nkna

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 41

காட்டுப்பாதையால் உழவுயந்திரம் செலுத்துவது அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை. அவை ஏற்கனவே கள்ள மரம் ஏற்றுவதற்குப் பாவிக்கப்பட்ட பாதைகள், காட்டுக்குள் மரம் அறுப்பதைப் போராளிகள் முற்றாகத் தடை செய்துவிட்டதால் அந்தப் பாதைகள் முற்றாகவே பற்றைகள் வளர்ந்து பாவிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன. பாதை அருகிலும் பற்றைகள் வளர்ந்து நீட்டிக்கொண்டு உழவுயந்திரத்தில் இருந்தவர்களின் உடலைப் பதம்பார்த்தன. ஒரு மைல் தூரம் வருவதற்குள்ளாகவே முருகையா சலித்துப் போய் வாகனத்தை நிறுத்திவிட்டான். அவன் போராளிகளைப் பார்த்து, “தம்பியவை, இதுக்காலை வாகனம் கொண்டு போகேலாது.. மேலை கவனமாய்ப் பாத்துக் கொண்டு றோட்டால போவமே?”, எனக் கேட்டான்.

அவர்கள் எதுவும் பதில் சொல்ல முடியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தனர். அவர்கள் போகச் சொல்லி மேலிடம் கூறிய பாதையை விட்டு வேறொரு வழியால் போகும் போது ஏதாவது ஒரு சிறிய அனர்த்தம் நடந்தாலும் அவர்கள் கடுமையான தண்டனைக்கு முகம் கொடுக்கவேண்டிவரும். அது மட்டுமன்றி காலை, மதியம் இரவு என மூன்று நேரத்துக்கும் பொதுவாகப் போகும் உணவு போராளிகளுக்குப் போய்ச் சேராவிடில் அவர்கள் பட்டினியுடன் எப்பிடிச் சண்டையிடுவது என்ற கேள்வியும் அவர்களிடம் எழுந்தது. அவர்களின் இக்கட்டான நிலையைச் சுந்தரம் புரிந்து கொண்டான். அவனைப் பொறுத்தவரையில் போராளிகளுக்கு பங்கர் அமைப்பதற்கு அந்தக் காட்டில் மரக்குற்றிகள் ஏற்றிய அனுபவம் உண்டு. அத்துடன் கொடிகளுக்குள் மறைந்து கிடக்கும் அடிமரக் கட்டைகளையும் இனங்கண்டு அவற்றைத் தவிர்த்து உழவுயந்திரத்தை ஓட்டவும் அவனால் முடியும். “மச்சான், விடு நான் ஓடுவன்.. இந்தக் காட்டிலை லொறியே ஓடி எனக்குப் பழக்கம்”, என்றான் சுந்தரம்.

முருகையா எழுந்து மட்காட்டில் அமர்ந்து கொள்ள சுந்தரம் சாரதி ஆசனத்தில் ஏறி உழவுயந்திரத்தை ஓட்ட ஆரம்பித்தான். அவன் பாதையை மிக அவதானமாகப் பார்த்து வாகனத்தை ஓட்டிய போதும் அடிக்கடி தலைக்கு மேலேயும் கவனிக்கத்தவறவில்லை. அந்தக் காட்டில் ஒரு விதமான கொடிகள் உண்டு. அவை இரும்புக்கம்பியை விட வலிமையானவை என்பதுடன் அடர்ந்த சிறு இலைகளால் கொண்டவை. அந்த இலைகளின் பின்புறத்தில் வலிமையான வளைந்த முட்கள் உண்டு. அவை நிலத்திலிருந்து எழுந்து மரங்களில் தொற்றி கிளைகளில் அடர்ந்து தொங்கிக்கொண்டிருக்கும். அது நிலத்தில் வேரூன்றியிருக்கும் இடத்தில் உழவுயந்திரத்தின் முன் சில்லு ஏறும்போது அது அதற்குள் சுற்றப்பட இழுபட்டு மரத்திலிருந்து கும்பலாகக் கீழே விழும். அது சாரதி மேலோ அல்லது மட்காட்டில் இருப்பவர் மீது விழுந்தால் வாகனம் தடுமாறி எங்காவது இடிபட வேண்டிது தான். அதைத் தலையிலிருந்து எடுக்கும் போது முட்களால் கீறப்பட்டு முகம் இரத்தமயமாகிவிடும். அதன் காரணமாகச் சுந்தரம் அடிக்கடி மேலே மரக் கொப்புகளை அடிக்கடி கவனித்துக் கொண்டான்.

அடர்ந்த காட்டுக்குள் வந்து கொண்டிருந்த போது அவன் அப்படி ஒருமுறை அண்ணாந்து பார்க்கும் போது ஒரு பாலை மரத்தின் இலைகளுக்கு இடையே வித்தியாசமான ஏதோ ஒன்று தெரிவது போலிருந்தது. அதை நன்றாக உற்றுப் பார்த்த போது அது ஒரு ‘கெமோபிளக்’ சீருடை என்பதை அவன் புரிந்து கொண்டான். திடீரென உழவு இயந்திரத்தை நிறுத்தி ‘பிரேக்’ அடித்த சுந்தரம் போராளியைத் தட்டி மெல்லிய குரலில் ‘ஆமி’, என்றுவிட்டு மரத்தைச் சுட்டிக்காட்டினான். போராளி வினாடி கூடத்தாமதிக்கவில்லை. துப்பாக்கிக் குண்டு மரக் கொப்பை நோக்கிப் பாய ஒருவன் அதிலிருந்து தலை கீழாக விழுந்தான். அதேவேளை உழவு இயந்திரத்திற்குச் சில அடிகள் முன்பு பெரும் வெடியோசை அதிரப் புகைமண்டலம் எழுந்தது. சற்றுத் தொலைவில் பற்றை சரசரக்கவே மற்றப் போராளி அதை நோக்கி வெடி தீர்த்தான். இருவர் எழுந்து ஓடுவதைக் கண்ட போராளிகள் இருவரையும் சுட்டுவீழ்த்தினர். மிக அவதானமாக அவர்களின் அருகில் சென்ற போது அவர்கள் இருவரும் இறந்துவிட்டனர்.

மரத்தால் விழுந்தவனும் கழுத்து முறிந்து இறந்து போயிருந்தான். மூன்று பேரின் சடலங்களையும் தூக்கி கொண்டுவந்து பாதைக் கரையில் போட்டனர். சுந்தரத்தைப் பொறுத்தவரையில் தாங்கள் உயிர்தப்பியது என்பதை விட அந்தச் சடலங்கள் அவனுக்கு அளப்பரிய கோபத்தை மூட்டின. புத்துவெட்டுவான் செல்வராசா ஐயாவின் மகள் உட்பட பதினொரு வாழவேண்டிய இளம் பிள்ளைகளை கிளைமோரிலை பலியெடுத்தது இவர்களால் தான் இருக்க வேண்டும் என அவன் நம்பினான். ஆனால் கோபத்தை அடக்க முடியவில்லை. சுந்தரம் சுற்றும் முற்றும் பார்த்தான். ஒரு பட்ட மரக்கட்டை அவனின் கண்களில் பட்டது. அதை எடுத்துவந்து செத்துக் கிடந்த படையினன் ஒருவனின் தலையில் ஓங்கி ஒரு போடு போட்டான். அவனின் மண்டை பிளந்து இரத்தம் கொட்டியது.

திடீரென கோபமடைந்த போராளி கேட்டான், “அண்ணை! நீங்கள் என்ன வேலை செய்யிறியள்? “தம்பி இவங்கள் லேசுப்பட்ட ஆக்களே? பதினொரு பள்ளிக்கூடப் பிள்ளைகளைக் கிளைமோரிலை கொண்டவங்கள். நாளைக்கு டாக்குத்தராய் இஞ்சினியராய், வாத்தியாராய் ஏன் போராளியள் தளபதிகளாய்க் கூட வரக்கூடிய பிள்ளையள் இவங்களை..”, என்றுவிட்டு மீண்டும் தடியை ஓங்கினான் சுந்தரம். தடியை எட்டிப்பிடித்த போராளி, “பொறுங்கோ உங்டை கோபம் நியாயமானது. ஆனால் நாங்கள் விடுதலைப் போராளியள், எதிரியளெண்டாலும் செத்துப்போனால் இராணுவ மரியாதையோடை அடக்கம் செய்யிறது தான் எங்கடை பண்பு.. நாங்கள் அவங்களைப் போலை நடக்க ஏலாது! நீங்கள் செய்தது மாதிரி ஒரு போராளி செய்திருந்தால் கடுமையான தண்டனை கிடைச்சிருக்கும். நீங்கள் ஒரு பொதுமகன் எண்ட படியால் விடுறம்”, என்றான்.

அந்தப் போராளி சொல்வதில் நியாயம் இருப்பது போல் தோன்றினாலும் அவனின் கோபம் அடங்கவில்லை. தடியை எறிந்துவிட்டுப் போய் சாரதி ஆசனத்தில் ஏறினான். அப்போது தான் முருகையா வலது பக்க முன் சில்லை கவனித்தான். அவன், “மச்சான் முன் சில்லு ஒண்டு காத்துப் போட்டுது”, என்றான். இறங்கி வந்து முன் சில்லை நசித்துப் பார்த்த சுந்தரம், “ஓமடாப்பா இப்ப என்ன செய்ய?” எனச் சற்று யோசித்துவிட்டு, “சரி ஒரு மரக்கட்டையை தூக்கி வா”, என்றான். மூவரும் காற்றுப் போன பக்கத்தைத் தூக்க சுந்தரம் சுந்தரம் கீழ்ப்பக்கத்தில் மரக்கட்டையைச் சொருகினான். இப்போ உழவியந்திரம் ஒற்றை முன் சில்லில் நின்றது. மற்றவர்கள் அனைவரையுடம் பெட்டியில் ஏற்றிவிட்டு சுந்தரம் உழவியந்திரத்தை ஓட ஆரம்பித்தான். அவர்கள் களமுனைக்கு வந்த போது சண்டை முற்றாக ஓய்ந்திருந்தது.

குறிப்பிட்ட இடத்தில் சாப்பாட்டுப் பெட்டிகளை இறக்கி அங்கு நின்ற பெண் போராளிகளிடம் பாரம் கொடுத்துவிட்டு அவர்கள் புறப்பட்டனர். ஏற்கனவே திட்டமிட்டபடி திரும்பிப் போகும் போது படையினரின் சடலங்களையும் ஏற்றிக் கொண்டு போய் அரசியல் துறையினரிடம் ஒப்படைத்தனர். சுந்தரத்துக்கு அந்தச் சடலங்களைப் பார்த்தபோது செல்வராஜா ஐயாவின் பரிதாப கோலம் நினைவுக்கு வந்து மீண்டும் மீண்டும் கோபத்தை மூட்டியது. திரும்பி வந்து சேர்ந்த போது சுந்தரத்துக்கும் நன்றாக பசிக்க ஆரம்பித்துவிட்டது. நால்வரும் எஞ்சியிருந்த சாப்பாட்டில் சிறிதளவு எடுத்துச் சாப்பிட்டார்கள். நன்றாகப் பசித்த போதும் சுந்தரத்தால் முழுமையாகச் சாப்பிட முடியவில்லை. இதைச் சாப்பிட்டா போராளிகள் களமாடுகின்றனர் என்ற கேள்வி அவனுள் எழவே செய்தது. எல்லா விதங்களிலும் அர்ப்பணிப்புக்களை மேற்கொண்டு களமாடிய போராளிகளை நினைத்தபோது தன்னைப் போன்றவர்கள் பயனற்ற மனிதர்கள் போலவே அவனுக்குத் தோன்றியது. எப்படியிருந்த போதிலும் அன்று தான் இரு போராளிகளையும் களமுனைக்குக் கொண்டு சென்ற உணவையும் காப்பாற்றியதில் ஒரு வித திருப்பியடைந்தான் சுந்தரம்.

பூநகரி – மன்னார் வீதிக்கு மேற்குப் பக்கமாக நின்று போராடிய சிவத்தின் அணியினருக்கு மதியம் இரண்டு மணிக்குப் பிறகே சாப்பாடு வந்து சேர்ந்தது. விளாத்தியும் விடத்தலும் நாகதாளியும் நிறைந்த வரண்ட பற்றைக்காடு வழியாகத் தோள்ச் சுமையிலேயே சாப்பாடு கொண்டுவரவேண்டியிருந்தது. காலை உணவும் எடுக்காமல் வந்த போராளிகள் தங்கள் பொக்கற்றுக்களில் இருந்த பிஸ்கற்றுக்களைச் சாப்பிட்டுக்கொண்டே போராட வேண்டியிருந்தது. அந்த அணியில் புதிய போராளிகள் மிகக் குறைவாகவே இருந்தனர். கூடுதலான போராளிகள் பல களங்களில் அனுபவம் பெற்றவர்களாதலால் பசியுடனும் சளைக்காது போராடிக்கொண்டிருந்தனர். பள்ளமடு, விடத்தல் தீவு வீதியில் படையினரை ஏறவிடக்கூடாது என்பதில் சிவம் மிக உறுதியாக இருந்தான்.

அவர்கள் அந்த இடத்தைப் பிடித்துவிட்டால் விடத்தல் தீவில் நின்று போராடும் கடற்புலிகளைப் பின்பக்கமாக வளைக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்ட விடும். எனவே சிவத்தின் அணி உக்கிரமாகவே போராடிக்கொண்டிருந்தது. எப்படியிருந்த போதிலும் நெருக்கடியான சண்டைகளில் படையினரால் போராளிகளுடன் நின்று பிடிக்க முடியாது என்பதில் சிவம் பலமுறை அனுபவத்தில் கண்டிருந்தான். நேரம் ஒரு மணியை நெருங்கிய போது திடீரெனப் படையினர் எறிகணை வீச்சோ இடம்பெறக்கூடும் எனச் சிவம் எதிர்பார்த்தான். அந்த நேரத்தில் தாங்கள் முன்னேறி படையினருடன் நெருக்கமாக நின்று மோதுவது கூடுதலான பாதுகாப்பு என அவன் கருதினான்.

உடனடியாக கட்டளை பீடத்துடன் தொடர்பு கொண்டான். ஆட்காட்டிவெளி, பாப்பாமோட்டைப்பகுதிகள் பலவீனமாக இருப்பதால் அந்தப் பக்கம் உடைக்கப்பட்டால் சுற்றிவளைக்கப்படும் அபாயம் இருப்பதால் முன்னேற வேண்டாம் எனக் கட்டளை வந்தது. மேலும் எறிகணைகள் விழக்கூடிய பகுதியை விட்டுப் பின் வாங்கும்படியும் ஆலோசனை கூறப்பட்டது. வேறு வழியின்றி சிவம் தனது அணியை வீதியை விட்டு கிட்டத்தட்ட இருநூறு மீற்றர் பின் நகரத்தினான். உடனடியாகவே பத்துப் பத்துப் பேராக போராளிகளைச் சாப்பிட அனுமதித்திருந்தான். மாலை மூன்று மணியளவில் அது வரை நிலவிய அமைதி குலைந்தது. அவன் எதிர்பார்த்ததற்கு மாறாக வானில் தோன்றிய மிகையொலி விமானங்கள் விடத்தல் தீவு மீது மாறி மாறி குண்டுமழை பொழிய ஆரம்பித்தன. சிவம் எதையும் முகம் கொடுக்கும் விதமாகத் தனது அணியைத் தயார்ப்படுது்திக் கொண்டான்.

-தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்-

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*