vp12

வலிசுமந்த பதிவுகள்- 12 (தோல்வி)

2009-ம்ஆண்டு மேமாதம் 16-ம்நாள் மாலைவேளயில் சுமார் இருபத்தையாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் யுத்தவலயமான வெள்ளாம்முள்ளிவாய்க்கால்ப்பகுதியிலிருந்து முதற்தடவையாக வட்டுவாகல் வழியாக முல்லைத்தீவிற்குச் சென்று அரசபடையினரிடம் சரணடைந்தார்கள்.

எதிர்பார்த்த தொகையைவிட மக்கள் அதிகப்படியாக சரணடைய வந்துகொண்டிருந்ததால் படையினருக்கும் நிலைமையை சமாளிக்கமுடியாமற்போய்விட்டது.

இதனால் மாலை 6.00 மணிக்குப் பிற்பாடு பொதுமக்களை தமது கட்டுப்பாட்டுப்பகுதிக்கு உள்ளே எடுக்கும் பணியை படையினரே நிறுத்திவிட்டார்கள்.

அன்றையதினம் அதாவது 16-ம்நாள் சரணடைந்த மக்களை முல்லைத்தீவில் வட்டுவாகல்-செல்வபுரம் ஆகிய கிராமங்களுக்கு தெற்குப்புறமாகவுள்ள கரைச்சி வெளிப்பகுதியில் தங்கவைத்திருந்தார்கள்.

அந்த வெளிப்பகுதியைச் சூழவும் முட்கம்பிவேலி அமைத்திருந்தனர் படையினர். மேமாதம் 16-ம் நாள் படையினரின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பொதுமக்களின் சடலங்கள் ஆங்காங்கே தேடுவாரற்றுக் கிடந்தது.

அன்றைய தினம் இரவு முள்ளிவாய்க்காலின் தெற்குப்புறமான நந்திக்கடல்ப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் அரச படையினருக்குமிடையில் கடுமையான யுத்தம் நடந்துகொண்டிருந்தது.

படையினரால் ஏவப்படுகின்ற கனரக ஆயுதங்களால் உமிழ்கின்ற ரவைகள் வானத்தில் சடசடத்துக்கோண்டேயிருந்தன. பொதுமக்கள் அல்லோலகல்லோலப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

வெள்ளாம்முள்ளிவாய்க்காலில் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வீதிக்கு தெற்குப்புறமாக ஓங்கி உயர்ந்து கிளைகள் பரப்பி நின்ற ஒரு மரத்தின் கீழ் விடுதலைப் புலிகளின் துருப்புக் காவிவாகனம் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.

அதைச் சூழ உழவு இயந்திரங்களும் ஏனைய வாகனங்கள் பலவும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதற்குப் பக்கத்தில் தற்காலிகக் கூடாரம் போன்று அமைக்கப்பட்ட ஓரளவுக்கு பாதுகாப்பான பங்கர்.

அதில்தான் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை அவர்களும் விடுதலைப்புலிகள் அமைப்பின் இன்னும் சில முக்கிய தளபதிகளும் பொறுப்பாளர்களும் அப்போது தங்கியிருந்தார்கள்.

மே மாதம் 16-ம்திகதி இரவு7.00 மணியிருக்குமென நினைக்கிறேன். சிறப்புத் தளபதி சூசைஅவர்கள் யாருடனோ செய்மதித்தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தது எனக்கு தெளிவாகக்கேட்டது. அது தமிழ்நாட்டு அரசியல்வாதி ஒருவருடன்தான் சூசைஅவர்கள் கதைத்துக்கொண்டிருப்பதாக அவரது மெய்ப்பாதுகாப்புப் போராளி புரட்சி கூறினார்.

அவர் செய்மதித் தொலைபேசியில் கதைத்தவை பின்வருமாறு “வணக்கம் அண்ண இங்கு சாப்பாடு இல்லை. மருந்து இல்லை. நிலமை படுமோசமாகக் கிடக்குது. இன்றைக்கு இருபத்தையாயிரம் பேரை (பொதுமக்களை) உள்ளுக்கு (முல்லைத்தீவு படைக் கட்டுப்பாட்டுப்பகுதிக்கு) விட்டனாங்கள். நாளைக்கும் (17-ம்திகதி) விடப்போறம். தந்திரோபாயத்தைத்தான் கையாளவேணும். தந்திரோபாயம் கையாளாமல் ஒன்றும்செய்யமுடியாது,” இதுதான் சூசை அவர்கள் தொலைபேசியில் தமிழ்நாட்டு அரசியல்வாதி ஒருவருடன் கதைத்தவையாகும். அந்த இடத்தில் விடுதலைப்புலிகளின் பொறுப்பாளர்கள் போராளிகள் பலரும் நின்றிருந்தார்கள்.

இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருந்தன. நாங்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக பாரதிய ஜனதாக்கட்சி தோல்வியைத் தழுவியதோடு காங்கிரஸ்கட்சி மீண்டும் ஆட்சியைக்கைப்பற்றியது.

போராளிகளிடமும் பொதுமக்களிடமும் குடிகொண்டிருந்த கொஞ்ச நம்பிக்கையும் தகர்ந்துபோனது. மறுநாள் அதாவது 17-ம் திகதி படைக் கட்டுப்பாட்டுப்பகுதிக்குச் செல்கின்ற மக்களோடு தாமும் சேர்ந்து செல்வதற்கு பலபோராளிகள் தயாரான நிலையிலேயே இருந்தார்கள்.

மே மாதம் 17-ம் திகதி அதிகாலை 5.30மணியிருக்குமென நினைக்கின்றேன். பொழுது விடிந்து கொண்டிருந்தது. பல்குழல் எறிகணைகள் ஏவப்பட்ட சத்தம் கேட்டு சில விநாடிகளில் நாம் இருந்த இடத்தைச் சூழவும் எறிகணைகள் பாரிய அதிர்வுகளுடன் வீழ்ந்துவெடித்தது.

தரப்பாள்க் கூடாரங்களில் எறிகணைகள் வீழ்ந்துவெடித்ததால் அவை தீப்பற்றிக்கொண்டன. அது சுவாலை விட்டெரிந்து மேன்மேலும் தீ பரவிக் கொண்டிருந்தது.

உடனிருந்தவர்கள் ஆளுக்கொரு பக்கமாக ஓடிக்கொண்டிருந்தார்கள். பாதைகளையெல்லாம் உழவு இயந்திரங்களும் ஏனயவாகனங்களும் ஆக்கிரமித்து நிற்க நெருப்புஅபாயத்திலிருந்து தப்புவதற்காக நானும் அதற்குள்ளால் ஓடிச்சென்று ஒருவாறு வீதிக்குச்சென்றுவிட்டேன்.

பொதுமக்கள் கைபாக்குகளுடன் மட்டும் வட்டுவாகலைநோக்கி ஓடிக்கொண்டிருந்தார்கள். இன்னும்பலர் உடுத்தஉடையுடன் மட்டும் சென்றுகொண்டிருந்ததையும் அதானிக்க முடிந்தது. காயப்பட்டபோராளிகள் இயலாமையால் பல சிரமங்களுக்கு மத்தியில் நகர்ந்துகொண்டிருந்தார்கள்.

அதிலும் குறிப்பாக கால்எலும்புமுறிவுக்காயக்காரருக்கு கால்களுக்கு அன்ரனா மற்றும் மட்டை வைத்துக் கட்டப்பட்டவர்கள் கால்களை நீட்டி இருந்து கொண்டு வீதிவழியால் அரக்கி அரக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள்.

காயமடைந்த பெண் போராளிகள் சிலர் ஊன்றுகோல்கள் இல்லாததால் கெவிர்த்தடிகளை ஊன்றுகோல்களாகப்பயன்படுத்தி மெல்லமெல்ல நடந்துவந்துகொண்டிருந்தார்கள். வீதிவழியெங்கும் பொதுமக்களால் கைவிடப்பட்ட உடுதுணிகளும் பொருட்களும் சிதறிக்கிடந்தன. அவற்றில் பல புத்தம் புதிய ஆடைகளான சாரம் சேட் மற்றும் சவரஅலகுகள் சவர்க்காரம் என்பனவும் கிடந்தன.

நாம் வட்டுவாகல்ப்பாலத்தை அண்மித்து விட்டநிலையில் எதிர்பாராத விதமாக “ஓடிப்போங்க ஓடிப்போங்க” என அச்சுறுத்தல் கலந்த கம்பீரமான தொனியில் ஒருகுரல் கேட்டது.

திரும்பிப் பார்த்தால் வீதியோரத்தில் துப்பாக்கிகள் தாங்கிய இரண்டு படையினர் நின்றிருந்தார்கள். எமக்கோ பெரியஆச்சரியமாகவிருந்தது. ஏனெனில் நாம் நினைத்தது வட்டுவாகல்ப் பாலத்திற்கு அப்பால்த்தான் படையினர் நிலைகொண்டிருக்கிறார்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தோம்.

ஆனால் முதல்நாள் அதாவது 16-ம் திகதி மாலையில் வட்டுவாகலில் நிலைப்படுத்தப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் காவல்நிலைகள் செயலிழந்து போக பொதுமக்கள் படையினரிடம் சரணடைந்த கையோடு படையினரும் வட்டுவாகல்ப் பாலத்தையும் தாண்டி முன்னேறியிருந்தார்கள் என்பதுவே உண்மையாகும்.

நாம் ஓட்டமும் நடையுமாகச் சென்று வட்டுவாகல்ப் பாலத்தை அண்மித்து முன்னர் தமிழீழ காவல்த்துறையினர் தடைமுகாம் அமைத்திருந்த பகுதியைச் சென்றடைந்தோம்.

அப்போது அந்த இடம் சனக் கூட்டத்தால் நிறைந்திருந்தது. குண்டும் குழியுமான அந்த தார்வீதி வழியாக போரின் வடுக்களை தமது அங்கஙகளில் ஏந்தியவாறு பல சிரமங்களுக்கு மத்தியில் நகர்ந்து வந்தவர்களும் மற்றும் உறவினர்களாலும் அறிந்தவர்களாலும் ஸ்ரெச்சர்களிலும் தோள்களிலுமாகத் தூக்கிவரப்பட்டவர்களும் வட்டுவாகல்ஆற்றின் மேற்குப்புறமாகவுள்ள பனங்கூடலுக்கு அண்மையில் செய்வதறியாது அமர்ந்திருந்தனர்.

விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களும் மக்களோடு மக்களாக இரண்டறக் கலந்திருந்தனர். ஆண் போராளிகள் சாதாரண மக்களைப்போல சாரம் சேட் அணிந்திருந்தனர். பெண்போராளிகள் சாதாரணமான பாவாடை சட்டை அணிந்திருந்தனர்.

மக்கள் மத்தியில் போராளிகளாக வலம்வந்தகாலங்களில் அவர்களின் முகங்களில் தெரிந்த கம்பீரமான தோற்றத்தை இப்போது காணமுடியவில்லை.

அடுத்த கட்டமாக வட்டுவாகல்ப் பாலத்தைக் கடந்து முல்லைத்தீவு அரசபடைக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்வதற்காகவே அவர்கள் அனைவரும் அந்தப் புழுதிமணலில் காத்திருந்தார்கள்.

அப்போது கடற்கரைப் பக்கமாகவிருந்து வந்த இரண்டு பவள் கவச வாகனங்கள் உறுமியபடி வந்து எம்மைக் கடந்து நந்திக்கடல்ப் பக்கமாகச் சென்றன.

குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் முல்லைத்தீவு படைக் கட்டுப்பாட்டு வலயத்திற்குள் பிரவேசிப்பதற்கு வட்டுவாகல்ப் பாலத்தில் மக்கள் முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த ஒடுக்கமான பாலத்திலிருந்து தப்பித் தவறி கீழே விழுந்தால் வட்டுவாகல் ஆற்றுத் தண்ணீருக்குள் தான் விழ வேண்டிய ஆபத்தான சூழ்நிலை நிலவியது.

இதை அவதானித்த படையினர் “எல்லாரும் முன்னுக்குவந்து உட்காருங்க” என்று கூறவும் எல்லோரும் அப்படியே நீள்வரிசையில் அமர்ந்துவிட்டார்கள்.

பின்புறமாகத் திரும்பிப் பார்த்தபோது கண்ணுக் கெட்டிய தூரம் வரையிலும் மக்கள் வரிசை நீண்டிருந்தது. அப்போது வட்டுவாகல் பாலத்தின் எல்லைப் புறப்பகுதியில் (முல்லைத்தீவுப் பக்கமாக) வட்டுவாகல்ஆற்றை அண்டியதாக அமைந்திருந்த அம்மன் கோவிலுக்கு முன்பாக இரண்டு உழவு இயந்திரங்கள் வந்து நின்றது.

அப்போது முன்னுக்கு நின்ற படையினர் “காயம் காயம்” என்று கேட்கவும் முன்னுக்கு இருந்த பொதுமக்களில் சிலர் “காயக்காரரை முன்னுக்கு வரட்டாம்” என்று கத்தினார்கள்.

அதையடுத்து அங்கிருந்த காயக்காரர்கள் அனைவரும் முன்னுக்கு அனுப்பப்பட்டு அந்த உழவு இயந்திரங்களில் ஏற்றப்பட்டதும் அவை முல்லைத்தீவை நோக்கிச்சென்றன.

பின்னர் அவர்கள் பேரூந்துகள் மூலமாக வவுனியா மற்றும் திருகோணமலை வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அறிந்தோம்.

அதையடுத்து பொதுமக்கள் முல்லைத்தீவு படைக் கட்டுப்பாட்டு வலயத்திற்குள் பிரவேசிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. முல்லைத்தீவு நோக்கிச் செல்லும் பிரதான வீதியில் பல ஆயிரக்கணக்கான மக்களும் ஒருத்தரையொருத்தர் விலத்த முடியாமல் நெரிபட்டுக் கொண்டிருந்தனர்.

இதனை அவதானித்த படையினர் “எல்லாம் ஒண்டுலைன் ஒண்டுலைன்” என்று கொச்சைத் தமிழில் கத்தினார்கள். அதன் அர்த்தம் எல்லோரும் ஒற்றை வரிசையில் செல்லுங்கள் என்பதுவேயாகும்.

அந்த அர்த்தத்தைப் புரிந்து கொண்ட மக்கள் ஒற்றை வரிசையில் சென்றார்கள். வீதியின் இரண்டு பக்கங்களிலும் முட்கம்பிச் சுருள்களைக் கொண்ட பாதுகாப்புவேலிகள் அமைக்கப்பட்டிருந்தன.

நாம் வட்டுவாகல் கடற்தொழிலாளர் சங்கமண்டபத்தையும் கடந்து குறுகிய தூரம் தான் சென்றிருப்போம் அப்போது முட்கம்பி வேலிக்கு உட்புறமாக சுமார் ஐம்பது வயதைத் தாண்டிய படையினர் ஒருவர் தலை வழுக்கை. சேட் அணிந்திருக்கவில்லை.

நீலநிறத்திலாலான அரைக்காற்சட்டையுடன் நின்று பெரியவெள்ளிப் பாத்திரம் நிறையத்தண்ணீர் வைத்து சிறிய பிளாஸ்ரிக்குவளையினால் தண்ணீர் அள்ளி அள்ளி பசி தாகத்துடனும் வியர்த்துக் களைத்தவாறும் வந்து கொண்டிருந்த மக்களுக்கு “தண்ணி குடியுங்க” என்று ஒவ்வொரு குவளை தண்ணீர் கொடுத்துக்கொண்டிருந்தார்.

காய்ந்து வரண்டு போயிருந்த தொண்டைக்குழியை அவர் தந்த சொட்டுத் தண்ணீர்தான் ஈரமாக்கியது. துயரங்களைச் சுமந்து ஏதிலிகளாக வந்தமக்களை வீதிக் கரைகளில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த படையினர் “ஓடிப்போ ஓடிப்போ” என்று மக்களை ஏவிக் கொண்டிருந்தார்கள். வியர்வைக் கோடுகள் கன்னத்தில் வழிய வேகநடை போட்டார்கள் மக்கள்.

சிறிய பாதை ஒன்றினால் திரும்பிச் சென்று ஒருவாறு வட்டுவாகலுக்கு அடுத்ததாகவுள்ள செல்வபுரம் கிராமத்தின் தெற்குப்புறமாகவுள்ள கரைச்சி வெட்டையைச் சென்றடைந்தோம்.

கரைச்சிவெளிப் பகுதியைச் சுற்றி வரவும் நான்கு பக்கங்களிலும் முட்கம்பிவேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. சுமார் இரண்டு லட்சம் வரையிலான மக்கள் அந்தக் கரைச்சி வெளிப் பகுதியை நிறைத்திருந்தார்கள்.

தங்களது பிள்ளைகள் உறவினர்களைத் தவறவிட்டவர்கள் அவர்களைத்தேடிக்கொண்டிருந்தார்கள். எல்லோருக்கும் தண்ணீர்த்தாகமெடுத்தது.

முட்கம்பிவேலிக்கு வெளியேசெல்வதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. ஆயுதம்தாங்கிய படையினர்கள் ஆங்காங்கே உலாவிக்கொண்டிருந்தார்கள்.

குறிப்பிட்டநேரத்திற்குப்பின்னர் மீன்பிடித்தொழிலுக்குப்பயன்படுத்தப்படும் சிறிய தும்புக்கண்ணாடியிழைப்படகு ஒன்று படையினரால் கொண்டுவரப்பட்டது. அதையடுத்து தண்ணீர்பவுசரில் குடிதண்ணீர் கொண்டுவந்து அந்தப்படகிற்குள் நிறைத்துவிட்டார்கள்.

மக்கள் தங்கள் கைவசமிருந்த போத்தல்கள் சிறியபாத்திரங்கள் என்பவற்றை எடுத்துக்கொண்டு ஒருவரையொருவர் நெரிபட்டு முண்டியடித்துக்கொண்டு தண்ணீர் எடுத்தார்கள். சிறிதுநேரத்திற்குள்ளேயே படகிற்குள் நிறைத்திருந்த தண்ணீர் முழுவதும் தீர்ந்துபோயிருந்தது.

இரவுப் பொழுதில் அந்தக் கரைச்சி வெளியெங்கணும் மின்குமிழ்களைப்பொருத்தி (ரியூப்லைற்) ஒளிர விட்டிருந்தார்கள் படையினர். அந்தப் பெரியவெளிப்பகுதியில் பெரிதாக மறைவிடங்கள் என்று சொல்லக் கூடியதாக இருந்ததாகத் தெரியவில்லை.

சிறிய பனங்கூடல்கள் தான் இருந்தன. குறிப்பாக பெண்கள் சிறுநீர் கழிப்பதற்காக அந்தப்பனங்கூடல் மறைவிடங்களுக்குச் சென்றுவந்தபோதெல்லாம் அந்தப் பாதைவழிகளில் படையினர் உலாவிக்கொண்டிருந்தார்கள்.

சுற்றிவர அடைக்கப்பட்ட முட்கம்பிவேலியில் ஒரு பக்கத்திலுள்ள சிறிய இடைவெளியிலான பாதை வழியேதான் பொதுமக்கள் வரிசையாக உள்ளெடுக்கப்பட்டு ஒவ்வொருவராக உடற்சோதனைகளும் உடமைச் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு பின்னர் வீதிக்கரைகளில் தரித்துநின்ற பேரூந்துகளில் ஏற்றப்பட்டு ஓமந்தை தடைமுகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

அன்றைய நாள் (மேமாதம்-17-ம்திகதி) பகற் பொழுது முழுவதும் அந்தக் கரைச்சி வெளிப்பகுதியிலேயே இருந்தோம். எங்களோடு வந்தவர்களில் சிலர் இரண்டு புற்பாய் கொண்டு வந்திருந்தார்கள்.

இரவுப் பொழுதில் மின்குமிழ்கள் ஒளிர்ந்து கொண்டிருக்க அந்தக் கரைச்சிவெளிக் கட்டாந்தரையில் புற்பாய்களை விரித்துப் படுத்திருந்தோம். தூக்கம் வரமறுத்தது.

மின்குமிழ்களின் வெளிச்சத்தில் மக்கள் தங்களது உறவினர்களை தேடுவதும் அறிந்தவர்கள் தெரிந்தவர்களோடு கதைப்பதுமாக மக்கள் அங்கு அலைமோதிக் கொண்டிருந்தார்கள்.

“கொற்றவன்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*