vp02

வலிசுமந்த பதிவுகள் – 02 ( நட்பு)

அது 1999-ம்ஆண்டின் நடுப்பகுதி. சிங்கள ஆக்கிரமிப்புப்படைகள் வன்னிப் பெருநிலப்பரப்பில் அகலக்கால் பதித்திருந்தகாலம். தமிழீழத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வயது வேறுபாடின்றி பாடசாலை மாணவர்களும் இளைஞர்களும் சுயவிருப்பிலேயே தங்களை விடுதலைப்போராட்டத்தில் இணைத்துக்கொண்டிருந்த காலமது.

இவ்வாறு சுயமாகவே விடுதலைப்போராட்டத்தில் இணைந்த புதியவர்களை சிறந்த போராளிகளாகப் புடம்போடுவதற்காக அரவணைத்துக்கொண்டது முல்லைத்தீவு மாவட்டத்தில் இயற்கை எழில்மிகுந்த முத்தையன் கட்டுக்கானகம். அப்போதுதான் றேகன் என்று பின்நாட்களில் நான் அவனையும் அவன் என்னையும் ஆழமாக நேசிக்கப்போகும் நண்பனான வேலரசன் அறிமுகமானான்.

அப்போது அவனுக்கு பதினைந்து வயது. சிறியஉருவம். மிடுக்கான தோற்றம். இவனைப் போலவே இவனையொத்த வயதுடைய இன்னும் பலர் வந்திருந்தபடியால் இவர்கள் எல்லோரையும் இணைத்து ஒரு அணியாக அதாவது முதலாவது அணியாகப் பிரித்திருந்தார்கள். அந்த அணியிலேயே வேலரசன் இடம்பெற்றிருந்தான்.

நான் பெரியவர்களின் அணியான மூன்றாவது அணியில் இடம்பெற்றிருந்தேன். அந்தநாட்களில் வேலரசனுடன் நெருக்கமாக நட்புக்கொள்வதற்கு எனக்கு சந்தர்ப்பங்கள் இருக்கவில்லை. சுமார் இரண்டரை மாதத்திற்கு மேலாக உடல் உளக்கற்கை நெறிகளால் தேர்ச்சிபெற்று ஆற்றல்மிகுந்த போராளிகளாகப் புடம்போடப்பட்டு இரண்டரை மாதத்திற்கு மேலாக எம்மை அரவணைத்த அந்தக் கானகத்திற்கு விடைகொடுக்கும் நாளும்வந்தது.

அந்தநாளில் நான் வேலரசன் உள்ளடங்கலாக இருபதுபேர் மருத்துவக்கல்வி கற்பதற்காக தேர்வுசெய்யப்பட்டோம். மற்றயவர்கள் அனைவரும் அன்றைய நாளில் முன்னணிப் பொறுப்பாளரும் 2006-ம் ஆண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டவருமான லெப் கேணல் அக்பர் அவர்களின் தலைமையிலான அணியில் இணைக்கப்பட்டார்கள்.

காரிருள்வேளையில் கருமுகில்கள் வானத்தைச்சூழ்ந்து மழைபெய்து ஓய்ந்து தூறல்கள் ஆங்காங்கே சொட்ட ஓங்கிஉயர்ந்த மரங்களைக்கொண்ட அந்த இயற்கைவனத்திற்கு விடைகொடுத்து உழவு இயந்திரத்தில் புறப்பட்டோம்.

அன்றையநாட்கள் வீதிகள் படுமோசமானவை.

கிரவல்ப்புழுதிகளைக் கிளப்பியவாறும் கிடங்கு பள்ளங்களில் குலுங்கியபடியும் ஒருவாறாக நாம் சென்ற உழவு இயந்திரம் விசுவமடு வரையிலும் சென்று அங்கு குறிப்பிட்ட ஓரிடத்தில் போராளிகளுக்கான மருத்துவமனை ஒன்றில் எங்களை இறக்கிவிட்டது.

அங்கு அரைச்சுவரால் கட்டப்பட்ட நீளமான கொட்டில்தான் எம்மை உள்வாங்கிக்கொண்டது. அந்தக்கொட்டில்தான் ஆரம்பமருத்துவம் படிப்பவர்களின் கல்விக்கூடமும் அதுதான். அவர்கள் தங்கும் தங்குமிடமும் அதுதான். இங்குதான் எனக்கும் வேலரசனுக்குமிடையிலான உறவுப்பாலத்தின் தொடக்கப்புள்ளி என நினைக்கிறேன்.

நாம் மருத்துவம் படித்த நாட்களில் மருத்துவப்படிப்பிலும் சரி மருத்துவச் செயன்முறைகளிலும் சரி அனைத்தையும் இலகுவாக விளங்கிக்கொள்கின்ற தன்மை வேலரசனிடத்தில் இருந்ததை நாம் அப்போதே இனம் கண்டுகொண்டோம்.

அத்துடன் மருத்துவக் கல்வியிலும் வேலரசனுக்கு கூடிய அக்கறை இருந்ததை அன்றைய நாட்களில் நாம் அவதானித்திருந்தோம். அவனது வயதுக்கு மிஞ்சிய விவேகமும் கல்வித்திறமையும் குறுகிய காலத்திற்குள்ளேயே நாம் சார்ந்திருந்த பிரிவின் மருத்துவப்பொறுப்பாளர் தோமஸ்அண்ணையின் கவனத்தை ஈர்ந்திருந்தது.

மருத்துவம் படித்தநாட்களில் வேலரசனோடு பழகியநாட்கள் அவனுடனும் மற்றய நண்பர்களுடனும் பகிடிவிட்டு பம்பலடித்து சாப்பிட்ட நாட்கள் அவன் சாப்பாடு பரிமாறிய தேனீர் பரிமாறிய நாட்கள் அவனை வேலு வேலு என்று நாங்கள் செல்லமாக அழைத்த நாட்கள் ஒருகூட்டுப் பறவைகளாக நாம் வாழ்ந்தநாட்கள் எல்லாம் இன்றும் எனது மனதில் பசுமரத்தாணிபோலப் பதிவாகியுள்ளது.

அந்தநாட்களில்தான் விடுதலைப்புலிகளின் ஓயாதஅலைகள்-03 நிலமீட்புப்போர் தொடங்கியிருந்தது. ஒட்டுசுட்டான் பிரதேசம் மீட்கப்பட்டவுடன் ஒரு எழுச்சிப்பாடல் ஒன்று வெளியாகியிருந்தது. அதுதான் “எட்டுத் திக்கும் வெற்றிமுரசு கொட்டு ஒட்டுசுட்டான் மண்ணில் நின்று தட்டு…..” இந்தப்பாடல் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப்பாடல்வரிகளை அன்றையநாட்களில் அவனது வாய் அடிக்கடி முணுமுணுக்கும்.

இவனிடம் காணப்பட்ட வயதுக்கு மிஞ்சிய இன்னுமொரு திறமையையும் குறிப்பிட்டேயாகவேண்டும். அதாவது கல்வியில் மாத்திரமல்ல ஒரு போராளிக்கு இருக்கவேண்டிய திறமைகளில் குறிபார்த்துச் சுடுவதிலும் தான் சளைத்தவனல்ல என்பதையும் அன்றையநாட்களில் நிரூபித்துக்காட்டியிருந்தான்.

அடிப்படைப் பயிற்சியின் போதும் பின்னர் மருத்துவம் படித்த நாட்களிலும் அவ்வவ்ப்போது சூட்டுப்பயிற்சிகள் இடம்பெறுவது வழக்கம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் வேலரசன் நல்ல ஸ்கோர்; எடுப்பான்.

அந்தநாட்களில் ஓயாத அலைகள் – 03 தொடர் நிலமீட்புச்சமர் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மருத்துவம் படித்துக்கொண்டிருந்த எமக்கு மருத்துவ அனுபவமும் அவசியம் என்பதற்கமைவாக போர்க்களங்களில் விழுப்புண்பட்டு மேலதிகசிகீச்சைகள் மேற்கொள்ளப்படும் மருத்துவமனைகளில் போராளிகளைப்பராமரிக்கவும் அவர்களுக்கு மருத்துவ உதவியாளர்களாகச் செயற்படுவதற்காகவும் எம்மை மூன்று அணிகளாகப்பிரித்து வெவ்வேறு போராளிகளின் மருத்துவமனைகளுக்கு குறிப்பிட்டநாட்கள் அனுப்பிவைத்தார்கள்.

இவ்வாறாக போராளிகளின் மருத்துவமனை ஒன்றுக்குச்சென்றிருந்த வேலரசன் தன்னிலும் வயதுகூடிய போராளிகளைப் பராமரித்து அவர்களுக்கான மருத்துவத்தேவைகளையும் நிவர்த்திசெய்து அங்கு கடமையாற்றிய போராளிமருத்துவர்களோடு கடமையாற்றிய அனுபவமும் பட்டறவுமே பின்நாட்களில் அவன் பயிற்சிமுகாமுக்கும் அணிகளுக்கும் ஆளுமைமிக்க மருத்துவப்போராளியாகச் செயற்படுவதற்கு வழிசமைத்திருந்தது. குறிப்பிட்ட நாட்களின் பின்னர் எமது பிரிவுக்கான மருத்துவமனைக்கு வந்து மீண்டும் மருத்துவக்கல்வியைத்தொடர்ந்தோம்.

சுமார் எட்டு மாதங்களாகத்தொடர்ந்த எமது ஆரம்ப மருத்துவக் கல்லூரி நிறைவுறும் காலமும் வந்தது. எமக்கான மருத்துவ இறுதித்தேர்வும் நடைபெற்றது. அந்தத்தேர்விலும் வேலரசன் அதிகூடிய புள்ளிகளைப்பெற்று அன்றையநாட்களின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வண்ணையிடமிருந்தும் தளபதி ஆதவண்ணையிடமிருந்தும் (கடாபி) சான்றிதழ்களைப்பெற்றிருந்தான் வேலரசன்.

2000-ம்ஆண்டு யூன்மாதம் 14-ம்திகதி எமது ஆரம்ப மருத்துவப்படிப்பு நிறைவுற்றதும் வேலரசனது ஆளுமையைக் கருத்திற்கொண்ட எமது பொறுப்பாளர் தோமஸ்அண்ணா வேலரசனை புதியபோராளிகளுக்கான அடிப்படைப்பயிற்சிமுகாம் ஒன்றுக்கான மருத்துவப்போராளியாக நியமித்திருந்தார்.

அப்போது அவனுக்கு பதினாறுவயது. அந்தப்பயிற்சிமுகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட போராளிகளுக்கு தனியொருவனாக நின்று மருத்துவம் செய்வதென்பது சாதாரணவிடயமல்ல. ஆனாலும் அந்தப்பணியை மிகவும் செவ்வனே செய்திருந்தான் வேலரசன்.

தொடர்ந்து 2001-ம்ஆண்டின் முற்பகுதியில் நான் பிரிவுமாற்றம் பெற்று மற்றொரு பிரிவில் நெய்தல்நில மக்களுக்கான அரசியல்ப்பணியை முன்னெடுத்துக்கொண்டிருந்த காலப்பகுதியில் தோமஸ்அண்ணா பணி நிமிர்த்தமாக பிரிவுமாற்றம ;பெற்றுச்சென்றுவிட மருத்துவப் பொறுப்பை எழிலன்அண்ணா பொறுப்பேற்றுக்கொண்டார்.

அந்தக்காலப்பகுதியில் வேலரசன்தான் அந்த மருத்துவமனையின் நிர்வாகப்பொறுப்பாளராக குறிப்பிட்டகாலம் கடமையாற்றியதாகவும் கேள்வியுற்றேன். இதன்பிற்பாடு சிலகாலங்கள் நானும் வேலரசனும் சந்தித்துக்கொள்வது மிகவும் அரிதாகவேயிருந்தது. இருவரது கடமைகளும் இருவரையும் வெவ்வேறு தளங்களில் பிரித்திருந்தது. எப்போதோ ஓரிரு தடவைகள் கீர்த்திகா மருத்துவமனையிலும் புதுக்குடியிருப்பிலும் சந்தித்துக்கதைத்த நினைவிருக்கின்றது.

காலங்கள் உருண்டோடி 2006-ம் ஆண்டும் வந்தது. தரைசார்ந்த குறிப்பிட்ட ஒரு பிரிவிலிருந்து ஒருதொகுதி போராளிகள் கடல்சார்ந்த நடவடிக்கைகளுக்காக வந்திருந்தார்கள். அந்தப்போராளிகளில் ஒருவனாக வேலரசனும் வந்திருந்தான்.

சுமார் நான்கு வருடங்களுக்குமேலாக நெய்தல்நிலமக்களுக்கான அரசியல்ப்பணியை முன்னெடுத்திருந்த நான் அந்தக்காலப்பகுதியில் அந்தப் பணியிலிருந்து ஒதுங்கி முல்லைத்தீவு-சிலாவத்தைப்பகுதியில் கடல்சார்ந்த பயிற்சிகளில் ஈடுபடும் போராளிகளுக்கான முகாம் ஒன்றில் மருத்துவப்போராளியாகச் செயற்பட்டுக்கொண்டிருந்தேன்.

அப்போதுதான் பணிநிமிர்த்தமாக வேலரசன் அந்த முகாமுக்கு வந்திருந்தான். நீண்டகாலம் பிரிந்திருந்த எமது நட்புறவு மீண்டும் பற்றுதியுடன் தொடர்ந்தது. அது வெறும் நட்பாக மட்டுமன்றி சகோதரத்துவ நட்பாகப்பரிணமித்தது.

நீண்டகாலத்திற்குப்பிறகு சிலாவத்தைக் கடற்கரை மணலிலிருந்து நானும் அவனும் பழைய நினைவுகளை மீட்டிக் கதைத்தவை. எனக்குத் தரப்பட்டிருந்த சிறிய உந்துருளியில் அவன் என்னை ஏற்றிக்கொண்டு வட்டுவாகல் முகாமுக்குச் சென்று பின்னர் அப்படியே புதுக்குடியிருப்பு வரையிலும் சென்று வந்தது எல்லாமே எனது மனக்கணமுன் நிழலாடுகின்றது.

ஆரம்பநாட்களில் என்னை “அண்ணா” என்று அழைத்த வேலரசன் அந்த நாட்களில்த்தான் “ப்ரெண்ட்ஸ்” என்று அழைக்கத் தொடங்கியிருந்தான். அன்றிலிருந்து அவன் சாவடையும் நாள்வரையிலும் அவன் “ப்ரெண்ட்ஸ்” என்றேதான் என்னை அழைத்தான். ஒருவாரமாக அந்தமுகாமில் என்னுடன் தங்கியிருந்த வேலரசன் பின்னர் வட்டுவாகலில் அமையப் பெற்றிருந்த மற்றுமோர் கடல்சார் நடவடிக்கைக்கான முகாமிற்கு கடமைக்காகச்சென்றிருந்தான்.

நான் பணிநிமிர்த்தமாக புதுக்குடியிருப்புக்குச் செல்கின்ற சந்தர்ப்பங்களில்  வேலரசனைப் பார்ப்பதற்கென்றே அவன்நின்ற வட்டுவாகல்முகாமுக்கு சென்றுவருவதை வழக்கமாக்கிக் கொண்டேன்.

இதன்பின்னர் ஓர்நாளில் சிலாவத்தை முகாமில் நான் தனித்து நின்ற வேளையில் வெளியில் யாரோ கூப்பிடுவதுபோல்க்கேட்டது.

சென்றுபார்த்தபோது வேலரசன் ஈரஉடையோடு நின்றிருந்தான். சிறியவகை இயந்திரப் படகொன்றை வட்டுவாகலிலிருந்து கடல்வழியாக தனியாக ஓட்டிவந்த வேலரசனுக்கு 2T ஒயில் தேவைப்பட்டிருக்கின்றது. அந்தமுகாமில் என்னைச்சந்திக்கலாம் என்ற நம்பிக்கையில் படகை கரையில் ஏற்றிவிட்டு முழுமையாக உப்புநீரால் நனைந்தபடி வந்து குறித்த ஒயில் இருந்தால் தருமாறு கேட்டான்.

எனது உந்துருளித் தேவைக்காக வைத்திருந்த ஒயிலை எடுத்துக் கொடுத்துவிட்டேன். அதைவாங்கிக்கொண்டு அவசரமாகச் சென்றுவிட்டான். இதன்பின்னர் நான் அவனை விசாரித்தபோது வேலரசன் வட்டுவாகல் முகாமில் இல்லையென்றும் அவன் கடமையாற்றிய தரைசார்ந்த அணிக்கே மீண்டும் சென்றுவிட்டான் என்றும் அறிந்துகொண்டேன்.

அத்துடன் அவன் ஓர் சிறந்த வாகனச் சாரதியாகவும் செயற்படுவதையும கேள்வியுற்றேன். இதன்பின்னர் 2007-ம்ஆண்டுகாலப்பகுதியில் நான் புதுக்குடியிருப்பைத் தளமாகக்கொண்டு எனது கடமைகளை முன்னெடுத்துக்கொண்டிருந்த காலப்பகுதியில் நான் எனது சிறியஉந்துருளியில் புதுக்குடியிருப்பை நோக்கிச்சென்றுகொண்டிருந்த ஓர்நாளில் என்னை விலத்திச்சென்ற கயஸ்வாகனம் ஒன்று கோண்அடித்து என்னை நிற்கும்படி சைகை செய்து வாகனம் நின்றது.

உடனே நான் உந்துருளியை நிறுத்தியபோது வாகனத்திலிருந்து வேலரசன் இறங்கிவந்து நீண்டநாட்களின்பின்னர் சந்தித்த சந்தோசத்தில் இருவரும் அளவளாவிக் கதைத்துவிட்டு “சந்திப்போம்” என்று கூறிவிட்டுச்சென்றான்.

அதன்பின்னரும் சிலதடவைகள் சந்தித்துக்கொண்ட நினைவிருக்கின்றது. தொடர்ந்து 2008-ம்ஆண்டுகாலப்பகுதியில் நிதித்துறைப் பொறுப்பாளராகவிருந்த தமிழேந்திஅப்பா படைத்துறைச்செயலராக தேசியத்தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டிருந்தார். அந்தக் காலப்பகுதியில் வேலரசன்தான் தமிழேந்தியப்பாவின் பிரத்தியேக வாகனச்சாரதியாக செயற்படுவதை கேள்வியுற்றேன்.

2008-ம்ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் ஓர்நாள் புதுக்குடியிருப்பில் அமைந்திருந்த தளபதி சூசை அவர்களின் சந்திப்புமுகாமிற்குச் சென்றிருந்தேன். அன்றையநாட்களில் எனது பணிநிமிர்த்தமாக நான் அங்கு செல்வது வழக்கமாகவிருந்தது.

அவ்வாறு சென்ற ஓர்நாளில்த்தான் முகாம்வாசலில் ஏனைய சில போராளிகளோடு நண்பன் வேலரசனும் நின்றிருந்தான். முகாமின் உள்ளே தளபதி சூசை அவர்களுக்கும் தமிழேந்தியப்பாவிற்கும் சந்திப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தது.

அப்போதுதான் தமிழேந்தியப்பாவுக்கு தான் வாகனச்சாரதியாகச ;செயற்படுவதை கூறியதோடு மேலும் பல விடயங்களை நட்புரீதியாகக் கதைத்துக்கொண்டோம்.

தொடர்ந்து வந்தநாட்களில் வன்னியில் போர் உக்கிரமடைந்து 2009-ம்ஆண்டு மேமாதம் முள்ளிவாய்க்காலில் எமது ஆயுதப்போராட்டம் முற்றுப்பெற்றதன் பிற்பாடு அரசபடையினரின் கண்காணிப்பில் செயற்பட்டுக்கொண்டிருந்த சரணடைந்த போராளிகளைத் தடுத்து வைத்திருக்கின்ற வவுனியா-பம்பைமடு புனர்வாழ்வுநிலையத்தில் நானும் வேலரசனும் மீண்டும் இணைந்துகொண்டோம்.

அவனுக்கு பெற்றோர் ஜெஸ்ரின் பீலிக்ஸ் என்று பெயரிட்டு செல்லமாக றேகன் என்றே அழைத்துவந்தனர். மீண்டு;ம் றேகனாக பம்பைமடு புனர்வாழ்வுநிலையத்தில் எங்கள் இருவருக்குமான நட்புறவு புதுவீச்சுடன் தொடர்ந்தது.

அந்தநாட்களில் கூடிய பொழுதுகளை இருவரும் ஒன்றாகவே கழித்தோம். எமது கடந்தகாலவாழ்க்கைக் கதைகள் தனிப்பட்ட கதைகள் என அனைத்தையும் மனம் விட்டுப ;பேசுகின்றளவுக்கு எமது நட்பின்பிணைப்பு மிகவும் இறுக்கமானது.

vali2-3அவனுக்கு உறவினர் சந்திப்பில் வீட்டிலிருந்து சாப்பாடு வந்தால் சாப்பாட்டுப் பார்சல் பிரிக்காது எனது வரவுக்காக காத்திருப்பான். நான் வந்ததும் சாப்பாட்டுப் பார்சல்பிரித்து நான்கைவைத்து சாப்பிட்டதன் பின்னர் தான் தான் சாப்பிடுவான்.

அப்போதுதான் அவன் என்னில் வைத்திருக்கும் அன்பின் ஆழத்தை அறிந்துகொண்டேன். இரவுநேரம் நித்திரைக்கு மட்டும்தான் நான் எனது கொட்டிலுக்கு வருவதுவழக்கம். மற்றும்படி அவனும் நானும் ஒன்றாகவே இருந்தோம். அந்தப் புனர்வாழ்வு முகாமில் எங்கு செல்வதென்றாலும் இருவரும் ஒன்றாகவே ஒட்டிக்கொண்டே திரிந்தோம். இந்த நாட்களில்தான் அளவுக்கதிகமான பாசத்தை அவனிடத்தில் அள்ளிச்சொரிந்தேன்.

அவனும் “ப்ரெண்ட்ஸ் ப்ரெண்ட்ஸ்” என்று என்னையே வலம்வந்து கொண்டிருந்தான். அந்தநாட்களில் எனது நண்பன் றேகனுடன் பழகிய பொழுதுகளை இப்போதும் நினைக்கும்போது எனது இதயம் ரணமாக வலிக்கிறது.

இவ்வாறு எமது நட்பு இணைபிரியாத நட்பாகத்தொடர்ந்த காலத்தில் சுமார் எட்டு மாதங்களின் பின்னர் நண்பன் றேகனை வெலிக்கந்தையிலுள்ள கந்தக்காடு புனர்வாழ்வு முகாமுக்கும் என்னை வவுனியாவிலுள்ள உலுக்குளம் புனர்வாழ்வு முகாமிற்கும் மாற்றிவிட்டார்கள்.

குறிப்பிட்ட மாதங்களின் பின்னர் எங்களை வவுனியாவிலுள்ள கம்பஸ் புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றியபின்னர் குறிப்பிட்டசிலநாட்கள் கையடக்கத்தொலைபேசிப்பாவனைக்கு அனுமதியளித்திருந்தார்கள்.

அந்தநாட்களில் ஓர்நாள் நண்பன் றேகனுடன் தொலைபேசியில் கதைத்திருந்தேன். அடுத்து வந்த நாட்களில் தொலைபேசிப் பாவனையைத் தடைசெய்துவிட்டார்கள். கந்தக்காட்டிலிருந்து வந்தவர்களிடம் எனது நண்பனைப் பற்றி நலம்விசாரித்து அறிந்துகொண்டேன்.

தொடர்ந்து 2011-ம்ஆண்டு யூலைமாதம் 04-ம்திகதி அனைத்து புனர்வாழ்வுநிலையங்களிலிருந்தும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள்போராளிகளில் குறிப்பிட்டதொகையினரை விடுதலைசெய்வதற்கு புனர்வாழ்வுஅமைச்சு சிபார்சு செய்திருந்தது. விடுதலையாகும் தொகுதியில் கம்பஸ்முகாமிலிருந்து நானும் கந்தக்காடு முகாமிலிருந்து றேகனும் சிபார்சு செய்யப்பட்டிருந்தோம்.

குறித்த 2011-ம்ஆண்டு யூலைமாதம் 04-ம்திகதிக்கு சிலநாட்களுக்கு முன்னர் கந்தக்காடு புனர்வாழ்வுமுகாமில் விடுதலைக்கு சிபார்சுசெய்யப்பட்டிருந்த அனைவரும் நான் தங்கிநின்ற கம்பஸ் புனர்வாழ்வு முகாமுக்கு கொண்டுவரப்பட்டிருந்தார்கள். அந்தத்தொகுதியில் நண்பன் றேகனும் வந்திருந்தான்.

நாம் இருவரும் மீண்டும் இணைந்துகொண்டோம். இருவரும் ஒரேநாளில் விடுதலையாகப்போகின்றோம் என்று இருவரும் உள்ளம் பூரித்துப்போனோம். றேகனின் விடுதலைக்கான செயற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியது. எல்லாமே நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் விதியோ வேறுவிதமாக விளையாடியது. விடுதலையாவதற்கான குறித்தநாளுக்கு இரண்டுநாட்களுக்கு முன்னர் நண்பன் றேகனோடு இன்னும் சிலரின் விடுதலை இரத்தாகியது.

ஆனாலும் அவன் மனம் தளரவில்லை. நான் விடுதலையானபோது நண்பன் றேகன் என்னை சந்தோசமாக வழியனுப்பிவைத்தான். தொடர்ந்து வந்தநாட்களில் றேகன் உள்ளிட்ட விடுதலை இரத்துச்செய்யப்பட்ட அனைவரையும் பூசா தடுப்புமுகாமிற்குக் கொண்டுசென்று அங்கு தடுத்துவைத்தார்கள். விடுதலையாகிவந்த நான் றேகன் ஏற்கனவே எனக்குத் தந்திருந்த அவனது வீட்டுப்போன்நம்பருக்கு போன்பண்ணி அவனது அம்மாவிடமும் அப்பாவிடமும் அவனது சுகநலன்களை விசாரித்துக்கொண்டேன்.

காலநீட்சியில் 2012-ம்ஆண்டின் பிற்பகுதியில் நான் கடல்கடந்ததேசம் ஒன்றில் புகலிடம்தேடிவந்து குடிவரவுத்தடுப்பு முகாமிலிருந்து 2013-ம்ஆண்டு விடுதலையாகி சமூகத்துடன் வாழ்ந்துகொண்டிருந்த நாட்களில் நண்பன் றேகன் எங்கிருக்கின்றான் என்பதும் தெரியாமல் அவனது தொடர்பு எப்படியாவது கிடைத்துவிடவேண்டும் என்று அங்கலாய்த்துக்கொண்டிருந்தேன்.

அவன் தந்திருந்த அவனது வீட்டுப்போன் நம்பர் அடங்கிய ஆவணம் எதுவும் நான் இங்கு வரும்போது எடுத்துவந்திருக்கவில்லை. அதற்கு நான் மேற்கொண்ட இடர்மிகுந்த கடற்பயணமும் இடம்கொடுக்கவில்லை. இந்தக்காலப்பகுதியில் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த றேகன் நான் கடல்கடந்த தேசத்திற்கு வந்துவிட்டதை அறிந்து என்னுடன் தொடர்புகொள்வதற்கு கடும்முயற்சிகள் எடுத்திருந்தான்.

எங்கள் இருவருக்குமிடையிலான நட்புறவு எள்ளளவுகூட கள்ளம்கபடமற்ற உண்மையானதும் நேர்மையானதுமாகும். அதிஸ்ரம் அவன் பக்கமேயிருந்தது. அவனது முயற்சி வீண்போகவில்லை. இந்தத்தேசத்தில் இருந்த அவனது மற்றுமோர் நண்பன் ஒருவனுக்கு ஊடாக ஒருவாறாக எனது போன்நம்பரை எடுத்து அவன்தான் முதலில் என்னைத்தொடர்புகொண்டான்.

நான் கடல்கடந்ததேசத்திற்கு வந்ததையிட்டு அவன் மிகவும் சந்தோசப்பட்டான். மீண்டும் நண்பன் றேகனது தொடர்பு கிடைத்த காலப்பகுதி 2014-ம்ஆண்டு யூன்மாதம். அன்றிலிருந்து அவன் 08-05-2015இல் விடுதலையாகிவந்து 10-05-2015இல் விபத்திற்குள்ளாகும்வரையிலும் எங்கள் இருவருக்குமிடையிலான நட்புறவு தொலைபேசியூடாகவும் முகநூலுக்கு ஊடாகவும் தொடர்ந்துகொண்டேயிருந்தது.

எவ்வளவோ எதிர்காலக்கனவுகள் அவனிடம் இருந்தது. அவனுக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் அவன் தனது தனிப்பட்ட விடயங்களை மனம்விட்டுப்பேசும் ஒரேயொரு நண்பன் நானாகத்தானிருக்கும் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

ஏற்கனவே எதிர்பார்த்ததற்கமைவாக 08-05-2015 வெள்ளிக்கிழமையன்று நீதிமன்றினால் நண்பன் றேகன் விடுதலை செய்யப்பட்டான். அன்றிரவே றேகனின் தம்பி றேமன் “அண்ணா விடுதலையாகிவிட்டார். நாளைக்கு உங்களுக்கு கோல் எடுப்பார்” என்று குறுஞ்செய்தி ஊடாக எனக்கு அறிவித்திருந்தார்.

vali2-1குறிப்பிட்டபடியே மறுநாள் 09-05-2015 சனிக்கிழமையன்று காலையிலேயே எனக்கு கோல் எடுத்தான். இருவரும் கதைத்தோம். நீண்டநேரம் கதைத்தோம். அடுத்துவரும் செவ்வாய்க்கிழமை ஸ்கைப்பில் கதைப்பதாக இருவரும் தீர்மானித்தோம்.

ஆனால் மறுநாள் 10-05-2015 ஞாயிற்றுக்கிழமையன்று மாலைவேளையில் உந்துருளியில் பயணித்தவேளையில் அவனுக்கு காலனாகவந்த உழவுஇயந்திரத்தில் விபத்திற்குள்ளாகி சிகீச்சைகள் பலனின்றி அதற்கடுத்தநாள் 11-05-2015 திங்கட்கிழமையன்று எமையெல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு எனது ஆருயிர்நண்பன் றேகன் விழிமூடி மீளாத்துயில்கொண்டுவிட்டான்.

றேகனின் பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் றேகனின் இழப்பு என்பது ஈடுசெய்யமுடியாததும் ஜீரணிக்கமுடியாததுமான இழப்பாகும். எனது ஆருயிர் நண்பன் றேகனின் சாவுச்செய்தி ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகத்தான் எனக்கு அமைந்திருக்கின்றது. அவனது இழப்பு எனது இதயத்தை வெகுவாகப் பாதித்திருக்கின்றது. அந்தத் தாக்கத்திலிருந்து இன்றுவரையும் நான் விடுபடவில்லை. அந்தத்தாக்கம் எனது ஆன்மாவை ரணமாக வலித்துக்கொண்டேயிருக்கின்றது.

இந்த நினைவுப்பதிவை எனது ஆருயிர்நண்பன் றேகனின் புகழுடல் புதைக்கப்பட்டிருக்கும் வலைப்பாடு சேமக்காலையில் அவனது கல்லறையில் காணிக்கையாக்குகின்றேன்.

அமரர் ஜோண்மரியசீலன் ஜெஸ்ரின் பீலிக்ஸ் (றேகன்)

 

மண்ணில் மலர்ந்தது: 05-10-1984.

 

மண்ணில் மறைந்தது: 11-05-2015.

வலிசுமந்த இதயத்துடன் உன் நண்பன்

“கொற்றவன்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*