vp05

வலிசுமந்த பதிவுகள் – 05 (கோரம்)

சமாதானத் தேவதையாக ஆட்சிபீடம் ஏறிய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக் காலத்திலும் ஈழத்தமிழர்கள் அனுபவித்த துன்பங்களும் துயரங்களும் ஏராளம். 1995-ம்ஆண்டின் பிற்பகுதியில் சூரியக்கதிர்-01 படை நடவடிக்கையையும் 1996-ம்ஆண்டின் முற்பகுதியில் சூரியக்கதிர்-02 படை நடவடிக்கையையும் யாழ் குடாநாட்டின்மீது கட்டவிழ்த்து விட்ட சந்திரிகா அரசு இலட்சக்கணக்கான மக்களை குடாநாட்டிலிலிருந்து கிளாலிக்கடல் நீரேரியூடாக வன்னிப் பெருநிலப்பரப்பிற்கு இடம்பெயரவைத்து மாபெரும் சனப்பெயர்வு அவலத்தையும் அரங்கேற்றியிருந்த பெருமையும் அம்மையாரையே சாரும்.

ஆனாலும் யாழ் குடாநாட்டிலிருந்து இடம்பெயர்ந்து வன்னியில் வாழ்ந்த மக்களையும் ஆட்சி பீடத்திலிருந்த சந்திரிகா அரசு நிம்மதியாக வாழவிடவில்லை. பொருளாதாரத் தடைகள் மருந்துத் தடைகள் என தடைகளுக்கு மேல் தடைகளைப் போட்டு மக்களை உளவியல் ரீதியாக வதைத்தது மட்டுமல்லாது மக்களின் குடியிருப்புக்கள் மீது கண் மூடித்தனமான கிபிர் விமானத் தாக்குதல்களையும் நடாத்தி பல நூற்றுக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களைக் கொன்றொழித்தும் இன்னும் பலபேரை அங்கவீனமாக்கியும் ஒரு அவலமான அத்தியாயத்தைப் பதிவாக்கியிருந்தது சந்திரிகாஅரசு.

இந்த அவலங்களின் வரிசையில்த்தான் யாழ் மாவட்டத்தையும் முல்லைத்தீவு மாவட்டத்தையும் புவியியல் ரீதியாகப் பிரிக்கும் கரையோரப் பிரதேசமான சுண்டிக்குளம் – நல்ல தண்ணீர்த்தொடுவாய்ப் பகுதியில் யாழ் குடாநாட்டிலிருந்து இடம்பெயர்ந்து வந்து இங்கு ஓலைக் குடிசைகளில் அகதி வாழ்க்கை என்ற அவலவாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்த பொதுமக்கள் மீது இரண்டு சந்தர்ப்பங்களில் கிபிர் விமானங்கள் தாக்குதல் மேற்கொண்டு அப்பாவி மக்களைக் காவுகொண்ட அவலத்தை காலங்கள் கடந்து விட்டபோதும் இயன்றவரை நினைவுகளிலிருந்து மீட்டு வரிகளாக்குகின்றேன்.

கடற்தொழிலையே தமது அன்றாட வாழ்வாதாரத் தொழிலாக வாழ்ந்த மக்கள் வறுமை வாட்டியபோதும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தார்கள். ஆனால் அந்த தென்னம் தோப்பில் ஓலைக்குடிசைகளில் வாழ்ந்த மக்களின் வாழ்விலும் இடிவிழும் என எவரும் எள்ளளவிலும் எண்ணிப்பார்க்கவும் இல்லை.

அன்றைய நாட்களில் சந்திரிகா அரசின் செய்தித் தணிக்கை அமுல்ப்படுத்தப்பட்டிருந்ததால் இவ்வாறான பல படுகொலைச் சம்பவங்கள் வெளியுலகிற்கும் ஊடகங்களுக்கும் எட்டாமலேயே மௌனித்துப்போயின.

02-12-1998. அந்த தென்னம் தோட்டத்தில் வாழ்ந்த மக்களுக்கு அன்றைய நாள்ப்பொழுதும் வழமைபோல அமைதியாகவே புலர்ந்தது. குடும்பத் தலைவர்களான ஆண்கள் காலையில் கடற்தொழிலுக்குச் சென்றுவந்து பிடிக்கப்பட்ட மீன்களை சைக்கிள்களில் கொண்டுசென்று பிரமந்தனாறு விசுவமடுப் பிரதேசங்களில் வியாபாரம் செய்வதற்காக சென்றுவிட்டார்கள்.

இந்தக் குடும்பங்களில் அனேகமானவர்களுக்கு அன்றைய நாட்களில் பிள்ளைகளாக சிறுவர்கள்தான் இருந்தார்கள். அவர்களும் அப்போது அங்கு மிகவும் குறைந்த வளங்களுடன் செயற்பட்டுக்கொண்டிருந்த தரம்-08 இற்கு உட்பட்ட வகுப்புக்களைக் கொண்ட அந்தப் பாடசாலைக்குச் சென்றுவிட்டார்கள்.

குடும்பப்பெண்கள் தான் வீட்டில் (குடிசையில்) நின்றார்கள். மார்கழி மாதமென்றாலும் அன்றைய தினம் நல்ல வெயிலதான் எறித்துக் கொண்டிருந்தது. மதியம் 11.00 மணியளவில்தானிருக்கும். ஒவ்வொரு குடிசைகளிலும் அன்றைய மதியச் சாப்பாட்டிற்கான சமையல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

குடும்பப்பெண்கள். திடீரென பேரிரைச்சலுடன் வான்பரப்பில் பிரவேசித்த இரண்டு கிபிர்விமானங்கள் குறித்த தென்னந்தோட்டத்தில் மக்களின் ஓலைக்குடிசைகளை இலக்குவைத்து கண்ணிமைக்கும் நேரத்தில் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டன.

எங்கும் புகைமண்டலம். அதற்குள்ளும் “ஐயோ அம்மா….” என்ற அவலக் குரல்கள். தாக்குதல் மேற்கொண்ட கிபிர் விமானங்கள் தனது கொலைக் களத்தை அரங்கேற்றிவிட்டுத் திரும்பிவிட்டன. பக்கத்துத் தென்னந்தோட்டத்தில் குடியிருந்தவர்கள் ஓடிச்சென்று புகை மூட்டங்களுக்குள்ளும் சிதைந்த ஓலைக் குடிசைகளுக்குள்ளும் தேடிப்பார்த்த பொழுது இரத்த வெள்ளத்தில் திருமதி விஸ்வலிங்கம் யோகராணி அவர்களின் உயிரற்ற உடலம் கிடந்தது.

அதற்கடுத்த குடிசைக்குள் திருமதி யோகச்சந்திரன் மல்லிகா அவர்களின் உயிரற்ற உடலம் கிடந்தது. இருவரது உடல்களையும் கிபிர் விமானக் குண்டுச்சிதறல்கள் வெகுவாகப் பாதித்திருந்தது. இவர்கள் இருவரும் உடன்பிறந்த சகோதரிகள் என்பதுவும் இருவரும் திருமணம் முடித்து பிள்ளைகளும் இருக்கிறார்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

மற்றுமொரு குடிசையில் நடமாடவே முடியாமல் படுக்கையாகக் கிடந்த செல்லத்துரை என்ற முதியவரும் குண்டுச்சிதறலில் பலியாகியிருந்தார். அடுத்த குடிசையில் திருமதி கமலநாதன் சறோசாதேவியும் அவரது மகளான செல்வி கமலநாதன் தனுசாவும் படுகாயமடைந்து இரத்தவெள்ளத்தில் சுயநினைவிழந்து கிடந்தார்கள்.

அன்றைய நாட்களில் சுண்டிக்குளம் பகுதியில் இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்த மக்கிளிடம் சைக்கிளைத் தவிர வேறு எந்தவிதமான வாகன வசதிகளும் கிடையாது. அப்போது வீதி வசதிகளும் இருக்கவில்லை. சறோசாதேவியையும் அவரது மகளான தனுசாவையும் தவிர மற்றயவர்கள் இறந்துவிட்டார்கள் என்பது உறுதிசெய்யப்பட்டது.

ஆனாலும் படுகாயமடைந்து சுயநினைவிழந்து கிடக்கும் தாயையும் மகளையும் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லவேண்டுமே. உடனடியாக அங்கிருந்த இளைஞர்கள் சிலர் அவ்விடத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீற்றர்களுக்கும் அப்பால் அமைந்திருந்த கடற்புலிகளின் சுண்டிக்குளம் பிரதேச அரசியல்த்துறைச் செயலகத்திற்குச் சென்று உதவிகோரினார்கள்.

பிரதேச அரசியல்த்துறைப் பொறுப்பாளர் தொலைத்தொடர்பு சாதனத்தின் ஊடாக புதுமாத்தளனில் அமைந்திருந்த கடற்புலிகளின் அரசியல்த்துறை நடுவப்பணியகத்திற்கு அறிவித்து வாகன உதவி கோரினார்.

அரசியல்த்துறை நடுவப்பணியகத்தினரும் புதுமாத்தளனில் தனியாரின் வான் ஒன்றை ஒழுங்குசெய்து அனுப்பிவைத்தனர். இதற்குள் காயமடைந்த சறோசாதேவியையும் அவரது மகளான தனுசாவையும் சுண்டிக்குளம் நீரேரியைக்கடந்து மறுகரைக்கு கொண்டுவந்திருந்தனர். வாகனத்திற்காக குறிப்பிட்டநேரம் காத்திருக்க வேண்டியுமிருந்தது.

இதன்பின்னர் வாகனம் வந்து இருவரையும் புதுக்குடியிருப்பு அரசினர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் தனுசாவின் உயிர் பிரிந்துவிட்டது. புதுக்குடியிருப்பு அரசினர் வைத்தியசாலையில் தனுசாவின் உடலைப் பரிசோதித்த வைத்தியர்களும் தனுசா இறந்துவிட்டதை உறுதிசெய்தார்கள்.

அவரது தாயாரான சறோசாதேவி தீவிர சிகீச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டு அவசர அவசரமாக குருதிகளும் சேலைன்களும் ஏற்றப்பட்டன. தொடர்ந்தும் மூன்று நான்கு நாட்களாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்ட போதிலும் விமானக்குண்டுச் சிதறல்களின் இரண்டு சன்னங்கள் அவரது முள்ளந்தண்டுப் பகுதியில் புதையுண்டிருந்தது. அதை சத்திரசிகிச்சைமூலம் எடுப்பதற்கான வசதிகள் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருக்கவில்லை. அதனால் மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு அவரைக்கொண்டு செல்வதற்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தார்கள்.

அன்றைய காலகட்டத்தில் ஜெயசிக்குறு படைநடவடிக்கை மூலமாக வன்னியில் பெருமளவு நிலப்பரப்புக்களை அரசபடையினர் ஆக்கிரமித்திருந்தனர். இதனால் நோயாளர்களது போக்குவரத்திலும் பல்வேறு சிரமங்கள் இருந்தன. அதற்கான அனுமதிகள் பெற்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அனுசரணையில் வைத்தியசாலைக்குச் சொந்தமான அம்புலன்ஸ் வண்டி மூலமாக வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று அங்கிருந்து அநுராதபுரம் வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை வரையிலும் கொண்டுசென்றபோதிலும் அவரது முள்ளந்தண்டுப்பகுதியில் புதைந்திருந்த இரண்டு சன்னத் துண்டுகளை எடுக்கமுடியவில்லை.

அவ்வாறு எடுக்கமுற்பட்டால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். இதனால் சன்னத்துண்டுகள் எடுப்பதற்கான சத்திரசிகிச்சைக்கு அவர் உட்படுத்தப்படவில்லை. அவரது காயங்கள் தேறியபின்னர் அவர் வீட்டிற்குகொண்டு வரப்பட்டார். இந்த ஆபத்திலிருந்து சறோசாதேவிஅவர்கள் உயிர்தப்பி விட்டபோதிலும் இன்று வரையிலும் இடுப்பின் கீழ் உணர்ச்சியற்று நடக்கமுடியாமல் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

சறோசாதேவி அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலை வரையிலும் கொண்டுசென்று காயங்கள் தேறி மீண்டும் வீட்டிற்குகொண்டு வரப்பட்ட பின்னர்தான் அதாவது இந்த அவலம் நிகழ்ந்து ஒருமாதத்தின் பிற்பாடுதான் மகள் தனுசா இறந்துவிட்ட செய்தி தாயாருக்கு தெரிவிக்கப்பட்டது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

இந்த அவலம் நிகழ்ந்து சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர் அதாவது 21-03-2001 அன்று மேற்குறித்த அவலம் நிகழ்ந்த தென்னம் தோட்டத்திலிருந்து சுமார் ஐந்நூறு மீற்றர் தூரத்திலுள்ள மற்றய தென்னம் தோட்டத்தில் கிபிர் விமானத் தாக்குதலால் மற்றுமோர் கொலைக்களம் அரங்கேற்றப்பட்டது.

இந்தத்தென்னம்தோப்பிலும் மக்கள் ஓலைக் குடிசைகளிலேயே வாழ்ந்துவந்தனர். இந்த மக்கள் குடியிருப்புக்கள் மீது குறித்த நாளன்று கிபிர்விமானங்கள் மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டதன. இத்தாக்குதலில் திரு தம்பிஐயா ரவிராசா அவரது மனைவியான ரவிராசா ரேணுகா ஆகிய கணவன் மனைவி இருவரும் கொல்லப்பட்டதோடு மற்றும் குலசேகரம் தங்கவேலு மற்றும் புலோமினா என்ற மூதாட்டியுமாக நான்கு பேருமாக இந்த விமானத்தாக்குதலில் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர்.

ரவிராசா மற்றும் தங்கவேலு ஆகியஇருவரும் அன்றையநாட்களில் எல்லைக்காப்புப்படையில் செயற்பட்டதால் விடுதலைப்புலிகளால் இவர்கள் இருவருக்கும் நாட்டுப்பற்றாளர் கௌரவம் வழங்கப்பட்டதுவும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக வன்னிப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் மக்கள்குடியிருப்புக்கள் சந்தைகள் கரைவலைவாடிகள் எனப்பல இடங்களிலும் விமானத் தாக்குதல்கள் மூலமும் எறிகணைத்தாக்குதல்கள்மூலமும் பல படுகொலைக்களங்கள் அரங்கேற்றப்பட்டிருந்தன.

காலங்கள் கடந்துவிட்டபோதிலும் சந்திரிகாஅரசு எமது தமிழ்மக்கள்மீது மேற்கொண்ட உயிர்ப்பலிகளின் வலிகள் என்றுமே ஆறப்போவதில்லை.

“கொற்றவன்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*