vithya

தொடரும் படுகொலைகளில் பதினெட்டு வயது மாணவி!

கடந்த வாரம் க.பொ.த உயா்தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவி வித்தியா படுபயங்கரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். காலையில் பாடசாலை சென்ற மாணவி வீடு திரும்பாத நிலையில் தேடப்பட்ட போது அவா் ஒரு பாழடைந்த காட்டிற்குள் சடலமாக மீட்கப்பட்டார்.

இரு கைகளும் பின்புறம் கட்டப்பட்ட நிலையில், இரு கால்களும் இருபக்கமாக இழுத்து இரு மரக்கட்டைகளில் கட்டப்பட்டும் சீருடை இரத்தம் தோய்ந்துமிருக்க அவரது சடலம் காணப்பட்டது. அவா் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வைத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இக்கொலை தொடா்பாக ஒன்பது போ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனா். குடும்பத்தகராறு காரணமாகவே இக்கொலை இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. இப்படுகொலை வடக்கையே கொந்தளிக்க வைத்துவிட்டது. வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் பாடசாலை மாணவா்கள் உட்பட பல தரப்பினராலும் பெரிய ஆா்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடத்தப்பட்டன. நடந்து முடிந்த கொலைக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதுடன் இனி இப்படியான கொலைகள் இடம்பெறாது தடுக்கப்பட வேண்டும் எனவும் கோசங்கள் எழுப்பட்டன.

இக்கொலை தொடா்பாக கைது செய்யப்பட்டவா்கள் யார்? இவா்களின் பின்னணி என்ன? குடும்பத்தகராறுக்காக பள்ளி மாணவி சின்னா பின்னப்படுத்தப்பட்டிருக்க முடியுமா? இவர்கள் இக்கொலையை செய்திருந்தால் இவா்கள் தாங்களாகவே செய்தார்களா அல்லது கூலிக்கு ஏவப்பட்டு செயற்பட்டார்களா அல்லது இவை எல்லாவற்றையும் விட இக்கொலைக்கு ஆழமான காரணம் இருக்க முடியுமா? இப்படி பல்வேறு விதமான கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.

அதில் முக்கியமான ஒரு கேள்வி வடக்கில் போர் முடிவுக்கு வந்த பின்பு இடம்பெறும் தொடா் கொலைகளில் இதுவும் ஒன்றா அல்லது தனிப்பட்ட கொலையா என்பதுதான். சங்கானை பூசகா் கொலை, உரும்பிராய் உதவிக் கல்விப் பணிப்பாளா் கொலை, சாவகச்சேரி மாணவன் கபில்நாத் கொலை இப்படியான படுகொலைகள் தொடா்பாக இன்று வரை எவரும் தண்டிக்கப்படவில்லை. கைது செய்யப்பட்டவா்களும் பிணையில் விடுவிக்கப்பட்டு விட்டார்கள். பிணை வழங்க மறுத்த நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றதுண்டு.

தீவகத்தில் இடம்பெற்ற மருத்துவ மாது மரணம், சிறுமி கடற்படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டாரென்ற குற்றச்சாட்டு, நெடுங்கேணியில் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு சடலமாக மீட்கப்பட்டமை என இடம்பெற்ற பாலியல் குற்றங்கள், கொலைகள் தொடா்பாக எவரும் தண்டிக்கப்படவில்லை. நடவடிக்கைகள் கிடப்பில் போடப்பட்ட நிலையில் சந்தேக நபா்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றார்கள்.

வடக்கில் பெண்கள் சிறுமிகள் உட்பட எவருக்குமே பாதுகாப்பு இல்லை என்ற நிலை. தொடர்ந்து கொலைகள், பாலியல் குற்றங்களுக்கு நீதி கிட்டாத நிலை என்றால் துனிச்சலாக குற்றங்கள் அரங்கேற என்ன தடை இருக்க முடியும்? நாட்டில் சட்டம் ஒழுங்குக்கு என்ன நடந்தது? ஏற்கனவே இடம்பெற்ற குற்றங்களுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததாலேயே புதிய குற்றங்களுக்கு களம் அமைகின்றது மக்கள் திடமாக நம்புகின்றார்கள்.

வடபகுதி மக்களை ஒர் அச்ச சூழ்நிலையில் தொடா்ந்தும் வைத்திருக்க மேற் கொள்ளப்படும் திட்டமிட்ட நடவடிக்கைகளா என்ற கேள்வி மக்கள் மக்கள் மத்தியில் எழுவதை எவரும் தடுத்து விட முடியாது. எப்படியாயினும் பருவத்தில் தலைவாரி பூத்து நின்ற குறுமலா் கொடூரமான முறையில் பாலியல் வன்புணா்வுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை எந்தவொரு தமிழனாலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

கைது செய்வது, நீதிமன்றத்தில் நிறுத்துவது, விளக்கமறியல் வைப்பது என்ற வகையில் மட்டும் இந்த விவகாரம் மட்டுப்படுத்தப்படக் கூடாது. இப்படுகொலையின் பின்னணி கண்டுப்பிடிக்கப்பட வேண்டும். இதன் பின்னணியில் உள்ள மற்ற மா்மங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.
இது நடக்குமா? நடக்க வேண்டும். நடந்தேயாக வேண்டும்!

குடும்பத்தகராறு என்றோ அல்லது பாலியல் நோக்கத்தில் செய்யப்பட்ட கொலை என்றோ இச்சம்பவத்தின் மூலங்கள் மூடி மறைக்கப்படக் கூடாது. உயா்மட்ட நியாயமான புலனாய்வு மூலம் உண்மைகள் கண்டுப்பிடிப்பட வேண்டும் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

மக்களிடம் வாக்கு கேட்டு கையேந்தி வரும் அரசியல்வாதிகள் பொலிசார் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்ப வைக்கும் சொற்களை சொல்வதோ, பொலிஸ் மா அதிபருக்கு நடவடிக்கை எடுக்கும் படி கோரிக்கை வைப்பதோ நீதியை நிலை நாட்ட போதுமானதல்ல. பல முனைகளிலும் கொடுக்கும் அழுத்தங்கள் மூலமே நியாயம் கிடைக்கும்! நீதி நிலை பெறும்!

அவ்வகையில் இக்கொலை தொடா்பாக வடபகுதியெங்கும் பொங்கிய எழுச்சி காரணமாக சில நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இக்கொலையுடன் சம்பந்தப்பட்டு கைது செய்யப்பட்டவா்களில் ஒருவா் ஒரு கொள்ளையுடன் தொடா்புடையவா் எனவும் மாணவியின் தாயாரே அவனை அடையாளம் காட்டினார் எனவும் தெரியவருகின்றது. மேலும் ஒருவா் சுவிஸ் நாட்டிலிருந்து திரும்பி வந்தவா் என்றும் நால்வா் கொழும்பில் இருந்து வந்தவா்கள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஒரு கொள்ளையா், ஒரு வெளிநாட்டில் இருந்து திரும்பியவா், கொழும்பில் இருந்து வந்தவா்கள் என கைது செய்யப்பட்டவா்களை பார்க்கும் போது இக் கொலை பாலியல் வன்புணா்வு, பழிவாங்கல் என்ற அளவுக்குள் அடங்கி விடக் கூடியதாக தெரியவில்லை. மாறாக இக்கொலைக்கு பின்னால் சக்திவாய்ந்த ஒரு மையம் இருப்பதாகவும், ஏதோ ஒரு வலுவான நோக்கத்துடன் இது மேற் கொள்ளப்பட்டதா என்று கருத வேண்டியுள்ளது.

மேலும் விசாரணைகள் ஆழப்படுத்தப்படும் போது இன்னும் பல விடயங்கள் வெளிவரக் கூடும். பல நபா்களின் பெயா்கள் வெளிவர வாய்ப்புக்கள உண்டு. கைது செய்யப்பட்டவா்களில் ஒருவா் அந்த மையசக்தி பற்றி உண்மையான விசாரணையில் வெளியிட்டு விட்டால் அவா் ஆயுதம் மறைத்து வைக்கும் இடத்தைக் காட்ட கூட்டிச் சென்றதாகக் கூறி தனிப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று பொலிசார் மீது கைக்குண்டு வீச முயலும் போது பொலிசாரால் சுட்டுக் கொல்லப்படலாம். அல்லது விசாரணைக்கென வாகனத்தில் கொண்டு செல்லப்படும் போது வாகனத்தில் இருந்து குதித்து இறந்து விடலாம்.  எப்படியிருப்பினும் மக்களின் எழுச்சி சகல மோசடிகளையும் தகா்த்து உண்மைகளை வெளிக் கொண்டு வரும் என மக்கள் நம்பி களத்தில் இறங்கியுள்ளனா்.

தமிழ்லீடருக்காக மாரீசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*