vp01

வலிசுமந்த பதிவுகள் – 01 ( பசி)

அது 2009-ம்ஆண்டு வைகாசி மாதத்தின் இரண்டாவது வாரம். காலைப்பொழுதின் பறவைகளின் கானங்கள் அப்போது கேட்பதில்லை. முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்டிருந்த மக்களின் துயர் அறிந்ததாலோ என்னவோ பறவைகளும் தமது கடமைகளை மறந்திருந்தன. போரின் உக்கிரத்தன்மை அந்தச் சீவராசிகளையும் பாதித்திருக்கவேண்டும்.

சேவல்களின் கூவல்களுக்கும் பறவைகளின் கீதங்களுக்கும் பதிலாக அரசபடையினரால் ஏவப்படுகின்ற எறிகணைகளின் அதிர்வொலிகளும் துப்பாக்கிவேட்டொலிகளும் மக்களின் மரணஓலங்களுமே கேடகின்ற பொழுதுகளாகவே அந்தநாட்களின் அனேகமான காலைப்பொழுதுகள் புலர்ந்தன. அன்றயகாலைப்பொழுதும் படையினரின் எறிகணைவீச்சுக்களின் அதிர்வுகளோடுதான் விடிந்தது.

முதல்நாள் இரவுமுழுவதும் வானத்தில் பட்டாசுகள் வெடித்ததுபோலவே துப்பாக்கிரவைகள் வெடித்துக்கொண்டேயிருந்தன.தொடரான வேட்டுச்சத்தங்களால் தூக்கம் வரமறுத்தது. பங்கருக்குள் படுத்திருந்தபடி நானும் எனது ஆருயிர் நண்பனான செங்கோவும் நீண்டநேரமாக மனம்விட்டுக் கதைத்துக்கொண்டிருந்தோம்.

ஐந்து ஆண்டுகளாக நான் ஆழமாக நேசித்த எனது நண்பனை அடுத்தநாளில் இழந்துவிடப்போகிறேன் என்பதை அப்போதைக்கு நான் அறிந்திருக்கவில்லை. பங்கருக்குள் காற்றோட்டம் இல்லாததால் அந்த இரவுப்பொழுதிலும் வியர்த்துக்கொட்டியது. பங்கருக்கு வெளியில் வந்து பார்த்தபொழுது வானவெளியில் அரசபடையினரால் ஏவப்படுகின்ற துப்பாக்கிரவைகளும் கனரகஆயுதங்களின் ரவைகளும் சடசடத்துக்கொண்டிருக்க அதன் சுவாலைகள் பட்டாசுவெளிச்சங்களைப்போலிருந்தது.

பங்கருக்கு உள்ளே படுத்தால் வியர்த்துக்கொட்டுகிறது பங்கருக்கு வெளியே படுத்தால் வேட்டுச்சத்தங்கள் வேறு. எதுவானாலும் நடக்கட்டும் என எண்ணிக்கொண்டு பங்கர் வாசலிலேயே படுத்துவிட்டேன். ஒருவாறு அந்த இரவுப்பொழுது கழிந்தது.

மறுநாட்பொழுதும் படையினரின் எறிகணைத் தாக்குதல்களோடுதான் விடிந்தது. எறிகணைகள் எமது இடத்தைச் சூழவுள்ள இடங்களில் வெடித்துக்கொண்டிருந்தநிலையில் பக்கத்தில் இருந்த பாதுகாப்பான பங்கருக்குள் நானும் இன்னும்சிலரும் புகுந்துகொண்டோம். அந்த இடத்தில் இரண்டு பாதுகாப்பான பங்கர்கள் இருந்தன. இரண்டிற்குள்ளும் எம்மவர்கள் பாதுகாப்புத்தேடிக்கொண்டார்கள். மழைபெய்து ஓய்ந்ததைப்போல நீண்டநேரமாக அதிர்ந்துகொண்டிருந்த எறிகணைவீச்சுக்கள் சற்றுநேரத்திற்கு ஓயந்திருந்தது.

பங்கருக்கு வெளியே வந்து பார்த்தபோது தூரத்தில் எங்கோ அவலக்குரல்கள் கேட்டது. “முதல்நாள் இரவு முள்ளிவாய்க்கால் சந்தியில் நிலைகொண்டிருந்த படையினர் கடற்கரைவழியாக முன்னேற்றமுயற்சிகளை மேற்கொண்டிருந்தவேளையில் விடுதலைப்புலிகளின் படையணிகளால் தடுத்துநிறுத்தப்பட்டதாம்” என்று என்னுடன் நின்ற றங்கன் என்ற இன்னொரு நண்பர் கூறினார்.

அவர் கூறியவற்றை மெய்ப்பிப்பதாகவே முதல்நாள் இரவுமுழுவதும் கேட்ட வேட்டொலிகள் சான்று பகர்ந்தன. தொடர்ந்தும் அந்தப்பகுதியில் இருப்பதென்பது உசிதமாக எமக்குப்படவில்லை. எனவே இன்னமும் எஞ்சியிருக்கின்ற வெள்ளாம்முள்ளிவாய்க்காலின் ஒருபகுதியான உண்டியல்ச் சந்திக்கும் வட்டுவாகல்ப்பாலத்திற்கும் இடைப்பட்ட பகுதியான அந்தக்குறுகிய நிலப்பரப்பிற்குள் செல்வதெனத்தீர்மானித்தோம்.

பங்கருக்குள் கரும்புழுதிமணலில் படதுதிருந்ததால் நான் அணிந்திருந்த ரவுசரும் சேட்டும் புழுதி படிந்திருந்தது. எனவே எறிகணைவீச்சுக்கள் ஓய்ந்திருந்த அந்தக்குறுகியநேரத்திற்குள் வேகமாக உடைகளைமாற்றி உடற்சுத்தம் செய்துவிடவேண்டும் என்ற நோக்கோடு வேகமாகக்கிணற்றடிக்குச்சென்று உடற்சுத்தம் செய்துகொண்டிருக்கையில் எறிகணையொன்று கூவிவந்து நான் நின்ற இடத்திலிருந்து சுமார் ஐம்பதுமீற்றர் தூரத்தில் வீழ்ந்து வெடித்தது. எறிகணை வீழ்ந்துவெடித்த அதிர்வுகேட்டு கிணற்றடியில் முகத்தைக்கழுவிக்கொண்டிருந்த நான் என்னை சுதாகரித்துக்கொள்வதற்குள் எறிகணைச்சிதறல்களில் ஒருதுண்டு எனது தலையின் பின்பகுதியை (பிடரிப்பகுதியை) பதம் பார்த்தது.

தலையின் பின்பகுதியில் ஏதோவொன்று வந்து அடித்ததுபோலிருந்தது. உடனே கிணற்றுக்கட்டின்மிதியில் தேங்கிநின்ற கழிவுதண்ணீருக்குள் அப்படியே குப்புறப்படுத்துக்கொண்டேன். அப்போது அவதானித்தபோதுதான் கிணற்றுக்கட்டுமிதியில் தேங்கிநின்ற தண்ணீர் சிவப்புநிறமாகியிருந்தது.

எனது நிலமையைப்புரிந்துகொண்டு தலையில் கைவைத்தபொழுது காயத்தினால் குருதி வழிந்து எனது தலைப்பகுதியை நனைத்திருந்தது. எனது நிலமையைக்கண்டுவிட்ட மற்றுமொரு நண்பனான பிறேம்குமார் அவ்விடத்திலிருந்த ஒரு வெள்ளைத்துணியை எடுத்துக்கொண்டு ஓடிவந்து என்னை எழுப்பி எனது காயத்தைச்சுற்றிக்கட்டிவிட்டு பங்கருக்கு அருகில் கூட்டிச்சென்று மாற்றுடையான வேறு சாரம் சேட் தந்து அவற்றை அணிந்துகொண்டு வழிந்திருந்த குருதியையும் தண்ணீரால் கழுவி மற்றுமொரு போராளியான கலைப்பிரியனுடன் உந்துருளியில் மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டார். அந்த எறிகணைத்தாக்குதலில் அடுத்த வீட்டில் பங்கருக்கு மண் அணைத்துக்கொண்டிருந்த மூன்றுபேர் ஸ்தலத்திலேயே சாவடைந்ததுவும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வெள்ளாம்முள்ளிவாய்க்காலில் பெரியவீடு ஒன்றுதான் பிரதான வைத்தியசாலையாகச் செயற்பட்டுக்கொண்டிருந்தது. அந்த வளாகத்தின் முன்பாக தென்னை மரநிழலில் அன்றையநாள் காயமடைந்தவர்கள் பலர் வளர்த்தப்பட்டிருந்தார்கள். அவர்கள் அதுவரைக்கும் சிகீச்சைகளுக்கு உட்படுத்தப்படவில்லை. அவர்கள் மணலில் புரண்டபடி வேதனையால் முனகிக்கொண்டிருந்தார்கள். மருத்துவர்கள் பம்பரம்போல் ஓடித்திரிந்து செயற்பட்டதை அவதானிக்கமுடிந்தது. என்னைக் கூட்டிச்சென்ற கலைப்பிரின் அங்குநின்ற மருத்துவஉதவியாளர் ஒருவரிடம் என்னை ஒப்புவித்துவிட்டு சென்றுவிட்டார். அந்த மருத்துவஉதவியாளர் எனது பெயரையும் வயதையும் கேட்டார். அவற்றுக்குப்பதிலளித்தபோது எனது நாவு தடுமாறியது. எனக்கு நினைவுதவறுவதை உணர்ந்துகொண்டேன். அப்படியே அந்த இடத்தில் படுத்துவிட்டேன். அதன்பின்னர் நடந்தவை எனக்கு சிகீச்சையளிக்கப்பட்டவை ஒன்றும் எனக்கு நினைவில்லை.

எவ்வளவுநேரம் கழிந்ததோ எனக்குத் தெரியவில்லை. மதியப்பொழுது என்பதுதான் நினைவிருக்கிறது. ஒருவர் என்னை கைத்தாங்கலாகக் கூட்டிவந்து அந்த மருத்துவவீட்டின்முன்பாக அமைக்கப்பட்டிருந்த நீளமான கொட்டிலில் விரிக்கப்பட்டிருந்த தரப்பாள்விரிப்பில் என்னைப்படுக்கவைத்தார். அந்தக்கொட்டிலில் இன்னும்பலகாயக்காரர்கள் படுத்திருந்தார்கள். எனது நினைவு சாதாரணநிலைக்குத்திரும்பியிருந்தது.

தலையைத் தடவிப்பார்த்தேன். காயத்திற்கு மருந்துவைத்து பன்டெச்சினால் தலையைச் சுற்றிக்கட்டியிருந்தார்கள். வலதுகையில் வென்வ்ளோன் ஏற்றப்பட்டிருந்தது. சிறிதுநேரத்தின்பின்னர் மருத்துவஉதவியாளர்கள் வந்து காயத்தின் வேதனையோடு படுத்திருந்த அனைவரையும் மிகவும் கரிசனையுடன் எழுப்பி மதிய உணவாக பருப்புக்கறியுடன் வெள்ளைஅரிசிச்சோறு தந்தார்கள். அன்றையநாட்களில் பருப்பையும் சிலசமயங்களில் ரின்மீனையும் தவிர ஏனயகறிவகைகளை கண்ணாலும் காணமுடியாது. தொடர்ந்து அங்கு மேலும் காயக்காரர்களைக்கொண்டுவந்தார்கள். எறிகணைகளின் அதிர்வுகள் கேட்டுக்கொண்டேயிருந்தன. வேறுபலர் அங்குவந்து காயக்காரர்களை பார்ப்பதும் போவதுமாக இருந்தனர்.

அன்றைய இரவுச்சாப்பாடாக கோதுமைமாவில் அவிக்கப்பட்ட பிட்டும் பருப்புக்கறியும் வழங்கப்பட்டது. எனக்கு வெளியில் என்ன நிலவரங்கள் என அறியாமலிருக்க எனது மனம் இருப்புக்கொள்ளவில்லை. மெல்ல எழுந்து கொட்டிலுக்குவெளியே வந்தபோதுதான் எனக்குத்தெரிந்த வள்ளுவன் எனபவர் மூலமாக  அந்தத் துயரச்செய்தி எனது காதுகளை எட்டியது. எனது ஆருயிர்நண்பனான செங்கோ அன்றைய மதியப்பொழுதில் படையினரால் ஏவப்பட்ட எறிகணைத்தாக்குதலில் சாவடைந்துவிட்டார் என்பதுவே அந்தச்செய்தி. செய்தி கேட்ட அந்தக்கணத்தில் எனக்கு ஏற்பட்ட உள்ளக்குமுறலை இதில் விபரித்துவிடமுடியாது. முதல்நாள் இரவு அந்த பங்கருக்குள் செங்கோ என்னுடன் கதைத்த கதைகள் ஒவ்வொன்றாக எனது மனத்திரைகளில் அலைமோதின. இல்லை இல்லை அவை எனது மனத்திரைகளில் இன்றும்தான் அலைமோதிக்கொண்டிருக்கின்றன. எனது ஆருயிர்நண்பன் செங்கோவை இனிமேல் நான் பார்க்கவேமாட்டேன் என்று நினைத்தபோது எனக்கு எல்லாமே இருண்டதுபோல்த்தெரிந்தது. துயரங்கள் இதயத்தைப்பிழிய தரப்பாள் விரிப்பில் சாய்ந்துபடுத்திருந்தேன். அப்போது மருத்துவஉதவியாளர் வந்து எனது கையைப்பிடித்து ஊசிமருந்து ஏற்றிவிட்டுச்சென்றார். அது காயமடைந்தவர்களுக்கு ஏற்பு வராமல்த்தடுப்பதற்கான  ரெற்றனஸ் ரொக்சைட் ஊசிமருந்து என்பதைத்தெரிந்துகொண்டேன்.

மறுநாள் அதிகாலை 5.00மணியிருக்கும் மருத்துவஉதவியாளர்கள் இருவர் வந்து என்னையும் அங்கு படுத்திருந்த இன்னும்சிலரையும் எழுப்பி வெளியில் கூட்டிவந்து இருக்கச்சொன்னார்கள். சிறிதுநேரத்தின்பின்னர் வாகனம் ஒன்று வந்தது. எங்களை அந்த வாகனத்தில் ஏற்றிவிட்டார்கள். நாம் சென்ற வாகனம் வெள்ளாம்முள்ளிவாய்க்காலுக்கும் வட்டுவாகலுக்கும் இடைப்பட்ட பகுதியில் பிரதானவீதியிலிருந்து கடற்கரைக்குச்செல்லும் கிரவல்மணலால்போடப்பட்ட வீதிவழியாகச்சென்று ஓரிடத்தில் எங்களை இறக்கிவிட்டார்கள். வீதியின் அருகாகவுள்ள பாதையால் சென்றபோது பற்றைகள் மரங்கள் என்பவற்றைச்சூழவுள்ள அந்த மணல்ப்பகுதியில் உடனடிப்பாதுகாப்புக்கென வெட்டப்பட்ட ஆழம்குறைந்த அந்த பங்கருக்குள் ஏழு அல்லது எட்டுவரையிலான காயக்காரர்கள் படுத்திருந்தார்கள் பங்கருக்கு வெளியில் மரநிழலிலும் இன்னும்சிலர் படுத்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் எனக்கு அறிமுகமானவர்கள் என்பதாலும் அவர்களைப்பராமரித்துக்கொண்டிருந்த மருத்துவரும் எனக்கு அறிமுகமானவர் என்பதாலும் நானும் அவர்களுடன் சேர்ந்துகொண்டேன். நான் அணிந்திருந்த சாரம் சேட் என்பவற்றைத்தவிர வேறு எதுவும் என்னிடம் இருக்கவில்லை. நான் காயமடைந்தபோது எனது உடமைகளும் அவ்விடத்திலேயே விடுபட்டுவிட்டது. இனிமேல் அந்த இடத்திற்குச்செல்லமுடியாது. அன்று காலையில் நான் காயம்பட்ட சம்பவம் நடந்த இடத்தையும் தாண்டி படையினர் முன்னேறிவிட்டதாக அறிந்துகொண்டேன்.

அன்றையமாலைப்பொழுதில் குளிப்பதற்கென பக்கத்திலிருந்த கிணற்றடிக்குச்சென்றேன். அந்தப்பெரிய சீமெந்துக்கட்டுக்கிணற்றைச்சுற்றிநின்று சுமார் ஐம்பதுபேர்வரையிலான ஆண்களும் பெண்களும் குளித்துக்கொண்டிருந்தார்கள். வழக்கமாக மறைவான இடங்களிலேயே குளிக்கும் பெண்கள் திறந்தவெளியில் சகஆண்களோடு குளிக்கின்ற நிலமை உருவாகியிருந்தது. இறுதிப்போர் எல்லாவற்றையுமே சகஜமாக்கிவிட்டிருந்தது. எனக்குத்தெரிந்த ஒருவரிடம் வாளியைவாங்கி காயத்தில் தண்ணீர் படாதவாறு நானும் குளித்துவிட்டு எனது இருப்பிடத்திற்கு வந்தேன். இவ்வாறு இரண்டுநாட்கள் அங்கு தங்கிநின்று அந்த மருத்துவர் அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் எமக்களித்த சிகீச்சையும் உணவும் எனது காயத்தினையும் உடல்நிலையினையும் ஓரளவிற்குத் தேற்றியிருந்தது.

அடுத்துவந்தநாட்கள் மிகவும் மோசமான நாட்களாகவே அமைந்தன. அரசபடையினர் தம்வசமிருந்த அத்தனை கனரகஆயுதங்களின் தாக்குதல்களையும் கொத்துக்குண்டுத்தாக்குதல்களையும் மிகமோசமாக நடாத்தி வெள்ளாம்முள்ளிவாய்க்காலின் உண்டியல்ச்சந்திவரையிலும் முன்னேறி ஆக்கிரமித்துக்கொண்டனர். தொடர்ந்தும் அந்த இடத்தில் எல்லோரும் கூடியிருப்பது ஆபத்தான விடயம். இதனைக்கருத்திற்கொண்ட மருத்துவர் “காயங்கள் தேறியவர்கள் உங்களது பாதுகாப்புக்களைத்தேடிக்கொள்ளுங்கள்” என்று கூறினார். அந்த இடத்தில் இருந்தவர்கள் இருவர் மூவராகச்சேர்ந்து ஆளுக்கொரு பக்கமாகச்சென்றார்கள். நான் அங்கிருந்து புறப்பட்டு கடற்கரைக்குச்செல்லும் கிரவல்வீதிக்கு வந்தபோது நன்பன் அரவிந்தனைச் சந்தித்தேன். அடுத்தகட்டம் என்னசெய்வதென்று இருவரும் சிந்தித்துக்கொண்டிருந்தவேளையில் எறிகணை குத்திய சத்தம் கேட்டு உடனேயே இருவரும் பக்கத்தில் நின்றிருந்த கன்ரர் வாகனத்திறகு அருகில் குப்புறப்படுத்துக்கொண்டோம். கூவிவந்த எறிகணை எங்களைக்கடந்துசென்று வீழ்ந்துவெடித்தது.

அந்த எறிகணைச்சிதறல்களின் துண்டுகள் சூழநின்ற மரங்களில் அடித்தது. அதன்பின்னர் நாம் அங்கிருந்து பிரதான வீதிப்பக்கமாக நடந்துவந்து வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பிக்கப்வாகனம் ஒன்றில் ஏறி அமர்ந்துகொண்டோம். சிறிது நேரத்தின் பின்னர் எமக்குத்தெரிந்த ஒருவர்வந்து நாம் முதலில் நின்ற இடத்தில் நிறுத்திவிடப்பட்டிருந்த கன்ரர் வாகனத்தின் மீது மீண்டும் படையினர் ஏவிய எறிகணை வீழ்ந்துவெடித்து வாகனம் முற்றாக நொருங்கிவிட்டது என்று கூறிவிட்டுச்சென்றார். மீண்டுமொரு உயிராபத்திலிருந்து மீண்டுகொண்டோம் என எமக்குள் எண்ணிக்கொண்டோம். அன்றைய பகற்பொழுது முழுவதும் சாப்பாடு இல்லை. குடிதண்ணீரும் அந்த இடத்தில் கிடைப்பதென்பது அரிது.

அந்தப் பிக்கப் வாகனத்திற்குள் சிறிதளவு அரிசி இருந்தது. அன்றைய இரவுப்பொழுதில் எமக்குப் பக்கத்தில் வீதிக்கரையில் குடியிருந்த ஒரு குடும்பத்தவர்கள் தங்களுக்கு அரிசி தந்துதவுமாறு மிகவும் கெஞ்சலாகக்கேட்டார்கள். நாம் உடனேயே அந்த அரிசியைத் தூக்கி அவர்களிடம் கொடுத்துவிட்டோம். அவர்கள் உணவு சமைத்துவிட்டு எங்களையும் அழைத்து ஒருபிடிசோறும் இரண்டு ரொட்டித்துண்டுகளும் மிகவும் பரிவுடன் தந்தார்கள். அன்றையநாள் பசியுடன் வாடிக்கொண்டிருந்த எங்களுக்கு உணவளித்த அந்தக் கரங்களை இன்றும் நினைக்கும்போது என்மனம் நெகிழத்தவறுவதில்லை.

“கொற்றவன்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*