leader

வடக்கில் ரணிலின் அதிரடி விஜயமும் ‘விக்கி’க்கு எதிரான வியூகங்களும்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வடமாகாணத்துக்கான விஜயம் இரண்டு கேள்விகளை எழுப்பியிருக்கின்றது. ஒன்று: முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைப் பகைத்துக்கொண்டு அவருக்குப் போட்டியான நிர்வாகம் ஒன்றை வடக்கில் ஏற்படுத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கின்றாரா? இரண்டு: வடக்கில் அவர் மேற்கொண்ட விஜயம் பிரதமர் என்ற ரீதியானதா அல்லது ஐ.தே.க. தலைவர் என்ற முறையில் தேர்தலை இலக்காகக்கொண்டதா?

வடமாகாணத்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளும் எந்தவொரு அரசாங்கத் தலைவரும் வடமாகாண முதலமைச்சரைச் சந்திப்பதென்பது வெறுமனே சம்பிரதாயபூர்வமானது மட்டுமல்ல. வடக்கு மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்கு மட்டுமன்றி, அதற்கான தீர்வை முன்வைப்பதற்கும் முதலமைச்சரைச் சந்தித்துப் பேசுவது முக்கியமானது. ஏனெனில் வடமாகாண மக்களின் பிரதிநிதியாக இருப்பவர் அவர்தான். வடமாகாணத்தில் காணப்படும் பிரச்சினைகளுக்கான தீர்வை முன்வைக்கும் போது முதலமைச்சரூடாகவே அதனைச் செய்ய வேண்டும் என்பது சம்பிரதாயம்.

ரணில் விக்கிரமசிங்கவின் விஜயம் தொடர்பில் பிரதமர் அலுவலகத்திலிருந்து உத்தியோகபூர்வமாக மாகாண சபைக்கோ முதலமைச்சருக்கோ அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. இது வழமையாகப் பின்பற்றப்படும் சம்பிரதாயத்தை மீறும் ஒரு நகர்வு. ரணில் விக்கிரமசிங்கவின் விஜயத்துக்கான நிகழ்ச்சி நிரலில் முதலமைச்சருடனான சந்திப்பு குறித்தும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. இதன் மூலம் ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்க விரும்பும் செய்தி என்ன என்ற கேள்வி இங்கு எழுகின்றது.

பதில் மிகவும் தெளிவானது. விக்கேஸ்வரனுடன் தொடர்புகொள்ளாமலே வடமாகாண விவகாரங்களை தன்னால் கையாள முடியும் என ரணில் இதன் மூலம் உணர்த்தியிருக்கின்றார். இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சகிதம் யாழ்ப்பாணம் வந்த ரணில் விக்கிரமசிங்க வலிகாமம் வடக்கில் குறிப்பிட்ட பகுதி காணியுரிமையை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்விலும் பங்குகொண்டிருந்தார். இந்தநிலையில் ஒரு வாரத்திலேயே அவர் மீண்டும் வந்து சென்றிருப்பது முழுஅளவில் அரசியல் நோக்கத்தைக் கொண்டதாகவே கருதப்பட வேண்டும்.

விக்கியை புறக்கணித்து அரசியல்

வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட ‘இனப்படுகொலை’ தீர்மானம்தான் விக்னேஸ்வரன் மீதான ரணில் விக்கிரமசிங்கவின் சீற்றத்துக்கு முதற்காரணம். மைத்திரி தலைமையில் புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில், ஜெனீவா தீர்மானத்தை இராஜதந்திர முயற்சிகள் மூலம் பின்போட்டுள்ள நிலையில் விக்னேஸ்வரன் கொண்டுவந்த இந்தத் தீர்மானம் ரணில் விக்கிரமசிங்கவை பெரும் நெருக்கடிக்குள் தள்ளியது. அதற்குப் பதிலடியாக ‘தந்தி’ தொலைக்காட்சிக்கு ரணில் விக்கிரமசிங்க அளித்த பேட்டியில், விக்னேஸ்வரனை கடுமையாக விமர்சித்திருந்தார். விக்னேஸ்வரனுடன் தான் பேசப்போவதில்லை எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மற்றைய தலைவர்களுடன் பேசி நிலைமைகளை தன்னால் கையாள முடியும் எனவும் ரணில் அப்போது தெரிவித்திருந்தார்.

இதனை நடைமுறையில்  காட்டுவதற்காகத்தான் ரணில் விக்கிரமசிங்க இப்போது யாழ்ப்பாணம் சென்று வந்தாரா என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகின்றது. எந்த விடயத்திலும் ஒருமித்து கருத்தை வெளிப்படுத்த முடியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயத்திலும் பிளவுபட்டிருந்தது. சிறிதரன் எம்.பி. ரணில் விக்கிரமசிங்கவைப் பகிஷ்கரிக்க, மாவை, சுரேஷ், சரா ஆகியோர் ரணில் பங்குகொண்ட நிகழ்வுகளில் பிரசன்னமாகியிருந்தார்கள். கூட்டமைப்பை உடைக்கும் முயற்சி ஒன்றையும் ரணில் மேற்கொள்கின்றாரா என்ற கேள்வி இதன்போது தவிர்க்க முடியாமல் எழுகின்றது.

ரணிலின் அறிவிப்பு

இவை அனைத்துக்கும் மேலாக கிளிநொச்சியில் ரணில் தெரிவித்த இரண்டு கருத்துக்கள் பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றது. ஒன்று: வடபகுதிப் பிரச்சினைகளைக் கையாள்வதற்கு கிளிநொச்சியில் பிரதமரின் அலுவலகம் ஒன்று அமைக்கப்படும் என ரணில் அறிவித்திருக்கின்றார். இரண்டு: வடபகுதிக்காக விஷேட பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் ரணில் சொல்லியிருக்கின்றார். இந்த இரண்டு விடயங்களும் ஒரு விடயத்தை தெளிவாகச் சொல்கின்றது. வடமாகாண சபைக்குப் போட்டியாக அல்லது அதற்குச் சமாந்தரமாக மற்றொரு நிர்வாகத்தை ஏற்படுத்த ரணில் முற்படுகின்றார் என்பதுதான் அது. மகிந்த ராஜபக்‌ஷ வடமாகாண சபைக்கு சமாந்தரமான ஒரு நிர்வாகத்தை முன்னாள் ஆளுநர் சந்திரசிறியை வைத்து நடத்தியிருந்தார்.

வடமாகாண சபைக்கான அதிகாரங்கள் தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டாலும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை ஒன்று இருக்கும் நிலையில், அதற்கு மேலதிகமாக பிரதமரின் அலுவலகம் ஒன்றை அமைப்பதோ, பிரதிநிதி ஒருவரை நியமிப்பதோ எந்த வகையில் அவசியமானது என்பதை பிரதமர் விளக்கவில்லை. மாகாண சபையை ஓரங்கட்டி தன்னுடைய அதிகாரங்களை வடபகுதியில் பிரயோகிப்பதற்கான ஒரு செயற்பாடாக மட்டுமே இது இருக்கும். அதிகாரப்பரவலாக்கல் மேலும் மேம்படுத்தப்படும் என்ற வாக்குறுதிகளுக்கு முரணானதாகவும் இந்த செயற்பாடுகள் அமையும்.

ரணில் விக்கிரமசிங்கவின் இந்தச் செயற்பாடுகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை சாதிக்கும் மௌனம் ஆச்சரியமானது. கூட்டமைப்பின் தலைமையைப் பொறுத்தவரையில் புதிய அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் எந்தச் செயற்பாட்டையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராகவில்லை. குறிப்பாக சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் புதிய அரசுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளார்கள். அதனால், கூட்டமைப்பின் மூன்றாம் நிலையிலுள்ளவர்கள் மட்டுமே ரணிலின் நகர்வுகள் தொடர்பில் தமது பிரதிபலிப்பை வெளிப்படுத்துகின்றார்கள். முதலாம் இரண்டாம் நிலைத் தலைவர்கள் மௌனமாகவே உள்ளனர். ரணில் செல்லும்பாதை தவறானது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.

தேர்தலுக்கான தயாரிப்பு

ரணிலின் விஜயத்தின்போது காணப்பட்ட மற்றொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், அடுத்த தேர்தலுக்கு முன்னர் ஐ.தே.க.வை வடக்கில் பலப்படுத்த அவர் முயற்சிக்கின்றார் என்பதுதான். யாழ்ப்பாணத்தில் விஜயகலா மகேஸ்வரனை களம் இறக்குவது அவலது திட்டம். எம்.டி.சுவாமிநாதனையும் யாழ்ப்பாணத்தில் இறக்க முடியுமா என்பதற்காக மக்களின் உணர்வுகளை அவர் அறியமுற்படுகின்றார். அதற்காகத்தான் காணி விடுவிப்பு, மீனவர் பிரச்சினைகளுக்குத் தீர்வு என வாக்குறுதிகள் அள்ளி வீசப்படுகின்றன. மீள்குடியேற்ற அமைச்சர் பொறுப்பும் சுவாமிநாதனுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால், ‘கலா’ போன ‘சுவாமி’யால் சுறுசுறுப்பாக வேலை செய்து மக்களின் மனதைக் கவர முடியாது என்பதும் தெரிகின்றது. கடுமையாக வேலை செய்தால் யாழ்ப்பாணத்தில் ஒரு ஆசனத்தை ஐ.தே.க. தக்கவைக்கலாம். வவுனியாவிலும், கட்சிக்கு ஆட்சேர்ப்பு நடைபெற்றிருக்கின்றது.

இவை அனைத்தையும் பார்க்கும் போது ஒரு விடயம் தெளிவாகின்றது. ரணிலின் அதிரடியான இந்த விஜயம் இரண்டு நோக்கங்களைக் கொண்டது. ஒன்று: விக்னேஸ்வரனை ஓரங்கட்டி, அவருக்கு சமாந்தரமான போட்டி நிர்வாகம் ஒன்றை உருவாக்குவது. இரண்டு: தேர்தலை இலக்காகக் கொண்டு நிலைமைகளை நாடிபிடித்துப்பார்ப்பது. மைத்திரியுடனும், சந்திரிகாவுடனும் வந்து இவற்றைச் செய்ய முடியாது என்பதால்தான் ஒரு வாரத்திலேயே இரண்டாவது முறை அவர் தனியாக வந்திருக்கிறார். வடபகுதியில் 3 நாட்கள் அவர் தங்கியிருந்திருக்கின்றார். இந்த இரண்டிலும் அவர் வெற்றி பெறுகின்றாரா? பொறுத்திருந்து பார்ப்போம்!

=தமிழ் லீடருக்காக கொழும்பிலிருந்து இராஜயோகன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*