leader

பூனை பெற்ற புலிக்குட்டி : கேட்ட செய்தியும், கண்ட கனவும்!

கேட்ட செய்தி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விகாரையொன்றில் வழிபாடுகளை முடித்துக் விட்டு மக்கள் முன்னிலையில் உரையாற்றும் போது வடக்கிலும், கிழக்கிலும் சட்டம் ஒரே மாதிரியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும், புங்குடுதீவு மாணவி கொலை தொடர்பாக நடக்கும் மக்கள் ஆர்பாட்டங்களைப் போலவே புலிகள் இயக்கத்தினரின் ஆரம்ப சம்பவங்கள் இடம்பெற்றன எனவும், தான் போராடி தியாகங்கள் செய்து பெற்ற சுதந்திரம் பறிபோகும் நிலை ஏற்படுகின்றது எனவும் கவலை தெரிவித்துள்ளார். அவரின் வழமையான வார்த்தைகளில் சொல்வதானால் மைத்திரியின் ஆட்சியில் புலிகளின் மீள் எழுச்சி ஆரம்பமாகி விட்டது என்பதாகும். மேலும் நான் வருவதன் மூலமே புலிகளின் மீள் எழுச்சியைத் தடுத்து நிறுத்த முடியும் என்பதையும் தனது கூற்றின் மூலம் அவர் சிங்கள மக்களுக்கு உணர்த்தியுள்ளார்.

கண்ட கனவு

ஒரு உடைந்த தேரை விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, பந்துல குணவர்தன, குமார வெல்கம ஆகியோர் குதிரைகள் போன்று இழுத்துச் செல்கின்றனர். அவர்கள் வாயில் கௌவியிருக்கும் நாணயக் கயிறுகளை மகிந்த ராஜபக்ச தேரில் அமர்ந்தவாறு கையில் பிடித்து தேரை ஓட்டிக் கொண்டிருக்கின்றார். வேறு சில நாடாளுமன்ற உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களும், மாகாணசபை பிரதேச சபை உறுப்பினர்களும் தேரை தள்ளிக் கொண்டிருக்கின்றனர்.

வீதியில் ‘விகாரைகள் வழியே பிரதமர் பதவிக்கு செல்லும் வழி” என்ற பெயர்ப்பலகை நடப்பட்டுள்ளது.

திடீரென மகிந்த ‘ஆபத்து! ஆபத்து!” தேரை நிறுத்துங்கள்! பூனையொன்று புலிக்குட்டியைப் பிரசவித்துக் கொண்டிருக்கின்றது எனக் கத்துகிறார்.

வீதியருகில் பூனையொன்று குட்டியை பிரசுவித்துக் கொண்டிருந்தது.

தேரில் இருந்து இறங்கிய மகிந்த ஓடிச் சென்று அருகில் இருந்த விகாரை ஒன்றில் ஏறி நின்று ‘ஆபத்து! ஆபத்து! புலி பிறக்கின்றது, ஆபத்து”, என அலறுகிறார். மற்றவர்கள் ஓடிச் சென்று பூனையைப் பார்க்கின்றார்கள். பிறந்தது புலிக்குட்டியல்ல பூனைக்குட்டித்தான் எனத் தெரிந்த போதும் தலைவன் சொல்லை மீறியறியாத அவர்களும் ‘ஐயோ, புலி  பிறந்து விட்டது. ஆபத்து! ஆபத்து!. என பெருங்குரலெடுத்து ஒப்பாரி வைக்கின்றனர்.

அவர்களின் கூக்குரல் கேட்டு மஞ்சள் துணிகள் எல்லாம் காற்றில் எழுந்து படபடக்கின்றன.

அப்பாதையில் வந்த பெரியவர் ஒருவர் ஏதோ கலவரம் நடப்பதாக எண்ணி அருகில் வந்து விசாரிக்கின்றார். அவருக்கும் புலி பிறந்த கதை சொல்லப்படுகின்றது. அவர் அருகில் சென்று பார்த்துவிட்டு சிரித்தவாறே ‘இது புலியல்ல பூனைக்குட்டிதான்” . எனச் சொல்கின்றார்.

உடனே மகிந்த கோபத்துடன், ‘இல்லை, இல்லை அது புலிதான். இவர் புலம்பெயர் தமிழர்களின் கையாள். இவரை நம்பாதீர்கள்! என கோசம் எழுப்புகின்றார்.

‘புலியை பெறும் பூனை இனத்தையே பூண்டோடு அழிப்போம்! பிரதமர் பதவி பெறுவோம்!”

எனக் கோசங்களை முழங்கியவாறே தேர்வலம் தொடர்கின்றது.

‘பூனைகளை ஒழிப்போம்! பிரதமர் ஆகுவோம்!” என்ற கோசங்கள் எங்கும் எதிரொலிக்கின்றன.

பெரியவர் ஒரு கேலிப்புன்னகையுடன் ‘புலி வந்தால் தெரியும் சங்கதி” கூறிவிட்டு போகின்றார்.

தமிழ்லீடருக்காக மாரீசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*