vp06

வலிசுமந்த பதிவுகள்- 06 (வடு)

அது 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதகாலப் பகுதி. அப்போது வன்னியில் அதுவும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாத்தளன் அம்பலவன் பொக்கணை வலைஞர்மடம் முள்ளிவாய்க்கால் ஆகிய நான்கு கரையோரக் கிராமங்களைத் தவிர மற்றைய அனைத்து நிலப் பரப்புக்களிலும் சிங்கள ஆக்கிரமிப்புப் படைகள் அகலக்கால் பதித்திருந்தனர்.

மேற்குறித்த நான்கு கிராமங்களிலும் நான்குலட்சம் மக்கள் தஞ்சமடைந்திருந்தனர். மாத்தளனில் மாத்தளனையும் தெற்காக இரணைப்பாலையையும் பிரிக்கும் நீரேரியின் சதுப்புநிலத்திற்கு அப்பால் அமைந்திருந்த இந்து மயானத்தோடு அரச படையினரின் முன்னரங்கப் பகுதி அமைந்திருந்தது.

அம்பலவன் பொக்கணையில் பொக்கணையையும் ஆனந்தபுரத்தையும் பிரிக்கும் நீரேரியின் சதுப்புநிலத்திற்கு அப்பால் பச்சைப்புல்மோட்டை எனும் பற்றைகள் மரங்கள் நிறைந்த களிநிலப்பகுதியில் படையினரின் முன்னரங்கப்பகுதி அமைந்திருந்தது.

இந்தச் சதுப்பு நிலத்தை ஊடறுத்து விடுதலைப் புலிகளின் அணிகள் மண்ணரண் அமைத்து காவல்நிலை கொண்டிருந்தார்கள். ஆனால் விடுதலைப் புலிகளின் காவல்நிலைகள் பலமானதாக இருக்கவில்லை. அதற்கு அந்த இடத்தின் புவியியல்அமைப்பு சாதகமானதாக இருக்கவில்லை.

ஆகவே குறித்த இந்த முன்னரங்கப் பகுதிகளில் நிலை கொண்டிருந்த அரச படையினர் எந்த நேரத்திலும் விடுதலைப் புலிகளின் காப்பரணை ஊடறுத்து மாத்தளன் அம்பலவன் பொக்கணைப் பகுதிகளை ஆக்கிரமிக்கின்ற அபாயநிலை நிலவியது.

இரவுநேரங்களில் அரசபடையினர் தாம் ஆக்கிரமித்திருந்த பகுதிகளெங்கும் மின்குமிழ்களைப்பொருத்தி ஒளிரவிட்டிருப்பார்கள். பார்ப்பதற்கு கோவில்த் திருவிழாக்களை நினைவூட்டும். பகல்வேளைகளில் இந்து மயானம் மற்றும் பச்சைப்புல்மோட்டைப் பகுதிகளில் நிலைகொண்டிருந்த படையினர் மாத்தளன் பொக்கணைப் பகுதிகளில் மக்களின் நடமாட்டங்களை அவதானித்து துப்பாக்கிப்பிரயோகங்கள் மேற்கொள்வதுவழக்கம்.

இதன்விளைவாக மாத்தளன் பொக்கணை பிரதானவீதியால் பயணித்தவர்கள் பலர் படையினரின் துப்பாக்கிரவைகளுக்குப்பலியான சம்பவங்களுமுண்டு. ஆகவேதான் மக்கள் தமது போக்குவரத்திற்காக உள்ப்பாதைகளையும் கடற்கரைப் பாதையையும் பயன்படுத்திக்கொண்டார்கள்.

இதனால் பிரதானவீதி பெரும்பாலும் வெறிச்சோடியே காணப்பட்டது. மாத்தளனுக்கு மேற்குப் புறமாக சாலைப்பகுதியில் நிலைகொண்டிருந்த அரசபடையினரை வழிமறித்து விடுதலைப்புலிகளின் அணிகள் அமைத்திருந்த காவல்நிலைகள் பலமானதாகவிருந்தது.

19-04-2009அன்று மாலையில் பச்சைப்புல்மோட்டைப்பகுதியில் நிலைகொண்டிருந்த அரசபடையினர் அம்பலவன்பொக்கணை மற்றும் இரட்டைவாய்க்கால்ப் பகுதிகளைநோக்கி கண்மூடித்தனமான கனரக ஆயுதத் தாக்குதல்களை மேற்கொண்டார்கள்.

இரட்டைவாய்க்கால்ப் பகுதியில் நாங்கள் தங்கியிருந்த தகரக் கூடாரங்களின்மீதும் சூழநின்ற மரங்கள் மீதும் சன்னங்கள் பட்டுத்தெறித்தன. அன்றைய இரவுப்பொழுதிலும் படையினரின் கனரக ஆயுதத் தாக்குதல்களாலும் எறிகணை வீச்சுக்களாலும் அம்பலவன் பொக்கணை இரட்டைவாய்க்கால்ப் பகுதிகள் அதிர்ந்துகொண்டேயிருந்தன. அன்றைய இரவு எங்களுக்கு ஒழுங்கான தூக்கமில்லை. மாத்தளன்பகுதி நிலைமைகளும் இதேமாதிரித்தானிருந்தது.

அனேகமான பொதுமக்கள் காப்பகழிகளுக்குள்ளேயே முடங்கிக்கிடந்தனர். மறுநாளான 20-04-2009அன்றும் துப்பாக்கிச் சன்னங்களின் சடசடப்பொலிகளுடனும் எறிகணைகளின் அதிர்வுகளுடனும்தான் விடிந்தது.

மாத்தளன் பொக்கணைக் கிராமங்கள்தான் அமர்க்களப்பட்டுக் கொண்டிருப்பதாக ஊகித்துக்கொண்டோம். அதன்பின்னர் எமக்கு கிடைத்த தகவல்கள் எமது ஊகங்களை உறுதிசெய்திருந்தன. 20-04-2009 அன்று காலையில் பச்சைப்புல்மோட்டைப் பகுதியில் நிலைகொண்டிருந்த படையினர் கனரகஆயுதங்களின் சூட்டாதரவுடன் சதுப்புநிலத்திற்கு ஊடாக விடுதலைப்புலிகளின் காவல்நிலைகளையும் கடந்து அம்பலவன் பொக்கணை இடைக்காட்டுச் சந்தியையும் பின்னர் அம்பலவன்பொக்கணை கனிஸ்ட வித்தியாலயத்தியாலயம் வரையிலும் முன்னேறிவிட்டனர்.

இப்போது பிரதானவீதி படையினரின் வசம் வீழ்ந்துவிட்டது. அம்பலவன்பொக்கணையில் தஞ்சமடைந்திருந்த மக்களில் பெரும்பாலானோர் படையினரிடம் சரணடையவேண்டியநிலை ஏற்பட்டுவிட்டது.

இவ்வாறு படையினரிடம் சரணடையச்சென்றவர்களில் பலர் படையினரின் துப்பாக்கிச் சூடுபட்டு உயிர்ப்பலியாகினார்கள். அவர்களது உடலங்கள் வீதிகளிலும் சதுப்புநிலங்களுக்குள்ளும் கிடந்தது.

இன்னும் குறிப்பிட்ட தொகையிலான மக்கள் கிடைத்த பொருட்களைக் கையில் எடுத்துக்கொண்டு எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சன்னங்களுக்கு மத்தியிலும் கடற்கரைவழியாக வலைஞர்மடம் ஊடாக முள்ளிவாய்க்கால்ப்பகுதியைநோக்கி இடம்பெயர்ந்தனர்.

வலைஞர்மடப் பகுதியையும் எறிகணைகளும் துப்பாக்கிச் சன்னங்களும் தாராளமாகவே ஆக்கிரமித்துக்கொண்டன. பொக்கணைப் பாடசாலைவரையிலும் படையினர் முன்னேறிவிட்டதை கேள்வியுற்ற வலைஞர்மடத்தில் தஞ்சமடைந்திருந்த மக்களும் கையில் கிடைத்த உடமைகளையும் தூக்கிக்கொண்டு கடற்கரை வழியாக முள்ளிவாய்க்காலைநோக்கி அலைஅலையாக வந்துகொண்டிருந்தனர்.

இந்த அவலங்களின் அமளி ஒருபுறம் நடந்துகொண்டிருக்க மாத்தளனில் தஞ்சமடைந்திருந்த மக்களின் நிலையோ இன்னும் மோசமாகவிருந்தது. மாத்தளன் இந்து மயானத்தில் நிலைகொண்டிருந்த அரசபடையினர் அவ்விடத்திலிருந்து முன்னேறி விடுதலைப்புலிகளின் மண்ணரணைக் கைப்பற்றியிருந்தார்கள்.

மண்ணரணிலிருந்து பின்நகர்ந்த விடுதலைப்புலிகள் புதுமாத்தளன் சந்தியில் நிலையெடுத்து எதிர்த் தாக்குதலை மேற்கொண்டனர். இதனால் மேற்கொண்டு படையினரின் முன்னேற்றம் அன்று இரவு வரையிலும் தாமதப்படுத்தப்பட்டது.

ஆனால் மண்ணரணைக் கைப்பற்றியிருந்த படையினர் மாத்தளனில் மக்கள் குடியிருப்புக்களை நோக்கி சரமாரியான கனரக ஆயுதத் தாக்குதல்களை மேற்கொண்டனர். படையினரின் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

படையினரின் தாக்குதல்களும் ஓய்ந்தபாடாயில்லை. மாத்தளனில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கு படையினரிடம் சென்று சரணடைவதைத் தவிர வேறு தெரிவுகள் இருக்கவில்லை. ஏனெனில் படையினரின் குண்டு மழைகளுக்கு மத்தியில் அம்பலவன்பொக்கணை வலைஞர்மடம் ஆகிய கிராமங்களைக் கடந்து முள்ளிவாய்க்காலுக்கு பாதுகாப்புத்தேடிச்செல்வது என்பது சாத்தியப்படாத விடயம்.

ஆகவேதான் நடப்பது நடக்கட்டும் என்று மக்கள் படையினரிடம் சரணடைகின்ற முடிவை பெரும்பாலானவர்கள் எடுத்தார்கள். அந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களில் ஒன்றாகத்தான் எனக்கு அறிமுகமான குட்டி என்பவரும் தனது இளம் மனைவியுடனும் தனது சிறுகுழந்தையுடனும் மாத்தளனில் குடியிருந்தார்.

குறித்த தினத்தன்று படையினர் ஏவிவிட்ட எறிகணைவீச்சில் குட்டியின் மனைவி ஸ்தலத்திலேயே பலியாகினார். அவரது உடலை எடுத்து புதைப்பதற்குக்கூட அவர்களின் குடும்பத்திற்கு அவகாசம் இருக்கவில்லை.

மாத்தளன் மற்றும் பொக்கணைக்கிராமங்கள் குண்டுமழைகளால் அதிர்ந்துகொண்டிருந்தது. மக்கள் எல்லோரும் தலைகளைக்குனிந்தபடி படையினர் நின்ற மண்ணரண் பகுதியைநோக்கி ஓடிக்கொண்டிருந்தார்கள்.

தலையை நிமிர்த்தினால் சீறிவரும் துப்பாக்கிச் சன்னங்கள் தலையைத் துளைத்து உயிரைக்குடித்துவிடும். இவ்வாறு படையினரிடம் சரணடையச் சென்றவர்களே பாதி வழியிலேயே படையினரின் குண்டுமழையில் கோரமாகப் பலியாகிப் போனார்கள்.

குட்டியின் மனைவியின் உடலை புதைப்பதற்கு உதவிக்கு எவரும் இல்லை. அத்தோடு தொடர்ந்தும் அவ்விடத்தில் தாமதிக்கவும் முடியாது. எனவேதான் தனது மனைவியின் உடலை போர்வையொன்றினால் போர்த்தி தாம் தங்கியிருந்த கூடாரத்தில் உடலை அப்படியே விட்டுவிட்டு தனது சிறுகுழந்தையையும் தூக்கிக்கொண்டு உடன்நின்ற ஒரு சில உறவினர்களோடு குட்டி படையினரின் கட்டுப்பாட்டுப்பகுதிக்கு வந்துவிட்டார்.

மக்கள் படையினர் நின்ற பகுதியைநோக்கி ஓடிக்கொண்டிருக்கையில் வழியில் பலபொதுமக்களின் உயிரற்ற உடலங்கள் வீதிகளிலும் சதுப்பு நிலத்திற்குள்ளும் அநாதரவற்றுக் கிடந்ததை நேரில்கண்டும் அவர்களுக்காக ஒருதுளி கண்ணீர்சிந்தக்கூட அவகாசமில்லாது கையாலாகாத் தன்மையுடனதான் அவர்களின் உறவினர்களும் மற்றயவர்களும் படையினரிடம் சரணடைந்திருந்தார்கள்.

துப்பாக்கிச் சன்னங்கள் உடலினுள் துளைத்து குற்றுயிரும் குலையுயிருமாக சதுப்புநிலத்தில் துடித்துக் கொண்டிருந்தவர்களை தூக்கிக்கொண்டு செல்லக்கூட துணிவில்லாமல் அவர்கள் எழுப்பிய அவலக் குரல்களையும் செவியில் வாங்காது தங்கள் உயிர் தப்பினால்ப் போதும் என்பதுபோல அவர்களையும் விட்டுவிட்டு படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஓடியவர்களும் உண்டு.

இறுதிப் போரின்போது மனிதநேயமும் செத்துவிட்டது என்பதற்கு இதுபோன்ற பல உதாரணங்கள் இருக்கின்றன. இனிவரும் தொடர்களில் சந்தர்ப்பம் வரும்போது அவற்றைப் பதிவிடுகின்றேன்.

மண்ணரணில் நிலைகொண்டிருந்த படையினர் மாத்தளன் வைத்தியசாலையையும் நோக்கி மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டார்கள். ஏற்கனவே காயமடைந்து சிகீச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொதுமக்கள் பலரும் படையினரின் இத்தாக்குதலில் கொல்லப்பட்டார்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

அரசபடையினரிடம் சரணடைந்த மக்களில் கிருபாஅண்ணையின் குடும்பமும் ஒன்று. கிருபாஅண்ணை அவரது மனைவி மற்றும் அவர்களது இரண்டு ஆண்பிள்ளைகள். இதுவே அவரது குடும்பமாகும்.

அவரது ஆண்பிள்ளைகளுக்கு அப்போது வயது முறையே 22 மற்றும் 19ஆகும். மாத்தளன்நீரேரியின் சதுப்புநிலத்திற்குள்ளால் சென்றுகொண்டிருக்கையில் நான் மேற்குறிப்பிட்டதுபோல ஒருகட்டத்தில் மண்ணரண் பகுதியில் நின்ற அரசபடையினருக்கும் மாத்தளன் சந்தியில் நின்ற விடுதலைப்புலிப்போராளிகளுக்கும் ஒருகு றிப்பிட்ட நேரம் தற்காப்புச்சண்டை நடந்தது.

ஆனால் அது நீண்டநேரம் நீடிக்கவில்லை. பின்னர் போராளிகள் தமது நிலைகளிலிருந்து பின்வாங்கிவிட்டார்கள். இந்தச் சண்டை நடந்த சமயத்தில்த்தான் கிருபாஅண்ணையின் இரண்டு புதல்வர்களும் எங்கிருந்தோ வந்த துப்பாக்கிச்சன்னங்களுக்கு இலக்காகி உயிர்ப்பலியானார்கள்.

அவர்களிருவரது உடலங்களும் சதுப்புநிலத்திற்குள் புதையுண்டுகிடந்தது. தங்களது இரண்டு மகன்களுமே உலகம் என்று கருதி வாழ்ந்த கிருபாஅண்ணையும் மனைவியும் தங்களது பிள்ளைகளை கட்டியணைத்து அழுவதற்குக்கூட அவகாசமிருக்கவில்லை.

சடசடக்கும் துப்பாக்கிச் சன்னங்களுக்கு மத்தியிலும் அதிர்கின்ற எறிகணைகளுக்கு மத்தியிலும் கதறியழுத கிருபாஅண்ணையின் மனைவியை அவர்களது உறவினர்கள் படையினர் நின்ற பகுதிக்கு இழுத்துச்சென்றார்கள்.

அங்கு சுயநினைவிழந்த அவர் படையினரின் ஏற்பாட்டில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தேறியிருந்தாலும் ஒரே சந்தர்ப்பத்தில் தனது இரண்டு மகன்களையும் பறிகொடுத்த துயரத்தால் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு இன்றுவரை அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராகவே வாழ்ந்துவருகிறார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

சதுப்புநிலத்தில் புதையுண்டிருந்த தனது மகன்களின் உடலங்களை மீட்பதற்கு கிருபாஅண்ணை முயற்சியெடுத்தபோதிலும் அவருக்கு உதவுவதற்கு எவரும் முன்வரவில்லை. ஏனெனில் அவரது மகன்களைப் போல பலரினது உடலங்கள் சதுப்பு நிலத்தில் கிடந்தன. கிருபா அண்ண அணிந்திருந்த சாரமும் சேட்டும் இறந்த மகன்களது குருதியால் முழுமையாக நனைந்திருந்தது.

அவர் தொடர்ந்தும் அவ்விடத்தில் தாமதித்தால் சீறிவரும் துப்பாக்கிச்சன்னங்களுக்கு அவரும் பலியாக நேரிடும். ஆகவேதான் அவர் மறுத்தபோதும் உறவினர்கள் அவரை வலுக்கட்டாயமாக தங்களுடன் இழுத்துவந்து படையினரிடம் சரணடைந்தார்கள்.

இவ்வாறு சரணடைந்தவர்களை இரணைப்பாலையில் வைத்து ஆண்கள் வேறுபெண்கள் வேறாகப் பிரித்து வவுனியாவில் அமையப்பெற்றிருந்த வெவ்வேறு நலன்புரி முகாம்களுக்கு அனுப்பப்பட்டார்கள்.

இதனடிப்படையில் கணவன் ஒருமுகாமிலும் மனைவி மற்றொரு முகாமிலும் தங்கவைக்கப்பட்ட சம்பவங்களுமுண்டு. பின்னர் பலநாட்களின்பின்னர் உறவிணைப்பின் மூலம் அவர்கள் ஒன்றிணைக்கப்பட்டதுவும் குறிப்பிடத்தக்கது.

2009 ஏப்ரல் 20-ம் 21-ம்திகதிகளில் (அந்த இரண்டு நாட்களில் மட்டும்) படையினரால் மேற்கொள்ளப்பட்ட மாத்தளன் அம்பலவன்பொக்கணை ஆக்கிரமிப்புநடவடிக்கையில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் படையினரின் கொலைவெறித்தாக்குதலில் கொல்லப்பட்டார்கள்.

இதில் ஒருகு றிப்பிட்ட தொகை உடலங்கள் மாத்திரமே முள்ளிவாய்க்கால் கனிஸ்ட தமிழ் வித்தியாலயத்தில் அமைந்திருந்த பிரதான வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. மற்றைய உடலங்கள் அனைத்தும் காப்பகழிகக்குள்ளும் வீதியோரங்களிலும் சதுப்புநிலங்களிலும் அநாதரவற்றுக்கிடந்தன.

21-ம்திகதி இப்பகுதிகளை படையினர் முழுமையாக ஆக்கிரமித்தபின்னர் இந்த நூற்றுக்கணக்கான மனித உடலங்களை படையினர் எவ்வாறு அடக்கம்செய்தார்கள் என்பதுதொடர்பாக இன்றுவரை எமக்குத் தெரியவில்லை.

புதுமாத்தளனுக்கு மேற்குப்புறமாக சாலைப்பகுதியில் நிலைகொண்டிருந்த படையினரை வழிமறித்து புதுமாத்தளனுக்கும் சாலைக்கும் இடைப்பட்டபகுதியில் விடுதலைப்புலிகள் பலமான காவல்நிலைகள் அமைத்திருந்தார்கள் என இத்தொடரின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

மாத்தளன் பொக்கணைப் பகுதிகள் படையினரால் வல்வளைப்புக்கு உட்படுத்தப்பட்டு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் நடந்துகொண்டிருந்தபோதிலும் சாலையில் நிலைகொண்டிருந்த படையினரை வழிமறித்து காவல்நிலைகள் அமைத்திருந்த விடுதலைப்புலிகளின் அணிகள் உடன் பின் நகர்த்தப்படவில்லை.

அதேபோல 21-ம்திகதி மாலையில் மாத்தளன் அம்பலவன் பொக்கணைப் பகுதிகளை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்ட படையினர் அங்கிருந்து முன்னேறி சாலையில் நிலைகொண்டிருந்த படையினருடன் இணைகின்ற நடவடிக்கையையும் அவர்கள் உடன் மேற்கொள்ளவில்லை.

இந்தக்கட்டத்தில் முன்பக்கமாகவும் சாலையில் படையினர் பின்பக்கமாகவும் மாத்தளனில் படையினர் ஒரு முற்றுகைக்குள் விடுதலைப்புலிப் போராளிகளின் அணிகள். இதன்பின்னர் 21-ம்திகதி இரவுதான் கடற்புலிகள் கடல்வழியாக படகுகளில் சாலையில் நிலைகொண்டிருந்த காவல்அணிப்போராளிகளை அங்கிருந்து முள்ளிவாய்க்காலுக்குப் பின்நகர்த்தினார்கள்.

மகிந்த ராஜபக்ச அரசினால் தமிழ்மக்கள் மீது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை வார்த்தைகளால் விபரித்துவிட முடியாதளவிலான மனிதப் பேரவலங்களுடன் 2009 மேமாதம் 15ம் திகதி முதல் 18-ம் திகதி வரை முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றப்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே.

அந்த மனிதப்பேரவலத்தின் முகவுரையாகவே படையினர் மேற்கொண்ட மாத்தளன் மற்றும் அம்பலவன் பொக்கணைப் பகுதிகள்மீதான வல்வளைப்பும் அந்த நடவடிக்கையின்போது இரண்டாயிரத்திற்கும் அதிகமான அப்பாவிப்பொதுமக்கள் பலியாகிப்போன துயரச்சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

வீதியோரங்களிலும் சதுப்புநிலங்களிலும் அநாதரவாகக்கிடந்த எமது மக்களின் உயிரற்றஉடலங்களின் எச்சங்களை படையினர் அழித்திருக்கலாம். ஆனால் அன்றையநாட்களில் தமது உறவுகளைப் பறிகொடுத்து அந்த அவலங்களை நேரில்ப்பார்த்து அனுபவித்த மக்களின் மனங்களில் ஏற்பட்டுவிட்ட வடுக்களும் வலிகளும் என்றுமே ஆறப்போவதில்லை. அவை ஆறாத ரணங்களாக எமது மக்களின் மனங்களில் பதிவாகிவிட்டது.

“கொற்றவன்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*