vp11

வலிசுமந்த பதிவுகள்- 11 (துயரம்)

2009-ம்ஆண்டு மேமாதம் 10-ம்நாளன்று முள்ளிவாய்க்கால்ச் சந்தியை அரசபடையினர் ஆக்கிரமித்துக் கொண்டதையடுத்து போர்ச்சூழல் மேலும் தீவிரமடைந்தது. வானத்தில் பட்டாசுகள் வெடித்ததைப் போலவே கனரகத் துப்பாக்கிகளின் ரவைகள் இரவு பகலாக சடசடத்துக்கோண்டேயிருந்தன. போதாக்குறைக்கு எறிகணைகளும் கொத்துக்குண்டுகளும் ஆங்காங்கு வீழ்ந்துவெடித்துக்கொண்டிருந்தன.

மகிந்தஅரசு தாம் யுத்தத்தில் கனரகஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம் என்று அன்றைய இந்தியஅரசின் மன்மோகனசிங் தலைமையிலான மத்தியஅரசிற்கு உறுதிமொழி வழங்கியிருந்த போதிலும் வன்னியில் இறுதியுத்தம் முடிவுற்ற 2009-ம்ஆண்டு மேமாதம் 18-ம்நாள் வரையிலும் கனரக ஆயுதங்களையும் சர்வதேசத்தால் தடைசெய்யப்பட்ட குண்டுகளையும் யுத்தத்தில் பயன்படுத்தினார்கள் என்பதற்கு யுத்தவலயத்தில் இறுதியாக அகப்பட்டிருந்த மூன்று லட்சம் மக்களும் சாட்சியமாகவுள்ளனர்.

முள்ளிவாய்க்கால்ச்சந்தியை படையினர் ஆக்கிரமித்திருந்த நாட்களில் ஒருநாள் மதியப்பொழுதில் (அப்போது நாம் வெள்ளாம் முள்ளிவாய்க்காலில் சுனாமி வீட்டுத் திட்டத்தில் குறித்த ஒரு வீட்டில் தங்கியிருந்தோம்) படையினரின் எறிகணைத் தாக்குதல்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஓய்ந்து போயிருந்தது. அந்தவேளையில் எம்மிடம் சிறியளவில் பருப்பும் அரிசியும் கைவசமிருந்ததால் எம்முடன் கூடவிருந்தவர்களில் இருவர் பக்கத்திலிருந்த சமையல்க் கூடமான சிறிய ஓலைக்குடிசைக்குள்ச் சென்று சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

சமையல்வேலை எனும் போது ஏதாவது சுவையான உணவுச் சமையல் என்று நினைத்துவிடக்கூடாது. அதாவது சோறு சமைப்பதோடு மைசூர்ப்பருப்பை தண்ணீர் விட்டு அவித்து அதற்குள் சிறிதளவு தேங்காய்ப் பால்மாவையும் கரைத்து உப்பும் சேர்த்து கலக்கி கறியாக்குவது அவ்வளவுதான். வெங்காயம் பச்சைமிளகாய் புளி முதலான மூலப்பொருட்கள் சேர்ப்பதில்லை. அதற்கு அப்பொருட்களை அப்போதைக்கு கண்ணாலும் காணமுடியாது. இதுதான் அன்றையநாட்களில் எமது வயிற்றுப் பசியைப்போக்கியது.

அன்றையநாள் சமையல் முடிந்தவுடன் சாப்பாட்டினை சுடச்சுட சாப்பிட்டுக் கொண்டிருந்தவேளையில் “கெதியாச்சாப்பிடுங்கோ செல் அடிச்சாங்களெண்டால் சோற்றுக் கோப்பையை எறிஞ்சுபோட்டுத்தான் பங்கருக்க ஓடவேண்டிவரும்” என்று எம்முடன் இருந்த றங்கண்ணா நகைச்சுவை கலந்த தொனியில் சீரியசாகக் கூறினார். அவர் கூறியதில் உண்மை இருக்கத்தான் செய்தது.

ஆற அமர உட்கார்ந்திருந்து சாப்பிடக் கூட அரசபடையினரின் எறிகணைகளும் துப்பாக்கிகளும் எமக்கு அவகாசம் தரவில்லை. அந்தச் சமயத்தில்த்தான் எட்டு அல்லது ஒன்பது வயதுகளில் மதிக்கத்தக்க நான்கு சிறுவர்கள் கைகளில் சொப்பின்பைகளுடன் எமது இடத்தில் வந்து நின்றார்கள். ஒட்டி உலர்ந்தமேனி வாரி விடப்படாத தலைமயிர் விழிகளில் ஏக்கம் எல்லாமாக அந்தச் சிறுவர்களைப் பார்த்தபோது அந்தக்கணத்தில் எமது மனங்கள் நெகிழ்ந்தன. வந்தவர்களில் சிறுமி ஒருத்தி மட்டும் வாய்திறந்து “சாப்பாடு….” தொண்டைக்குள்ளிருந்துவந்த வார்த்தைகள் அப்படியே அடங்கிப்போயின.

மற்றவர்கள் வாய் திறக்கவேயில்லை. அந்தச்சிறுவர்களின் நிலைமையைப்பார்த்ததும் எங்களுக்கு இருந்தபசியும் பறந்துவிட்டது. பானைக்குள் எஞ்சியிருந்த சோற்றையும் கறியையும் ஒன்றாகக் குழைத்து அவர்கள் கொண்டு வந்திருந்த சொப்பின் பைகளில் திணித்துவிட்டோம். பசியால் வாடியிருந்த அந்தப் பிஞ்சு உள்ளங்களின் முகங்கள் புன்னகையை மட்டும் உதிர்ந்துவிட்டு அவ்விடத்தைவிட்டு அகன்றார்கள்.

வெள்ளாம் முள்ளிவாய்க்காலில் நாங்கள் தங்கியிருந்த பகுதியில் சுனாமி ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரச சார்பற்ற நிறுவனத்தினால் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட வீடுகள் இருந்தன. அந்த வீடுகளின் சொந்தக்காரர்களில் அனேகமானோர் படகுகள் மூலமாக அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் சென்றுவிட்டார்கள். இந்தநிலையில் இந்த வீடுகள்தான் அன்றையநாட்களில் போராளிகளுக்கு புகலிடம் வழங்கியதோடு சிலவீடுகள் அவர்களின் மருத்துவ நிலையங்களாகவும் செயற்பட்டன.

நாம் தங்கியிருந்த இடத்திற்குப் பக்கத்தில் கடற்கரை நோக்கிச் செல்லும் கிரவல் வீதிக்கு அப்பாலுள்ள வீடு ஒன்றுதான் காயமடைந்த மகளீர் போராளிகளுக்கு சிகீச்சையளிக்கின்ற மருத்துவ நிலையமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தது. அங்கு செஞ்சோலைச் சிறுவர் இல்லத்தில் வளர்ந்து பின்னர் மருத்துவப்பிரிவில் கடமையாற்றிக் கொண்டிருந்த யுவதி ஒருவர் அந்த மருத்துவ நிலையத்தில் பராமரிப்பாளராகச் செயற்பட்டுக்கொண்டிருந்தார்.

அன்றைய நாளில் மாலை வேளையில் 3.00 மணியிருக்குமென நினைக்கின்றேன். அப்போது அந்த குறித்த யுவதி கிணற்றடியில் குளித்துக் கொண்டிருந்த வேளையில் எங்கிருந்தோ கூவிக்கொண்டு வந்த துப்பாக்கி ரவையொன்று அந்த யுவதியின் தலைப்பகுதியை துளைத்துச் சென்றதால் ஸ்தலத்திலேயே யுவதியின் உயிர் பிரிந்துவிட்டது.

அன்யைத் தினமே மாலை7.00மணியளவில் அந்த மருத்துவ நிலையத்திற்கு முன்பாக டாட்டா பிக்கப் வாகனம் ஒன்று வந்து நின்றது. சில பெண் போராளிகள் மரணித்த யுவதியின் உடலைத் தூக்கி வந்து அந்த வாகனத்தில் ஏற்றினார்கள். அப்போது அந்த யுவதியின் உடலை நாமும் சென்று பார்த்தோம். அந்த யுவதியின் உயிர் பிரிந்துவிட்டது என்பதையே எம்மால் நம்பமுடியவில்லை. அந்த யுவதியின் முகத்தில் இழையோடியிருந்த புன்னகை அப்போதும் மறையவில்லை.

அன்றைய நாள்ப் பகற்பொழுதில் நிலவிய ஓரளவு அமைதியான சூழ்நிலையைக் குலைத்தாற் போல பொழுது சாய்ந்து இருள் கவியத் தொடங்கியவேளையில் படையினரின் பீரங்கிக் குழல்கள் விழிக்கத் தொடங்கின. படையினரின் நிலைகளிலிருந்து ஏவப்பட்ட எறிகணைகள் சரமாரியாக நாம் தங்கியிருந்த இடத்தைச் சூழ வீழந்து வெடித்துக் கொண்டிருந்தன.

எங்கும் எறிகணைகளின் அதிர்வொலிகளும் மக்களின் அவலக் குரல்களுமே கேட்டுக் கொண்டிருந்தன. அத்தோடு படையினரின் கனரகஆயுதங்களும் ரவைகளை உமிழத் தொடங்கியிருந்தன. உடனடிப் பாதுகாப்புத் தேடும் பொருட்டு பனங்குற்றிகளால் அமைக்கப்பட்டிருந்த பங்கர் ஒன்றுக்குள் நாம் எல்லோரும் புகுந்து கொண்டோம். ஆனாலும் அந்த பங்கர் போதிய பாதுகாப்பானதாக எமக்குப்படவில்லை.

எறிகணைவீச்சுக்கள் அதிகரித்துக் கொண்டதேயொளிய குறைந்தபாடாக இல்லை. அத்தோடு கனரக ஆயுதங்களின் ரவைகளும் நாம் தஞ்சமடைந்திருந்த பங்கரைச் சூழவே கடுமையாக வெடித்துக்கொண்டிருந்தன. எறிகணைகள் மற்றும் குண்டுகளின் அதிர்வுகள் எமது செவிகளைப்பிளந்தன.

நாம் தஞ்சமடைந்திருந்த பங்கரிலிருந்து சுமார் ஐம்பது அல்லது அறுபது மீற்றர் தூரத்தில் வெள்ளை நிறத்தினாலான கன்ரர் வாகனம் ஒன்று தரப்பாளினால் மூடிக்கட்டப்பட்ட  நிலையில் வீதிக்கரையில் ஏனைய வாகனங்களோடு இதுவும் ஒன்றாக சில தினங்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டிருந்தது. அது விடுதலைப்புலிகள் அமைப்பின் வாகனம் என்பதை நாம் அறிந்திருந்தாலும் அதற்குள் வெடிபொருட்கள் மற்றும் ரவைகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தது என்பதை நாம் அப்போதைக்கு அறிந்திருக்க வாய்ப்பில்லை.

படையினரால் ஏவப்பட்ட குண்டு ஒன்று கன்ரர் வாகனத்தின் பின்பகுதியை மூடிக் கட்டியிருந்த தரப்பாளின்மேல் வீழ்ந்து வெடித்ததும் அதற்குள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ரவைகள் படபடவென வெடிக்கத் தொடங்கின. நிலமை ஆபத்தான கட்டத்தையடைந்துவிட்டதால் நாம் வேறோர் இடத்தில் பாதுகாப்புத் தேடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. நாம் தொடர்ந்தும் அங்கிருந்தால் காயமடையவோ அல்லது உயிரிழக்கவோ நேரிடும். ஆதலால் அந்த பங்கருக்குள் தொடர்ந்தும் இருப்பதென்பது போதிய பாதுகாப்பானதாக எமக்குப்படவில்லை.

கன்ரர் வாகனத்திலிருந்து தொடர்ச்சியாக வெடிபொருட்கள் வெடித்துச் சிதறிக்கொண்டிருந்தன. எம்மோடு கூடவிருந்தவர்கள் தலைகளைக் குனிந்தபடி பாதுகாப்புத்தேடி வேறிடங்களுக்கு ஓடினார்கள். அதனைத் தொடர்ந்து நானும் இன்னும் இருவரும் நாம் தங்கியிருந்த இடத்திற்குப் பின்புறமாக குப்பைகள் தடிகள் கற்கள் நிறைந்த பாதைவழியே தலைகளைக் குனிந்தபடி ஓடினோம்.

சுமார் இருநூறு மீற்றர் தூரத்திற்கும் குறைவான தூரம் தான் ஓடியிருப்போம். அந்த வழியில் பனங்குற்றிகள் மண் மூட்டைகளால் அமைக்கப்பட்ட பாதுகாப்பான பங்கர் ஒன்று தென்படவே அதற்குள் தஞ்சம் புகுந்துகொண்டோம். அந்த பங்கருக்குள் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என பதினைந்து பேர் வரையில் இருந்தார்கள்.

அப்போது கன்ரர் வாகனத்திலிருந்து வெடித்துக் கொண்டிருந்த வெடிபொருட்களில் ஏதோவொரு வெடிபொருள் பாரிய சத்தத்துடன் வெடித்தது. அந்த வெடியதிர்வு எம்மை ஒரு கணம் தூக்கிப்போட்டது. பங்கருக்குள்ளிருந்த பெண்களும் சிறுவர்களும் “ஐயோ” என்று கத்தினார்கள்.

சிறிது நேரத்தின்பின்னர் எறிகணைத் தாக்குதல்களும் கனரகஆயுதத் தாக்குதல்களும் ஓய்ந்திருந்தது. மெதுவாக வெளியில் வந்து பார்த்தபோது நாம் முதலில் இருந்த பங்கருக்குப் பக்கத்தில் பெரிதாக நெருப்பு சுவாலை விட்டெரிந்து கொண்டிருந்தது. இந்த அவலங்களோடு அந்த இடத்தில் தஞ்சமடைந்திருந்த மக்களில் அனேகமானோர் வெள்ளாம்முள்ளிவாய்க்காலின் வட்டுவாகல்ப் பக்கமான உண்டியல்ச் சந்திக்கு நகர்ந்துவிட்டார்கள்.

நாங்கள் குறிப்பிட்டசிலபேர்தான் அங்கு நின்றிருந்தோம். குறிப்பிட்ட நேரத்தின் பின்னர் எரிந்து கொண்டிருந்த நெருப்பின் சுவாலை சிறிது சிறிதாக குறைந்து கொண்டிருந்தது. நாம் குறித்த இடத்திற்குச் சென்று பார்த்தபோது பனையோலைகளால் அடைக்கப்பட்டிருந்த வேலி மற்றும் சிலநாட்களுக்கு முன்பாகத்தான் கிடுகுகளால் வேயப்பட்டு அமைக்கப்பட்டிருந்த கொட்டில் அதற்குள் விடப்பட்டிருந்த பதினைந்திற்கும் மேற்பட்ட உந்துருளிகள் கொட்டிலுக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த பிக்கப் வாகனம் என்பன முற்று முழுதாக நெருப்பில் எரிந்துபோயிருந்தன.

புயலுக்குப் பிந்திய அமைதி என்பதைப்போல அந்த இராப்பொழுதில் மயானஅமைதி நிலவியது. வெடிபொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த கன்ரர்வாகனம் முற்றிலுமாகச் சிதைந்திருந்தது. அந்த நிசப்தமான சூழ்நிலையைக் குலைப்பதுபோல அதற்குள்ளிருந்த ரவைகள் இடையிடையே மெல்லிய சத்தத்துடன் வெடித்துக் கொண்டிருந்தன.

அந்த இடத்திலிருந்து சுமார் நூறுமீற்றர் தூரத்தில் பனங்குற்றிகளாலும் மண்மூட்டைகளாலும் அமைக்கப்பட்ட பாதுகாப்பான பங்கர் ஒன்று இருந்தது. அதில் ஒரு போராளி குடும்பத்தினர் சிலநாட்களாகத்தங்கியிருந்தனர். நாங்கள் அந்த பங்கர்க்குச் சென்று பார்த்தபோது அவர்கள் அங்கிருக்கவில்லை. அவர்களும் பாதுகாப்புத்தேடி வேறிடத்திற்குச் சென்றுவிட்டார்கள்.

அப்போதைக்கு அந்த பங்கர் பாதுகாப்பானதாக எமக்குப்புலப்பட்டதால் அன்றைய இராப்பொழுதிற்கு அந்த பங்கரைத் தேர்வுசெய்து கொண்டோம். நள்ளிரவை அண்மித்த வேளையில் படையினரின் நிலைகளிலிருந்து பீரங்கிக்குழல்களும் கனரக ஆயுதங்களும் மீண்டும் குண்டுகளை உமிழத்தொடங்கியிருந்தன. மறுநாட்பொழுது எப்படிப் புலருமோ என்ற ஏக்கத்துடன் பங்கருக்குள் அந்தப் புழுதிமணலில் தலைகளைப் புதைத்தபடி உறங்கிப்போனோம்.

“கொற்றவன்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*