maithripala and mahinda

அச்சுறுத்தும் மகிந்த ராஜபக்‌ஷவும் மைத்திரியின் தேசிய அரசாங்கமும்

இலங்கை அரசியல் அண்மைக் காலத்ததில் அதிரடியான மாற்றங்கள் பலவற்றைச் சந்தித்து வருகின்றது. அந்த மாற்றங்களுள் ஒன்றுதான் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைக்கப்பட்ட “தேசிய அரசாங்கம்” எனக் குறிப்பிலாம். கடந்த வாரம் இலங்கைத் தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களைச் சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுத் தேர்தலின் பின்னரே தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் எனத் தெளிவாகச் சொல்லியிருந்தார். மறுநாள் பத்திரிகைகளின் தலைப்புச் செய்தியும் அதுதான். இருந்தபோதிலும் மிகவும் குறுகிய கால அறிவித்தலுடன் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டிருக்கின்றது.

தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டிய தேவை அல்லது அவசியம் அரசாங்கத்துக்கு ஏன் ஏற்பட்டது என்பதையிட்டு இந்த வாரத்தில் சுருக்கமாகப் பார்ப்போம்.

பிரித்தானிய ஆட்சியிலிருந்து இலங்கை விடுபட்ட பின்னர் கடந்த 68 வருடகால இலங்கையின் வரலாற்றில் தேசிய அரசாங்கம் குறித்துப் பேசப்பட்டாலும், இப்போதுதான் முதன்முறையாக தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. தேசிய ரீதியிலாக பாரிய அனர்த்தம் ஒன்று ஏற்பட்டு, அல்லது போர் ஒன்று உருவாகியுள்ள சந்தர்ப்பங்களில்தான் தேசிய அரசாங்கங்கள் அமைக்கப்படுவதுதான் சர்வதேச வழமை. அவ்வாறு எதுவும் இல்லாத நிலையில் தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கவேண்டிய நிலை இலங்கையில் ஏன் ஏற்பட்டது என்ற கேள்விதான் அரசியல் வட்டாரங்களில் இன்று முன்வைக்கப்படுகின்றது.

அமைச்சரவையில் சுதந்திரக் கட்சி

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்ற உடனடியாக அமைத்த அமைச்சரவையிலும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அங்கம் வகித்தார்கள். குறிப்பாக ராஜித சேனாரட்ண போன்றவர்கள் அமைச்சர் பதவிகளைப் பெற்றார்கள்.. ஆனால், அவர்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான உடனடியாகவே மகிந்த ராஜபக்‌ஷவை எதிர்த்துக்கொண்டு வெளியேறியிருந்தார்கள். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகக் களம் இறக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து ஜனாதிபதித் தேர்தலில் தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொண்டவர்கள்.

இப்போது அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்ட 26 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனவரி 8 தேர்தலில் மகிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவான பிரச்சாரத்தை தீவிரமாக முன்னெடுத்தவர்கள். மைத்திரிபாலவை ஐ.தே.க.வுக்கு விலைபோய்விட்டதாக கடுமையாக விமர்ச்சித்தவர்கள். இப்போது அமைச்சர் பதவிகளைக் கொடுத்ததும் அமைதியாக இருப்பவர்கள். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைமையின் முழுமையான அங்கீகாரத்துடன்தான் இவர்கள் தேசிய அரசாங்கத்தில் இணைந்தவர்கள். இதனை மற்றொரு வகையில் சொல்வதானால், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள மகிந்த ராஜபக்‌ஷவின் ஆதரவாளர்களைத் தவிர்ந்த ஏனைய ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் தேசிய அரசாங்கத்தில் இணைந்திருக்கின்றார்கள்.

இதனைவிட எதிர்க்கட்சியில் இருந்தால்தான் கட்சியில் தமது உயர் பதவிகளைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் எனக் கருதிச் செயற்படும் நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, அநுரா பிரயதர்சன யாப்பா போன்றவர்களும் உள்ளார்கள். இவர்கள் தேசிய அரசில் இணையாவிட்டாலும், மகிந்த மீண்டும் வருவதை ஏற்றுக்கொள்ளாதவர்கள். மகிந்தவின் மீள்வருகை கட்சியில் தாம் தற்போது தக்கவைத்துக்கொண்டுள்ள பதவிகளுக்கு ஆபத்தானது என்பது அவர்கள் கணிப்பு. மகிந்தவைப் பலவீனப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தாராளமாக உதவக்கூடியவர்கள்.

அச்சுறுத்தும் மகிந்த ராஜபக்‌ஷ

தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ள இன்றைய நிலையில் எதிர்க்கட்சி வரிசையில் உள்ளவர்களை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். 1. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, 2. ஜே.வி.பி., 3. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, 4. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி. இதில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டுள்ளது என்பதை முன்னரே குறிப்பிட்டோம். இந்த இரு அணிகளுக்கும் இடையிலான பலப்பரீட்சைதான் இலங்கை அரசியலின் எதிர்காலப் போக்கை நிர்ணயிப்பதாக அமையப்போகின்றது.

மகிந்த ஆதரவாக ஒரு அணியினர் செயற்படுகின்றார்கள். இவர்கள் ஐ.ம.சு.மு. வின் பங்காளிகளான விமல் வீரவன்ச, வாசுதேவ நாயணக்கார, உதய கம்பன்பில, தினேஷ் குணவர்த்தன ஆகியோரின் கட்சிகள் இணைந்து செயற்படுகின்றன. மகிந்த ராஜபக்‌ஷவை மீண்டும் அதிகாரத்துக்குக் கொண்டுவருவது என்பதுதான் இந்தக் குழுவினரின் இலக்கு. இது பரஸ்பர நலன்களுடன் சம்பந்தப்பட்டது. மகிந்தவுக்கும் இந்தக் குழு தேவை. மகிந்த என்ற சக்தி இல்லையென்றால் இந்தக் குழுவினர் காற்றுடன் காற்றாகக் காணாமல் போய்விடக்கூடியவர்கள்.

இந்தக்குழுவினர் இரத்தினபுரியில் வியாழக்கிழமை மாலை நடத்திய பேரணி அரசாங்கத்துக்கு அச்சுறுத்தலைக் கொடுப்பதாக அமைந்திருந்தது என்பது உண்மை. மகிந்த ராஜபக்‌ஷ இதில் கலந்துகொள்ளவில்லை. ஆனால், மகிந்தவை பிரதமர் வேட்பாளராக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி களம் இறக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துத்தான் இந்தப் பேரணி நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்றிருந்தனர் என்பது ஒருபுறம். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைமையின் தடையையும் மீறி இதில் கலந்துகொண்டிருந்தார்கள் என்பது முக்கியமான செய்தி. மேல்மாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க உட்பட மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் இதில் பங்கேற்றனர்.

மகிந்த ஆதரவுப் பேரணியில் 26 எம்.பி.க்கள் பலந்துகொண்டதற்கு அப்பால், 60 க்கும் அதிகமான எம்.பி.க்கள் மகிந்தவை ஆதரிக்கத் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் கசியவிடப்பட்டுள்ளன. 26 பேர் தடையையும் மீறிச் சென்றிருப்பது கட்சியில் மகிந்தவின் செல்வாக்கு பலமாக உள்ளதைக் காட்டுகின்றது. மைத்திரி – சந்திரிகாவைப் பொறுத்தவரையில் இது அச்சுறுத்தலானதுதான். ரணிலைப் பொறுத்தவரையில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடுவது அவருக்கு வாய்பானது. ஜனாதிபதித் தேர்தல் என வந்து நேருக்கு நேர் மோதினால் ரணிலுக்கு அது பாதகமாக அமையலாம். ஆனால், பொதுத் தேர்தலில் சுதந்திரக் கட்சி பிளவுபடுவது தனக்கு வாய்ப்பானதாக அமையும் என அவர் கணக்குப் போடலாம்.

போர் வெற்றியின் கதாநாயகன்

ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த 58 இலட்சம் வாக்குகளைப் பெற்றவர். சிங்கள மக்கள் மத்தியில் வசீகரம் மிக்க தலைவராக அவருக்கு நிகராக யாரும் இல்லை என்பது உண்மை. இதனைப் பலவீனப்படுத்துவதுதான் அரசாங்கத்தின் இன்றைய இலக்கு. குடும்ப ஆதிக்கம், ஊழல், மோசடி, வெளிநாடுகளில் சொத்துக்குவித்தார் போன்ற குற்றச்சாட்டுகள் பற்றிய விசாரணைகள் அதனால்தான் துரிதப்படுத்தப்படுகின்றன. பொதுத் தேர்தலுக்கு முன்னதாக இவற்றில் எதனையாவது நிரூபித்து அவரது செல்வாக்கைக் குறைப்பதுதான் மைத்திரி அரசின் திட்டம்.

0இருந்த போதிலும் இந்த இடத்தில் மற்றொரு கருத்தும் உள்ளது. குடும்ப ஆதிக்கம், ஊழல் மோசடி என என்னதான் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் அவற்றை நிரூபித்தாலும், போர் வெற்றியின் கதாநாயகன் என்ற மனப்பதிவை சிங்கள மக்கள் மத்தியிலிருந்து அகற்றிவிட முடியாது. சிங்கள மக்கள் மத்தியில் அது ஆழமாகப் பதிந்துள்ளது. உணர்வுபூர்வமான அவரது உரைளும் அதற்குக் காரணம்.

இதற்காகத்தான் சரத் பொன்சேகா பீல்ட் மாஷலாக தரம் உயர்த்தப்பட்டு அதற்கான விழா ஒன்றும் விமர்சையாக நடத்தப்பட்டது. போர் வெற்றியின் கதாநாயகன் பொன்சேகாதான் என சிங்கள மக்களின் முன்பாக நிறுத்துவதுதான் இந்தப்பட்டமளிப்பின் அரசியல் நோக்கம். ஆனால், இதில் பெருமளவுக்கு செயற்கைத்தனமே காணப்பட்டது. அதனால், சிங்கள மக்களின் மனங்களில் இது பதியவில்லை. ராஜபக்‌ஷவின் செல்வாக்கை பீல்ட் மாஷலால் குறைத்துவிட முடியவில்லை. இது ஓரளவுக்கு அரசாங்கம் எதிர்பார்த்ததும்தான்.

தேசிய அரசின் அவசரத் தேவை

இவை அனைத்தையும் கவனத்திற்கொண்டு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்.பி.க்கள் ராஜபக்‌ஷவைத் தேடி ஓடுவதைத் தடுப்பதற்கான ஒரு உபாயமாகவும், அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 19 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்காகவுமே அவசரமாக தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டிருக்கின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடனும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் நடத்திய ஆலோசனைகளையடுத்தே அவசரமாக தேசிய அரசாங்கத்தை அமைப்பது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.

மைத்திரிபால அரசாங்கம் பதவியேற்றபோது 100 நாள் வேலைத்திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டது. அரசு பதவியேற்று இப்போது சுமார் 75 நாட்கள் கடந்துவிட்டது. இன்னும் இருப்பது 25 நாட்கள்தான். இந்த நாட்களுக்குள் அரசியலமைப்புக்கான திருத்தத்தைச் செய்வதும், ஏப்ரல் 23 இல் பாராளுமன்றத்தைக் கலைப்பது என்பதும்தான் அரசின் முன்பாகவுள்ள அடுத்த கட்டப்பணி.

இதனைச் செய்துமுடிப்பதற்குத் தேவையான பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வதும், ராஜபக்‌ஷவைத் தேடி எம்.பி.கள் செல்வதைத் தடுப்பதும்தான்  தேசிய அரசாங்கம் அவசரமாக அமைக்கப்பட்டதன் நோக்கங்களாக இருந்துள்ளன.

– கொழும்பிலிருந்து தமிழ் லீடருக்காக இராஜயோகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*