vp09

வலிசுமந்த பதிவுகள்- 09 (வீரம்)

2009-ம்ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ம்திகதி மாத்தளன் அம்பலவன் பொக்கணை கிராமங்களை அரசபடையினர் முற்றுகையிட்டு முழுமையாக ஆக்கிரமித்து ஒரு வாரத்திற்குள்ளேயே வலைஞர்மடத்தையும் தாண்டி வலைஞர்மடத்தையும் இரட்டைவாய்க்காலையும் பிரிக்கும் கிரவல் வீதி வரையிலும் படையினர் முன்னேறியிருந்தனர்.

குறித்த இந்த வீதிக்கு அண்மையில்த்தான் நான் முன்னர் குறிப்பிட்டதுபோல மாவீரர் துயிலுமில்லம் அமைந்திருந்தது. இதன் பிற்பாடு மாவீரர் துயிலுமில்லம் வெள்ளாம் முள்ளிவாய்க்காலில் கப்பல்வீதிக்கு அண்மையில் இடம்மாற்றப்பட்டிருந்ததுவும் குறிபிடத்தக்கது.

மாத்தளனிலிருந்து விடுதலைப்புலிகளின் எதிர்ப்புக்கள் எதுவுமின்றி குறித்த இந்த கிரவல்வீதி வரையிலும் முன்னேறியிருந்த படையினர் அதற்கப்பாலும் முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டபோதுதான் விடுதலைப்புலிகளின் படையணிகளின் பலத்த எதிர்ப்புக்களைச் சந்திக்கநேர்ந்தது.

இந்த வீதிக்கரையோடு ஏற்கனவே விடுதலைப்புலிகள் மண்ணரண் அமைத்திருந்தனர். இந்த வீதியைத் தாண்டி சற்றுத் தூரம் வந்தால் இரட்டைவாய்க்கால்ச் சந்தியை வந்தடையலாம். இரட்டைவாய்க்கால் சந்தியென்பது முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புவீதியையும் மாத்தளனுக்குச்செல்லும் வீதியையும் இணைக்கும் சந்தியாகும்.

இந்த சந்தியில்த்தான் இரட்டைவாய்க்கால் பிள்ளையார்ஆலயம் என்ற சிறிய ஆலயம் அமைந்திருப்பதுவும் குறிப்பிடத்தக்கது. இந்த இரட்டைவாய்க்கால் சந்தியிலிருந்து மிகக் குறுகிய தூரம் வந்தால் களிமண்ணால் அமைக்கப்பட்ட வீதியொன்று கடற்கரையை நோக்கிச் செல்கிறது.

கடற்கரைக்கு சமீபமாக இந்த வீதிக்கு அண்மையில்தான் அன்றைய நாட்களில் ஐ-பி-ஸி வானொலித் தொடர்பகம் அமைந்திருந்தது. இதன்காரணமாக இந்த வீதி ஐபிஸி வீதி என்றுதான் அப்போது எல்லோராலும் அழைக்கப்பட்டது.

ஆகவே நாமும் இந்த தொடரில் அந்த வீதியை ஐபிஸி வீதியென்றே குறிப்பிடுவோம். நான் மேற்குறிப்பிட்டதுபோல படையினர் தாம் நிலைகொண்டிருந்த இடத்திலிருந்து (துயிலுமில்லம் அமைந்திருந்த கிரவல்மணல்வீதி) இந்த ஐபிஸி வீதி வரையிலும் முன்னேறுவதும் அதையடுத்து விடுதலைப்புலிகள் பலத்த எதிர்த்தாக்குதல்களை மேற்கொண்டு படையினரை பழையநிலைகளுக்கு விரட்டியடிப்பதுமாக இரண்டு தடவைகள் படையினரின் இவ்வாறான முன்னேற்ற முயற்சி விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டது.

இதே காலப்பகுதியில் கடற்பரப்பிலும் கடற்படையினரின் டோறாப்படகுகளும் அதிவேகப்படகுகளும் தொடரான ரோந்து நடவடிக்கைகளிலும் கண்காணிப்புநடவடிக்கைகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.

இந்தநிலையில் கடலில் கடற்புலிகளின் ஆதிக்கம் அருகிவருகின்றது. ஆகவே அதற்கு முன்பாக கடற்படையினர் மீது ஒரு வலிந்த தாக்குதலைத் தொடுத்து கடற்படையினருக்கு இழப்புக்களை ஏற்படுத்தி கடற்பரப்பில் கடற்படையினரின் ஆதிக்கத்தை ஓரளவுக்கேனும் குறைக்கவேண்டுமென்ற ஆதங்கம் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை அவர்களிடம் மேலோங்கியிருந்தது.

இந்தநிலையில் 28-04-2009அன்று மாலை வேளையில் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை அவர்களிடமிருந்து எனக்கு சந்திப்பிற்கு அழைப்பு வந்திருந்தது. கரையாம்முள்ளிவாய்க்காலில் மிகப் பெரிதாக வளர்ந்து கிளைகள் பரப்பிநி ன்ற மரத்தை அண்டியதாக அமைக்கப்பட்டிருந்த நிலக்கீழ் பங்கரில்தான் சூசை அவர்களின் சந்திப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தது.

குறித்த சந்திப்பிற்கு நானும் கடற்புலிகளின் மகளீர்அணியைச் சேர்ந்த பிரமிளாவும் முன்னாள் கடற்புலிகளின் முல்லை மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் றங்கனும் அழைக்கப்பட்டிருந்தோம்.

ஆனால் ஏற்கனவே அணிப் பொறுப்பாளர்களையும் துறைசார்ந்த பொறுப்பாளர்களையும் அழைத்து நீண்ட நேரமாக சிறப்புத்தளபதி சூசைஅவர்கள் கலந்துரையாடிக் கொண்டிருந்ததால் எங்களது சந்திப்பு தாமதமாகிக் கொண்டிருந்தது.

ஆகவே நாம் மூவரும் எமது சந்திப்பிற்காக பங்கர் வாசலில் காத்திருந்தோம். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு நிலப்பகுதியும் கடற்பரப்பும் மிகவும்குறுகி விட்டதால் கடற்சண்டையைப் பொறுத்தவரையில் பெரிய சண்டைப் படகுகளையோ அல்லது நடுத்தர வகையான சண்டைப் படகுகளையோ கடலில் இறக்கி கடற்சமர் செய்யக்கூடிய புறச்சூழ்நிலை அப்போதிருக்கவில்லை.

குறைந்தபட்சம் 85கோஸ்பவர் இயந்திரம் பொருத்தப்பட்ட சிறிய புஸ்ரார் வகைப் படகுகளை தாக்குதலில் ஈடுபடுத்தி தேவையேற்படின் தாக்குதலில் ஈடுபடும் கடற்புலிகளோடு கடற்கரும்புலிகளையும் இணைத்து ஒரு அதிரடியான வலிந்த தாக்குதலை மேற்கொள்வது தான் அன்றைய காலச் சூழலுக்கேற்றவகையில் பொருத்தமானதாகவிருந்தது.

அதுவே சூசை அவர்களின் திட்டமாகவுமிருந்தது. கடற்சண்டையைப் பொறுத்தவரையில் முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய விடயமென்னவென்றால் இயற்கையும் அதாவது காற்றும் கடல் நீரோட்டங்களும் சாதகமான நிலமையைக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையிலேயே குறைந்த வளங்களுடன் கடற்சண்டையில் ஈடுபடும் கடற்புலிகளுக்கு அது சாதகமான வெற்றிகளை ஈட்டித்தரும் என்பதுவே கடந்தகால கடற்சமர்களில் ஏற்பட்ட பட்டறிவாகும்.

நாங்கள் மூவரும் பங்கர் வாசலில் சூசை அவர்களின் சந்திப்பிற்காக காத்திருந்த வேளையில் பங்கரின் உள்ளே அணிப்பொறுப்பாளர்களுடனான சந்திப்பின்போது சூசை அவர்களின் கருத்துக்கள் கொஞ்சம் காரசாரமானதாகவிருந்ததை எம்மால் அவதானிக்கமுடிந்தது.

அவரது கலந்துரையாடலின் நிறைவுக் கட்டத்தில் இவ்வாறு கூறினார் அதாவது “இன்று நான் என்னோடு நிக்கிற பொடியள விட்டு நேவிக்காறனுக்கு அடிக்கத்தான்போறன். இந்தச்சண்டையில அவங்கள் நேவிக்கு அடிப்பாங்கள் அல்லது அவங்கள் வீரச்சாவடைவாங்கள் இதில் ஏதாவது ஒண்டு இன்றுஇரவுக்கு நடக்கத்தான்போகுது”என்ற சூசை அவர்கள் அணிப்பொறுப்பாளர்களைப் பார்த்து காட்டமான தொனியில் கூறிவிட்டு கலந்துரையாடலை நிறைவுசெய்தார்.

அதனைத் தொடர்ந்து சூசை அவர்கள் தனது மெயப் பாதுகாப்புஅணிப் போராளிகளை அழைத்தார். அவர்களில் சுடர்மன்னன் காளைமாணன் யாழ்ச்செழியன் சுடர்ச்சோழன் நேயமுதல்வன் இன்பத்தூயோன் அகநிலவன் அகமலையான் ஆகியோர் உள்ளடங்குவர்.

தனது மெய்ப்பாதுகாப்புப் போராளிகளை அழைத்த கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை அவர்கள் தாக்குதலின் திட்டத்தை அவர்களுக்கு விளங்கப்படுத்தி “இன்றிரவுக்கு நீங்கள் நேவிக்கு அடிக்கிறியள் அல்லது நேவிக்காரன் உங்களுக்கு அடிப்பான்.” என்றுகூறி குறித்த தாக்குதலுக்கு தேவையான ஆயத்தங்களைச் செய்யுமாறு பணித்து அவர்களை அனுப்பிவிட்டு எங்கள் மூவரையும் அழைத்து சூசை அவர்கள் சந்தித்தார்.

அன்றைய தினம் நள்ளிரவைத் தாண்டிய வேளையில் மறுநாளான 29-04-2009 அன்று அதிகாலை 2.00 மணியளவில் வெள்ளாம்முள்ளிவாய்க்காலில் அமையப் பெற்றிருந்த கடற்புலிகளின் கடற் காண்காணிப்பு நிலையத்தில் தாக்குதலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

குறித்த தாக்குதலுக்கான போராளிகளுடன் இயந்திரப்பொறியியலாளரான தமிழரசனும் மகளீர் அணியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வியும் இணைத்துக் கொள்ளப்பட்டனர். குறித்த இந்தத் தாக்குதலுக்கு 85கோஸ்பவர்இயந்திரங்கள் பொருத்தப்பட்ட மூன்று புஸ்ரார் வகைப் படகுகள் கனரகஆயுதங்கள் பொருத்தப்பட்டபடி தயார்ப்படுத்தப்பட்டிருந்தன.

ஒருபடகிற்கு சுடர்மன்னன் கட்டளைஅதிகாரியாகவும் அடுத்த படகிற்கு காளைமாணன் கட்டளை அதிகாரியாகவும் மற்றைய படகிற்கு அகமலையான் கட்டளை அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார்கள்.

இவர்களுடன் கடற்கரும்புலிகளான மகிந்தினியும் நீர்நாடனும் உள்ளடங்கிய கரும்புலிப்படகும் இந்தத் தாக்குதலணியுடன் இணைக்கப்பட்டது. 29-04-2009 அன்று அதிகாலை 2.30மணியளவில் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை அவர்களுடன் சேர்ந்திருந்து உணவருந்திவிட்டு கடற்தாக்குதலுக்கென தேர்வு செய்யப்பட்ட கடற்புலிகளும் கடற்கரும்புலிகளும் வெள்ளாம்முள்ளிவாய்க்கால் கடற்கண்காணிப்பு நிலையத்தை அண்டியதான கடற்கரையிலிருந்து படகுகளில் புறப்பட்டுச்சென்றார்கள்.

எதிரியோடு போர்புரியச் சென்றவர்களுக்கு எதிபார்த்தபடியே இலக்குகளும் கிடைத்தன. சிறிலங்காக் கடற்படையினரின் கடற்கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த டோறாப்படகுகள் மற்றும் அதிவேக கூகர்படகுகள் உள்ளிட்ட கடற்கலங்கள் மீது கடற்புலிகள் அதிரடித் தாக்குதலைத் தொடுத்தனர்.

தாக்குதலின் ஒருகட்டத்தில் கடற்கரும்புலிகளான மகிந்தினியும் நீர்நாடனும் தங்களது கரும்புலிப்படகை வேகமாக ஓட்டிச்சென்று கடற்படையினரின் டோறாப்படகு ஒன்றுடன் மோதினார்கள். பெரும்வெடியதிர்வுடன் கூடிய தீப்பிழப்புடன் டோறாப்படகு கடலில் மூழ்கியது. அதிலிருந்த கடற்படையினர் அனைவரும் கொல்லப்பட்டார்கள்.

கடற்கரும்புலிகளான மகிந்தினியும் நீர்நாடனும் முள்ளிவாய்க்கால்க்கடலில் வீரவரலாறானார்கள். தொடர்ந்து கடற்புலிப்போராளிகள் மேற்கொண்ட தாக்குதலில் கடற்படையினரின் அதிவேக கூகர் படகு ஒன்றும் கடலில் மூழ்கியது. ஆனாலும் தொடர்ந்து கடற்படையினருடன் நடந்த தாக்குதலில் காளைமாணனின் படகும் அகமலையானின் படகும் கடற்படையினரது தாக்குதலில் கடலில் மூழ்கியது.

அதையடுத்து சுடர்மன்னனது படகில் தாக்குதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அகநிலவனும் தமிழரசனும் தமிழ்ச்செல்வியும் எதிரியின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவி வித்துடல்களாக படகில் வீழ்ந்தார்கள்.

கட்டளைஅதிகாரியான சுடர்மன்னனும் எதிரியின் தாக்குதலில் காயமடைந்தார். இருப்பினும் அவர் சோர்வடையாமலும் காயங்களின் வலிகளையும் பொருட்படுத்தாது அவற்றிற்கு கட்டுப்போட்டுவிட்டு மிகவும் துணிச்சலாகச்செயற்பட்டார்.

எதிரியின் தாக்குதல் வலயத்திலவிருந்து மிகவேகமாகவும் லாவகமாகவும் படகை பின்நகர்த்தி வீரச்சாவடைந்த அகநிலவன் தமிழரசன் தமிழ்ச்செல்வி ஆகியோர்களது வித்துடல்களுடன் கரை வந்து சேர்ந்தார்.

இந்த கடற்தாக்குதலில் சுடர்மன்னன்அவர்களைத் தவிர தாக்குதலில் பங்கெடுத்த மற்றைய அனைவரும் வீரச்சாவடைந்துவிட்டார்கள். அதில் அகநிலவன் தமிழரசன் தமிழ்ச்செல்வி ஆகியோர்களின் வித்துடைல்கள் மாத்திரமே கிடைக்கப்பெற்று வெள்ளாம்முள்ளிவாய்க்கால் கப்பல்வீதி மாவீரர் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்டன.

அத்தோடு தாக்குதலில் பங்கெடுத்திருந்த மற்றயவர்களான காளைமாணன் யாழ்ச்செழியன் நேயமுதல்வன் அகமலையான் சுடர்ச்சோழன் இன்பத்தூயோன் ஆகியோர்களது வித்துடல்கள் கிடைக்கப்பெறவில்லை. அவர்களை முள்ளிவாய்க்கால் கடலன்னை தன்னோடு அரவணைத்துக்கொண்டுவிட்டாள்.

“கொற்றவன்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*