leader

ஒப்பாரி வைக்கும் ஓநாய்கள்

ஆடு நனைகின்றது என்று ஓநாய்கள் அழுததாம். இப்படி ஒரு பழமொழி தமிழில் உண்டு. அங்கு ஓநாய் அழுவது ஆடு மழையில் நடுங்கி செத்து விடுமே என்பதற்காக அல்ல. ஆடு மழைக்கு ஒதுங்கி தனது இருப்பிடத்திற்குள் நுழையவில்லையே என்பதற்காகத்தான்! அப்படி வந்துவிட்டால ஆட்டை இலகுவாக அடித்துக் கொன்று தின்று விடலாம் என்பதுதான் அதன் ஆசை. அதன் அழுகை அதற்காகத்தான்.

இப்படி ஆடுகளை கடந்த காலத்தில் தின்று ருசி கண்ட சில ஓநாய்கள் ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்து விட்டன. அதிகாரத்தில் அவர்கள் இருந்த காலத்தில் கொன்று தின்ற ஆடுகளின் எண்ணிக்கையை உலகம் மறந்து விட்டிருக்கின்றது என்ற நப்பாசை அவர்களுக்கு.

பாவம்! கடந்த காலக் கணக்குகள் மறக்கப்படுவதுமில்லை. கட்டற்ற விதத்தில் கழிந்து விடப்போவதுமில்லை. காலம் நிச்சயமாகக் கணக்குகளைத் தீர்த்தேயாகும்.

எனினும் அவர்களின் ஒப்பாரிகள் தொடரத்தான் செய்கின்றன.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ராஜ விசுவாசியும், வாயைத்திறந்தால் இனவெறியை மட்டுமே கக்கியவருமான முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இப்போது ஆடு நனைந்து விட்டதை நினைத்து ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்து விட்டார்.

புங்குடுதீவு மாணவியின் பாலியல் வன்புணர்வு கொலையை தான் கண்டிப்பதாகவும், நல்லாட்சி என்ற சொல்லப்படும் ஆட்சியிலேயே இப்படியான சம்பவங்கள் இடம்பெறுகின்றன எனவும் மஹிந்த ராஜபக்ச ஆட்சியிலே இப்படியான சம்பவங்கள் இடம்பெற அனுமதிக்கப்படவில்லை எனவும் பெருங்குரலில் ஒப்பாரி வைத்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு படையினரிடம் சரணடைந்த பெண் பேராளிகளை இராணுவத்தினர் முழுமையாக நிர்வாணப்படுத்தி பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்தி வெறுந்தரையில் வீசி எறிந்து விட்டிருந்த காட்சியைச் சனல் – 4 தொலைக்காட்சி உலகம் முழுவதுக்கும் காட்டி மஹிந்த ஆட்சியின் மிலேச்சத் தனத்தை வெளிப்படுத்தியதை மக்கள் மறந்து விடுவார்கள் என நினைக்கின்றார்கள் போலிருக்கின்றது.

தீவகத்தில் ஒரு மருத்துவமாதுவின் மரணத்திற்கு காரணமாயிருந்த சிங்கள மருத்துவரை விளக்கமறியலில் கூட வைக்காமல் தப்பவைத்ததை மறந்து விட்டாரா, காரைநகரில் பாடசாலை சென்ற சிறுமியின் பாலியல் துஸ்பிரயோகத்துடன் சம்பந்தப்பட்ட கடற்படை சிப்பாயை விடுமுறையில் அனுப்பி விட்டு வேறு நபர்களை அடையாள அணி வகுப்பிற்கு நிறுத்தியதை மறந்து விட்டாரா? நெடுங்கேணியில் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட படையினனின் மேல் நடவடிக்கை எடுக்கப்படாததை மறந்து விட்டாரா? பூநகரியில் விறகு சேர்க்கச் சென்ற ஒரு பெண் இராணுவத்தினரின் வன்புணர்வுக்கு உட்பட்டதை மறந்து விட்டாரா?

இக் கொலைகள் மேன்மை மிகு மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் தானே இடம்பெற்றன. அந்த ஆட்சியில் தானே குற்றவாளிகள் தப்ப வைக்கப்பட்டுச் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.

அதேவேளையில் இன்னொரு ஓநாயின் ஒப்பாரியும் உரக்க ஒலிக்க ஆரம்பித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள்  பொலிசாரால் அச்சுறுத்தப்படுவதாக பெரிய ஒப்பாரி வைத்துள்ளார்.

அவர் ஆட்சியில் இருந்த போது அவரும், அவரது ஈ.பி.டி.பி கட்சியினரும் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு மட்டுமின்றி, மனித குலத்திற்கே அச்சுறுத்தலாக விளங்கியதை மக்கள் மறந்து விடுவார்கள் என அவர் நம்புகின்றார் போல் தெரிகின்றது.

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் எனக்கருதப்படுபவர்கள் வீடுகளிலும், குடும்பத்தவர் முன்னிலையிலேயே கொன்று வீசப்பட்டதை மறந்து விடமுடியுமா? ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதும், கொலை முயற்சிகளில் படுகாயமடைந்ததையும் மறந்து விட முடியுமா? ஊடக நிறுவனங்கள் மீண்டும் மீண்டும் தாக்கி சேதப்படுத்தப்பட்டதையும், எரியூட்டப்பட்டதையும் மறந்து விட முடியுமா? மோட்சாட்சனை செய்த பூசகரும், தமிழில் தேசிய கீதம் பாட வேண்டும் என வலியுறுத்தியவர்களும், கப்பம் கோரிப் பல்கலைக்கழக மாணவனும் கொலை செய்யப்பட்டமையை மறக்க முடியுமா?

இப்படியான மனித குலத்தையே அச்சுறுத்தும் ஒரு பயங்கரம் வடக்கில் மகிந்த ஆட்சியில் இடம்பெற்றதை மக்கள் மறந்து விடுவார்கள் என டக்ளஸ் நம்புகின்றாரா?

விமல் வீரவன்சவும், டக்ளஸ் தேவானந்தாவும் தாங்கள் முன்னின்ற ஆடுகளின் எண்;ணிக்கையை மறந்துவிட்டு இன்று ஆடுகளுக்காக ஒப்பாறி வைத்து கண்ணீர் வடிக்கின்றார்கள்.

ஆனால் மக்கள் அனுபவங்களை மறந்து விடுவதில்லை. ஒப்பாரிகளின் காரணங்களை அறியாமலும் இல்லை. எனவே அவர்கள் என்றுமே ஓநாய்களின் கூடாரங்களில் ஒதுங்கப் போவதில்லை.

–  தமிழ்லீடர் ஆசிரியர்பீடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*