலும் பத்துப்பேர் வரையில் தங்கவைக்கப்பட்டார்கள்.

கொற்றவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*