leader

அமெரிக்க வல்லரசை மண் கௌவ வைத்த வியட்நாம் விடுதலைப் போர்

ஒரு காலத்தில் ‘ஹோ மாமா” என்று சொல் வியட்நாம் மக்களை விடுதலை வேட்கை கொண்டு சிலிர்தெழ வைக்கும் வேத மந்திரமாக விளங்கியது. வியட்நாம் விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று வழி நடத்திய தலைவர் ஹோ.சி.மின் அவர்களுக்கு வியட்நாம் மக்கள் வைத்த அன்புப் பெயர் தான் ‘ஹோ மாமா”.

தலைவர் ஹோசிமின் தலைமையில் தளபதி ஜியாட்பின் நெறிப்படுத்தலில் வியட்நாம் மக்கள் வீரமும், நியாயமும் நிறைந்த விடுதலைப் போராட்டத்தை நடத்தி 1975 இல் சுதந்திர வியட்நாமை உருவாக்கினர். உலகின் அசைக்க முடியாத வல்லரசு என கருதப்பட்ட அமெரிக்கா படுதோல்வியை சந்தித்தது வியட்நாம் மக்களிடம் தான்.

இப்போது வியட்நாம் மக்கள் தமது விடுதலை வெற்றியின் நாற்பதாவது நிறைவை பெருமையுடன் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த மகத்தான வெற்றிக்கு இவர்கள் கொடுத்த விலை 30 இலட்சம் வியட்நாம் மக்களின் உயிர்கள். இப்போரில் 58000 அமெரிக்கப் படையினரும் கொல்லப்பட்டனர்.

ஆசிய, ஆபிரிக்க நாடுகளை கைப்பற்றும் பிரான்சுக்கும், பிரிட்டனுக்குமிடையிலான போட்டியில் வியட்நாம், லாவோஸ், கம்பொடியா ஆகிய நாடுகள் பிரான்ஸ் தேசத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டன. எனினும் அந்த மக்கள் அடங்கிப் போய் விடவில்லை. ஆக்கிரமிப்பாளருக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்தும் நடத்தினர்.

விடுதலைக்கான சுதந்திர கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஒன்றிணைந்து ‘வேரா” போராட்டத்தை வலிமைப்படுத்தினர்.

இதன் பலனாக பிரான்சின் பெரும் படைத்தளமான தியன் பியூ தகர்த்தழிக்கப்பட்டது. அதில் ஒன்றரை இலட்சம் வியட்நாம் மக்கள் பலி கொள்ளப்பட்டனர்.

பிரான்ஸ் வெளியேறியதை அடுத்து வியட்நாம் விடுதலைப்படை தெற்கு நோக்கி முன்னேறியது. இந்நேரத்தில் தான் ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு 1954 இல் ஒப்பந்தம் மேற்கொண்ட வியட்நாமை இரண்டாக பிரித்ததுடன் ஒரு சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் வியட்நாமை ஒன்றிணைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஹனோயைத் தலைநகராக கொண்ட வட வியட்நாமும், சைகோனை தலைநகராகக் கொண்டு தென் வியட்நாமும் உருவாகின.

ஐ.நா சபை சர்வஜன வாக்கெடுப்பை நடத்தாத நிலையில் தென் வியட்நாம் மீது வட வியட்நாம் தாக்குதலைத் தொடங்கியது. 1955 இல் மீண்டும் போர் ஆரம்பமானது. அமெரிக்க தென் வியட்நாம் அரசுக்கு ஆதரவாக 1964 இல் வட வியட்நாம் மீது விமான குண்டுத்தாக்குதல் நடத்தியதுடன். 1965 இல் அமெரிக்க படையினரை போரில் இறக்கியது. போர் அமெரிக்க வியட்நாம் போராக பரிமாணம் பெற்றது. அமெரிக்கா ஏஜன்ட் ஆம்.எம் என்ற நச்சுப் பொருளை விமானம் மூலம் வீடு, வயல், நிலங்களையும் கூட அழித்தது.

எத்தiகைய இழப்பிற்கும் அஞ்சாமல் வியட்நாம் மக்கள் போராடி 1975 இல் அமெரிக்காவை விரட்டியடித்து சுதந்திர வியட்நாமை உருவாக்கினார்கள். 58000 படையினரை பலி கொடுத்து அமெரிக்கா அவமானத்துடன் வெளியேறியது.

மனிதாபிமானம் பற்றியும், மனித உரிமைகள் பற்றியும் பெரிதாக பேசும் அமெரிக்கா வீசிய நச்சுக்குண்டுகளால் இன்று வரை வியட்நாம் மக்கள் பேராபத்துக்களை அனுபவித்து வருகின்றார்கள். அவர்கள் புதைத்த கண்ணிவெடிகளால் கால்களையும், உயிர்களையும் இழந்து கொண்டிருக்கின்றனர் எனினும் இன்று வியட்நாம் சுதந்திர தேசம்.

வியட்நாம் விடுதலைப் போராட்டம் நடந்த போது உலகம் முழுவதும் உள்ள மக்கள் வியட்நாம் மக்களுக்கு ஆதரவாகப் போராட்டங்களை நடத்தினர். அமெரிக்க மக்கள் கூட அமெரிக்காவை வியட்நாமில் இருந்து வெளியேறும் படி போராட்டங்களை நடத்தினர்.

தமிழ் மக்கள் வியட்நாம் மக்களுக்கு ஆதரவாக வடக்கில் பெரும் போராட்டங்களை நடத்தினர். அமெரிக்க தூதரகம் முன்பு போராட்டங்களை நடத்தினர். இவையெல்லாம் வியட்நாம் விடுதலைக்கு நுழைவுக் காரணங்களாக இருந்ததை மறந்துவிட முடியாது.

ஆனால் தமிழ் மக்கள் தமது விடுதலைக்கு போராடிய போது எந்தவித அதரவையும் வழங்கவில்லை. தியன் பிய10 படைத்தளம் வீழ்த்தப்பட்ட போது தமிழ் மக்கள் ஆனந்த கூத்தாடினர். ஆனையிறவு படைத்தளம் வீழ்த்தப்பட்ட போது வியட்நாம் மௌனம் காத்தது.

அது மட்டுமின்றி இலங்கை அரசின் மனித குல விரோத நடவடிக்கைகள், போர்க்குற்றங்களுக்கு எதிராக உலகம் குரல் கொடுத்த பொழுது வியட்நாம் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததென்பதை மறந்தவிட முடியாது.

இரத்தம் சிந்தி விடுதலை பெற்ற ஒரு நாடு விடுதலைக்காக இரத்தம் சிந்துபவர்களை ஆதரிக்க மறுப்பதை எவ்விதத்திலும் நியாயப்படுத்துவதற்கு விட முடியாது.

எனவே வியட்நாம் மக்களுக்கு எப்படி ஒரு ஹோ மாமாவோ அப்படி தமிழ் மக்களுக்கு ஒரு ‘தம்பி பிரபாகரன்” என்பது புரிந்துகொள்ள வேண்டும்.

– தமிழ்லீடர் ஆசிரியர் பீடம் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*