vp10

வலிசுமந்த பதிவுகள்- 10 (ஏக்கம்)

இரட்டைவாய்க்காலில் நிலைகொண்டிருந்த அரச படையினர் கரையாம்முள்ளிவாய்க்காலை நோக்கி இருதடவைகள் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சிகள் விடுதலைப்புலிகளின் பலமான எதிர்த்தாக்குதலால் அவை முறியடிக்கப்பட்டன என்று கடந்த ஒன்பதாவது பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால் இரட்டைவாய்க்காலில் நிலைகொண்டிருந்த படையினரால் ஏவப்பட்ட எறிகணைகளும் துப்பாக்கி ரவைகளும் கரையாம் முள்ளிவாய்க்காலை தாராளமாகவே ஆக்கிரமித்துக்கொண்டன. இதனால் கரையாம்முள்ளிவாய்க்காலில் குடியிருந்த சுமார் மூன்றுலட்சம் மக்களும் இறுதியாக எஞ்சியிருந்த ஒரேயொரு இடமான வெள்ளாம்முள்ளிவாய்க்காலை நோக்கி இடம்பெயர்ந்தார்கள்.

கரையாம் முள்ளிவாய்க்கால் வீதியோரங்களில் பொதுமக்களால் கைவிடப்பட்ட உந்துருளிகளும் வாகனங்களும் தேடுவாரற்றுக்கிடந்தன. அத்தோடு கடற்கரை மணல்வெளியெங்கணும் பொதுமக்கள் குடியிருந்ததற்கு அடையாளமாக அவர்கள் கூடாரங்கள் அமைத்திருந்த இடங்களில் கூடாரங்கள் அகற்றப்பட்டபின்னர் அவர்களால் கைவிடப்பட்ட பொருட்களும் உடுதுணிகளும் சிதறிக்கிடந்தன. வெடிச்சத்தங்களைத்தவிர வேறு எந்தவிதமான ஆளரவமும் அங்கு கேட்கவில்லை.

வெள்ளாம்முள்ளிவாய்க்கால் என்ற அந்தக் குறுகியநிலப்பிற்குள் இடத்திற்கு இடம் இடம்பெயர்ந்துவந்த மூன்றுலட்சம் மக்களும் முடக்கப்பட்டதோடு விடுதலைப் புலிகளின் கட்டமைப்புக்கள் அனைத்தும் அந்தக் குறுகிய நிலப்பரப்பையே தளமாகக்கொண்டு செயற்பட்டன.

இந்தக் காலப்பகுதியில் அதாவது 2009-ம் ஆண்டு மேமாதத்தின் முதல் வாரப்பகுதியில் இரட்டைவாய்க்காலில் நிலைகொண்டிருந்த அரசபடையினர் விடுதலைப்புலிகளின் தடுப்பரண்களையும் உடைத்துக்கொண்டு கரையாம்முள்ளிவாய்க்காலின் ஒருபகுதி வரையும் முன்னேறியிருந்தனர். இப்போது வெள்ளாம்முள்ளிவாய்க்காலின் கிழக்குத் திசையிலுள்ள வட்டுவாகல்ப் பாலத்திற்கு அப்பால் நிலைகொண்டிருந்த படையினரும் மேற்குப்புறமாக கரையாம்முள்ளிவாய்க்காலில் நிலைகொண்டிருந்த படையினரும் ஏவிவிடுகின்ற எறிகணைகள் மற்றும் கனரக ஆயுதங்களின் ரவைகள் சங்கமிக்கின்ற இடமாக வெள்ளாம்முள்ளிவாய்க்கால் இலக்காகியிருந்ததால் அதுவொரு யுத்தபூமியாகத் திகழ்ந்தது.

படையினரின் கொலைவெறித்தாக்குதல்களிலிருந்து பொதுமக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக செவ்வக வடிவிலான (ஐ பங்கர்) காப்பகழிகளை அமைத்து கூடுதலான நேரங்களில் அதுவே தஞ்சமெனக்கிடந்தார்கள்.

காப்பகழிகளுக்குள்ளேயும் எறிகணைகள் வீழ்ந்து வெடித்த சம்பவங்களும் உண்டு. இந்தச்சந்தர்ப்பங்களில் காப்பகழிகளுக்குள் தஞ்சமடைந்திருந்த பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் பலபேர் இந்தக் கோரத் தாக்குதலின்போது பலியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு உயிரிழந்தவர்களின் உடல்களை புதைப்பதற்குக்கூடப்போதிய இடவசதிகள் இருக்கவில்லை. ஏனெனில் கடற்கரை மணல்வெளி முதல் பனங்கூடல் பற்றைக்காடுகள் வரையிலும் பொதுமக்களின் தரப்பாள்க் கூடாரங்களே காணப்பட்டன.

இதனால் பல சந்தர்ப்பங்களில் பொதுமக்களின் காப்பகழிகளே அவர்களின் சவக்குழிகளாகவும் மாறியிருந்தன. காயக்காரர்களை மேலதிக சிகிச்சைகளுக்கு கொண்டுசெல்லும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரின் கப்பல் வருகையும் சிலநாட்களாகத் தடைப்பட்டிருந்ததால் காயமடைந்தவர்களின் நிலைமைகள் மோசமான கட்டத்திற்குச்சென்றது.

மருத்துவமனைகளில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த அத்தியாவசியமான மருந்துப் பொருட்களும் தீர்ந்துபோயிருந்தது. இந்த அபாயநிலைமையினை கருத்திற்கொண்ட விடுதலைப்புலிகள் 2009-ம்ஆண்டின் மேமாதத்தின் முதல் வாரகாலப்பகுதியில் பல சவால்களுக்கு முகம்கொடுத்து இந்தியாவிலிருந்து கடல்வழியாக ஒருதொகுதி மருந்துப் பொருட்களை வெள்ளாம் முள்ளிவாய்க்கால்ப்பகுதிக்கு தருவித்திருந்தனர். இவ்வாறு தருவிக்கப்பட்ட மருந்துகளே மேமாதம் 17-ம்நாள்வரைக்கும் தாக்குப்பிடித்தது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரின் கப்பல் வருகை தடைப்பட்டிருந்ததால் இருபெரும் நெருக்கடிகளுக்கு பொதுமக்கள் உள்ளாகியிருந்தனர். முதலாவதாக நாளாந்தம் அரச படையினரின் எறிகணைகள் மற்றும் குண்டுத்தாக்குதல்களில் காயமடைகின்ற பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்க அவர்களை திருகோணமலை மற்றும் வவுனியா வைத்தியசாலைகளுக்கு மேலதிக சிகீச்சைகளுக்கு அனுப்ப முடியாமையினால் காயமடைந்தவர்கள் போதிய சிகிச்சைகளின்மையால் அநாவசியமான மரணங்களைச் சந்திக்க நேர்ந்தது.

இதனைச் சமாளிப்பதற்காகவே விடுதலைப்புலிகள் போராளிகள் சிலரின் உயிர் விலைகளைக் கொடுத்து கடல் வழியாக இந்தியாவிலிருந்து ஒருதொகுதி மருந்துப் பொருட்களை முள்ளிவாய்க்கால்ப் பகுதிக்கு தருவித்திருந்தனர். இரண்டாவது நெருக்கடியாக கப்பல் வருகையின்போது யுத்தவலயத்திற்குள் அகப்பட்டுள்ள மக்களுக்கென இலங்கை அரசினால் அனுப்பி வைக்கப்பட்ட ஒரு சொற்ப தொகுதி உணவுப்பொருட்களும் வராமல் தடைப்பட்டுப்போனது.

இதனால் ஒருவேளை உணவுக்குக்கூட மக்கள் படாதபாடுபட்டார்கள். ஏற்கனவே இரண்டு மாதங்களுக்கு மேலாக பட்டினிச்சாவு என்ற அபாயத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நோக்குடன் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் வீதிக்கரைகளில் ஆங்காங்கே சிறிய கூடாரங்கள் அமைத்து பெரியபாத்திரங்களில் கஞ்சி காய்ச்சி காலைமுதல் மாலைவரையிலும் பொதுமக்களுக்கு இலவசமாக கஞ்சி வழங்கினார்கள்.

இத்தகைய மனிதாபிமானச் செயற்பாடு அன்றையநாட்களில் வயிற்றுப்பசியால் வாடிய மக்களுக்கு பெரிதும் ஆறுதலைக்கொடுத்தது. இந்தக்கஞ்சிக்கொட்டில்களுக்கு முன்னாலும் கஞ்சி வாங்குவதற்காக பாத்திரங்களுடன் காத்துநின்ற பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என அப்பாவிமக்களை இலக்குவைத்தும் அரசபடையினர் மேற்கொண்ட எறிகணைத்தாக்குதல்களில் அப்பாவிப்பொதுமக்கள் பலர் ஸ்தலத்திலேயே கோரமாகப் பலியாகிய சம்பவங்களை எவரும் மறப்பதற்கில்லை.

இவ்வாறானதொரு நெருக்கடியான சூழ்நிலை ஏற்படலாமென முன்னரே ஊகித்திருந்த விடுதலைப்புலிகளின் நிதித்துறையினர் கென்டேனர் பெட்டிகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை களஞ்சியப்படுத்தியிருந்தனர். இவ்வாறு உணவுப்பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்ட கென்டேனர் பெட்டிகளும் வீதியோரங்களில் மற்றைய வாகனங்களுக்கு மத்தியில் இவையும் நிறுத்தப்பட்டிருந்தன. கப்பல் வருகை தடைப்பட்டதால் அரசினால் அனுப்பி வைக்கப்பட்ட மிகச் சொற்பமான உணவுப்பொருட்களும் மக்களுக்கு கிடைக்காமல்ப் போனதால் உணவுப்பஞ்சம் மக்கள் மத்தியில் பூதாகாரமானதாக வடிவெடுத்தது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில்த்தான் நிதித்துறையினர் கென்டேனர் பெட்டிகளில் உணவுப்பொருட்கள் களஞ்சியப்படுத்தி வைத்திருந்த விடயம் மக்களுக்கு தெரியவந்தது. அதையடுத்து மக்கள் குறித்த கென்டேனர் பெட்டிகளின் கதவுகளின் பூட்டுக்களை உடைத்து அவற்றிலிருந்து அரிசி பருப்பு மீன்ரின் உள்ளிட்ட அத்தியாவசியமான உணவுப்பொருட்களளை முண்டியடித்துக்கொண்டு அள்ளியெடுத்தார்கள்.

இவ்வாறு எடுக்கப்பட்ட உணவுப் பொருட்களும் ஓரிருநாட்கள் குறிபிட்ட மக்களின் வயிற்றுப் பசியைப் போக்கியது.

தமிழ்நாட்டுவாழ் தமிழ்மக்களும் புலம்பெயர்தேசங்களில் வாழ்ந்த தமிழர்களும் இலங்கையில் மகிந்த அரசு போரைநிறுத்தி வன்னியில் யுத்தவலயத்திற்குள் அகப்பட்டிருக்கும் மக்களை பாதுகாக்குமாறு தாம் வாழுகின்ற நாடுகளின் அரசுகளுக்கு ஊடாக அழுத்தம் கொடுத்தார்கள்.

பனிக்குளிரையும் பொருட்படுத்தது வீதிகளில் இறங்கி அறவழிப் போராட்டங்களை நடாத்தினார்கள். இதற்கு முன்னரான நாட்களில் தமிழ்நாட்டில் முத்துக்குமார் முதல் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் அலுவலகம் முன்றலில் முருகதாசன் வரைக்கும் பத்திற்கும் மேற்பட்ட தியாகிகள் தீக்குளித்து தமிழ்மக்களுக்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தார்கள்.

ஆனாலும் ஒன்றுக்குமே இரக்கம் காட்டாத மகிந்தஅரசு இனவழிப்புப்போரை மேன்மேலும் துணிவுடனும் திமிருடனும் முன்னெடுத்தது.

அரச படையினரின் எறிகணைத் தாக்குதல்கள் கொத்துக்குண்டுத் தாக்குதல்கள் மற்றும் கனரக ஆயுதத் தாக்குதல்களில் காயமடைகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருந்தது. அத்தோடு ஏற்கனவே காயமடைந்தவர்களுக்கும் உரிய வகையான சிகிச்சைகள் வழங்கப்படாததாலும் அதற்கான போதிய வசதிகளின்மையாலும் அவர்களின் காயங்களின் நிலமையும் மோசமடைந்து புழுப்பிடித்த சம்பவங்களுமுண்டு.

இந்த அவலமானதும் அவஸ்தையானதுமான நிலையைக் கருத்திற்கொண்டு விடுதலைப்புலிகளின் அரசியல்த்துறையினர் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்திற்கு தொடர்ச்சியாக கொடுத்த தகவலையடுத்து சிலநாட்களின் இடைவெளிக்குப் பிற்பாடு 2009-ம்ஆண்டு மேமாதம் 06-ம் திகதியும் 08-ம் திகதியுமாக இரண்டு நாட்களிலும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரின் கண்காணிப்பில் கப்பல் வருகை தந்து முள்ளிவாய்க்கால்ச் சந்திக்கு நேரான கடற்பரப்பில் நங்கூரமிட்டு ஒருதொகுதி காயக்காரரை மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலைக்கு ஏற்றிச் சென்றது. இதன் பின்னர் 2009-ம்ஆண்டு மேமாதம் 10-ம் நாள் முள்ளிவாய்க்கால்ச் சந்தியை படையினர் ஆக்கிரமித்துக் கொண்டதையடுத்து கப்பல் வருகையும் முற்றாக நின்றுவிட்டது.

விடுதலைப்புலிகளும் இறுதியாக யுத்த வலயத்திற்குள் அகப்பட்டிருந்த மக்களும் சர்வதேசத்திலும் ஐக்கியநாடுகள் சபையிலும் வைத்திருந்த நம்பிக்கை அற்றுப் போனநிலையில் மே மாதம் 13-ம் திகதி இந்தியாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ்கட்சி ஆட்சியிழந்து பாரதிய ஜனதாக்கட்சி ஆட்சியமைக்கும் பட்சத்தில் தற்காலிக போர்நிறுத்தமாவது ஏற்படுமென்ற நம்பிக்கை அவர்களின் மனங்களில் குடிகொண்டிருந்தது.

இந்திய நாடாளுமன்றத் தேர்தலையும் அதன் பெறுபேறுகளையும் எதிர்பார்த்தே யுத்தத்தின் நெருக்கடிகளையும் தாக்குப் பிடித்து அவற்றிற்கு முகம் கொடுத்துக்கொண்டிருந்தனர்.

இத்தகைய மனிதப் பேரவலங்களின் பதிவுகளில் கடந்த பதிவுகளில் தவறவிட்டிருந்த இன்னுமோர் பதிவையும் இங்கு குறிப்பிடுகின்றேன்.

2009-ம்ஆண்டு ஏப்ரல்மாதத்தின் முற்பகுதியில் அம்பலவன் பொக்கணையில் அமைந்திருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முன்பாக குழந்தைகளுக்கான பால்மாவுக்காக வரிசையில் காத்துநின்ற பெண்களை இலக்குவைத்து படையினர் மேற்கொண்ட எறிகணைத்தாக்குதலில் ஸ்தலத்திலேயே பலபெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயமடைந்தனர்.

பொக்கணையில் தஞ்சமடைந்திருந்த குடும்பப்பெண் ஒருவர் தனது கைகுழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டிருந்தபோது படையினர் ஏவிவிட்ட துப்பாக்கிரவையொன்று அந்தத்தாயின் உடலைத் துளைத்து உயிரைக் குடித்தது. ஆனாலும் தனது தாய் இறந்தது கூடத் தெரியாமல் அந்தப்பிஞ்சுக் குழந்தையும் தாயின் முலையில் பால் குடித்துக்கொண்டிருந்த சம்பவத்தையும் எவராலும் எளிதில் மறந்துவிடமுடியாது.

“கொற்றவன்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*