vp03

வலிசுமந்த பதிவுகள்- 03 (பரிவு)

அது 2009-ம்ஆண்டு மாசி மாதகாலப்பகுதி. இரவில் மாசி மாதத்திற்கேயுரிய பனிக்குளிரும் பகலில் பகலோனும் தன் பங்கிற்கு வெப்பத்தை அள்ளி வீசிக்கொண்டிருந்த காலம். வன்னிப் பெருநிலப்பரப்பில் தமிழ்மக்கள் மீதான இனவழிப்புப் போரின் ஆரம்பநாட்கள் அவை. சிங்கள ஆக்கிரமிப்புப் படைகள் நாளாந்தம் நூற்றுக்கணக்கான பொதுமக்ளைக் கொன்று குவித்தும் காயப்படுத்தியும் தமிழ்மக்களின் பூர்வீக நிலப்பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த காலம்.

இந்த நாட்களில்தான் அரசபடையினரின் கொலைவெறித் தாக்குதல்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வன்னியில் வாழ்ந்த நான்கு லட்சத்திற்கும் அதிகமான மக்களும் முல்லைத்தீவு மாவட்டத்தின் இரணைப்பாலை மாத்தளன் பொக்கணை வலைஞர்மடம் முள்ளிவாய்க்கால் ஆகிய பிரதேசங்களை நோக்கி இடம்பெயர்ந்துகொண்டிருந்தனர்.

புதுக்குடியிருப்புச் சந்தியிலிருந்து இரணைப்பாலை ஊடாக மாத்தளனை நோக்கிச் செல்லும் வீதியில் மக்கள் அலைமோதிக் கொண்டிருந்தார்கள். பொருட்களை ஏற்றிய உழவு இயந்திரங்களும் லான்மாஸ்ரர்களும் உந்துருளிகளும் மக்களின் நெரிசல்களுக்கு மத்தியில் சிறிது தூரம் ஊர்வதும் பின்னர் நிற்பதும் பின்னர் சிறிதுதூரத்திற்கு ஊர்வதுமாக நகர்ந்துகொண்டிருந்தன.

இன்னும் பல உழவு இயந்திரங்களும் லான்மாஸ்ரர்களும் பாரவூர்திகளும் பொருட்களைச் சுமந்தபடி வீதிக்கரைகளில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. வாகன வசதிகள் இல்லாதவர்கள் தங்களது அத்தியாவசியப் பொருட்களை கைகளிலும் தோள்களிலும் சுமந்து வந்துகொண்டிருந்தனர்.

இவ்வாறு வந்தவர்களில் பலர் இரணைப்பாலை வீதியோரங்களில் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர்.

ஆனாலும் வீதியில் சனநெரிசல் குறைந்தபாடாக இல்லை. எல்லோரது முகத்திலும் வியர்வைக் கோடுகளுடனும் விழிகளில் ஏக்கத்துடனும் அடுத்த கட்டம் என்ன செய்வது எங்கே குடியிருப்பது எங்கே அடுப்புமூட்டி ஒருவேளை கஞ்சியாவது குடிப்பது என்ற கேள்விகளுக்கு விடைதெரியாது மாத்தளனை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தார்கள்.

புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதிகள் படையினரின் எறிகணைத் தாக்குதல்களால் அதிர்ந்துகொண்டிருந்தன. அத்துடன் பொதுமக்கள் ஏதிலிகளாய் வந்துகொண்டிருக்கின்ற இரணைப்பாலை மாத்தளன் பொக்கணைப்பகுதிகளிலும் அரசபடையினர் ஏவிவிடுகின்ற எறிகணைகள் அவ்வவ்போது வீழ்ந்து வெடித்துக்கொண்டுதானிருந்தன.

அரசபடையினர் புதுக்குடியிருப்புப் பகுதியை இலக்குவைத்து தொடராகவும் மிகமோசமாகவும் மேற்கொண்டிருந்த எறிகணைத்தாக்குதல்களில் அந்தப்பகுதியில் அமையப் பெற்றிருந்த வர்த்தகநிலையங்கள் மற்றும் பொதுமக்களின் வீடுகள் பலவும் முற்றாகச் சேதமடைந்திருந்தன.

இத்தனை இடர்களுக்கு மத்தியிலும் புதுக்குடியிருப்பு அரசினர் வைத்தியசாலை நிர்வாகம் பல நூற்றுக்கணக்கான காயக்காரர்களை அனுமதித்து சிகிச்சையளித்துக் கொண்டிருந்த நிலையிலும் சிலநாட்களுக்கு முன்னர் தான் குறித்த புதுக்குடியிருப்பு அரசினர் வைத்தியசாலையையும் இலக்குவைத்து அரசபடையினர் மேற்கொண்ட மிலேச்சத்தனமான எறிகணைத்தாக்குதல்களில் காயமடைந்து சிகீச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பொதுமக்கள் பலர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதுடன் வைத்தியசாலைக் கட்டடத்தொகுதிகளும் சேதமடைந்ததையடுத்து வைத்தியசாலையின் செயற்பாடுகள் முற்றாகவே செயலிழந்து போனது.

இந்தத் துயரச் சம்பவங்களையடுத்து புதுக்குடியிருப்பு-இரணைப்பாலையில் அமையப்பெற்றிருந்த பொன்னம்பலம் ஞாபகர்த்த தனியார் மருத்துவமனைதான் படையினரின் எறிகணைத்தாக்குதல்களில் காயமடைகின்ற பொதுமக்களுக்கும் களமுனைகளில் காயமடைகின்ற போராளிகளுக்கும் சிகிச்சையளிக்கின்ற பிரதான மருத்துவமனையாகச்செயற்பட்டுக்கொண்டிருந்தது.

அத்தோடு மாத்தளன் மற்றும் பொக்கணை பாடசாலைகளும் குறைந்தளவு சத்திரசிகிச்சை வசதிகளோடு வைத்தியசாலைகளாகச் செயற்பட்டுக்கொண்டிருந்ததன.

குறித்த இந்த பொன்னம்பலம் மருத்துவமனை 1997-ம்ஆண்டுகாலப்பகுதியிலிருந்து இதே புதுக்குடியிருப்பு-இரணைப்பாலை வீதியிலேயே செயற்பட்டு வந்திருந்தது. குறித்த இந்த மருத்துவமனை சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்திலும் பதிவுசெய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சத்திர சிகிச்சைக்கூடம் எக்ஸ்ரே வசதிகள் உள்ளிட்ட அனைத்துவசதிகளையும் நிறைவாகக்கொண்ட தனியார் மருத்துவமனை இதுதான் என்றுகூறினால் அது மிகையாகாது. இங்கு குறைபாடுகள் கண்டுபிடிப்பதென்பது அரிது.

நோயாளர்களை விடுதிகளில் அனுமதித்து கிகீச்சை வழங்குவதற்கான அனைத்து வசதிகளையும் தன்னகத்தேகொண்டிருந்தது இந்த பொன்னம்பலம் தனியார் மருத்துவமனை.

மேற்குறிப்பிட்டபடி 2009-ம் ஆண்டு மாசி மாதத்தில் வன்னிக் களமுனைகள் அனைத்தும் சூடு பிடித்திருந்தது. பல்குழல் எறிகணைகள் மற்றும் யுத்த டாங்கிகள் சகிதம் முன்னேறிவருகின்ற படையினரை வழிமறித்து விடுதலைப்புலிகளின் படையணிகள் குறைந்தளவு ஆட்பலம் மற்றும் ஆயுதபலத்துடன் தொடரான மறிப்புச்சமர்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

போர்க்களங்களில் காயமடைந்து மேலதிக சிகிச்சைகளுக்காக் கொண்டுவரப்பட்டிருந்த போராளிகளும் அரசபடையினரின் எறிகணைத் தாக்குதல்களில் காயமடைந்து சிகிச்சைகளுக்காகக் கொண்டுவரப்பட்டிருந்த பொதுமக்களும் குறித்த பொன்னம்பலம் மருத்துவமனையின் விடுதிகள் அனைத்தையும் நிறைத்திருந்தார்கள்.

விடுதிகளிலுள்ள கட்டில்கள் போதாமையினால் காயமடைந்தவர்களில் பலபேர் விடுதிகளின் தரைகளில் பாய்களை விரித்துப் படுத்திருந்தார்கள். கூவிவரும் எறிகணைகள் ஆங்காங்கே வீழ்ந்து அதிர்கின்ற போதிலும் மிகவும் சுறுசுறுப்புடன் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள் பெண் தாதியர்கள்.

காயத்தின் வேதனைகளால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்த காயக்காரர்களுக்கு அவர்கள் படுத்திருந்த இடங்களிலேயே அவர்களுக்கான உணவினை அன்புடனும் ஆதரவுடனும் பரிமாறியதைப்பார்த்த எங்களின் இதயங்கள் நெகிழ்ந்தன.

இதற்கு சிலதினங்கள் முன்னர்தான் சுண்டிக்குளம்-நல்லதண்ணீர்த்தொடுவாய்ப் பகுதியில் நிலைகொண்டிருந்த அரசபடையினர் அங்கிருந்து முன்னேறி பேப்பாரைப்பிட்டியில் விடுதலைப்புலிகளின் காவல்நிலைகளைக் கடந்து சாலைத் தொடுவாய் வரையிலும் முன்னேறியிருந்தனர்.

பேப்பாரைப்பிட்டிப்பகுதியில் அரசபடையினருக்கும் விடுதலைப்புலிகளின் படையணிகளுக்குமிடையில் மூண்ட கடும்சமரில் எனது நண்பன் செங்கோ காயமடைந்து குறித்த பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறானாம் என்ற தகவல் அறிந்த நான் உடனே அந்த மருத்துவமனைக்குச்சென்றிருந்தேன்.

காயமடைந்தவர்களைப் பார்வையிடுவதற்கென வந்திருந்த அவர்களின் உற்றார் உறவினர்களின் பேச்சொலிகள் காயமடைந்தவர்களின் வேதனை முனகல்கள் அத்தோடு இடையிடையே கேட்கும் எறிகணைகளின் அதிர்வுகள் என எல்லாமாக ஒன்றுசேர்ந்த ஆரவாரத்தினால் மருத்துவமனை அமைதியான சூழ்நிலையை இழந்திருந்தது.

மருத்துவமனைக்குச் சென்ற நான் விடுதிகள் எல்லாவற்றிலும் தேடிப் பார்த்து ஒருவாறாக எனது நண்பன் செங்கோ படுத்திருந்த கட்டிலைச் சென்றடைந்தேன். அப்போது அந்த விடுதியில் எனக்கு அறிமுகமான பலபேர் காயமடைந்து அங்கு படுத்திருந்தார்கள்.

போர்க்களத்தில் காயமடைந்தபோது ஏற்பட்ட குருதி இழப்பினாலும் காயமடைந்ததால் ஏற்பட்ட உடல்உபாதைகளாலும் சோர்ந்துபோய் கட்டிலில் படுத்திருந்த நண்பன் செங்கோவின் முகத்தில் என்னைக்கண்டதும் ஒருவித சந்தோசம் இழையோடியதை அப்போது என்னால் அவதானிக்கமுடிந்தது.

செங்கோவிற்கு ஏற்பட்டிருந்த காயங்கள் வெளிப்பார்வைக்கு சிறியதாக இருந்தபோதிலும் சுவாசப்பையையும் பாதித்திருந்தது. அத்தோடு கடைவாய்ப்பற்களும் தாடையும் பாதிக்கப்பட்டிருந்தது.

அன்றைய களச்சூழல் என்னையும் நண்பன் செங்கோவையும் நீண்டநாட்கள் பிரித்திருந்தது.

நீண்டநாட்களின்பின்னர் சந்தித்ததால் நிறையவே என்னுடன் கதைக்கவேண்டுமென்ற ஆவல் அவனுக்கு இருந்தது. கட்டிலில் அவனருகில் இருந்த எனக்கு களமுனை நிலவரங்கள் தான் காயப்பட்ட சூழ்நிலை என்பவற்றை விபரமாக எனக்கு கூறிக்கொண்டிருந்தான்.

அப்போது திடீரென அவன் சுவாசிக்கமுடியாமல் சிரமம் ஏற்பட்டு அவஸ்தைப்பட்டதை அவதானித்த மருத்துவதாதி உடன் வந்து அவனுக்கு அவசரசகிச்சை வழங்கினார். அவரது சிகிச்சையையடுத்து செங்கோவின் சுவாசம் வழமைக்குத் திரும்பியிருந்தது.

குறிப்பிட்ட நேரத்திற்கு கதைக்காமல் அமைதியாகப் படுக்கும்படி நான் செங்கோவுக்கு அறிவுரை கூறினேன். “கடைவாய்ப்பற்கள் உடைந்து தாடையிலும் காயம் ஏற்பட்டிருப்பதால் சோறு சாப்பிடுவதற்கு கஸ்ரமாக இருக்கிறது” என்று செங்கோ என்னிடம் கூறினான். அதற்கு நான் “நாளைக்கு வரும்போது சுலபமாக உட்கொள்ளக்கூடியாவாறு திரவநிலையிலான ஏதாவது உணவு கொண்டுவருகிறேன்” என்று அவனிடம் கூறிவிட்டு சிறிதுநேரத்தின்பின்னர் அவனிடத்திலிருந்து விடைபெற்று வந்துவிட்டேன்.

மறுநாள் காலையில் புதுமாத்தளனில் குறித்த ஒரு வீட்டிற்குச் சென்று “சவ்வரிசியில் பாயாசம் காய்ச்சும்படியும் அதை எடுத்துச்செல்வதற்கு மதியம் வருவேன்” என்று கூறிவிட்டு நான் எனது அன்றைய கடமைகளுக்காகச் சென்றுவிட்டேன். பின்னர் எனது கடமைகளை முடித்துக்கொண்டு மதியவேளையில் மீண்டும் அந்த வீட்டிற்குச் சென்றேன்.

தயார்நிலையிலிருந்த பாயாசத்தை போத்தல் ஒன்றில் நிறைத்து பாயாசம் வெளிக் கசியாதவாறு பத்திரப்படுத்திக் கொண்டு நண்பன் செங்கோ அனுமதிக்கப்பட்டிருந்த புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் மருத்துவமனையை நோக்கி எனது மிதிவண்டியை மிதிக்கத்தொடங்கினேன்.

எனது மிதிவண்டி மாத்தளன் இந்துமயானத்தைக்கடந்து இரணைப்பாலை வீதிவழியாகப் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் திடீரென இரண்டு கிபிர்விமானங்கள் வானத்தில் வட்டமிட்டன. தொடர்ந்து நான்கு அல்லது ஐந்து குண்டுகளை வீசின. குண்டு வெடித்த அதிர்வுகள் பல மைல்கள் தொலைவு வரைக்கும் கேட்டது. குண்டுவீசிய கிபிர்விமானங்கள் வந்தவேகத்திலேயே திரும்பிச்சென்றுவிட்டன.

கிபிர்விமானங்கள் தாக்குதல் மேற்கொண்டது புதுக்குடியிருப்புப் பகுதியாகத்தானிருக்குமென குண்டுகளின் அதிர்வுகளை வைத்து எனக்குள் ஊகித்துக்கொண்டேன். எனினும் நணபன் செங்கோவைப் பார்த்துவிடவேண்டுமென்றும் அவனுக்காக நான் கொண்டுசெல்லும் பாயாசத்தினைக்கொடுத்துவிடவேண்டும் என்ற ஆதங்கத்துடனும் எனது மிதிவண்டியை இன்னும் வேகமாக மிதித்து குறித்த மருத்துவமனையைச்சென்றடைந்தேன்.

நான் அங்கு சென்றபோது குறித்த மருத்துவமனை பெரும் பரபரப்பாகக் காணப்பட்டது. மருத்துவமனைக் கட்டடத்தொகுதிகளின் சுவர்களில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடிகள் மற்றும் கதவின் கண்ணாடிகள் யன்னல்களின் கண்ணாடிகள் என்பன உடைந்து நொருங்கி எல்லா இடங்களிலும் சிதறிக்கிடந்தன.

மினிபஸ் ஒன்றும் நின்றது. காயக்காரர்களை வேறு இடத்திற்கு நகர்த்துவதற்காக அவசரஅவசரமாக அந்த மினிபஸ்சில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள் மருத்துவமனை நிர்வாகத்தினர். ஏல்லோரது முகங்களிலும் கலவரமும் பீதியும் குடிகொண்டிருந்ததை அவதானிக்கமுடிந்தது. கிபிர்க்குண்டுகளின் சிதறல்கள் மருத்துவமனையின் கட்டடத்தொகுதிகளை மோசமாகப்பாதித்திருந்தது.

நான் எனது நண்பன் செங்கோ அனுமதிக்கப்பட்டிருந்த விடுதிக்குச்சென்றேன். ஆனால் அங்கு செங்கோவைக் காணவில்லை. யாரைக்கேட்பது? மற்றயவர்களின் கதைகளுக்கு செவிமடுக்கும் நிலையில் மருத்துவ உதவியாளர்கள் இருக்கவில்லை. அவர்கள் எல்லோரும் காயக்காரர்களை வேறிடத்திற்கு நகர்த்துவதிலேயே குறியாக இருந்தார்கள்.

நான் செங்கோவைத் தேடிக்கொண்டிருந்த சமயத்தில்த்தான் எனக்குத் தெரிந்த மற்றுமொரு போராளியான சீராளனைச் சந்தித்தேன். அவனிடம்தான் செங்கோவைப்பற்றி விசாரித்தபோது “செங்கோவை முதல்நாள் இரவு வேறிடத்திற்கு மாற்றிவிட்டார்கள் என்றும் சற்று முன்னர் கிபிர்விமானங்கள் குண்டுத்தாக்குதல் மேற்கொண்டது குறித்தும் இந்த மருத்துவமனைக்குப் பின்புறமாகவுள்ள மாடிக்கட்டிடத்தை (அதுவும் மருத்துவமனைக்குச் சொந்தமான கட்டடம்தான்) இலக்கு வைத்துத்தான் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதென்றும் குண்டுகள் மாடிக்கட்டிடத்திற்கு மேலே விழுந்ததால் கட்டிடம் முற்றாகத் தகர்ந்துவிட்டதென்றும் அந்தக் கட்டிடத்திலும் காயக்காரர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள் என்றும் அவர்கள் அனைவரும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அச்சம் தெரிவித்ததோடு தங்கள் அனைவரையும் வேறிடத்திற்கு நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள்.” என்றும் கூறினான்.

செங்கோவுக்கென்று கொண்டுவந்திருந்த பாயாசப் போத்தலை என்னுடன் கதைத்த சீராளனிடம் கொடுத்துவிட்டு அந்த இடத்திலிருந்து உடனேயே கிளம்பிவிட்டேன்.

அன்றையதினம் பொழுதுசாயும் நேரத்தில்த்தான் அந்த துயரமான செய்தி எனது காதுகளை எட்டியது. கிபிர்விமானத் தாக்குதலுக்கு இலக்கான குறித்த பொன்னம்பலம் மருத்துவமனையின் மாடிக்கட்டிடத் தொகுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட காயமடைந்த போராளிகள் அனைவரும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்றும் அவர்களின் உடல்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் அகப்பட்டுவிட்டன என்றும் அவர்கள் அனைவரும் கால்களுக்கு மண்மூட்டை போடப்பட்டு கால்களுக்கு அன்ரனா பொருத்தப்பட்டு நடக்கமுடியாமல் படுக்கையாகக் கிடந்தவர்கள் என்றும் தகவல்கள் வந்துகொண்டிருந்தன.

அதன்பின்னர் மூன்றுநாட்களாக கனரகவாகனங்களின் உதவியுடன் அந்த மாடிக்கட்டிடத்தின் இடிபாடுகள் கிளறப்பட்டு அதற்குள் புதையுண்டிருந்த அந்தப்போராளிகளின் சிதைந்த உடல்கள் மீட்கப்பட்டு இரணைப்பாலை பெருந்தோட்டப்பகுதியில் இரண்டு வாரங்களுக்கு முன்னராகத்தான் நிர்ணயிக்கப்பட்டிருந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் முழுப்படைய மதிப்புடன் விதைகுழிகளில் விதைக்கப்பட்டன.

வன்னியில் இறுதி யுத்தநாட்களில் அரசபடையினர் வைத்தியசாலைகள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்களை பல சந்தர்ப்பங்களில் மேற்கொண்டிருந்தனர். இந்தச்சம்பவத்திற்குப் பின்னரான நாட்களில் மாத்தளன் பொக்கணை முள்ளிவாய்க்கால் வைத்தியசாலைகள் மீதும் அரசபடையினர் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தக்காலப்பகுதியில் சிங்களப்பேரினவாதஅரசு தமிழ்மக்கள்மீது மேற்கொண்டது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை என்பதற்கு பொன்னம்பலம் மருத்துவமனைமீது மேற்கொள்ளப்பட்ட கிபிர்விமானத்தாக்குதல்ச் சம்பவம் வலுவான சாட்சியமாகவுள்ளது. இந்தக்கொடூரமான சம்பவங்கள் ஈழத்தமிழர்களின் மனங்களில் ஏற்படுத்திவிட்ட வலிகள் என்றுமே ஆறப்போவதில்லை.

“கொற்றவன்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*