vp04

வலிசுமந்த பதிவுகள் – 04 (பிரிவு)

2004 டிசெம்பர் 26. இந்த நாள் உலக மக்களின் மனங்களில் ஆறாத வடுக்களை ஏற்படுத்திவிட்ட நாள். இந்தோனோசியாவில் சுமத்திராத் தீவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட சுனாமிப் பேரலை இலங்கை உள்ளிட்ட இன்னும சிலநாடுகளின் கரையோரப் பிரதேசங்களைத் தாக்கி ஒரு சொற்ப நேரத்திற்குள்ளேயே பல ஆயிரக்கணக்கான மனித உயிர்களைக் காவுகொண்டதோடு கோடிக்கணக்கான உடமைகளும் அழிக்கப்பட்டன.

இலங்கைத்தீவை எடுத்துக்கொள்வோமாயின் வடமாகாணத்தில் யாழ்மாவட்டம் வடமராட்சிவடக்கு மற்றும் வடமராட்சிக் கிழக்குப் பிரதேசங்களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைநகரம் உள்ளிட்ட கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களும் தென்னிலங்கையில் காலி மாவட்டமும் சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தில் மிகமோசமான உயிரழிவுகளையும் சொத்தழிவுகளையும் சந்தித்த இடங்களாக பதிவாகியுள்ளது.

முல்லைத்தீவு நகரத்தில் வட்டுவாகல் செல்வபுரம் கோவில்குடியிருப்பு மணற்குடியிருப்பு வண்ணாங்குளம் முல்லைப்பட்டினம் கள்ளப்பாடு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகிளில் சுமார் மூவாயிரத்துஇருநூறு பொதுமக்கள் ஆழிப்பேரலையால் அடித்துச் செல்லப்பட்டு ஆவி துறந்தார்கள்.

நீண்டகாலமாக இராணுவ ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகியிருந்த இப்பிரதேசம் 1996-ம் ஆண்டில் விடுவிக்கப்பட்டிருந்தாலும் 2002-ம்ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைஅரசிற்குமிடையிலான சமாதான ஒப்பந்தத்தின் பின்னரான காலப்பகுதியில்தான் முழுமையாக மக்கள் மீள்குடியேறத் தொடங்கியிருந்தார்கள்.

இவ்வாறு குடியமர்ந்த மக்கள் செல்வத்தை அள்ளித்தரும் பிரதான தொழிலான கடற்தொழிலையே நம்பி வாழ்ந்தார்கள். செல்வத்தை அள்ளி அள்ளித் தந்த கடல் ஓர் நாளில் அவர்களின் வாழ்வையே அழித்துவிடும் என்று யார்தான் நினைத்தார்கள்.

முல்லைத்தீவு மக்களுக்கு எந்தவித சலனமுமின்றி வழமை போலவே அன்றைய நாளும் விடிந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமையாதலால் அரச திணைக்களங்களும் அரசசார்பற்ற நிறுவனங்களும் விடுமுறையில் மூடப்பட்டுக்கிடந்தன.

முதல்நாள் இயேசுபிரான் பிறந்ததினமான நத்தார்ப் பண்டிகையை குதூகலமாகக் கொண்டாடிய அந்த ஊர்மக்கள் மறு நாட்காலையில் முல்லைத்தீவுப் பங்குத்தந்தை முல்லைப் பட்டினத்திற்கு தெற்குப்புறமாக அமைந்திருந்த சிறிய தேவாலயத்தில் ஒழுங்குசெய்திருந்த திருப்பலிப்பூசையில் பங்குகொள்வதற்காக பெரும்பாலான கத்தோலிக்க மக்கள் அங்கு சென்றிருந்தனர்.

முல்லைத்தீவுக் கத்தோலிக்க பங்கில் பிரதான தேவாலயமாகத் திகழ்வது முல்லைத்தீவுக் கடற்கரையில் மிகப் பிரமாண்டமாக எழுந்துநிற்கும் சாந்தோமயர் தேவாலயமே. நத்தார்தினமான முதல்நாள் நத்தார் திருப்பலிப்பூசையை பிரதான தேவாலயமான சாந்தோமயர் தேவாலயத்தில் நிறைவேற்றியிருந்த பங்குத்தந்தை அவர்கள் மறுநாள் (சுனாமி அனர்த்தம் நிகழ்ந்த தினத்தில்) நத்தார்த் திருப்பலிப் பூசையை முல்லைப்பட்டினத்திற்குத் தெற்குப்புறமாக அமைந்திருந்த குறித்த சிறியதேவாலயத்தில் ஒழுங்குசெய்திருந்தார்.

இந்தப்பகுதி முல்லைப்பட்டினத்திலிருந்து தெற்குப் புறமாக அமையப் பெற்றிருந்ததால் சுனாமிப் பேரலைகள் இந்தப் பகுதியில் பாதிப்புக்களை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த இந்தத் திருப்பலிப்பூசையில் பங்குகொள்வதற்காகச் சென்றிருந்த மக்கள் மற்றும் பங்குத்தந்தை அருட்சகோதரிகள் அனைவரும் அதிஸ்ரவசமாக உயிர் தப்பியருந்தனர்.

இவ்வாறான ஒரு வழிபாட்டு நிகழ்வு இடம்பெறாது வாரநாள் ஒன்றில் இந்த அனர்த்தம் இடம்பெறுமாக இருந்திருந்தால் நிலமை இன்னும் மோசமாக அமைந்திருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அவ்வாறான நிலமை ஏற்பட்டிருக்குமானால் அரசஉத்தியோகத்தர்கள் அரசசார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்கள் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் பெயர்களை முல்லைத்தீவில் பலியானவர்களின் பட்டியலில் நாம் பார்க்க நேர்ந்திருக்கும்.

அந்த அவலத்திலும் அதிஸ்டதேவதை கைகொடுத்திருக்கிறாள் என்றுதான் சொல்லவேண்டும்.

அன்றுகாலை 8.30மணியிருக்கும். திடீரென கடலிலிருந்து கரியநிறத்தில் இராட்சதப்பேரலைகள் பேரிரைச்சலுடன் குடிமனைகளை நோக்கிப்பெருக்கெடுத்தது. கடற்கரையில் நின்ற சிலர் “கடல்வருகுது கடல் வருகுது” என்று சொல்லிக்கொண்டு ஓடிவந்தபோது அதைக்கேட்ட மற்றவர்கள் அடுத்தகணம் முடிவெடுப்பதற்கிடையில் மூர்க்கம் கொண்டுவந்த ஆழிப்பேரலைகள் அவர்களை அடித்துச்சென்று சன்னதம் ஆடிக்கொண்டிருந்தது.

எங்கும் “ஐயோ” என்ற அவலக்குரல்கள். இராட்சதப்பேரலைகளால் கட்டிடங்கள் இடிந்தன. மரங்கள் முறிந்தன. கணவன் மனைவியைக் காப்பாற்றுவதா பிள்ளையைக் காப்பாற்றுவதா? ஒருபிள்ளை தாயைக்கட்டிப் பிடிக்க மற்றப் பிள்ளை தந்தையைக் கட்டிப்பிடிக்க சன்னதமாடிய இராட்சதப் பேரலைகளில் அவர்கள் அள்ளுண்டுபோய் ஆவி துறந்தார்கள்.

முட்கம்பிச் சுருளுகளுக்குள்ளும் பனை வடலிகளுக்குள்ளும் அவர்களின் உடலங்கள் மீட்கப்பட்டபோது உயிர் பிரிந்த பின்பும் அந்தக் குழந்தைகள் தாயைக் கட்டிப்பிடித்த பிடி தளரவேயில்லை.

அப்போது அவர்கள் வீட்டின் மேல்த்தளத்தில் நின்றனர். இராட்சத அலைகள் பேரிரைச்சலுடன் வருவதைக்கண்ட பபிஅண்ணையின் மனைவியார் “அப்பாவின் மோட்டார் சைக்கிள் கீழ்த்தளத்தில் நிக்கிறது அதை எடுத்துவிடுவம்” என்று பிள்ளைகளுக்கு கூறிவிட்டு கீழ்த்தளத்திற்குச்செல்ல தாயைப் பின்தொடர்ந்து அவர்களின் கடைசிப்பெண் பிள்ளையும் ஓடியது.முல்லைத்தீவு சாந்தோமயர் தேவாலயத்திற்கு அண்மையில்த்தான் பபிஅண்ணையின் வீடு அமைந்திருந்தது. வீடு மேல்மாடிவீடுதான். பபிஅண்ணை பணிநிமிர்த்தமாக புதுக்குடியிருப்புக்குச் சென்றுவிட அவரின் மனைவியும் பிள்ளைகளுமே வீட்டில்நின்றனர்.

மற்றப்பிள்ளைகள் மேல்த்தளத்திலேயே நின்றுகொண்டார்கள். அவர்களுக்கு எந்தப்பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் வீட்டின் கீழ்த்தளத்திற்குச் சென்ற தாயும் பிள்ளையும் திரும்பி வரவேயில்லை.

சுனாமிப்பேரலையின் சுழிகளுக்குள் அகப்பட்ட அவர்களிருவரது உயிர்களையும் ஆழிப்பேரலை காவுகொண்டுவிட்டது. பெண்பிள்ளையின் உடலம் அன்றையதினமே கிடைத்தது. ஆனால் பபிஅண்ணையின் மனைவியின் உடலம் எங்கு தேடியும் கிடைக்கவேயில்லை.

போராளிகளாலும் நண்பர்களாலும் பப்பா என்று அன்பாக அழைக்கப்படுகின்ற ஜோர்ஜ் அங்கிளும் அவரது துணைவியார் பிலோமினா ரீச்சரும் ஒரு பண்பான குடும்பத்தவர்கள். பப்பா என்று அழைப்பதன் காரணத்தையும் இங்கு குறிப்பிட்டுவிடுகின்றேன்.

இவர்களின் சொந்த இடம் வடமராட்சி சற்கோட்டை ஆகும். இவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் முடித்து புதுத் தம்பதிகளாக சற்கோட்டையில் வாழ்ந்த நாட்களில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மூத்ததளபதி கேணல் கிட்டுஅவர்களின் தந்தையார் சதாசிவம்அவர்கள் சற்கோட்டையில்த்தான் வள்ளம் வைத்து கடற்தொழில் செய்துவந்தார்.

அந்தநாட்களில் சிறுவனாக இருந்த கிட்டு என்றழைக்கப்பட்ட கிருஸ்ணகுமாரை ஜோர்ஜ்அங்கிள் பிலோமினா ரீச்சர் வீட்டில் விட்டுத்தான் கிட்டண்ணாவின் தாயாரும் தந்தையாரும் கடற்கரைக்குச் செல்வது வழக்கமாகவிருந்தது. கிட்டண்ணா சிறுவயதில் ஜோர்ஜ் அங்கிளை “பப்பா” என்று அழைத்ததுதான் பின்நாட்களில் அவரை எல்லோரும் “பப்பா” என்று அழைக்கக் காரணமாயிற்று.

அவர்களின் இல்லறம் என்னும் நல்லற வாழ்க்கையில் ஐந்து பெண்பிள்ளைகளுக்கு சிறந்த பெற்றோரானார்கள். காலநீட்சியில் நோர்வே நாட்டிற்கு புலம்பெயர்ந்து சென்றிருந்த பப்பா குடும்பத்தினர் ஐந்து பெண்பிள்ளைகளும் சிறந்த முறையில் கல்வியில் தேர்ச்சிபெற்று தங்களுக்கான உத்தியோகங்களையும் தேடிக்கொண்டதோடு ஈற்றில் தங்களுக்கான வாழ்க்கைத் துணைகளையும் தேடிக்கொண்டார்கள்.

2002-ம்ஆண்டுகாலப்பகுதி. நோர்வேநாட்டின் அனுசரணையில் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு போர்நிறுத்தம் அமுலில் இருந்த காலப்பகுதி. தாயகத்திற்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்த பப்பாவும் ரீச்சரும் வன்னிக்குவந்து தமிழீழத்தேசியத்தலைவர் அவர்களை சந்தித்ததோடு தமது பழைய நண்பர்கள் போராளிகள் எல்லேரையும் சந்தித்து வன்னியின் பல பிரதேசங்களையும் பார்வையிட்டு மீண்டும் நோர்வே நாட்டிற்குத் திரும்பினர். பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என்று இன்புற்றிருக்க வேண்டிய பப்பாவுக்கும் ரீச்சருக்கும் வன்னிக்கு வந்துவிட்டுச் சென்ற பின்னர் நோர்வேயில் இருப்புக்கொள்ளவில்லை.

மீண்டும் 2004-ம்ஆண்டு வன்னிக்கான பயணத்தை மேற்கொண்டார்கள். இம்முறை நோர்வேக்கு திரும்பிச் செல்லும் நோக்கத்துடன் வரவில்லை. நிரந்தரமாகவே வன்னியில் தங்கிவிடுவதென்றும் தமது முதுமைக்காலத்தை தாயகமண்ணிலேயே கழித்துவிடவேண்டுமென்ற ஆவலிலும்தான் வந்திருந்தார்கள்.

இவ்வாறு வந்திருந்த பப்பாவுக்கும் ரீச்சருக்கும் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை அவர்களின் ஆதரவு தாராளமாகவே கிடைத்தது. கடலலைகள் தாலாட்டும் முல்லைத்தீவுக் கடற்கரையில் சகல வசதிகளுடனும் கூடிய வீடு ஒன்று எடுத்துக் கொடுக்கப்பட்டது. பப்பாவுக்கும் ரீச்சருக்கும் காந்தரூபன் அறிவுச்சோலையில் வேலையும் எடுத்துக்கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நாட்களில் தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களை மீண்டுமொரு தடவை பப்பாவும் பிலோமினா ரீச்சரும் சந்திப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை அவர்கள் பெற்ற பெரும்பாக்கியமே.

காந்தரூபன் அறிவுச்சோலை மழலைச் செல்வங்களின் மழலைப் பேச்சுகளிலும் கடற்காற்று மேனியைத் தழுவும் அந்த அமைதியான வீட்டில் பப்பாவினதும் ரீச்சரினதும் வாழ்க்கை எந்தவித சலனமுமின்றி அமைதியாகவே ஓடிக்கொண்டிருந்தது. ஆனாலும் அவர்களுக்கு பெருவிருப்பம் ஒன்று இருந்தது.

அதுதான் ஒரு நல்லநாளில் தங்களுக்கு நெருக்கமான நண்பர்களுக்கும் போராளிகளுக்கும் மதியபோசனவிருந்து வழங்கவேண்டும் என்பதுவே அந்த விருப்பமாகும். அதற்கான நாளும் குறித்தார்கள். அதுதான் நத்தார்ப் பண்டிகைக்கு அடுத்தநாள் 26-ம்தேதி.

பிலோமினா ரீச்சரின் மருமகன் முறையான ராதாஅண்ணையும் அவரின் துணைவியாரும் புதுக்குடியியிருப்பிலிருந்து முதல்நாளே பப்பாவீட்டிற்கு வந்திருந்தார்கள். மறுநாள் காலையிலேயே பப்பா வீட்டில் மதியபோசன விருந்துபசாரத்திற்கான சமையல் வேலைகள் தடல்புடலாக நடைபெற்றுக்கொண்டிருந்தன.

அப்போதுதான் கட்டிடங்கள் இடிகின்ற பாரியஅதிர்வுச்சத்தங்களுடன் கரியநிறத்திலாலான இராட்சதஅலைகள் வருவதைக்கண்ட பப்பாவும் ரீச்சரும் ராதாஅண்ணையும் அவரின் மனைவியும் சமையல்வேலைகளை அப்படியே விட்டுவிட்டு அச்சத்தால் கலவரமடைந்து வீட்டின் பின்புறமாக ஓடிச்சென்று பின்புறமாக அமைந்திருந்த மதில்ச் சுவரைப் பிடித்துக்கொண்டார்கள்.

அதற்குள் மூர்க்கம் கொண்டுவந்த சுனாமிப் பேரலைகள் முல்லைத்தீவையே ஆக்கிரமித்து சன்னதம் ஆடத்தொடங்கியது. ஆழிப்பேரலையில் கட்டிடங்கள் இடிவதைக்கண்ட பப்பா – ரீச்சரைப்பார்த்து “பவா (அவர் மனைவியான பிலோமினா ரீச்சரை பவா என்றுதான் அழைப்பது வழக்கம்) மதில் விழப்போகுது போலிருக்கு நான் மதில்ச்சுவரை கைவிடப்போறன்” என்று சொல்லவும் மூசிவந்த இராட்சதஅலை அவர்களை ஆளுக்கொரு திக்கில் அடித்துச்சென்றது.

ஆழிப்பேரலை அடித்தபோது “என்னையும் ஒருக்கால்….” இதுதான் ரீச்சர் கூறிய கடைசி வார்த்தை. அதற்குள் மூர்க்கம் கொண்டுவந்த அலையில் ரீச்சர் மூழ்கிப்போனார். மற்றவர்களும் ஆளுக்கொரு பக்கமாக அலையில் அடித்துச் செல்லப்பட்டார்கள். இவர்கள் பிடித்திருந்த மதில்ச்சுவரும் மற்றய பக்க மதில்ச் சுவர்களும் இடிந்துவிழுந்தது.

சுனாமிச்சுழியில் அகப்பட்ட பிலோமினா ரீச்சர் அலையில் தத்தளித்து உயிர்துறந்தார். அவரது உயிரற்ற உடலம் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க வளாகத்தில் ஒதுங்கிக்கிடந்தது. பப்பாவும் ராதாஅண்ணையும் அவரது மனைவியும் ஆடைகள் கிழிந்து அலையில் அல்லோலப்பட்டு அடித்துச்செல்லப்பட்டு ஆளுக்கொரு இடத்தில் ஒதுக்கப்பட்டார்கள்.

நல்லவேளையாக அவர்களின் உயிர்களுக்கு எவ்விதஆபத்தும் ஏற்படவில்லை. முல்லைத்தீவு வணிக நிலையங்களுக்கு முன்னால் ஒதுக்கப்பட்ட பப்பாவை சற்றுத் தூரத்தில் ஒதுங்கியிருந்த ராதாஅண்ணை கண்டுவிட்டார்.

உடனே “அங்கிள்” என்று உரக்கக் கூப்பிட பப்பா ராதா அண்ணையிடம் சென்றார். “மாமி எங்கே” என்று ராதா அண்ணை பப்பாவைக் கேட்டார்.

“மதில்சுவரில் பிடித்திருந்தபோது கடலலைகள் அடித்தபோதே மாமியைத் தவறவிட்டுவிட்டோம்” என்று பப்பா கூறினார். “மாமியைத் தேடுவோம்” என்றார் ராதாஅண்ணை. ஏல்லோருமாகச் சேர்ந்து பிலோமினா ரீச்சரைத் தேடினார்கள். ரீச்சர் அனர்த்தத்தில் இறந்துவிட்டார் என்பது உறுதியானது.

ஆனாலும் உடலத்தை எடுக்கவேண்டுமே. அன்றையதினம் முழுவதுமாகத் தேடியும் உடலம் கிடைக்கவேயில்லை. பின்னர் மறுநாள்த்தான் கடற்தொழிலாளர் சமாச வளாகத்தில் ஓதுக்கப்பட்டிருந்த பிலோமினா ரீச்சரின் உயிரற்ற உடலம் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்தவர்களால் மீட்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து பிலோமினா ரீச்சருக்கு நாட்டுப்பற்றாளர் கௌரவம் விடுதலைப்புலிகளால் வழங்கப்பட்டது.

கடற்புலிகளின் முல்லைத்தீவு மாவட்ட அரசியல்த்துறைச் செயலகத்திலும் அன்றையதினம் ஞாயிற்றுக்கிழமையாதலால் பணியாளர்கள் எவரும் வந்திருக்கவில்லை. அப்போது அரசியல்ப் போராளிகளான அரவிந்தனும் தினேசும்தான் அப்போது அரசியல்ச்செயலகத்தில் நின்றிருந்தார்கள்.

தினேஸ் சிலஆண்டுகளுக்கு முன்னர்தான் சண்டைக்களமொன்றில் தனது ஒருகாலை இழந்ததால் மாற்றீடாக செயற்கைக்கால் பொருத்தப்பட்டு தனது பணிகளை முன்னெடுத்துக்கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக பேரிரைச்சலுடன் இராட்சதஅலைகள் ஆக்கிரமித்துவிட அந்த இரைச்சல்களையும் தாண்டி பக்கத்து வீட்டு ராஜ்குமார்மாஸ்ரரின் மனைவி பிள்ளைகளின் அவலக்குரல் அரவிந்தனுக்கு தெளிவாகவே கேட்டது.

தான் தப்பித்துக்கொள்வதா அல்லது ராஜ்குமார் மாஸ்ரரின் பிள்ளைகளைக் காப்பாற்றுவதா? சிந்திப்பதற்கு அவகாசமில்லை. ஒருவாறாக அரவிந்தன் சுனாமிஅலைகளில் தத்தளித்தவாறு நீந்திச்சென்று ராஜ்குமார் மாஸ்ரரின் வளவிற்குள்சென்றார். ராஜ்குமார் மாஸ்ரர் சற்றுமுன்னர்தான் பணிநிமிர்த்தமாக புதுக்குடியிருப்புக்குச் சென்றுவிட அவரின் மனைவி பிள்ளைகள் மற்றும் மனைவியின் தாயாரான ராஸ்குமார் மாஸ்ரரின் மாமியார் ஆகியோரே அப்போது வீட்டில் நின்றிருந்தார்கள்.

அலையில் தத்தளித்துக்கொண்டிருந்த ராஜ்குமார் மாஸ்ரரின் நான்கு பிள்ளைகளையும் ஒவ்வொருவராக மரத்தில் ஏற்றிவிட்ட அரவிந்தன் ராஜ்குமார் மாஸ்ரரின் மனைவியையும் மரத்தில் ஏற்றிவிட்டு தானும் ஏறிக்கொண்டர். ஆனால் அந்தவீட்டில் நின்ற ராஜ்குமார் மாஸ்ரரின் மனைவியின் தாயாரைக் காப்பாற்றமுடியவில்லை.

அவர் சுனாமிச்சுழியில் அகப்பட்டு இறந்துபோனார். அவரது உடலமும் கிடைக்கவில்லை. அந்த இராட்சத அலைகள் தாண்டவமாடிய போதும் தனியொருத்தனாக நின்று ஐந்து மனித உயிர்களைக் காப்பாற்றியது உண்மையில் பாராட்டப்படவேண்டிய விடயம்தான்.

அடுத்து செயலகத்தில் நின்றிருந்த தினேஸ் என்னவானார் என்று பார்த்தால் ஆழிப்பேரலைகளில் அகப்பட்ட தினேசின் செயற்கைக்கால் கழன்றுபோக இராட்சதஅலைகள் அவரை அப்படடியே செயலகத்தின் ஒன்றுகூடல் மண்டபத்திற்குமேலால் அடித்துச்சென்று நகரவீதியில் அமைந்திருந்த மயில் புடவை மாளிகையின் மேற்கூரையில் கொண்டுபோய்ப்போட்டது. அதிஸ்ரவசமாக சிறுகாயங்களுடன் உயிர்தப்பிக்கொண்டார் தினேஸ்.

முல்லைத்தீவு மகாவித்தியாலயத்திற்கு அண்மையில்த்தான் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மேற்பார்வையில் செயற்பட்டுவந்த செந்தளிர் சிறுவர் இல்லம் (மிகவும் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களை பராமரித்து கல்வி அறிவூட்டும் இல்லம்) அமைந்திருந்தது.

மார்கழிமாதம் விடுமுறைக்காலம் என்பதால் குறிப்பிட்ட சிறுவர்கள் பெற்றோர்களிடம் சென்றுவிட பெற்றோர்கள் இல்லாதவர்கள் மற்றும் பெற்றோர்களால் பராமரிக்கமுடியாத சிறுவர்கள் அனைவரும் தொடர்ந்தும் அந்த இல்லத்திலேயே தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டுவந்தார்கள்.

ஆர்ப்பரித்துவந்த ஆழிப்பேரலை அந்தப் பிஞ்சுக் குழந்தைகள் மீதும் இரக்கம் காட்டவில்லை. எதிர்காலத்தில் இளம்சமுதாயத்திற்கு சிறந்த வழிகாட்டிகளாகத் திகழப்போகும் அந்த இளம்குருத்துக்கள் நாற்பதுபேர்வரையில் ஆழிப்பேரலையின் ஊழிக்கூத்தில் காவுகொள்ளப்பட்டார்கள்.

முல்லைத்தீவில் சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தில் அதிகூடிய உயிரழிவுகளையும் சொத்தழிவுகளையும் சந்தித்த கிராமம் கள்ளப்பாடு எனும் கிராமமாகும். இவ்வாறு இந்தக் கிராமம் கூடிய அழிவைச் சந்தித்ததற்கு மற்றுமொரு காரணம் இந்தக் கிராமத்திற்கு பின்புறமாக இருக்கின்ற இறால்க்குளம் எனும் நீர்த்தேக்கமாகும்.

வடக்குப்புறமாக கடலையும் தெற்குப்புறமாக இறால்க்குளம் எனும் நீர்த்தேக்கத்தையும் கொண்டதுதான் இந்த கள்ளப்பாடு கிராமம். இந்தக் கிராமத்தில் பெரும்பாலான மக்கள் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் கத்தோலிக்க பூசை வழிபாடுகளுக்கும் செல்லவில்லை.

அன்றையதினம் வீட்டிலேயே நின்றுகொண்டார்கள். மூர்க்கமாக வந்த சுனாமி இராட்சத அலைகள் கள்ளப்பாட்டு மக்களை அப்படியே அடித்துச் சென்று இறால்க் குளத்தில் கொண்டு போய்ப்போட்டது. மற்றய இடங்களில் சுனாமிஅலைகளில் அகப்பட்ட பலர் மரங்களைப்பிடித்தும் கட்டிடக் கூரைகளில் ஒதுக்குப்பட்டும் நீரில் மிதந்துவந்த மிதவைகளையும் பிடித்துத்தான் முட்கம்பிகள் மரக்கட்டைகள் கீறிய காயங்களுடனேயும் உயிர் தப்பிக் கொள்ளக்கூடியதாகவிருந்தது.

ஆனால் இறால்க்குளத்திற்குள் அடித்துச்செல்லப்பட்ட மக்கள் இவ்வாறு உயிர்தப்புவதற்கு எந்தவிதமான உபாயங்களும் இருக்கவில்லை. இறால்க்குளத்திற்குள் அடித்துச்செல்லப்பட்ட மக்கள் அனைவருமே இறந்துபோனார்கள். ஆகவேதான் கள்ளப்பாட்டில் பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என பல நூற்றுக்கணக்கான மக்கள் ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தில் பலியாகவேண்டிநேர்ந்தது.

மீட்புப்பணியாளர்கள் குளத்தில் இறங்கி மீட்கக்கூடிய உடலங்களை மீட்டார்கள். மேலும் குளத்திற்குள் மனித உடலங்கள் இருப்பதாக கருதப்பட்ட போதிலும் மீட்கமுடியவில்லை. காரணம் சுனாமிக் கடல்த்தண்ணீரும் குளத்தில் சேர்ந்ததால் குளத்தின் ஆழம் அதிகமாகவேயிருந்தது.

ஆகவே அன்றைய நாட்களில் பணிநிமிர்த்தமாக மன்னார் மாவட்டத்தில் நிலைகொண்டிருந்த கடற்புலிகளின் நீரடி நீச்சல்ப் பிரிவுப்போராளிகள் முல்லைத்தீவிற்கு வரவழைக்கப்பட்டு இறால்க் குளத்தில் தேடுதல்ப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு மேலும் உடலங்கள் மீட்கப்பட்டன.

முல்லைத்தீவில் சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தில் காவுகொள்ளப்பட்ட மக்களின் உடலங்களை மீட்கும் பணி பலநாட்களாகத்தொடர்ந்தது. அனர்த்தம் ஏற்பட்ட நாளிலிருந்து அதற்கடுத்து வந்த மூன்று அல்லது நான்கு நாட்கள் வரையிலும் மீட்கப்பட்ட உடலங்கள் முள்ளியவளை கற்பூரப்புல்வெளி எனும் இடத்தில் புதைக்கப்பட்டுள்ளதோடு மற்றுமொருதொகுதி உடலங்கள் புதுக்குடியிருப்பு-ஒட்டுசுட்டான் வீதிக்கு அண்மையில் புதைக்கப்பட்டுள்ளது.

அதன்பிற்பாடு மீட்கப்பட்ட உடலங்கள் உருக்குலைந்து அடையாளம் காணமுடியாதநிலையிலிருந்ததால் மீட்கப்பட்ட இடங்களிலேயே எரிபொருள் ஊற்றி எரிக்கப்பட்டு தடயங்கள் அழிக்கப்பட்டன.

சுனாமி அனர்த்தத்தில் காயமடைந்தவர்களின் காயங்களை நோக்குமிடத்து வேலிகளைச்சுற்றி அடைக்கப்பட்ட முட்கம்பிகளும் கோமாண்டஸ் பிளேற் கம்பிகளும் தகரங்களும் கிளித்தே பலர் காயங்களுக்கு உள்ளானார்கள்.

அன்றையநாட்களில் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு மற்றும் மல்லாவி வைத்தியசாலைகளே பிரதானவை த்தியசாலைகளாக செயற்பட்டன. காயமடைந்தவர்கள் மேற்குறித்த இரு வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்பட்டதோடு மேலதிக சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்படவேண்டியவர்கள் வவுனியா மற்றும் அநுராதபுரம் வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்பட்டார்கள்.

முல்லைத்தீவுக் கடற்கரையில் கம்பீரமாக எழுந்துநிற்கும் நீணடகாலப் பழமைவாய்ந்த சாந்தோமயர் தேவாலயம் இந்தபபேரனர்த்தத்தின்போது பெரியளவில் சேதங்களுக்கு உட்படாமையானதுதான் அதிசயமான விடயமாகும்.

சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு முப்பத்தியோராவதுநாள் நினைவுதினத்தில் அந்த அனர்த்தத்தில் காவுகொள்ளப்பட்ட மக்களின் நினைவான நினைவுப்பேழை தேவாலயத்தின் மையப்பகுதியில் நிலத்தின்கீழ் வைக்கப்பட்டு சுனாமி நினைவாலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து சுனாமி அனர்த்தத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் அந்த நினைவாலயத்தின் தூண்கள் அனைத்திலும் முல்லைத்தீவில் ஆழிப்பேரலை அனர்த்தத்தில் காவுகொள்ளப்பட்ட மூவாயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட மக்களது பெயர்விபரங்களும் பொறிக்கப்பட்டு நினைவாலயம் மேலும் மெருகூட்டப்பட்டது. அதன்பிற்பாடு யுத்தஅனர்த்தங்களை முல்லைத்தீவுப் பிரதேசம் சந்தித்தபோதும் எந்தப்பாதிப்புக்களும் ஏற்படாது சுனாமிப்பேரலை அனர்த்தத்தில் காவுகொள்ளப்பட்ட மக்களின் சோகங்களைச் சுமந்து அந்தப்பேரவலத்தின் சாட்சியாக இன்றும் முல்லைத்தீவில் சுனாமி நினைவாலயம் திகழ்கின்றது.

சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம் நிகழ்ந்து ஒரு தசாப்தகாலம் கடந்துவிட்டாலும் அந்தப்பேரவலம் ஏற்படுத்திவிட்ட வலிகளிலிருந்து இன்னமும் மக்கள் மீளவில்லை. அதற்கு ஆண்டுதோறும் சுனாமி நினைவுநாளில் அந்த அனர்த்தத்தில் காவுகொள்ளப்பட்டவர்களின் கல்லறைகளுக்கு அவர்களின் உறவுகள் சுடர் ஏற்றுகின்றபோது அவர்கள் கதறியழுது கண்ணீர்வடிக்கும் காட்சி சான்று பகர்கின்றது.

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்படுத்திவிட்ட வலிகளும் வடுக்களும் அந்த மக்களின் மனங்களிலிருந்து என்றுமே அகலப்போவதில்லை.

“கொற்றவன்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*