vp07

வலிசுமந்த பதிவுகள் – 07 (சலிப்பு)

வலிசுமந்த தடங்களை பதிவாக்குகின்றபோதுதான் கடந்த பதிவுகளில் தவறவிடப்பட்ட விடயங்கள் சிலவும் நினைவுக்கு வருகின்றன. கடந்த பதிவுகளில் பதியப்பட்டிருக்க வேண்டிய சம்பவங்களை மீள மனக்கண் முன்நிறுத்தி இயன்றவரை வரிகளாக்கி ஏழாவது பதிவாக இங்கு பதிவாக்கியிருக்கின்றேன்.

 2009-ம்ஆண்டு பெப்ரவரிமாதம் 01-02 ம் திகதிகளில் விடுதலைப்புலிகள் சிங்கள ஆக்கிரமிப்புப் படைகள் நிலைகொண்டிருந்த கேப்பாப்புலவு முள்ளியவளை நோக்கியதாக ஒரு பாரிய வலிந்ததாக்குதலை மேற்கொண்டனர்.

இந்த வலிந்ததாக்குதல் தொடக்கத்தில் விடுதலைப்புலிகளுக்கு வெற்றிகளைக் குவித்திருந்தாலும் அந்த வெற்றிக்களிப்பு நீண்டநேரம் நீடிக்கவில்லை. எதிர்பாராதவிதமாக புலிகள் தாக்குதலை மேற்கொண்டதனால் ஆரம்பத்தில் படையினர் ஆடித்தான்போனார்கள்.

விடுதலைப்புலிகளின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்கமுடியாத அரசபடையினர் கேப்பாப்புலவையும் விட்டு பின்வாங்கினர். கேப்பாப்புலவையும் முள்ளியவளையின் சில பகுதிகளையும் விடுவித்த விடுதலைப்புலிகளுக்கு தொடர்ந்து நிலமீட்புநடவடிக்கையை முன்னெடுப்பதற்கு ஆட்பலம் போதுமானதாகவிருக்கவில்லை.

விடுதலைப்புலிகளின் படையணிகள் கேப்பாப்புலவு முள்ளியவளைப்பகுதிகளை மீட்ட வெற்றிச் செய்தியை புலிகளின் குரல் வானொலி தனது விசேட ஒலிபரப்பு மூலமாக மக்களுக்கு அறிவித்துக்கொண்டிருந்தது. இடத்திற்குஇடம் இடம்பெயர்ந்து அவலமும் வறுமையும் வாட்டிநின்ற மக்களின் மனங்களில் அந்த வெற்றிச்செய்தி தேனாக இனித்தது.

உண்மையில் மக்கள் பூரித்துத்தான்போனார்கள். புலிகளின்குரல் நிறுவனப்பொறுப்பாளர் ஜவான் அண்ணை (தமிழன்பன்) டாட்டா வாகனத்தில் ஒலிபெருக்கியைக் கட்டிக்கொண்டு “அண்ண முள்ளியவளையைப்பார்க்கப்போறீங்களா வந்து வாகனத்தில் ஏறுங்கோ தம்பி கேப்பாப்புலவக்குப்போகவிருப்பமா வாருங்கோ வந்து வாகனத்தில் ஏறுங்கோ” என்று பேச்சு நடையில் அறிவித்துக்கொண்டு வீதி வீதியாக பின் களப்பணிகளுக்கு ஆட்களைச் சேர்த்துக் கொண்டிருந்தார்.

அவரது அறிவித்தல் மேலும் மக்களுக்கு உற்சாகமூட்ட பல இளைஞர்களும் குடும்பத்தலைவுர்களும் வாகனத்திலேறி பின்களப் பணிக்குச் சென்றார்கள். இவ்வாறு பின் களப்பணிகளுக்குச் சென்றவர்களுக்கு முள்ளியவளையைப் பார்க்கப் போகிறோம் கேப்பாப்புலவைப்பார்க்கப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பே மேலோங்கியிருந்தது.

ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புக்களெல்லாம் அங்கு சென்றதும் அவர்களுக்கு ஏமாற்றமாகவே அமைந்திருந்தது. ஆரம்பத்தில் விடுதலைப்புலிகளின் படையணிகளுக்கு சாதகமாக அமைந்திருந்த களநிலமைகள் முள்ளியவளையிலிருந்து தொடர்ந்து முன்னேறும் நடவடிக்கையின்போது விடுதலைப்புலிகளுக்கு பாதகமான நிலைமைகளைத் தோற்றுவித்திருந்தது.

மீட்கப்பட்ட நிலப்பரப்புக்களில் போராளிகளை நிலைப்படுத்திவிட்டு தொடர்ந்து முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொள்வதற்கு புலிகள் தரப்பில் போதுமான ஆடபலம் இருக்கவில்லை. அத்தோடு மீட்கப்பட்ட பகுதிகளில் விடுதலைப்புலிகளின் நிலைகள் மீது அரசபடையினர் சரமாரியான எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதால் விடுதலைப்புலிகளின் தரப்பில் அதிகமான வீரச்சாவுகளும் காயமடைதலும் ஏற்பட்டது.

ஆகவேதான் இழப்புக்களைத் தவிர்ப்பதற்காக மீட்கப்பட்ட பகுதிகளைவிட்டுப் பின்வாங்கவேண்டிய துர்ப்பாக்கியநிலை புலிகளுக்கு ஏற்பட்டது. இதனாலேயே ஜவான் அண்ணை பின்களப்பணிகளுக்காக கூட்டிச்சென்ற மக்கள் ஏமாற்றத்தோடு வீடுவந்து சேர்ந்தார்கள்.

விடுதலைப்புலிகள் பின்வாங்கியதையடுத்து படையினர் கேப்பாப்புலிவு காடுகளுக்குள்ளால் ஊடுருவி புதுக்குடியிருப்புக் காட்டுப்பகுதிகளை குறிப்பாக முன்னர் விடுதலைப்புலிகளின் கீர்த்திகா மருத்துவமனை அமைந்திருந்த இடத்தையும் அதனைச் சூழவுள்ள பகுதிகளையும் ஆக்கிரமித்துக்கொண்டனர்.

இதேகாலப் பகுதியில்த்தான் சுண்டிக்குளம் – நல்லதண்ணீர்த் தொடுவாய்ப் பகுதியில் நிலைகொண்டிருந்த படையினர் பேப்பாரைப்பிட்டியையும் தாண்டி சாலைத்தொடுவாய் வரையிலும் முன்னேறியிருந்தனர். இதன்பிற்பாடு ஓரிரு வாரங்களிலேயே புதுக்குடியிருப்பு தேவிபுரம் உள்ளிட்ட முல்லைத்தீவு – பரந்தன் வீதியையும் அதனை மையப்படுத்திய பிரதேசங்களையும் படையினர் முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்டனர்.

இந்த நிலையிலேயே மாத்தளன் பொக்கணை வலைஞர்மடம் பகுதிகளில் அரச காணிகள் தனியார் காணிகள் அனைத்திலுமே இடம்பெயர்ந்து வந்திருந்த மக்களின் தரப்பாள்க் கூடாரங்கள் முளைத்திருந்தன.

ஆனாலும் மேலும் பல நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு கூடாரங்கள் அமைப்பதற்கு இடவசதிகள் இருக்கவில்லை. ஆகவேதான் வேறுவழியின்றி மாத்தளனுக்கும் இரணைப்பாலைக்கும் இடைப்பட்ட உவர் கலந்த களிநிலக்கட்டாந் தரையை கூடாரம் அமைத்துக் குடியிருப்பதற்கான இடமாகத் தேர்வுசெய்தார்கள் மக்கள்.

இந்தக் களிநிலம் மாரிக் காலங்களில் மழை நீரால் நிரம்பி சில சமயங்களில் சாலைத்தொடுவாய் உடைப்பெடுக்கின்றபோது கடல்நீருடன் இணைகின்ற சந்தர்ப்பங்களும் உண்டு. இதனாலேயே இந்நிலப்பகுதி உவர்த்தன்மையையும் கொண்டுள்ளது. மாரிகாலங்களில் இந்நீரேரியில் மீன் இறால் பிடிபடுவதுமுண்டு.

ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி 2009

கோடை காலங்களில் தண்ணீர்வற்றி இந்தப்பகுதி வெறும் கட்டாந் தரையாகவே காணப்படும். இந்தக் கட்டாந்தரை நிலம் எந்தவகையிலும் மக்களின் வாழ்க்கைக்கு உகந்ததல்ல. ஆனாலும் வேறுவழியின்றி அந்தக் கட்டாந்தரை நிலத்தையே மக்கள் தமது வாழ்விடங்களாக ஆக்கிக்கொண்டார்கள். தாழ்வான பகுதிகளில் நீர்தேங்கிநின்றது.

சிலபகுதிகள் சேறும் சகதியுமாகக்காணப்பட்டது. பகலில் வெயிலின் வெப்பம் தரப்பாள்க் கூடாரங்களில் இருந்தவர்களை தாராளமாகவே வாட்டியெடுத்தது. இரவில் மாசிமாதத்தின் பனிக்குளிரிலும் அவர்கள் விறைத்துப்போவார்கள். குடிநீருக்கும் சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரம் வரையிலும் சென்றுதான் குடிதண்ணீர் எடுக்கவேண்டும். சைக்கிள்கள் வைத்திருந்தவர்கள் பரல்களில் தண்ணீரை நிரப்பி கரியல்களில் சுமந்துவந்தார்கள்.

சைக்கிள் வசதியில்லாதவர்கள் குடிதண்ணீர் எடுப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டார்கள். குடி தண்ணீருக்கே இவ்வளவு பாடு என்றால் குளிப்பது உடுப்புத் துவைப்பது முதலான அடிப்படைத் தேவைகளுக்கு எத்தகைய சிரமங்களை எதிர்கொண்டிருப்பார்களென நான் இங்கு விபரிக்கவேண்டியதில்லை. நீங்களே புரிந்துகொண்டிருப்பீர்கள்.

இத்தனை துன்பங்களையும் அனுபவித்துக்கொண்டிருந்த மக்களையும் மேலும் துன்பம் துரத்திக் கொண்டுதானிருந்தது. இயற்கை அன்னையும் எமது மக்கள்மீது இரக்கம்காட்டத் தவறிவிட்டாள். பங்குனி மாதத்தின் முதல் வாரத்தில் பருவகாலம் தப்பிய மழை மூன்று நாட்களாகத் தொடர்ந்து பெய்துகொண்டிருந்தது.

தரப்பாள்க்கூடாரங்கள் தண்ணீரில் மிதந்தன. கட்டாந் தரைக்களிநிலம் வெள்ளக்காடாகியது. திடீரென ஏற்பட்ட இந்தக்காலநிலை மாற்றத்தால் மக்கள் செய்வதறியாது திகைத்துப்போயினர். வெள்ளத்தில் மிதந்த தரப்பாள்க் கூடாரங்களை அகற்றிக்கொண்டு கடற்கரைப் பகுதிக்கு வந்து காலியாகவிருந்த மிச்சசொச்ச இடங்களிலும் தரப்பாள்க் கூடாரங்களை அமைத்துக் குடியிருந்தார்கள்.

கடற்கரையில் கடலலை அடித்துவருகின்ற தண்ணீர்க்கரையைத் தவிர மற்றயஇடங்கள் அனைத்தையுமே தரப்பாள்க் கூடாரங்கள் ஆக்கிரமித்திருந்தன. நடைபாதைகள் என்று எதுவும் இல்லை.

மக்கள் எதிர்கொண்ட இடர்களில் இன்னொரு முக்கியமான பிரச்சினை காலைக்கடன் கழிக்கின்ற பிரச்சினையாகும். மாத்தளன் பொக்கணை வலைஞர்மடம் போன்ற பகுதிகளில் பெரியளவில் பற்றைக் காடுகள் கிடையாது. இருந்த சிறியபற்றைவெளிகளையும் இடம்பெயர்ந்துவந்திருந்த மக்கள் துப்பரவு செய்து கூடாரங்கள் அமைத்துக் குடியிருந்தார்கள்.

இந்தநிலையில் இடம்பெயர்ந்து வந்திருந்த மக்களுக்கு காலைக்கடன் கழிப்பதென்றால் கடற்கரையைத் தவிர வேறு இடங்கள் இருக்கவில்லை. ஆண்களைப் பொறுத்த வரையில் இவ்விடயத்தில் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஆட்கள் பார்க்கிறார்களா அல்லது பார்க்கவில்லையா என்பது அவர்களுக்கு கவலையில்லை.

தேவைவரும்போதெல்லாம் கடற்கரையில்போய் குந்திக்கொண்டார்கள். ஆனால் பெண்களின் நிலையோ அதோகதிதான். அவர்கள் இரவுவரையிலும் இயற்கைக்கடன் கழிப்பதற்காக காத்திருப்பார்கள். இயற்கைக்கடன் கழிப்பதற்கு நேரம் எதுவும் குறிக்கமுடியாதுதானே. அவசரமென்று அவதியுற்றவர்கள் பகலிலும்போய் கடற்கரையில் குந்திக்கொண்டார்கள்.

இறுதிப்போர் எல்லாவற்றையும் இழக்கவைத்து இறுதியில் மானத்தையும் இழக்கவைத்தது. குறிப்பாக பெண்கள் எதிர்கொள்ளும் இந்தத் துன்பங்களை அறிந்துகொண்ட கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை அவர்கள் இதற்கு ஒரு தீர்வு கூறினார்.

 

மாத்தளன்முதல் வலைஞர்மடம் வரையான கடற்கரைப் பகுதியில் குறைந்த வளங்களைக்கொண்டு ஐம்பது மீற்றர் தூரத்திற்கு ஒரு தற்காலிக மலசலகூடம் அமைப்பதாகும். இதற்குப்பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பனை ஓலை மரக்கட்டை தகரம் ஆகியவை மாத்திரமே. பனை ஓலைகளால் சுற்றி அடைக்கப்பட்ட கூட்டிற்குள் மிக ஆழம் குறைந்த கிடங்கு வெட்டி இரண்டு பக்கமும் மரக்கட்டைகளை வைத்து விட்டு தகரத்தை குழாய்வடிவில் வளைத்து அந்தக்கிடங்கிலிருந்து கடலின் தண்ணீர்க்கரையோடு புதைத்துவிடுவது.

இயற்கைக்கடன் கழித்துவிட்டு கடலிலிருந்து தண்ணீரை அள்ளிவந்து ஊற்றிவிட்டால் கழிவுகள் கடலுக்குள் போகக்கூடியமாதிரித்தான் செற்ரப். இந்த தற்காலிக மலசலகூடங்கள் அமைக்கின்ற பொறுப்பு முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர்களும் மூன்று நான்கு நாட்களில் அவர்களுக்கு கூறப்பட்ட திட்டத்தின்படி மாத்தளன் முதல் வலைஞர்மடம் வரையிலும் தற்காலிக மலசலகூடங்களை அமைத்துவிட்டார்கள். இதனால் பலஆயிரக்கணக்கான மக்கள் பயனடைந்தார்கள். இது அப்போது அந்த மக்களுக்கு பெரும் ஆறுதலாகவுமிருந்தது.

ஆனால் அந்த ஆறுதல் ஒரு வாரத்திற்கு மாத்திரமே நீடித்தது. திடீரென கடலிலிருந்து பிறவெள்ளம் ஏறியதால் அந்த தற்காலிக மலசலகூடங்கள் அனைத்தும் கடலில் அடித்துச் செல்லப்பட்டது. மக்கள் மீண்டும் சோதனைக்குள்ளானார்கள். மீளவும் அவ்வாறான தற்காலிக மலசலகூடங்களை அமைக்குமாறு சிறப்புத்தளபதி சூசை அவர்கள் கூறியிருந்த போதும் தொடர்ந்து வந்த நாட்கள்ல் ஏற்பட்ட யுத்த சூழ்நிலைகள் அதற்கு இடம்கொடுக்கவில்லை.

அடுத்து மக்கள் எதிர்கொண்ட அடிப்படைப் பிரச்சினைகளில் முக்கியமானது உணவுப் பிரச்சினையாகும். மரக்கறி வகைகளை கண்ணாலும் காணமுடியாது. அத்துடன் ஒருகிலோ அரிசி இரண்டாயிரம் ரூபா ஒரு கிலோ சீனி இரண்டாயிரம் ரூபா ஒரு தேங்காய் இரண்டாயிரம் ரூபாவிற்கும் வாங்கமுடியாது. இவ்வாறுதான் கடைகள் வைத்திருந்தவர்களும் விலைகளை நிர்ணயித்து விற்பனைசெய்தார்கள்.

சொத்து சுகங்களை இழந்து அகதிகளாக அல்லற்பட்டுவந்த மக்கள் இத்தகைய விலையேற்றத்திற்கு ஈடுகொடுத்து எங்ஙனம் பொருட்களை வாங்கமுடியும்? சுயதொழில்கள் எதுவம் செய்யக்கூடிய சூழ்நிலைகள் இருக்கவில்லை. கடற்தொழில் செய்யக்கூடியவர்கள் தங்களிடம் கைவசமிருந்த படகுகள் இயந்திரங்கள் வலைகளைக்கொண்டு கடற்படையினரின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் கடற்தொழிலில் ஈடுபட்டார்கள்.

இவ்வாறு கடற்தொழிலில் ஈடுபட்டவர்களும் பிடிக்கப்படுகின்ற மீன்களை கிலோ இரண்டாயிரம் ரூபா மூவாயிரம் ரூபா என்று எழுந்த மானத்தில் விலைகளை நிர்ணயித்து விற்பனை செய்தார்கள். இந்த விலையேற்றங்களினால் அகதிகளாக அல்லற்பட்டுவந்தமக்கள் அனுபவித்த துன்பங்கள் சொல்லிமாளாது. இந்தப்பிரச்சினைக்கும் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை அவர்கள் ஒரு தீர்வைக்கூறினார்.

அதாவது முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசத்தினரின் ஏற்பாட்டில் இரண்டு மீன்பிடிப் படகுகளை ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுத்தி அதில் பிடிக்கப்படுகின்ற மீன்களை பொக்கணைச் சந்திக்கு நேரான கடற்கரையில் வைத்து மக்களுக்கு இலவசமாக வழங்குவது என்பதாகும்.

இத்திட்டத்திற்கேற்றவாறு சமாசத்தினரும் இரண்டு படகுகளுக்கும் நான்கு கடற்தொழில் செய்யக்கூடியவர்களை ஏற்பாடுசெய்து இரண்டு படகுகளும் மீன்பிடித்தலுக்காக அனுப்பப்பட்டன. தொழிலில் ஈடுபடும் இந்த நான்கு மீனவர்களுக்கும் ஒருநாளைக்கு தலா ஆயிரம் ரூபா வீதம் சமாசத்தால் வழங்கப்பட்டது. இதில் பிடிக்கப்பட்ட மீன்கள் முழுவதும் பொக்கணைக் கடற்கரையில் வைத்து மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

தஞ்சமடைந்திருந்த நான்கு லட்சம் மக்களுக்கும் இரண்டு படகுகளில் மாத்திரம் பிடிக்கப்படுகின்ற மீன்கள் கிள்ளித் தெளிப்பதற்கும் போதாது என்பது தெரியும். ஆனாலும் சாப்பாடின்றி அல்லற்படும் குறிப்பிட்ட ஒருதொகுதி குடும்பங்களாவது பயனடையட்டுமே என்றுதான் இந்த மனிதாபிமானப் பணி செய்யப்பட்டது.

 

குறிப்பிட்டதுபோல குறிப்பிட்ட ஒருதொகுதி குடும்பங்கள் இந்த இலவச மீன்வி நியோகத்தால் பெரிதும் நன்மையடைந்தார்கள் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை. ஆனால் இந்த மனிதாபிமானப் பணியும் இரண்டு வாரங்களுக்கு மாத்திரம்தான் நீடித்தது. கடற்தொழிலுக்குச் சென்ற இரண்டு படகுகளில் ஒன்றை கடற்படையினர் தாக்கி மூழ்கடித்துவிட்டதோடு தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் இருவரும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டார்கள். இந்தச் சம்பவத்தையடுத்து கடற்தொழிலுக்கு வருவதற்கு மீனவர்கள் பலரும் தயங்கினார்கள். சம்பளத்தைக் கொடுத்தும் தொழிலுக்கு ஆட்களைப் பிடிக்க முடியாது போனதால் இந்த இலவச மீன்விநியோகப் பணியும் இடையில் நின்றுபோனது.

இதேகாலப் பகுதியில் அதாவது 2009-ம்ஆண்டு மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் விடுதலைப் புலிகள் மீண்டுமொரு திட்டமிட்ட வலிந்த தாக்குதலை மேற்கொண்டார்கள். அதாவது மூத்ததளபதி பிரிகேடியர் சொர்ணம்அவர்களின் தலைமையில் எழுநூறு போராளிகளை உள்ளடக்கிய அணி சாலையிலிருந்து தெற்குப் புறமாக நீரேரியைக் கடந்து தேவிபுரத்தினூடாக ஒரு ஊடறுப்புத்தாக்குதலை மேற்கொண்டார்கள். வெற்றிகரமாக உள்நுழைந்த தாக்குதலணிகள் தேவிபுரத்தில் படையினர்மீது அதிரடித்தாக்குதல்களை மேற்கொண்டார்கள்.

படையினரும் எதிர்த்தாக்குதலை மிகப்பலமாகவே மேற்கொண்டதால் விடுதலைப்புலிகளின் தாக்குதலணிப்பொறுப்பாளர்கள் பலர் வீரச்சாவடைந்தார்கள் அத்துடன் மேலும் பலர் விழுப்புண்ணடைந்தார்கள். அத்தோடு தாக்குதலின் ஒருங்கிணைப்புத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் காலில் பாரிய விழுப்புண்பட்டார்.

இதையடுத்து விடுதலைப்புலிகளின் தாக்குதலணிகள் ஆட்டம்காணத்தொடங்கியது. எதிர்பாராதவிதமாக விடுதலைப்புலிகள் தரப்பில் இழப்புக்கள் ஏற்பட்டதால் தாக்குதலணிகளை களத்திலிருந்து பின் நகர்த்த வேண்டிய நிலைமை விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்டது. இந்தச்சம்பவம் நடந்து சுமார் இரண்டு வாரங்களின்பின்னர் தான் படையினரால் ஆனந்தபுரம் முற்றுகையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

“கொற்றவன்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*