leader

ஆறா ரணங்களின் ஆறாண்டுகள்!

முள்ளிவாய்க்கால் பேரழிவின் தடங்களை கடந்து ஆறு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. தனது சுதந்திரத்திற்காக போராடிய ஒரு இனம் கண்மூடித்தனமாக வெறித்தனமாக மேற்கொள்ளப்பட்ட ஒரு கொடிய போரில் சிதைக்கப்பட்டது.

அடிப்படையான மனிதநேயங்கள் மறக்கடிக்கப்பட்டு உலக போர் தர்மங்கள் மீறப்பட்டு சர்வதேச கண்காணிப்புகளை விரட்டியடித்து ஒரு கறுப்புத்திரையிடப்பட்டு மூடப்பட்ட போர்வலயத்திற்குள் சிக்கவைக்கப்பட்ட ஒரு இனத்தின் ஆன்மா மீள உயிர்த்தெழக்கூடாது என்ற நோக்கோடு குதறப்பட்டது.

சர்வதேச நாடுகள் அனைத்தினதும் நெருக்கடியான தடைகளுக்கு மத்தியில் வரையறுக்கப்ட்ட வளங்களுடன் போராடிய ஒரு விடுதலை இயக்கத்தின் போராட்டம் சிறுமைப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டது.

அன்றைய அமெரிக்கா ஏகாதிபத்திய அரசு கொடூரமான அணுகுண்டுகளை ஏவி யப்பான் என்ற நாட்டை அடிபணிய வைத்ததோ அதற்கு நிகராக தமிழீழ மக்கள் மீது தடைசெய்யப்பட்ட போராயுதங்களை அடிப்படையான போர் தர்மங்களை மீறும்வகையில் கையாண்டு அதியுச்ச உயிரழிவுகளை ஏற்படுத்தியது சிங்களதேசம்.

இலங்கைத்தீவு சுதந்திரமடைந்ததாக சொல்லப்படுகின்ற 1948 ஆம் ஆண்டு முதல் தமிழர்கள் மீது சிங்கள பேரினவாத அரசுகளால் மேற்கொள்ளப்படுகின்ற இனப்படுகொலையின் உச்சவடிவமாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை கணிக்கப்படுகின்றது.

கொடிய இனவழிப்பை செய்தபோதும் மனித சமுதாயத்தையே தலைகுனிய வைக்ககூடிய போர்க்குற்றங்களை சிங்கள தேசம் மேற்கொண்டபோதும் இன்று ஆறு ஆண்டுகள் கடந்த பின்னர் இலங்கைத்தீவில் இரு தேசிய இனங்களும் இனியாவது சமவுரிமை கொண்ட மக்கள் இனமாக சமவுரிமை கொண்ட தேசங்களாக இணைந்து வாழவேண்டும் என்று தமிழ்மக்கள் விரும்புகின்றார்கள்.

ஆனால் தமக்காக உயிர்நீத்த போராளிகளையும் கொல்லப்பட்ட அப்பாவி தமிழ்மக்களையும் நினைவுகூருவதற்கான அடிப்படை அறநெறியைக் கூட வேண்டுமென்றே நிராகரித்துவருகின்றது சிறிலங்கா அரசு.

இன்று ஆட்சிபீடத்திலுள்ள சிறிலங்கா அரசின் மாற்றத்திற்கான முகமானது தனியே சிங்கள அரசின் முகமல்ல. அதற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ள மேற்குலக அரசுகளின் முகமுமாகும். எனினும் தற்போது கடந்த ஐந்து ஆண்டுகளாக தாம் வெற்றிநாளை கொண்டாடியதாகவும் இனிமேல் பிரிவினைவாதத்தை தோற்கடித்த நாளாகவும் கொண்டாடப்போவதாக அறிவித்திருக்கிறது சிங்கள அரசு.

தமிழ்மக்களின் தவிர்க்கமுடியாத விடுதலைப்போராட்ட முனைப்புகள் ஒரு காலத்தின் தொடர்ச்சியாகும். வரலாற்றில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட இனவாத அடக்குமுறையிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கான ஒரு உபாயமாகவே விடுதலைப்போராட்டம் பரிணமித்தது.

இதனை விளங்கிக்கொள்ளாத அல்லது புரிந்துகொள்ள மறுக்கின்ற சிறிலங்கா தேசத்தின் ஆட்சியாளர்கள் எப்போது தமிழர்களின் சமவுரிமை குறித்து சிந்திக்க போகின்றார்கள்.
மாறாக சிறிலங்கா ஆட்சிபீடத்தை சிங்களவர்களின் ஆட்சிபீடமாக வைத்திருக்கும் ஒற்றையாட்சி என்ற வரையறைக்குள் தீர்வை தேடுவது பொருத்தமானதா?

முள்ளிவாய்க்காலிலே படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூருவதற்கே கடுமையான நெருக்கடிகளை இப்போதும் கொடுத்துக்கொண்டிருக்கும் சிஙகளதேசம் எப்போது தமிழர்களின் போராட்டத்தின் நியாயத்தை ஏற்றுக்கொள்ளப்போகின்றது?

இன்றைய நாள் – மே 18 என்பது ஈழத்தமிழர்கள் வரலாற்றில் உறவுகளை இழந்த நாளின் குறியீடாக தமிழர்மீது கட்டவிழ்த்துவிட்ட இனப்படுகொலையின் சாட்சியாக என்றும் நிலைத்துநிற்கும். யார் தடுத்தாலும் யார் எதிர்த்தாலும் தமிழ்மக்களின் உணர்வுகளோடு ஒன்றித்திருக்கும் அந்த உன்னதங்களின் இழப்பை மறக்கடிக்கமுடியாது.

–  தமிழ்லீடர் ஆசிரியர்பீடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*