leader

4 குடும்பங்களுக்காக 4 கோடி செலவில் பௌத்த விகாரை!

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கொக்கிளாய் கிராமத்தில் 4 கோடி ரூபா செலவில் ஒரு பிரமாண்டமான பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்படும் ஏற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளன.

ஒரு பிரதேசத்தில் வாழும் மக்கள் தங்களுக்கென ஒரு வழிபாட்டுத்தலத்தை அமைப்பதை எவரும் பிழையென்று சொல்லிவிட முடியாது. அது அவர்களின் ஜனநாயக உரிமை. ஆனால் ஒரு வழிபாட்டுத்தலம் வழிபாடு தவிர்ந்த வேறு எந்த ஒரு நோக்கத்துக்காக அமைக்கப்பட்டாலும் அதை ஏற்றுக்கொண்டு விட முடியாது. அது அவர்களின் ஜனநாயக உரிமை.

ஆனால் ஒரு வழிபாட்டுத்தலம் வழிபாடு தவிர்ந்த வேறு எந்த ஒரு நோக்கத்துக்காக அமைக்கப்பட்டாலும் அதை ஏற்றுக்கொண்டு விட முடியாது. குறிப்பாக ஒரு வழிபாட்டு மையத்தை அமைப்பது அந்த பிரதேசத்தையே ஆக்கிரமிக்கும் நோக்குடனோ அல்லது அந்த மக்களின் இயல்பான வாழ்வைச் சீர்குலைக்கும் நோக்குடனோ மேற்கொள்ளப்படுமானால் அதுவே மோதல்களுக்கும் முரண்பாடுகளுக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது.

கொக்கிளாய் வடக்கு மாகாணசபையின் ஆட்சிக்குட்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புறக் கிராமங்களில் ஒன்று. இது பரம்பரை பரம்பரையாககத் தமிழ் மக்கள் வாழும் ஒரு பிரதேசம். இது வரலாற்றுக்காலம் தொட்டு தென்னைமரவாடி என்ற வன்மையின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளது.

1970 – 1980 தசாப்தத்தின் பிற்பகுதியில் நீர்கொழும்பிலிருந்து வந்த இரு சிங்கள சம்மாட்டிகள் வந்து பருவ காலக் கரைவலைத் தொழில் செய்துவிட்டு பருவகாலம் முடிந்ததும் திரும்பிவிடுவதுண்டு. காலப்போக்கில் அவர்களுடன் கூலித்தொழில் செய்ய வந்த சில சிங்கள மீனவர்கள் கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியில் குடிசைகள் போட்டு நிரந்தரமாகத் தங்கிவிட்டனர். மீன்பிடிக் கிராமம் என்ற பேரில் அரசாங்கத்தால் அவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன.

தற்சமயம் அங்கு 230 சிங்களக் குடும்பங்கள் நிரந்தரமாக வசிக்கின்றன. அவர்களில் 4 குடும்பங்கள் மட்டுமே பௌத்த மதத்தைச் சேர்ந்த சிங்களவர்கள். ஏனைய 232 குடும்பங்களும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த சிங்களவர்கள். அவர்கள் தங்களுக்கான ஒரு மாதா கோவிலை அமைத்து வழிபட்டு வருகின்றனர். இது ஏற்கனவே முல்லைத்தீவு, அளம்பில் ஆகிய பகுதிகளிலிருந்து கரைவலைத் தொழில் செய்ய வரும் தமிழ் மீனவர்களால் அமைக்கப்பட்டதாகும்.

கொக்கிளாயில் பாரம்பரியமாக வாழும் தமிழ் மக்கள் இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் பிரதான தொழில் விவசாயமாகும். ஆனால் 4 குடும்பங்களின் வழிபாட்டுக்கெனச் சொல்லப்பட்டு தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு அங்கு 9 கோடி செலவில் ஒரு பிரமாண்டமான புத்தவிகாரை அமைக்க ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

இவ்விகாரை அமைக்கப்படும் காணி தமிழ் மக்களுக்குச் சொந்தமானது. ஒரு காணி இப்பகுதியில் பிரதேச சபை உறுப்பினருக்குச் சொந்தமான உறுதிக்காணி. மற்றையது இன்னொருவருக்கு ஏற்கனவே காணி அனுமதிப்பத்திரம் மூலம் வழங்கப்பட்ட காணி. அத்துடன் கிராமிய வைத்தியசாலைக்குரிய காணியும் பாடசாலைக் காணியின் ஒரு பகுதியும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

அக்காணியில் 1972ஆம் ஆண்டு தொடக்கம் ஒரு பிள்ளையார் கோவில் அமைக்கப்பட்டு அங்கு வசித்த தமிழ் மக்களால் வழிபடப்பட்டு வந்தது. 1982ஆம் ஆண்டு அங்கு ஒரு இராணுவ முகாம் அமைக்கப்பட்ட பின்பு படையினரால் அங்கு வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை அகற்றப்பட்டு ஒரு புத்தரின் சிலை வைக்கப்பட்டது.

தற்சமயம் அந்த இடத்திலும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலுமே விகாரை அமைக்க முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. எனவே இக் காணியின் உரிமையாளர்கள் தமது காணிகள் அபகரிக்கப்பட்டு அங்கு விகாரை அமைக்கப்படுவதற்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர். ஆனால் அவர்கள் போராட்டத்தை ஆரம்பிக்கும் முன்பே செம்மலை, கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, கொக்கிளாய் ஆகிய கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவத்தினரும் கடற்படையினரும் குவிக்கப்பட்டு மக்கள் சம்பவ இடத்திற்குச் செல்ல முடியாதவாறு தடுக்கப்பட்டனர்.

அது மட்டுமன்றி உண்ணாவிரதமிருந்த மூவரும் கைது செய்யப்பட்டனர். பின்பு மாகாணசபை உறுப்பினர்களின் தலையீட்டை அடுத்து அவர்கள் பொலிஸ்நிலையத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு விடுவிக்கப்பட்டனர். தனியார் ஒருவரின் காணியை ஆக்கிரமித்த பௌத்த பிக்குவும், அவரைச் சார்ந்தவர்களுமே சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஒருவரின் காணிக்குள் இன்னொருவர் அத்துமீறிப் பிரவேசிப்பது, “எல்லைமீறல்”, என்ற கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும்.

அந்தப் பாரதூரமான குற்றத்தைச் செய்த பௌத்த பிக்குவும் அவரைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்படவுமில்லை. தடுக்கப்படவுமில்லை. மாறாகப் பொலிஸாரும், படையினரும் அவர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்டனர். ஆனால் அவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனநாயக வழியில் தமது எதிர்ப்பை வெளியிட்ட காணி உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆட்சி மாற்றத்தின் பின்பும் தமிழ் மக்கள் மீதான இன ஒடுக்குமுறைகள் தொட்கின்றன என்பதற்கு வேறு ஆதாரமே தேவையில்லை. இன்றைய ஆட்சியை நல்லாட்சி என்று குடைபிடிக்கும் தமிழ் அரசியல் தலைமைகள் இந்த அநியாய ஆக்கிரமிப்பை கண்டிக்கவுமில்லை, தடுத்துநிறுத்த முயற்சி செய்யவுமில்லை.

எனினும் மக்கள் விகாரை அமைக்கப்படுவது நிறுத்தப்படும்வரை போராட்டம் தொடரும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். விகாரை எத்தனை கோடி செலவில் அமைக்கப்பட்டாலும் அது ஆக்கிரமிப்பு நோக்கத்துடன் அமைக்கப்பட்டால் அது வழிபாட்டுத்தலமல்ல என்பது தெளிவான உண்மை.

தமிழ்லீடருக்காக மாரீசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*